சுபிட்சம் தரும் சங்கு; தோஷம் நீக்கும் சங்கு!

பெருமாளின் திருக்கரத்தில் சங்கு; சிவனாருக்கு சங்காபிஷேகம்!
சுபிட்சம் தரும் சங்கு; தோஷம் நீக்கும் சங்கு!

நம் கவலைகளை... சங்கு ஏந்திக்கொண்டிருக்கும் பெருமாளும் காப்பார். சங்கால் அபிஷேகத்தை வாங்கிக்கொண்டு குளிரக்குளிர இருக்கிற சிவபெருமானும் அருளுவார்! சிவபெருமானை அபிஷேகப்பிரியன் என்பார்கள். பெருமாளை அலங்காரப்பிரியன் என்பார்கள்.

அபிஷேகப்பிரியரான சிவபெருமானுக்கு பெருமாளின் திருக்கரத்தில் இருக்கும் சங்கு கொண்டு அபிஷேகம் செய்வது கார்த்திகை சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமையின் விசேஷம். கார்த்திகை மாத சோமவாரத்தில் சிவலிங்கத்திருமேனிக்கு சங்காபிஷேகம் செய்வது பெரும்பாலான சிவாலயங்களில் தொன்றுதொட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

கங்கை சடைமுடியான் என்று போற்றப்படுகிறது சிவபெருமானுக்கு குளிரக்குளிர சங்கால் அபிஷேகம் செய்வதும் அதைத் தரிசிப்பதும் மகா புண்ணியம் என்கிறார் பாஸ்கர குருக்கள்.

கார்த்திகை சோமவாரத்தில் சிவாலயங்களில் சங்கில் புனித நீர் நிரப்பி, அதை கங்கையாகப் பாவித்து சங்காபிஷேகம் செய்வது வழக்கம். சங்கு, செல்வத்தின் சின்னம். வற்றாத பொருட்செல்வம் வேண்டும் என விரும்பாதவர்களும் இருக்கிறார்களா என்ன? அதேபோல், இறைவனின் அருட்செல்வம் வேண்டும் என்று துறவிகளும், ஞானிகளும் சித்தர் பெருமக்களும் இந்தப் பூஜையை மேற்கொள்கிறார்கள் என்பது ஐதீகம்.

வைணவத்தில் சங்கு என்பது வீரத்தின் சின்னம். பகவான் கிருஷ்ண பரமாத்மாவின் பாஞ்சஜன்யம் என்று சொல்லப்படுகிற சங்கொலி கேட்டு, குருக்ஷேத்திரப் போர்க்களமே கிடுகிடுத்தது என்கிறது மகாபாரதம்.

மேலும், சங்கு இயற்கையாக கிடைக்கக் கூடியது. வெண்மை நிறம் கொண்டு தூய்மையாக இருப்பது. சங்கு சுட்டாலும் தன் வெண்மை குணத்தை மாற்றிக்கொள்ளாதது. மனிதர்களாகிய நாமும் சங்கு போல் மனம் கொண்டு, இறை பக்தியில் நிலைத்திருக்கவேண்டும் எனும் தாத்பர்யம் சங்காபிஷேகத்தில் அடங்கியிருக்கிறது. இதனை வலியுறுத்தவே சங்காபிஷேகம் செய்யப்படுகிறது.

சங்கினுள் பால், பன்னீர், பஞ்ச கவ்யம் முதலானவற்றை நிரப்பி அபிஷேகம் செய்தாலும், அதை கங்கையாகப் பாவித்தே அபிஷேகம் செய்வது வழக்கம். அந்தந்தக் கோயிலின் வசதிக்குத் தக்கபடி, 108, 1008 என்கிற எண்ணிக்கையில் சங்குகளைப் பயன்படுத்தலாம்.

சங்கிற்கென்றே காயத்ரி ஸ்லோகம் உள்ளது.

‘ஓம் பாஞ்சஜந்யாய வித்மஹே

பவமாநாய தீமஹி

தந்நோ சங்க ப்ரேசோதயாத்

என்று சங்கிற்கான காயத்ரியைச் சொல்லி, கார்த்திகை சோமவாரங்களிலும் புதன் மற்றும் சனிக்கிழமை என பெருமாளுக்கு உரிய நாட்களிலும் வேண்டிக்கொள்வது சகல சுபிட்சங்களையும் தந்தருளும்.

கார்த்திகை மாதத்தில் இறைவன் அக்னிப் பிழம்பாக இருப்பார் என்கிறது புராணம். அவரைக் குளிர்விக்கும் பொருட்டு சங்காபிஷேகம் செய்வதாக ஐதீகம். கார்த்திகை மாதம் சூரியன் பகை வீடான விருச்சிகத்தில் சஞ்சரிப்பார். அப்போது சந்திரன் நீச்சத்தில் இருப்பதால் அதனை தோஷம் என்கிறது ஜோதிட சாஸ்திரம். இந்த தோஷத்தை நீக்கவே சங்காபிஷேகம் நடத்தப்படுகிறது.

திங்கள் என்பது சந்திரனைக் குறிக்கும். அந்தச் சந்திரனையே பிறையென சிரசில் அணிந்திருப்பவன் ஈசன். சந்திரனை மனோகாரகன் என்கிறது ஜோதிட சாஸ்திரம். மனிதர்கள் அனைவருக்கும் சந்திர பலம் என்பது மிக மிக முக்கியம். ஆக, சந்திர பலம் கிடைக்க வேண்டுமெனில், கார்த்திகை சோம வாரத்தில் வழிபாடு செய்வதும் சங்காபிஷேக தரிசனம் காண்பதும் சங்கு காயத்ரி ஸ்லோகம் சொல்லி வழிபடுவதும் எண்ணிலடங்காத பலன்களைத் தரும்.

கார்த்திகை மாதம் விருச்சிக மாதம் என அழைக்கப்படும். விருச்சிக ராசியில் சந்திரன் நீசமாக (பலமிழந்து) அமைவார். கார்த்திகை மாதத்தில் வரும் அனைத்து சந்திர அம்சம் பொருந்திய நாளாகிய திங்கட்கிழமைகளில், சந்திர அம்சமான சங்குகளுக்கு பூஜை செய்து, சங்கு தீர்த்தம் கொண்டு சிவபெருமானுக்கு பூஜை செய்வதும் தரிசிப்பதும் சந்திரன் பலம் பெற்று வளர்ந்ததைப் போல, நம் வாழ்க்கையிலும் நற்பலன்கள் அனைத்தும் திகழ்ந்து சுபிட்சத்துடன் வாழ்வோம் என்கிறது ஜோதிட நூல்.

பொதுவாகவே ஐப்பசியில் அன்னாபிஷேக நாளில் சிவ தரிசனம் செய்வதும் கார்த்திகை சோமவாரத்தில் சங்காபிஷேக தரிசனம் செய்வதும் நம் பாவங்களைப் போக்கவல்லது. மேலும், கார்த்திகை பெளர்ணமியிலும் ரோகிணி நட்சத்திர நாளிலும் சிவ தரிசனம் செய்வது சிறப்பு மிக்கது என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

சங்கபிஷேகத்தால் சகோதர ஒற்றுமை வளரும். சங்கு செல்வத்தின் அம்சம். செல்வ அபிவிருத்தியாகும். வீட்டில் லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்கும். வீடுகளில் நுழைவு வாயில் தரையில் சங்கு பதிக்கும் வழக்கம் இருக்கிறது. திருஷ்டியையும் தோஷத்தையும் நீக்கும் சக்தி மிக்கது சங்கு!

கார்த்திகை சோம வாரத்தில் சிவபெருமானுக்கு நடைபெறும் சங்காபிஷேகத்தை கண்ணாரத் தரிசியுங்கள். நம் கவலைகளை... சங்கு ஏந்திக்கொண்டிருக்கும் பெருமாளும் காப்பார். சங்கால் அபிஷேகத்தை வாங்கிக்கொண்டு குளிரக்குளிர இருக்கிற சிவபெருமானும் அருளுவார்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in