சந்திர கிரகணம்: பரிகாரம் செய்ய வேண்டிய ஐந்து நட்சத்திரக்காரர்கள்!

சந்திர கிரகணம்
சந்திர கிரகணம்

நாளை (நவம்பர் 8, ஐப்பசி மாதம் 22-ம் தேதி) சந்திர கிரகணம் நிகழ்கிறது. இந்தச் சமயத்தில் ஐந்து நட்சத்திரக்காரர்கள் பரிகார பூஜை மேற்கொள்ள வேண்டும்.

சூரிய கிரகணம், சந்திர கிரகணம் என்பது நிகழும் நாட்கள் மிக முக்கியமானவை. சூரிய கிரகணத்தின் போதும் சந்திர கிரகணத்தின் போதும் வெளியே செல்லக்கூடாது, சாப்பிடக்கூடாது, எல்லாப் பொருட்களிலும் கைவைக்கக்கூடாது என்றெல்லாம் சாஸ்திரங்கள் சொல்லிவைத்திருக்கின்றன.

கடந்த மாதத்தில் தீபாவளியை அடுத்து சூரிய கிரகணம் நிகழ்ந்தது. நாளை செவ்வாய்க்கிழமை சந்திர கிரகணம் நிகழ்கிறது. கிரகண நேரம் மாலையில் முக்கால் மணி நேரம் நிகழ்கிறது என்றாலும் கிரகணத்தின் தாக்கமானது முன்னதாகவே இருக்கும் என்பதால் காலை 9 மணிக்கெல்லாம் உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். அதன் பிறகு கிரகணம் முடிந்ததும் உணவு குளித்துவிட்டு, சுவாமி விளக்கேற்றி, நமஸ்கரித்துவிட்டு, அதன் பின்னரே உணவு மேற்கொள்ள வேண்டும்.

நாளை மாலை 5.47 மணிக்கு சந்திர கிரகணம் ஆரம்பமாகிறது. பின்னர் மாலை 6.26 மணிக்கு கிரகணம் நிறைவடைகிறது. இந்தச் சமயத்தில் வெளியே எங்கும் செல்லாமல், வீட்டில் ஓரிடத்தில் அமர்ந்துகொண்டு, நமக்குத் தெரிந்த ஜபங்கள், பாராயணங்களில் வழிபடலாம்.

அதேபோல் தர்ப்பணம் செய்பவர்கள், மாலை 5.47 மணிக்கும் நிறைவடையும் நேரமான 6.26 மணிக்கும் நடுவே உள்ள நேரத்தில் குளித்துவிட்டு, கிரகண நேரத்தில் தர்ப்பணங்கள், முன்னோர்களுக்கான கடமைகளைச் செய்ய வேண்டும். பிறகு கிரகணம் முடிந்ததும் மீண்டும் குளிக்க வேண்டும். பூஜையறையில் விளக்கேற்றிவைத்து நமஸ்கரிக்க வேண்டும். முன்னதாக, காலையிலேயே, நம்முடைய உணவுப் பொருட்கள், குடிநீர் முதலான பாத்திரங்களில் தர்ப்பையை மேலே இட வேண்டும். தர்ப்பைப்புல்லுக்கு கிரகண சக்திகள், தீய சக்திகள் முதலானவற்றை எதிர்க்கும் சக்தி உண்டு என்கிறது சாஸ்திரம்.

இந்த சந்திர கிரகணமானது, பரணி நட்சத்திரத்தில் பிடிக்கிறது. மேலும் அஸ்வினி, பரணி, கார்த்திகை, பூரம், பூராடம் முதலான ஐந்து நட்சத்திரக்காரர்கள் பரிகாரத்துக்கு உரிய நட்சத்திரக்காரர்களாகச் சொல்கிறார் பாலாஜி சாஸ்திரிகள்.

பொதுவாகவே, காலையில் எழுந்ததும் குளிப்போம். இந்த முறை காலைக் குளியல் அதையடுத்து கிரகணம் முடிந்ததும் நீராட வேண்டும். தர்ப்பணம் செய்பவர்கள் மட்டும் காலையில் ஒரு குளியல், கிரகணத்தின்போது நடுவே ஒரு குளியல், தர்ப்பணம். அதன் பிறகு கிரகணம் முடிந்ததும் ஒரு குளியல் என மூன்று முறை நீராட வேண்டும்.

அதேபோல் கிரகணம் முடிந்ததும், வீட்டை தண்ணீர்விட்டு அலம்ப வேண்டும் அல்லது துடைக்க வேண்டும். கிரகணம் முடிந்ததும் வீட்டில் விளக்கேற்றி பூஜைகள் செய்யலாம். அஸ்வினி, பரணி, கார்த்திகை, பூரம், பூராடம் நட்சத்திரக்காரர்கள், கிரகணம் முடிந்ததும் குளித்துவிட்டு, அருகில் உள்ள கோயிலுக்குச் சென்று நவக்கிரத்துக்கு நெய் தீபமேற்றி வேண்டிக்கொள்வது நல்லது. அதேபோல், எவருக்கேனும் உணவோ உடையோ தானமாகக் கொடுப்பதும் நல்ல பரிகாரமாக அமையும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

கிரகண நேரத்தில் எல்லோருமே வெளியில் செல்லாமல் இருப்பது நல்லது. முக்கியமாக, கர்ப்பிணிகள், வயதானவர்கள், உடல்நலமில்லாதவர்கள் வெளியே செல்லாமல் இருப்பது அவசியம்.

உடல் நலம் சரியில்லாதவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஆஹாரத்தில் விதிவிலக்கு எடுத்துக்கொள்ளலாம்.

கிரகண சமயத்தில் ஜபிக்க வேண்டிய மந்திரம் இருக்கிறது. இந்த மந்திரத்தை அனைவரும் ஜபிக்கலாம். முக்கியமாக இந்த ஐந்து நட்சத்திரக்காரர்களும் ஜபிப்பது பரிகாரமாக அமையும்.

யோஸௌ வஜ்ர தரோ தேவ:/

நக்ஷத்ராணாம் ப்ரபுர் மதி ://

ஸஹஸ்ர நயன: சந்த்ர: /

க்ரஹ பீடாம் வ்யபோஹது//

- எனும் மந்திரத்தை ஒரு பேப்பரில் எழுதி கையில் வைத்துக்கொண்டு ஜபித்துவரவும். மந்திரத்தைச் சொல்ல இயலாதவர்கள், வயதானவர்கள், குழந்தைகள் இந்த மந்திரத்தை ஒரு பேப்பரில் எழுதி, நெற்றியில் பட்டம்போல் கிரகண நேரத்தில் கட்டிக்கொண்டிருக்க வேண்டும். பிறகு கிரகணம் முடிந்ததும் குளிக்கலாம்; இறைவனுக்கு விளக்கேற்றி நமஸ்கரிக்கலாம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in