தில்லை நடராஜர் கோயிலுக்கு திடீரென வந்த அமைச்சர்: தீட்சிதர்கள் என்ன செய்தார்கள்?

கோயிலுக்குள்  அமைச்சர் சேகர் பாபு
கோயிலுக்குள் அமைச்சர் சேகர் பாபு

தமிழக அரசின் அறநிலையத் துறை சார்பில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் நாளை மற்றும் நாளை மறுதினம் ஆய்வு நடைபெற உள்ள நிலையில் அதற்கு தீட்சிதர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு இன்று காலை அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு திடீரென வருகை தந்தார்.

கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள வள்ளலாரின் சத்திய ஞான சபைக்கு செல்வதற்காக அமைச்சர் சேகர்பாபு இன்று காலை வந்து கொண்டிருந்தார். அப்படி வரும் வழியில் திடீரென சிதம்பரம் நோக்கி செல்ல அவர் உத்தரவிட்டார். அதனையடுத்து இன்று காலை எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் நடராஜர் கோயிலுக்கு அமைச்சரின் கார் வந்து நின்றது.

அமைச்சர் வருகையை சற்றும் எதிர்பார்க்காத தீட்சிதர்கள் கோயில் வாசலுக்கு வந்து அவரை வரவேற்றனர். பின்னர் அவரை அழைத்துச் சென்று கனகசபையில் ஏற்றி நடராஜரை தரிசனம் செய்து வைத்தனர். அதன் பின்னர் கோவிந்தராஜ பெருமாள் சன்னிதிக்குச் சென்று அமைச்சர் தரிசனம் செய்தார். அதனைத் தொடர்ந்து ஆயிரங்கால் மண்டபத்தின் எதிரே தரையில் அமர்ந்த அமைச்சர் கோயில் பொது தீட்சிதர்களுடன் பேசினார்.

அப்போது தீட்சிதர்கள் கோயிலின் நிர்வாகம் எப்படி நடைபெற்று வருகிறது, கோயில் பூஜைகள் எவ்வாறு நடைபெற்று வருகிறது என்பது குறித்து அமைச்சர் சேகர்பாபுவிற்கு விளக்கமளித்தனர். அவற்றை அமைச்சர் சேகர்பாபு பொறுமையாக கேட்டுக் கொண்டார். கோயிலில் இந்து சமய அறநிலைத்துறை ஆய்வு செய்வதற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்தது குறித்தும் அமைச்சரிடம் விளக்கம் அளித்தனர்.

தமிழக அரசின் நிலைப்பாடு குறித்தும், இந்து சமய அறநிலையத் துறையின் திட்டங்கள் குறித்தும் அவர்களிடம் அமைச்சர் விளக்கி கூறினார். அதனால் கோயிலுக்கு ஆய்வு செய்ய வரும் குழுவிற்கு ஒத்துழைப்பு அளியுங்கள் எனவும் கூறினார். எதையுமே தடுப்பதால் தான் பிரச்சினை ஏற்படுகிறது அதனால் ஒத்துழைப்பு கொடுங்கள் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, “தீட்சிதர்கள் சம்பந்தப்பட்ட அவர்களது கோரிக்கையையும் அரசின் நிலைப்பாட்டையும் பகிர்ந்து கொண்டோம். இந்து அறநிலைத்துறை சட்டதிட்டங்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்து யாருக்கும் எந்த அளவிலும் சிறு மனக்கஷ்டம் இல்லாமல் அனைவரும் இன்புற்று வாழ வேண்டும் என்பதுதான் தமிழக முதல்வரின் அன்பான வேண்டுகோள். சிதம்பரம் நடராஜர் கோயில் சம்பந்தமாக நல்ல ஒரு சுமூக தீர்வு ஏற்படும் என எனக்கு தோன்றுகிறது. இந்த ஆட்சி துலாக்கோல் போன்றது அனைவருக்கும் சமமான நீதி வழங்கும் அரசாக செயல்பட்டு வருகிறது" என்று சொன்னார்.

மதுரை ஆதீனம் சர்ச்சைக்குரிய முறையில் பேசியது பற்றி அவரிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, "மதுரை ஆதீனம் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காகவும், தனது செய்திகள் தொடர்ந்து இடம் பெற வேண்டும் என்பதற்காகவும் அப்படியெல்லாம் பேசுகிறார். அவர் ஒருவர் மட்டும்தான் அப்படிச் சொல்கிறார்.

நேற்று முன்தினம் கூட தருமபுரம் ஆதீனத்திற்கு சென்றிருந்தோம். அவர் நல்ல முறையில் உபசரித்தார். எனவே, யாரோ ஒருவர் அப்படி இருக்கிறார் என்பதற்காக ஒட்டுமொத்தமாக ஆதீனங்களையும், ஜீயர்களையும், தீட்சிதர்களையும் குறை சொல்வது ஏற்புடையதல்ல. அனைவரும் தமிழக முதல்வரின் பக்கம் தான் இருக்கிறார்கள்” என்றார் அமைச்சர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in