சதுர்முக முருகன்: குங்குமமும் பாலும் கலந்து அபிஷேகம் செய்தால் வீடு, மனை நிச்சயம்!

சதுர்முக முருகன்: குங்குமமும் பாலும் கலந்து அபிஷேகம் செய்தால் வீடு, மனை நிச்சயம்!

சின்னாளப்பட்டியில் உள்ள முருகப்பெருமானுக்கு நான்கு முகங்கள். இந்த முருகப்பெருமானை வழிபட்டு பிரார்த்தனை செய்தால், திருமணத் தடைகள் அகலும். வீட்டில் தடைப்பட்ட மங்கல காரியங்கள் விரைவில் நடந்தேறும் என்பது ஐதீகம். வீடு மனை யோகம் கிடைக்கப் பெறுவீர்கள்.

திண்டுக்கல்லில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது சின்னாளப்பட்டி. கண்டாங்கிப் புடவைக்குப் பேர் பெற்ற இந்த ஊரில், கருணையோடு கோயில் கொண்டு அனைவருக்கும் அருள்பாலிக்கிறார் முருகக் கடவுள்.

பிரணவத்தின் பொருளைக் கேட்டு, அதற்கு விளக்கம் தெரியாமல் தவித்த பிரம்மாவை சிறையில் அடைத்தார் அல்லவா, ஞானவேல் முருகன்! அதை நினைவுகூரும் வகையில் இங்கே, இந்தத் தலத்தில் நான்முகனாக, சதுர்முகத்துடன் அமைக்கப்பட்டுள்ளார் முருகப்பெருமான் என்கிறது கோயிலின் ஸ்தல வரலாறு. அப்பனுக்கே பாடம் சொன்ன சுப்பையன் என்பதாலும் இங்கே ஞானகுருவாகவே திகழ்கிறார் வேல்முருகன்!

வடக்குப் பார்த்தபடி அருள்கிற ஸ்ரீசதுர்முக முருகக் கடவுளுக்குத்தான் ராஜகோபுரம் அமைந்துள்ளது. இப்படி நான்கு முகங்களுடன் முருகக் கடவுளைத் தரிசிப்பது விசேஷம் என்றும் வேறெங்கும் தரிசிக்கக் கிடைக்காத அரிது என்றும் போற்றி வணங்குகின்றனர் பக்தர்கள்!

செவ்வாய்க்கிழமைகளில், குங்குமமும் பாலும் கலந்து அபிஷேகித்தால், செவ்வாய் தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை. மேலும், எதிரிகள் குறித்த பயம் விலகும். குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறுவோம் என்பது நம்பிக்கை!

சஷ்டி விழா இங்கே விசேஷம். சஷ்டி விரதம் இருந்து கந்தவேளைத் தரிசித்தால், எதிரிகள் முதலான சகல தொல்லைகளும் நீங்கும். சந்தோஷங்கள் பெருகும். அதேபோல், ஒவ்வொரு மாதமும் கிருத்திகை நட்சத்திர நாளில், சதுர்முக முருகனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. தை மாத கிருத்திகை நாளில், முருகப்பெருமானை இங்கு வந்து வேண்டிக்கொண்டால், கேட்டதையெல்லாம் கொடுப்பான் திருக்குமரன். இழந்த செல்வங்களைத் தந்து காத்தருளுவான் என்கின்றனர் பக்தர்கள். தை கிருத்திகையில், குங்குமமும் பாலும் கலந்து அபிஷேகம் செய்து வேண்டிக்கொண்டால், எதிலும் வெற்றியைத் தருவார் வெற்றிவடிவேலவன்.

மூலவராக முருகக் கடவுள் கோலோச்சும் இந்த ஆலயத்தில், கன்னிமூலையில் ஸ்ரீகணபதியும் வாயுமூலையில் ஸ்ரீதண்டாயுதபாணியும் ஈசான்ய மூலையில் ஸ்ரீபைரவரும் சந்நிதி கொண்டிருக்கின்றனர். தேய்பிறை அஷ்டமி நாளில் ஸ்ரீபைரவருக்கு தயிர்சாதம், வடை ஆகியவற்றை நைவேத்தியம் செய்து வேண்டிக் கொண்டால், சத்ரு உபாதைகள் நீங்கும்;

இங்கே ஸ்ரீபாலதிரிபுரசுந்தரிக்கு தனிச்சந்நிதி அமைந்திருக்கிறது. பாலாதிரிபுரசுந்தரிக்கு, புடவை சார்த்தி, செவ்வரளி மலர்கள் சூட்டி வழிபட்டால், கல்வியும் ஞானமும் பெறலாம்! அங்காரகன் வழிபாடும் இங்கு விசேஷம்! செவ்வாய்க்கு அதிபதியான முருகக் கடவுளுக்கு செவ்வாய்க் கிழமைகளில், துவரம்பருப்புடன் அச்சுவெல்லமும் கலந்து நைவேத்தியம் செய்து பிரார்த்தித்தால், வீடு- மனை சம்பந்தமான பிரச்சினைகள் அனைத்தும் நீங்கும்! வீடு மனை யோகம் தந்து அருளுவார் சதுர்முக முருகன்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in