5 கோடிக்கு ரூபாய் நோட்டுகளால் அம்மனுக்கு அலங்காரம்!

‘லட்சுமி’ கடாட்சத்தில் நெல்லூர் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயில்
5 கோடிக்கு ரூபாய் நோட்டுகளால் அம்மனுக்கு அலங்காரம்!

தசரா பண்டிகையின் மறக்கமுடியாத விசேஷமாக ஆந்திராவின் நெல்லூரில் உள்ள ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மனையும், கோயிலையும் ரூ.5 கோடி மதிப்பிலான ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்து வியக்கவைத்திருக்கிறார்கள்.

ஆந்திராவில் தசரா பண்டிகை, கடந்த 7-ம் தேதி முதல் அனைத்து அம்மன் கோயில்களிலும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. விஜயவாடாவில் உள்ள கனக துர்மையம்மன் கோயில் தசரா பண்டிகைக்கு பெயர்பெற்ற கோயிலாக விளங்குகிறது. மேலும், திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலிலும் நவராத்திரி பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நெல்லூரில் உள்ள ஸ்ரீ வாசவி கன்னிகாபரமேஸ்வரி கோயிலில் இந்த ஆண்டு அனைவரும் அசந்துபோகும் விதத்தில் தசரா கொண்டாடப்படுகிறது. இதற்குக் காரணம், ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மனையும், அம்மன் கோயிலையும் ரூ.5 கோடி மதிப்பிலான புத்தம் புதிய ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்டிருப்பதுதான். 500, 200, 100, 50, 20, 10 என அனைத்து வகை ரூபாய் நோட்டுகளையும், உபயோகித்து வகை, வகையாக மாலைகள், தோரணங்களைக் கட்டி, கோயிலின் சுவர்களே தெரியாத வகையில் அலங்கரித்துள்ளனர்.

மேலும், அம்மனுக்கு தங்க பிஸ்கெட் கட்டிகளையும் வைத்து பூஜித்து வருகின்றனர். கோயில் முழுக்க பணமும், தங்க பிஸ்கட்டுகளும் வைத்து அலங்காரம் செய்யப்பட்டிருப்பதால், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பக்தர்கள் மட்டுமே தீவிர கண்காணிப்புக்குப் பிறகு கோயிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். கன்னிகா பரமேஸ்வரி கோயில் முழுக்க இன்று எங்கு பார்த்தாலும் ‘லட்சுமி’ களையாய் காட்சியளிக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in