தித்திக்கும் தீபாவளி!

தித்திக்கும் தீபாவளி!

தீபாவளித் திருநாள் என்ற விழாவுக்கு இணையாக இந்தியாவின் எந்த வைபவத்தையும் கூற முடியாது. நாடு தழுவிய விழாவாக, சாஸ்திர, சம்பிரதாய நடைமுறைக்கு அப்பாற்பட்ட ஒரு சமூக நிகழ்வாக ஏழை, பணக்காரர் அனைவரும் தவறாது கொண்டாடும் ஒரே பண்டிகையாக தீபாவளி திகழ்கிறது. வருடம் முழுவதும் இந்திய மக்கள் உண்ணும் இனிப்புகளில் 70 சதவீதம், தீபாவளியின் பொருட்டே நுகரப்படுகிறது. மற்ற எந்தப் பண்டிகையைப் போல் இல்லாமல், குமரி முதல் இமயம் வரை இனிப்பையே பிரதானமாகக் கொண்ட பண்டிகையாக தீபாவளி திகழ்கிறது.

சர்க்கரை, வெல்லம், கடலை மாவு, பால், வெண்ணெய், நெய் ஆகியவற்றால் செய்யப்படும் இனிப்புகள் தீபாவளி திருவிழாவில் முதன்மை பெறுகின்றன. இனிப்புக்கு அடுத்தபடியாக மக்கள் மனதில் இடம் பிடிப்பது ஆடைகள். தீபாவளி அன்று பட்டாடையில் வலம் வருவதையே பலரும் விரும்புகிறார்கள். புத்தாடை இல்லாத தீபாவளியா என்று கேட்கும் அளவுக்கு அனைத்து தரப்பு மக்களும் தீபாவளி தினத்தில் புத்தாடையுடன் உறவினர்களை சந்திப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். பட்டு, கைத்தறி, பருத்தி, செயற்கை நார் ஆடைகள் என்று ஆடைகள் பலவிதம். ஒவ்வொன்றும் ஒரு விதம். அவை தயாரிக்கப்படுவதோ பல வண்ணங்களில்... அப்படியே இருக்கும் மக்கள் எண்ணங்களில்.

ஆடைகளுக்குப் பிறகு மக்கள் விரும்புவது சத்தத்தை. சத்தம் மகிழ்ச்சியின் வெளிப்பாடு. இந்திய மக்கள் தங்களின் மகிழ்ச்சியான மற்றும் முக்கியமான தருணங்களை பட்டாசு வகைகள் ஏற்படுத்தும் சத்தங்கள் மூலம் வெளிப்படுத்த விரும்புகிறார்கள்.

இருட்டைப் போக்கும் ஒளி, மகிழ்ச்சி மற்றும் மங்கல அடையாளமாக எல்லா தேசங்களைப் போன்றே இந்தியாவிலும் கருதப்படுகிறது. தீப விளக்கு, மத்தாப்பு, தீப்பொறி... இவை அனைத்துமே கோயில் திருவிழா, தீபாவளி, திருமணம் போன்ற மகிழ்ச்சித் தருணங்களில் சிறப்பு அடையாளங்களாக விளங்குகின்றன. பொன் நகையைக் கண்டாலும் மக்கள் முகத்தில் புன்னகை பூக்கும். அட்சய திருதியை அன்று தங்கம் வாங்கத் தொடங்குவதற்கு முன்பே, மக்கள் தீபாவளி, திருமணம் போன்ற வைபவங்களுக்குத் தங்கம் வாங்குவதை ஒரு வழக்கமாகக் கொண்டிருந்தனர். தீபாவளி தினத்துக்கு 2 நாட்களுக்கு முன்னர், ‘தந்த்தேரஸ்’ தினத்தில் மனைவிக்கும் மருமகளுக்கும் தங்க நகை வாங்குவது வணிகர்களின் வழக்கமாக இருந்து வந்துள்ளது.

இனிப்பு, ஆடைகள், பட்டாசு, தங்கம் ஆகியன மக்களோடு ஒன்றிவிட்டாலும், இத்தொழில்கள் பலருக்கு வேலைவாய்ப்பை அளிக்கின்றன. அடிப்படை கட்டுமான தொழிலையோ, சேவைத் துறையையோ சாராத மிகப் பெரிய மனமகிழ் பிரிவுத் தொழில்களாக இவை விளங்குகின்றன.

தீபாவளி தினத்தில் அதிகாலையில் நரக சதுர்த்தசி ஸ்நானம் செய்ய வேண்டும் (காலை 3 மணி முதல் 6 மணி வரை) என்று தர்ம சாஸ்திரம் கூறுகிறது. ‘தைலே லக்‌ஷ்மி ஜலே கங்கா’ என்ற வாக்கின்படி எண்ணெயில் லட்சுமி தேவியும், வெந்நீரில் கங்கையும் இருந்து, அன்று நமது அனைத்து விதமான தோஷங்களையும் போக்குகிறார்கள். நரக சதுர்த்தசி ஸ்நானம் செய்பவர்களுக்கு நரக பயம் என்பதே இல்லை என்பது நம்பிக்கை.

குளித்து முடித்து புத்தாடை உடுத்தி ஸ்ரீகிருஷ்ண பகவானை மனதார நினைக்க வேண்டும். பிறகு அவரவர் வழக்கப்படி இறைவனை வணங்கி பெரியோரிடம் ஆசி பெற வேண்டும். பரஸ்பரம் இனிப்புகள், நற்சொற்களை பரிமாறிக் கொள்வதால், அன்பும் அமைதியும் உலகில் வளரும்.

லட்சுமி குபேரன்
லட்சுமி குபேரன்

மாலை லட்சுமி குபேர பூஜை செய்வதால், பணவரவு திருப்தி தந்து கடன் அனைத்தும் அடையும். தீபாவளி தினத்தில் ஏழை எளியவருக்கு நம்மால் முடிந்ததை அளிப்பதால், குறைவற்ற செல்வத்தை நாம் அடைவோம் என்பது உண்மை.

தீபாவளி தினம் முதல் அடுத்த அமாவாசை வரை தினம் இல்லத்தில் தீபம் ஏற்றுவதால், அனைத்து விதமான துன்பங்களும் விலகி, மன அமைதி உண்டாகும் என்று ஆகமங்கள் கூறுகின்றன. அரசு கூறும் நேரங்களில் பட்டாசுகளை வெடித்து, விபத்துகளற்ற, ஒலியற்ற, மாசற்ற தீபாவளியைக் கொண்டாடுவோம்.

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in