திருவாரூரில் அதிசயத் தேரோட்டம்!

தேரைத் தலையில் சுமக்கும் பக்தர்கள்
திருவாரூரில் அதிசயத் தேரோட்டம்!
தேரைத் தூக்கிச் செல்லும் பக்தர்கள்

பொதுவாகத் தேரோட்டம் என்றால் மிகப் பெரிய தேரும், அதில் சுவாமியை வைத்து பக்தர்கள் வடம் பிடித்து இழுத்துச் செல்வதும், தேர் சக்கரம் மெதுவாக உருண்டோடுவதும் தான் நமக்குத் தெரியும். ஆனால், தேரைத் தலையில் தூக்கிச் செல்லும் அதிசய தேர் திருவிழா திருவாரூர் மாவட்டத்தில் நடக்கிறது.

வயல் வெளியில் தூக்கிச் செல்லப்படும் தேர்
வயல் வெளியில் தூக்கிச் செல்லப்படும் தேர்

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே கீரனூர் கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ஸ்ரீசெல்லியம்மன் ஆலயத்தில்தான் இந்த தலையில் சுமந்து செல்லும் எல்லை தேர் திருவிழா நடக்கிறது. ஆண்டு தோறும் பங்குனி மாதத்தில் எல்லைத் தேர் பவனி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இன்று பக்தர்கள் தலையில் சுமந்து செல்லும் புகழ்மிக்க எல்லை தேர்திருவிழா நடைபெற்றது.

இந்த திருக்கோவிலில் பங்குனி உற்சவம் திருவிழா கடந்த மாதம் 28 ம் தேதி காப்புகட்டுதலுடன் தொடங்கியது. திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான எல்லை தேர்த்திருவிழா இன்று காலை நடைபெற்றது. இந்த தேர் பவனியில் மற்ற தேர்கள் போன்று வடம் பிடித்து இழுக்காமல் சுமார் 10 கிலோமீட்டர் தூரம் வயல் வழியே பக்தர்கள் தலையில் சுமந்து சென்று ஊர் எல்லைகளைச் சுற்றி ஆலயத்தை அடைந்தனர்.

தலையில் தூக்கிச் செல்லும் அளவிற்கு ஏற்ப இந்த தேரை கிராம மக்கள் வடிவமைக்கின்றனர். பல நூறு கிலோ எடை இருந்தாலும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செய்து கொண்டு தூக்கி வருவதால் அவர்களுக்கு சிரமம் தெரிவதில்லை. இந்த தேரை தங்கள் தலையில் தூக்கி செல்வதால் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேறுவதாகவும், ஊர் பகுதிகள் மட்டுமல்லாமல் எல்லை பகுதியான வயல்வெளிகளிலும் தூக்கி செல்வதன் மூலம் ஊரும், விவசாயமும் செழிப்பதாகவும் கிராம மக்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். இந்த அதிசய தேர் திருவிழாவை சுற்றுவட்டப் பகுதிகளில் உள்ள கிராம மக்கள் ஆவலுடன் வந்து தரிசித்துச் சென்றனர்.

Related Stories

No stories found.