'நீதிக்கல்’லில் மிளகாய் பூசி வழிபாடு : நியாயம் தருவாள் மாசாணியம்மன்!


'நீதிக்கல்’லில் மிளகாய் பூசி வழிபாடு : நியாயம் தருவாள் மாசாணியம்மன்!

அருளும் பொருளும் அள்ளித் தரும் சக்தி வாய்ந்த தெய்வம் மாசாணியம்மன். அவளை மனதார வேண்டிக்கொண்டு, நம் குறைகளை அவளிடம் எடுத்துச் சொன்னால் போதும்... நமக்கு இதுவரை இருந்த எதிர்ப்புகளையும் எதிரிகளையும் ஒழித்துக் காத்தருளுவாள் தேவி. நமக்கு வாழ்வில் இருந்த தடைகளையெல்லாம் நீக்கியருளுவாள் அன்னை.

பொள்ளாச்சியில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது ஆனைமலை. இங்கே அழகிய இயற்கை எழிலார்ந்த சூழலில் கோயில் கொண்டிருக்கிறாள் ஸ்ரீமாசாணியம்மன். அற்புதமான கோயில் இது. சக்தியுடனும் சாந்நித்தியத்துடனும் திகழும் பிரம்மாண்டமான ஆலயம் இது.

ஒருகாலத்தில், நன்னன் என்ற மன்னன் ஆனைமலையையும் அதைச்சுற்றியுள்ள பகுதியையும் ஆட்சி செய்து வந்தான். ஒருநாள்... அரசனைச் சந்திக்க துறவி ஒருவர் அரண்மனைக்கு வந்தார். துறவியின் வருகை அறிந்த மன்னன், ஓடோடி வந்து அவரை வரவேற்றான். நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினான்.

நீதி பிறழாமல் ஆட்சி செய்யும் மன்னனுக்கு, மாங்கனி ஒன்றைப் பரிசாகக் கொடுத்தார் துறவி. ’’இந்த மாங்கனி அதிசயமானது. அபூர்வ குணம் கொண்டது. அற்புதங்கள் நிறைந்தது. இந்த மாங்கனியைச் சாப்பிடுங்கள். பின்னர் இந்தக் கொட்டையை ஆற்றில் விட்டுவிடுங்கள். இல்லையெனில் அதுவே உங்களுக்கு ஆபத்தாகிப்போகும்’’ என அறிவுறுத்தி ஆசீர்வதித்து அருளினார்.

மன்னன் நன்னன், அந்த மாங்கனியை கண்களில் ஒற்றிக்கொண்டு சுவைத்தான். அப்படியொரு சுவையை அதுவரை ருசித்ததில்லை அவன். வியந்து மலைத்தான். மாங்கனியைச் சாப்பிட்ட சுவையில் மயங்கிய மன்னன், அரண்மனையில் உள்ள நந்தவனத்தில், ஆற்றங்கரையில் மாங்கனியின் கொட்டையை மண்ணில் ஊன்றி நட்டுவைத்து வளர்த்து வரப் பணித்தான். துறவி சொன்னது போல், கனியின் கொட்டையை ஆற்றில்விடவில்லை அவன்!

அதுவும் வளர்ந்தது. காய் விட்டது. கனியும் வருவதற்கான தருணம் வந்தது. அந்த சமயத்தில், ’’மாங்கனியை எவரும் பறிக்கக் கூடாது. எவரும் சாப்பிடக்கூடாது. மீறிச் சாப்பிட்டால் மரண தண்டனை வழங்கப்படும்’’ என அரண்மனை ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்தான் மன்னன்.

இவை அனைத்தையும் தன் ஞானதிருஷ்டியால் அறிந்து உணர்ந்த துறவி. மன்னன் நன்னனைப் பார்க்க வந்தார். வழக்கம்போல், மன்னனும் அவரை வரவேற்று வணங்கினான். ‘’தவறிழைத்துவிட்டீர்கள் மன்னா. அந்தக் கொட்டையை ஏன் வளர்த்தீர்கள்? அதில் இருந்து ஒரேயொரு கனி வரும். அந்தக் கனியை நீங்கள் சாப்பிடக் கூடாது. வேறு எவரும் சாப்பிடவும் அனுமதிக்காதீர்கள். அந்தக் கனி, தெய்வீகப் பெண்ணுக்கானது. ஒருவேளை, அந்தப் பெண்ணைத் தவிர்த்து வேறு எவரேனும் சாப்பிட்டால், உங்கள் தேசமே அழிந்துபோகும்’’ என அறிவுறுத்திச் சென்றார்.

இந்தக் காலகட்டத்தில், தாரகன் என்பவர் தன் மகள் தாரணி என்பவளை அழைத்துக் கொண்டு வியாபார விஷயமாக ஆனைமலை பகுதிக்கு வந்தார். நந்தவனத்துக்கு அருகில் உள்ள கரையில் குளிக்கச் சென்றாள் தாரணி. அப்போது அந்த மாமரத்தையும் அதில் இருந்த ஒரேயொரு மாங்கனியையும் கண்டார். ஆசையுடன் அதைப் பறித்துச் சாப்பிட்டார்.

இந்த விஷயம் மன்னன் காதுக்குச் சென்றது. இதில் கடுங்கோபம் கொண்ட மன்னன், தாரணியை கைது செய்யும்படி உத்தரவிட்டார். அதன்படி கைது செய்து அழைத்துவரப்பட்டாள் தாரணி. மன்னன் நன்னன், தாரணிக்கு மரண தண்டனை அறிவித்தான்.

’’ஒரேயொரு கனியைப் பறித்துச் சாப்பிட்டதற்காக மரணதண்டனையா? நான் இறந்தாலும் என் உயிரே பிரிந்தாலும் என்னுடைய ஆத்மா, இந்த மண்ணில், இந்த தேசத்தில்தான் இருக்கும்’’ என சூளுரைத்தாள். பிறகு அவளுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.

அவளின் உடலை மயானத்துக்கு எடுத்துச் சென்றார்கள். பின்னர் துறவி சொன்ன தெய்வீகப் பெண் இவளே... என உணர்ந்த மன்னன், தாரணியின் உருவத்தைப் போலவே மண்ணில் உருவம் அமைத்து வழிபடத் தொடங்கினான்.

மாங்கனிக்காக உயிர் துறந்த அந்தப் பெண், ’மாங்கன்னி அம்மன்’ என்று வணங்கப்பட்டாள். பின்னர், மாங்கனி என்றும் அதுவே மாசாணியம்மன் என்றும் மருவியதாகச் சொல்கிறது மாசாணியம்மன் ஸ்தல புராணம்.

உக்கிர தெய்வம்தான் மாசாணியம்மன். ஆனால், இன்றைக்கும் இந்தப் பகுதி மக்களையும் நிலங்களையும் நீரையும் காத்தருளிக்கொண்டு, ஆட்சி செய்துகொண்டிருக்கிறாள் மாசாணியம்மன்.

துர்குணங்கள் கொண்டவர்களை, சக உயிர்களை துன்பப்படுத்துபவர்களை மன்னிக்கவே மாட்டாள் மாசாணியம்மன். தன்னை நாடி வந்து வேண்டி நிற்கும் பக்தர்களின் குறைகளை, ஒருபோதும் கேட்டுக் கொண்டு, பொறுத்திருக்க மாட்டாள்.

மாசாணியம்மன் கோயிலுக்கு, வெளியூர்களில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் வேண்டிக்கொள்வதற்காகவும் தங்கள் குறைகளையெல்லாம் சொல்லி பரிகாரம் தேடுவதற்காகவும் ஏராளமான பக்தர்கள் தினமும் வந்தவண்ணம் இருக்கின்றனர். தங்களின் குறைகளை பிரார்த்தனைச் சீட்டு போல் இங்கு எழுதி வழங்குவது வழக்கமாக உள்ளது.

இங்கே உள்ள ‘நீதிக்கல்’ மிகவும் விசேஷம். நீதிக்கல்லுக்கு மிளகாய் அரைத்து சந்தனம் போல் பூசி வேண்டிக்கொள்கிறார்கள் பக்தர்கள். தங்களுக்கு நீதி கிடைக்கவில்லை, தங்களுக்கு வரவேண்டிய சொத்து கிடைக்கவில்லை, பணத்தால், பொருளால் ஏமாந்துவிட்டோம் எனக் கலங்கித் தவிப்பவர்கள், நீதிக்கல்லுக்கு மிளகாய் அரைத்து சார்த்தி வேண்டிக்கொண்டால், உரிய நீதி கிடைத்தே தீரும் என்பது ஐதீகம்!

செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், மாசாணியம்மனை அர்ச்சித்து வழிபட்டு, தங்கள் குறைகளை அவளிடம் சமர்ப்பித்து வேண்டிக்கொண்டால் போதும்... எதிரிகளை ஒழிப்பாள். எதிர்ப்புகளை அழிப்பாள்.

நீதிக்கல்லில் மிளகாய் அரைத்துச் சார்த்தி, வேண்டிக்கொண்டால், நம் இன்னல்களையெல்லாம் போக்கி அருளுவாள். நமக்கு இதுவரை இருந்த தடைகளையெல்லாம் தகர்த்தெறிவாள். நாம் செய்யும் காரியங்கள் அனைத்தையும் வெற்றியாக்கித் தந்தருளுவாள் மாசாணியம்மன் எனப் போற்றுகின்றனர் பக்தர்கள்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in