சர்வ மங்கல யோகம் தருவார் சதுர்புஜ கிருஷ்ணர்!

- மார்கழியில் மதனகோபால சுவாமி தரிசனம்
சர்வ மங்கல யோகம் தருவார் சதுர்புஜ கிருஷ்ணர்!

மதுரை சதுர்புஜ கிருஷ்ணரைத் தரிசித்து வழிபட்டு வந்தால், சர்வ மங்கல யோகமும் கிடைக்கப் பெறலாம். சகல ஐஸ்வரியங்களையும் தந்தருளுவார் கிருஷ்ணர்.

மதுரை ரயில் நிலையத்தில் இருந்து 1 கி.மீ. தொலைவில், கூடலழகர் பெருமாள் கோயிலுக்கு அருகில், மேலமாசி வீதியில் அமைந்திருக்கிறது, ஸ்ரீமதனகோபால சுவாமி ஆலயம். கிழக்குப் பார்த்து அமைந்த ஆலயம் இது. இந்த ஆலயத்தை ‘தென்னக பிருந்தாவனம்’ எனச் சொல்கிறது ஸ்தல புராணம்!

7-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட திருத்தலம் இது. மதுரையை ஆட்சி செய்த நாயக்க மன்னர் திருப்பணிகள் செய்திருப்பதாக சரித்திரச் சான்றுகள் தெரிவிக்கின்றன. புராண காலத்தில், முனிவர் பெருமக்கள் இங்கே தவம் மேற்கொண்டு, விக்கிரகத் திருமேனியைப் பிரதிஷ்டை செய்து வழிபட்ட புண்ணிய க்ஷேத்திரம் எனப் போற்றுகின்றனர் பக்தர்கள்! சௌராஷ்டிர இனத்தவரால் சீரமைக்கப்பட்டுப் பாதுகாக்கப்பட்டு வருகிற ஆலயங்களில் இது முக்கியமானதொரு தலம்.

மதுரை பெரியார் பேருந்து நிலையத்துக்கு அருகில், ‘ஸ்ரீ இம்மையிலும் நன்மை தருவார்’ எனும் சிவாலயம் உள்ளது. ஒருகாலத்தில், வனப் பகுதியாக இருந்த இந்த இடத்தில், சிவனார் கடுந்தவம் மேற்கொண்டார். அப்போது அவர் எழுப்பிய யாகத் தீயானது, அக்கினி குண்டத்தில் இருந்து மேலெழும்பி, தேவலோகம் வரை சென்றது. அக்கினியின் வெப்பம் தாங்காமல், தேவர்கள் அவதிப்பட்டார்கள். கலங்கிப் போனார்கள். ‘மகாவிஷ்ணுவே கதி’ என வைகுண்டம் சென்று வணங்கினார்கள். காக்கும்படி வேண்டினார்கள்.

அதைக் கேட்ட திருமால் மதுரையம்பதிக்கு வந்து, ஸ்ரீவேணுகோபாலனாக எழுந்தருளினார். தன் வேணுகானத்தால் அந்த இடத்தையே அழகுறச் செய்தார். ரம்மியமாக்கினார். சிவ ரெளத்திரம் குறைத்தார். அங்கே உக்கிரம் மொத்தமும் தணிந்து, அக்னியானது சாந்த நிலையை அடைந்தது. சிவனாரின் உக்கிரமான தவமும் நிறைவுக்கு வந்தது. அன்று முதல், மதுரை திருத்தலத்தில் ஸ்ரீவேணுகோபால சுவாமியாக பக்தர்களுக்கு அருளிவருகிறார் என்கிறது ஸ்தல புராணம்!

அழகிய திருத்தலம். அற்புதமான க்ஷேத்திரம். சாந்நித்தியம் நிறைந்த பூமி. ஸ்ரீவேணுகோபாலரின் சந்நிதிக்கு வந்து, நம்முடைய மனதில் இருக்கும் குறைகளை எடுத்துச் சொல்லி வேணுகோபாலனிடம் முறையிட்டுப் பிரார்த்தனை செய்தால் போதும்... குறைகளைக் களைந்து, நல்லன எல்லாம் தந்தருள்வார் வேணுகோபால சுவாமி. எந்தத் தலத்திலும் தரிசிக்க அரியதாக, சதுர்புஜங்கள் கொண்ட தோற்றத்துடன் நான்கு திருக்கரங்களுடன் ஸ்ரீவேணுகோபால சுவாமி காட்சி தரும் திருத்தலம் இது.

‘ஆஹா... இத்தனை அழகானவனா கிருஷ்ணன்!’ என்று அந்த மன்மதனே வியந்து மலைத்து, தலையைக் குனிந்து கொண்டானாம். அதனால், இங்கே உள்ள சுவாமிக்கு ஸ்ரீமதனகோபால சுவாமி என்கிற திருநாமம் அமைந்தது. நின்ற திருக்கோலத்தில், நான்கு திருக்கரங்களுடன், புல்லாங்குழலும் சங்கு மற்றும் சக்கரமும் ஏந்தியபடி கம்பீரமும் அழகுமாகக் காட்சி தரும் பகவானைத் தரிசித்துக் கொண்டே இருக்கலாம்.

தலத்தின் விருட்சம் வாழை. வருகின்ற பக்தர்களின் சந்ததியை வாழையடி வாழையாக வளரச் செய்து, சந்ததி சிறக்கவும் செழிக்கவும் செய்கிறார் சுவாமி. மற்றுமொரு சிறப்பு... நின்ற திருக்கோலம், இருந்த திருக்கோலம் மற்றும் சயனத் திருக்கோலம் என மூன்று திருக்கோலங்களில் காட்சி தருகிறார் பெருமாள். மூலவர்- ஸ்ரீசத்யபாமா, ஸ்ரீருக்மிணி சமேத ஸ்ரீவேணுகோபால சுவாமி. உற்சவர்- பஞ்ச லோக திருமேனியிலான ஸ்ரீதேவி- ஸ்ரீபூதேவி சமேதராக ஸ்ரீமதனகோபால சுவாமி. தாயாரின் திருநாமம்- ஸ்ரீமதனவல்லித் தாயார்.

மார்கழி மாதத்தில், மதனகோபால சுவாமிக்கு காலையும் மாலையும் விசேஷ வழிபாடுகள் நடைபெறுகின்றன. மார்கழி மாதம் முழுவதும் வெளியூர்களில் உள்ள மதுரைக்காரர்கள், சுற்றுவட்டாரங்களைச் சேர்ந்த பக்தர்கள் ஸ்ரீமதனகோபால சுவாமியை வந்து கண்ணாரத் தரிசித்து மனதார வழிபட்டுச் செல்கின்றனர். மதுரை சதுர்புஜ கிருஷ்ணரைத் தரிசித்து வழிபட்டு வந்தால், சர்வ மங்கல யோகமும் கிடைக்கப் பெறலாம். சகல ஐஸ்வரியங்களையும் தந்தருளுவார் கிருஷ்ணர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in