`எத்தனை முறை வந்தாலும் ஆய்வு செய்ய அனுமதிக்க முடியாது': அதிகாரிகள்- தீட்சிதர்கள் இடையே தொடரும் வாக்குவாதம்

`எத்தனை முறை வந்தாலும் ஆய்வு செய்ய அனுமதிக்க முடியாது': அதிகாரிகள்- தீட்சிதர்கள் இடையே தொடரும் வாக்குவாதம்
ஆய்வுக் குழுவினர்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆய்வு நடந்தே தீரும் என்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ள நிலையில் மாலையில் மீண்டும் ஆய்வுக்கு வந்த குழுவை ஆய்வு நடத்த அனுமதிக்க முடியாது என்று கூறி தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் அறநிலையத்துறை சார்பில் ஆய்வு மேற்கொள்ள வந்த குழுவினரிடம் கணக்கு வழக்குகளை காண்பிக்கவும், அவர்கள் ஆய்வு செய்யவும் தீட்சிதர்கள் இன்று காலையில் மறுப்பு தெரிவித்தனர். இதனையடுத்து மேற்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் கோயிலை விட்டு வெளியே வந்த அறநிலையத்துறை அதிகாரிகள் தங்கள் உயர் அதிகாரிகளை அலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தினர்.

நடராஜர் கோயில் குறித்து அறநிலையத்துறை வசம் உள்ள விவரங்களை கொண்டு கோயிலில் ஆய்வு நடத்துமாறு உயர் அதிகாரிகள் அவர்களுக்கு அறிவுறுத்தியிருந்தனர். இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, "சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆய்வு நடந்தே தீரும். பொது கோயில் என்பதால் அங்கு ஆய்வு நடத்த அறநிலையத் துறைக்கு உரிமை உள்ளது. அங்கு தவறுகள் நடப்பது கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று உறுதிபட தெரிவித்தார்.

இதனால் இன்று மாலை மீண்டும் அறநிலையத்துறை அதிகாரிகள் குழு கோயிலுக்கு வந்தது. அப்போது வழக்கறிஞர் சந்திரசேகர் தலைமையில் திரண்டு வந்த தீட்சிதர்கள், அதிகாரிகள் இது குறித்து ஆய்வு நடத்த எதிர்ப்பு தெரிவித்தனர். ஆய்வு நடத்த தங்களுக்கு உரிமை உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் எடுத்துச் சொல்லப்பட்டாலும் அதனை செவிமடுக்க தீட்சிதர்கள் தரப்பில் தயாராக இல்லை.

உச்ச நீதிமன்றத்தில் இது குறித்த வாதப் பிரதிவாதங்கள் முடிந்து தெளிவான தீர்ப்பு வந்திருப்பதாகவும், தீட்சிதர்கள் தனி சமயப் பிரிவினர் என்பதால் அறநிலையத்துறை நடவடிக்கைகள் தங்களைக் கட்டுப்படுத்தாது எனவும் தீட்சிதர்கள் தரப்பில் தொடர்ந்து வாதிடப்படுகிறது.

இரு தரப்பினரும் காரசாரமாக விவாதித்துக் கொண்டாலும் ஒரு முடிவுக்கும் வரமுடியவில்லை. அதனையடுத்து கோயிலை விட்டு அதிகாரிகள் வெளியேறியுள்ளனர். நாளை காலை மீண்டும் ஆய்வு நடத்தப் போவதாக அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது. எத்தனை முறை வந்தாலும் அவர்களுக்கு ஆய்வு செய்ய உரிமை இல்லை, அதற்கு அனுமதிக்க முடியாது என்று தீட்சிதர்கள் தரப்பில் தெளிவாகச் சொல்லப்படுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in