எதை எதிர்த்துப் போராடச் சொல்கிறார் புத்தர்?

தம்மத்தின் பதம்-17
எதை எதிர்த்துப் போராடச் சொல்கிறார் புத்தர்?

கோபத்திலிருந்து விடுபட்டு விட்டேன்

என்பிடிவாதம் அகன்றுவிட்டது

ஓர் இரவு நான் வசிக்கிறேன் மாகி நதிக்கரை ஓரம்

என் நெருப்பு அணைந்து விட்டது

அப்படியிருக்க மழை பொழியட்டுமே

புத்தர் (சுத்த நிபாதம் – தனிய சுத்தம்)

பிற உயிரினங்களுடன் ஒப்பிடும்போது மனித சமூகத்தின் மிகப்பெரிய குறைபாடாக சினம் என்னும் தீ குணத்தைச் சொல்லலாம். தாவரங்கள் சினம் கொள்வதில்லை. விலங்குகள் வேட்டையின்போதோ தற்காப்பின்போதோதான் சினம் கொள்கின்றன. ஆனால், மனிதர்கள் மாத்திரம்தான் கோபத்தை சில நேரங்களில் மிகப்பெரும் பெருமையாகக் கருதுகிறார்கள். “கோவம் வந்துடுச்சின்னா அவ்ளோதான் நான் என்ன பண்ணுவேன்னே தெரியாது” என்று கூறும் நிறையபேரை நாம் பார்க்கிறோம்.

“திடீர்னு கோவம் வந்துடுச்சி, வேகமா ஓங்கி அடிச்சேன்: சுருண்டு விழுந்து செத்துட்டான், இப்ப ஜெயில்ல இது பத்தாவது வருஷம்” ஒரு நிமிட கோபம் வாழ்க்கையையே இல்லாமலாக்கிவிட்டது.

இத்தகைய சினத்திற்கு எதிராக பேசுவதுதான் பௌத்தம். போர்களைப் பற்றி அல்ல. மாறாக அன்பைப் பேசுகிறது புத்தம். சினத்தை வளர்க்காதீர். உங்கள் பகையை மறந்துவிடுங்கள். அன்பால் பகைவரையும் வெல்லுங்கள் (3096-புத்தரும் அவர் தம்மமும் டாக்டர் அம்பேத்கர்)

சினத்தைத் தவிர்க்க வேண்டும். தங்குதடையற்ற கர்வத்தை கைவிடவேண்டும். சினத்தின் மூலமாக இருக்கும் பேராசைகளை வெல்ல வேண்டும். இப்படியெல்லாம் செய்தால் நாம் கவலைகளிலிருந்து விடுபடலாம்.

சினத்தைக் காப்பவர்

தவறிய பாதையிலிருந்து

தேரை நல்ல பாதைக்குச் செலுத்தும்

தேர்வலவன் மாதிரி

மற்றவர் வெறும் கடிவாளத்தைப்

பிடித்தவர் (தம்மபதம் 222)

அப்படியாயின் என்ன செய்ய வேண்டும் என்று தம்மத்தின் பதமே நமக்கு உணர்த்துகிறது. போரிட வேண்டும். ஆம், கோபத்தை எதிர்த்து அன்பினால் போராட வேண்டும். தீமையை எதிர்த்து நன்மையால் போராட வேண்டும். தாராளக் குணத்தைக் கருவியாக்கி கருமித்தனத்தை எதிர்த்துப் போராடலாம். பொய்யை எதிர்த்து உண்மையால் போராடலாம் என இரு எதிர்மைகளை பௌத்தம் நம்முன் வைக்கிறது. தீமையை எதிர்த்து நன்மையால்தான் போராட வேண்டும். தீமையை எதிர்த்து தீமையாகப் போராட முடியாது.

உலகத்தில் இன்று நிகழும் வன்முறைகள் எல்லாம் எதனால் நிகழ்கின்றன? அன்பினால் ஆக வேண்டியவற்றை நாம் வன்மையால் வென்றுவிடலாம் என்று நினைப்பதால்தானே! பௌத்தம் அதைத் தகர்க்கிறது. நீங்கள் உண்மையாய் இருப்பதன் மூலம் பொய் இல்லாமல் போய்விடத்தான் போகிறது.

உண்மையைப் பேசுதல் நலம். கோபத்தை விடுதல் நலம். கேட்பவருக்குக் குறைவாக இருப்பினும் கொடுத்தல் உயர்வு. இம்மூன்றும் வழிகளாக மாறி உயர்வுற்ற சான்றோரிடம் உங்களை அவை அழைத்துச் செல்லும். வற்றாத கருணையும் உடல்மீது பற்று இல்லாமையும் கொண்ட துறவோர்களுக்கு மரணம் என்பது வாய்க்காது என்னும் கூற்றுதான் பௌத்த வாழ்வியல்.

குறை கூறப்படாதவர்கள் என்று இந்த உலகத்தில் யாரும் இல்லை. உலகத்தில் மனித வாழ்வு தொடங்கியதிலிருந்து இது இருக்கிறது. அதற்காக நிற்காமல் பயணத்தை ஆற்ற வேண்டும். கோபம் கொள்ளுதல் ஆகாது. குறைவாகப் பேசினாலும் குறை சொல்லுவார்கள், அதிகமாகப் பேசினாலும் குறை சொல்லுவார்கள். பேசவே இல்லையென்றாலும் குறை சொல்லுவார்கள். குறை சொல்பவர்களுக்குக் காரணம் தேவையில்லை. ‘கட்டின வீட்டிற்கு நொட்டம் சொல்ல நூறுபேர்’ என்னும் பழமொழிகூட நம்மிடம் உண்டு. எனவே குறைகூறுபவரைப் பற்றி சினமும் கொள்ளாமல் இருப்பதுதான் சரியான வழியாக இருக்கும்.

உண்மையில்

குறைவில்லா அறிவும்

மேனையும் கொண்டோரை எல்லோரும் புகழ்வர்

அவர்கள் மாசற்ற பொன்போன்ற்வர்கள்

உயர்வுற்றோரும் புகழ்வோர் அவரை. (தம்மபதம் 229-230)

தீச்செயல்கள் செய்யாமல் நம்மைக் காத்துக்கொள்வது. அதற்கான எண்ணங்களையும் நம்மிடம் அகற்றுவது, ஐம்புலன்களை அடக்குவது, நம்முடைய மெய்யின் மூலம் செய்யும் தீமைகளைச் செய்யாமல் இருப்பது, பிறருக்கு எப்போதும் நன்மைகளைச் செய்வது, தீச்சொற்கள் பேசாமல் நாவை அடக்குவது, எப்போதும் நற்செயல்களை நாடுவது போன்ற செம்மைத்திறம் சார்ந்த செயல்களில் ஈடுபடுவதன் மூலம் நாம் சினமற்ற வாழ்வை வாழமுடியும்.

சினத்தைப் பற்றி பேசும் வள்ளுவரும் அதை “சேர்ந்தாரைக் கொல்லி” என்று குறிப்பிடுகிறார். சினம் யாரைச் சேர்கிறதோ அவர்களை அது அழித்துவிடும். அதனால்தான் அதை தீ என்கிறோம். சினத்தீயை அணைத்து வாழ்வதன்மூலம் அன்பு நீர்ப்பாய்ச்சப்பட்ட அழகுடை நந்தவனமாய் நம் வாழ்வு பூக்கும்.

பேச்சையும்

நினைப்பையும்

தன்னையும்

கட்டுப்படுத்துபவர்கள்

அறிஞர்கள் (தம்மபதம் 234)

(தம்மம் தொடரும்)

கட்டுரையாளர்: கவிஞர், எழுத்தாளர். ‘தம்மபதம்’ நூலை தமிழில் மொழிபெயர்த்தவர். ‘யாருமற்ற சொல்’, ‘நெடுநல்வாடான்’ உள்ளிட்ட கவிதை தொகுப்புகளையும், ‘சொற்களால் நெய்யப்பட்ட சவுக்கு’ கட்டுரை தொகுப்பு நூலையும் படைத்தவர். தொடர்புக்கு: yazhanaathi@gmail.com
எதை எதிர்த்துப் போராடச் சொல்கிறார் புத்தர்?
பௌத்தம் பின்பற்றுவது கடினமா, எளிதா?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in