மோர், பிஸ்கட், உணவு: தானம் தந்தால் நம்மைத் தேடி வருவார் சாயிபாபா!

மோர், பிஸ்கட், உணவு: தானம் தந்தால் நம்மைத் தேடி வருவார் சாயிபாபா!

‘’நீங்கள் என்னை அழைக்கத் தேவையில்லை. என்னை நம்பினால் போதும். ‘எல்லாம் நான் பார்த்துக்கொள்வேன்’ என்று முழுமையாக என்னிடம் உங்கள் கஷ்டங்களை ஒப்படைத்தால் போதும். நீங்கள் என்னைக் கூப்பிடவே வேண்டாம். நானே என் பக்தர்களைத் தேடி வருவேன். ஏதேனும் ஒரு ரூபத்தில் உங்களுக்கு அருகில் வருவேன். அந்தக் கடமையும் உங்களைக் காக்கிற கடமையும் எனக்கு இருக்கிறது’’ என ஸ்ரீசாயி சத்சரிதத்தில் அருளியிருக்கிறார் ஷீர்டி பாபா!

இறைவனை அறிவது அவ்வளவு சுலபமில்லை. புரிவதும் இறை சக்தி எனும் பேரருளை உணருவதும் லேசுப்பட்ட காரியமல்ல. கடவுளை அடைவதற்கான வழி தெரியாமல்தான் நாம் அல்லாடிக்கொண்டிருக்கிறோம். எல்லோரும் கைகூப்புவது போல் கைகூப்புகிறோம். அப்படித்தான் நம் முன்னோர்கள் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். கண்கள் மூடி வேண்டுகிறோம். கன்னத்தில் போட்டுக்கொண்டு பிரார்த்தனை செய்கிறோம். ‘எனக்கு இதைக் கொடு, அதைச் செய், இவற்றையெல்லாம் வழங்கு’ என்று வேண்டிக்கொள்கிறோம். கடவுளிடம் நம் ஆசைகளையும் விருப்பங்களையும் நம்மிடம் இல்லாதவற்றையும் கோரிக்கைகளாக வைக்கிறோம்.

உண்மையில், இவையெல்லாம் நம் சந்தோஷத்துக்காகத்தான் செய்துகொண்டிருக்கிறோம். இறைவனுக்கு பூக்கள் வழங்குவது நம் திருப்திக்காகவே! அதேபோல, இறைவனுக்கு அபிஷேகம் செய்வது நம் சந்தோஷத்திற்காகத்தான்! இறைவனிடம் இல்லாத எதை நாம் இறைவனுக்கு வழங்கிவிடமுடியும்?

தவிர, நம்மிடம் என்னவெல்லாம் இருக்கின்றனவோ அவை அனைத்துமே இறைவன் தந்ததுதான் என்பதை நாம் உணருவதே இல்லை. கடவுளை அடைவது என்பது உண்மையான அன்பிலும் சக உயிர்களை நேசிப்பதிலும்தான் இருக்கிறது என்பதை நாம் அறிந்து செயல்படுவதே இல்லை’’ என்கிறார் பகவான் ஷீர்டி சாயிபாபா.

கடவுள் எனும் இறைசக்தியின் சாந்நித்தியங்களையும் அவை நிகழ்த்துகிற அற்புதங்களையும் நாம் உணருவதே இல்லை. அதை உணர்த்துவதற்கும் நாம் உணருவதற்குமாக அவதரித்தவர்கள்தான் மகான்கள்.அப்படியொரு மகானாக அவதரித்தவர் சாயிபாபா. தன்னுடைய அன்பினாலும் கருணையாலும் இறைவனை அடையும் வழியைக் காட்டி உபதேசித்து அருளினார் பாபா. ’சக உயிர்கள் மீது கொண்ட அன்பும் கருணையும்தான் கடவுளை அடைவதற்கான வழி’ என்று தன்னுடைய பக்தர்களுக்கு காட்சி கொடுக்கும் தருணங்களிலெல்லாம் அருளியிருக்கிறார் சாயிபாபா.

இதைத்தான் ஸ்ரீசாயி சத்சரிதம் விவரிக்கிறது. ‘உங்களைச் சுற்றியுள்ள இந்த பரந்து பட்ட உலகத்து மனிதர்களிடம் யாரெல்லாம் உண்மையாகவும், அன்புடனும், கனிவுடனும் நடந்துகொள்கிறீர்களோ அவர்களை நான் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறேன். என்னை நம்புங்கள். என்னை நம்புகிறவர்கள், என்னை அழைக்க வேண்டும் என்றெல்லாம் நான் காத்துக்கொண்டிருக்க மாட்டேன். என்னை நம்பினால், அவர்கள் அழைக்காமலேயே நான் அவர்களிடம் வருவேன். உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்வேன்’ என்கிறார் ஷீர்டி சாயிபாபா.

’என்னை முழுமையாக நம்புங்கள். என்னை நம்பியவர்களுக்கு அழைக்காமலேயே நான் வருவேன். ஏதேனும் ஒரு ரூபத்தில் உங்களுக்கு அருகில் வருவேன். நீங்கள் இறை எனும் சக்திக்குக் கடமைப்பட்டிருக்கிறீர்கள். இந்த வாழ்க்கையை உங்களுக்குத் தந்தது கடவுள் எனும் பிரபஞ்ச சக்தியின்றி வேறென்ன? எனவே கடவுளுக்கு நீங்கள் கடன் பட்டிருக்கிறீர்கள். உங்களுக்கு நான் கடன் பட்டிருக்கிறேன். ஒவ்வொரு நிலையிலும் உங்களுக்கு பலம் தருவதே என்னுடைய முக்கியமான பணி. கவலையே படாதீர்கள். எல்லோரிடமும் அன்புடன் நடந்துகொள்ளுங்கள். நான் உங்களுக்கு அருகில் வருவேன். உங்களை எப்போதும் காப்பேன்’ என்கிறார் சாயிபாபா.

சாயி பகவான் அருளுரைகள், நமக்குள் என்னவோ செய்யும். நம்பிக்கையை விதைத்து, நல் வழிக்கு நம்மைத் திருப்பி உள்ளே அமைதியைத் தருவார் பாபா. அவரை மனதார வேண்டினால், பாபா நம்மை ஒருபோதும் கைவிடமாட்டார். பாபா நம் பிரச்சினைகளையெல்லாம் சரி செய்து தருவார் என்று மெய்சிலிர்க்கத் தெரிவிக்கிற பக்தர்கள் ஏராளம்!

பாபாவை மனதார நினைத்து, எவருக்கேனும் ஏதேனும் அன்புடன் வழங்குங்கள். பழம் வாங்கிக் கொடுங்கள். ஒரு உணவுப் பொட்டலம் வழங்குங்கள். பிஸ்கட் பாக்கெட்டோ ஒரு டம்ளர் மோரோ வழங்குங்கள். நாம் செய்கிற செயல்கள்தான், பாபா நமக்கு அருளுவதற்கான மார்க்கம். அப்படி கர்வமின்றி நாம் செய்யும் தர்ம காரியங்களாலும் தானங்களாலும் நாம் கூப்பிடாமலேயே வருவார் பாபா. கேட்காததையெல்லாம் நமக்குக் கொடுத்துக் காப்பார் பாபா!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in