கார்த்திகை ஞாயிறு: வாசலில் தீபம் ஏற்றினால் ஐஸ்வர்யம் பெருகும்!


கார்த்திகை ஞாயிறு: வாசலில் தீபம் ஏற்றினால் ஐஸ்வர்யம் பெருகும்!

கார்த்திகை மாதத்தின் ஞாயிற்றுக்கிழமைகளில், வீட்டு வாசலில் மாலையில் விளக்கேற்றி வைத்தால், நம் இல்லத்தில் ஐஸ்வர்யம் பெருகும். தரித்திரம் விலகும் என்பது ஐதீகம்.

கார்த்திகை மாதம் என்பது வழிபாட்டுக்கு உரிய அற்புதமான மாதம். கொஞ்சம் மழையும் கொஞ்சம் குளிரும் கலந்திருக்கக் கூடிய இந்த மாதத்தில் நம் மனமானது ஒருபுள்ளியில் அழகுற இயங்கும் என்றும் முழு ஈடுபாட்டுடன் எந்தவொரு செயலையும் நம்மால் செய்யும் சக்தி கிடைக்கும் என்றும் ஆச்சார்யர்கள் கணித்துச் சொல்லியிருக்கிறார்கள்.

கார்த்திகை மாதம் என்பது ஒருபக்கம் ஐயப்ப பக்தர்களுக்கான மாதம். இன்னொரு பக்கம் சிவாலய வழிபாட்டுக்கான மாதம். மற்றொரு பக்கம் பார்த்தால், கார்த்திகேயன் என்று அழைக்கப்படும் முருகப்பெருமானை வணங்குவதற்கு உரிய மாதமும் கூட!

அடியும் முடியும் தேடிக் கிடைக்காமல் போனதால், ‘சிவமே பெரிது’ என மகாவிஷ்ணுவும் பிரம்மாவும் ஏற்றுக் கொண்டதால், பெருமாளை வணங்கி வழிபடுவதும் பிரம்மா கோயிலுக்குச் சென்று தரிசித்து அருளைப் பெறுவதும் என அற்புதமான வழிபாடுகளும் பூஜைகளுமாக செய்கிற மாதம் இது.

முக்கியமாக, கார்த்திகை மாதம் என்பது தீப மாதம். திருமண மாதம் என்றும் சொல்லுவார்கள். திருக்கார்த்திகை தீபத்திருவிழா நடைபெறும் மாதம். கிராமங்களில், கார்த்திகை மாதம் வந்துவிட்டாலே, தினமும் வீட்டு நிலைவாசற்படியில் விளக்கேற்றி வைத்திருப்பார்கள். இன்றைக்கும் இதை வழக்கமாகக் கொண்டிருக்கிற கிராமங்கள் இருக்கின்றன.

சென்னை முதலான பெருநகரங்கள், அபார்ட்மென்ட் குடியிருப்புகளாக மாறிய போது, கிராமத்தில் இருந்து வந்தவர்கள், இதைக் கடைப்பிடித்தார்கள். பிறகு கொஞ்சம்கொஞ்சமாக மாறிவிட்டன. கார்த்திகை மாதத்தில், தினமும் நிலைவாசற்படியில் விளக்கேற்றி வைப்பது விசேஷமானது.

முடிந்தால் கார்த்திகை மாதத்தின் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமாவது, மறக்காமல் இரண்டு அகல்விளக்குகளை ஏற்றிவைத்து பூஜையறையில் நாம் அமர்த்தியிருக்கும் தெய்வங்களை வழிபடுவது பல நன்மைகளைத் தந்தருளும் என்கிறார் முநீஸ்வர சாஸ்திரிகள்.

ஞாயிற்றுக் கிழமை என்பது சூரியனின் ஆதிக்கம் நிறைந்த நன்னாள். மாலை என்று சொல்லப்படுகிற சாயங்கால வேளையில் சந்திரன் ஆதிக்கம் வந்துவிடும். மறுநாள் திங்கட்கிழமையும் சந்திரனின் ஆதிக்கம் நிறைந்திருக்கும். திங்கள் என்றால் சந்திரன் என்று அர்த்தம். ஞாயிற்றுக்கிழமை மாலையில் சந்திரனின் ஆதிக்கம் தொடங்குகிற வேளையில், வாசலில் விளக்கேற்றி வைத்து, வழிபட்டு வந்தால் நன்மைகள் அனைத்தும் கிடைக்கப் பெறலாம். இல்லத்தில் ஐஸ்வர்யம் குடிகொள்ளும். இதுவரை வீட்டில் இருந்த தரித்திரம் நீங்கப்பெற்று நிம்மதியாக வாழலாம்.

மேலும், சந்திரனை மனோகாரகன் என்கிறது ஜோதிடம். நம் மனதை இயக்குபவன் சந்திரன். அந்த சந்திரனை ஞாயிற்றுக்கிழமைகளில் வரவேற்கும் விதமாக வாசலில் தீபமேற்றி வழிபட்டு வந்தால், மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கும். மனதில் தெளிவு பிறக்கும் என்கிறார் முநீஸ்வர சாஸ்திரிகள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in