தீபாவளி: லட்சுமி கடாட்சம் தரும் குபேர வழிபாடு!

தீபாவளி: லட்சுமி கடாட்சம் தரும்  குபேர வழிபாடு!

தீபாவளித் திருநாளில்... ஸ்ரீலட்சுமி குபேர பூஜை வழிபாடு செய்வது குபேர யோகத்தைத் தரும். ஐஸ்வர்ய கடாட்சத்தை அள்ளித்தரும். இதுவரை இருந்த தரித்திர நிலை நீங்கும். தடைப்பட்ட வீடு மனை யோகம் வாங்கும்

தீபாவளித் திருநாள் என்பது மகாலக்ஷ்மிக்கு உரிய நாள். மகாலட்சுமியானவள், குபேரனுக்கு அருளிய திருநாள். ஆகவே, குபேர பகவானுக்கு நாணயங்களைக் கொண்டு, வழிபாடு செய்வது விசேஷம் என்கிறார் பாஸ்கர குருக்கள்.

குபேர பகவானுக்கு உகந்த எண் ஐந்து. ஆகவே, ஒரு சிறிய தாம்பாளத்தில், ஐந்து ரூபாய் நாணயங்களை வைத்து வேண்டிக்கொள்ளுங்கள். மகாலக்ஷ்மிக்கு வெண்மை நிற மலர்கள் சார்த்தி ஆத்மார்த்தமாக வேண்டிக்கொள்ளுங்கள்.

அப்போது, லக்ஷ்மி அஷ்டோத்திரம் பாராயணம் செய்து வழிபடலாம். கனக தாரா ஸ்தோத்திரம் பாராயணம் செய்யலாம். தட்டில் வைத்திருக்கும் நாணயங்களை, இரண்டு கைகளாலும் அள்ளி எடுப்பதும், மீண்டும் தட்டில் இடுவதுமாக இந்த வழிபாட்டை மேற்கொள்ளவேண்டும் என்கிறார் பாஸ்கர குருக்கள். ’’இப்படிச் செய்வதால், நாணயங்களில் இருந்து ஒலி எழும்பும். அப்போது, குபேர பகவானின் 108 போற்றிகளைச் சொல்லியும் வழிபடலாம். 108 போற்றிகளையும் சொல்லி முடிக்கும் வரை தட்டில் உள்ள நாணயங்களை இரு கைகளால் அள்ளி எடுப்பதும், மீண்டும் தட்டிலேயே போடுவதுமாக இருக்க வேண்டும்’’ என்கிறார் பாலாஜி குருக்கள்.

தீபாவளித் திருநாளில்... குபேர பகவானை நினைத்து செய்யப்படும் இந்த வழிபாடு, நிலையான செல்வத்தை அருளும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. நாணய பூஜை செய்து முடித்ததும் பால் மற்றும் சர்க்கரை கலந்த செந்நிற அவலைக் கொண்டு பாயசம் செய்து நைவேத்தியம் செய்யவேண்டும். தீப தூப ஆராதனைகள் செலுத்தி, பூஜையை நிறைவு செய்து நமஸ்கரிக்கவேண்டும்.

தீபாவளி அன்று செல்வம் பெருக்கும் லட்சுமி குபேர வழிபாட்டை மேற்கொள்வதோடு, அருகில் உள்ள கோயில்களுக்குச் சென்று வழிபடுவது கூடுதல் பலனைத் தரும். பெருமாள் கோயிலில் உள்ள தாயார் சந்நிதிக்குச் சென்று வணங்கி வழிபடுவது எண்ணற்ற பலன்களைத் தந்தருளும். லக்ஷ்மி கடாட்சம் கிடைக்கும். சகல ஐஸ்வர்யமும் கிடைத்து தரித்திர நிலையில் இருந்து மீண்டு சகல சம்பத்துகளுடன் வாழலாம்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in