அறியாமைத் தடைகளை அறுத்தெறிந்த புத்தர்!

தம்மத்தின் பதம்-27
அறியாமைத் தடைகளை

அறுத்தெறிந்த புத்தர்!
ஓவியம்: ஸ்ரீரசா

புத்தர் கூறுகிறார், நற்குணமின்மையை நற்குணங்களாலும் அறியாமையை ஞானத்தாலும், கீழ்மையை மேன்மையாலும், தம்மம் அல்லாதவற்றைத் தம்மத்தாலும் வெல்லலாம்.

அதனால்தான் பௌத்தம் அனைவருக்கும் அறவோர் ஆகும் வாய்ப்பைத் தருகிறது. அறவோர்கள் என்பவர்கள் பிறப்பினாலோ மற்று வேறெந்த தகுதியினாலோ ஆவதில்லை. அறவோர்கள் ஆவதற்கு அவர்கள் கடுமையாக உழைக்க வேண்டும். மனத்தின் மாசுக்களை அகற்றி அகத்தூய்மை உள்ளவர்களாக அவர்கள் பற்றற்று இருப்பார்களேயானால் யார் வேண்டுமானாலும் அறவோர் ஆகலாம்.

மனஓர்மையையும், அறிவையும் அடைந்தவர்களால் தடைகளைத் தகர்க்க முடியும். அவர்கள் ஆசை வெள்ளத்தை அறுத்தவர்கள். சிற்றின்பங்களில் தங்களை மூழ்கடிக்காதவர்கள். நன்மைகளை மட்டுமே அறிந்தவர்கள். அறவோருக்கான தகுதியை அடையாமல் பிறப்பால் அறவோர் என்னும் பதவியை அடையலாம் என்றால் அது புத்தரால் மறுக்கப்பட்ட ஒன்று.

பகலில் ஒளிர்கிறது பகலவன்

இரவில் வீசும் ஒளியை நிலவு

போர்க்களத்தில் மிளிர்கிறான் வீரன் ஆயுதங்களால்

தியானத்தில் ஒளிர்கிறார் அறவோர்

பெருமைமிகு புத்தர் எப்போதும் ஒளிர்கிறார்

இரவும் பகலும் (தம்மபதம் 387)

தீமையை அறவோர்கள் எப்போதும் கைக்கொள்வதில்லை. அறவோர்கள் எப்போதும் கோபப்படுவதில்லை. அக அழுக்குகளை அவர்கள் தம்மிடம் அண்டவிடுவதில்லை. அப்படிப்பட்ட அறவோரைத் தாக்குதல் கூடாது. ஒருவேளை அறவோர்கள் தாக்கப்பட்டால் அவர்கள் அதற்குத் திருப்பி கோபப்படக் கூடாது. அறவோர்கள் தாக்கப்படுவது வெட்கத்திற்குரியது. அறவோர்கள் கோபப்படுவது அதைவிட வெட்கக் கேடானது.

மனம் எவற்றையெல்லாம் விரும்புகிறதோ அவற்றை விட்டெரியும் அறவோர் எப்போதும் நன்மை அடைகிறார். பிறருக்குத் துன்பம் தருவதிலிருந்து விலகும் அறவோர் துன்பம் அடையாமல் இருக்கிறார், அவர் எப்போதும் ஐம்புலன்களாலும் அடக்காமாயிருப்பார். அறவோர்கள் விளக்கினை வணங்குவதுபோல ஒளியூட்டப்பட்ட புத்தரின் போதனைகளைக் கேட்டுத்தெளிந்த ஒருவரை வணங்கவேண்டும்.

குடுமி வைப்பதாலோ

பிறப்பினாலோ

குடும்பத்தினாலோ

ஒருவர் ஆவதில்லை அறவோர்

உண்மையும் ஒழுக்கமும்

ஒன்றாய் இருப்பவரே அறவோர்

அவர் தூயவர் (தம்மபதம் 393)

ஆசை நிரம்பியிருக்கும் மனமும் ஆடை ஆபரணங்கள் அணிமணிகள் நிறைந்து இருக்கும் புறமும் உள்ள உங்களால் என்ன பயன் இருக்கிறது? அழுக்கடைந்த உடைகள் காட்டில் அலைந்து திரிந்து தியானம் செய்யும் மெலிந்த உடல் இவையே அறவோரின் அங்கலட்சணங்கள். செல்வம் உடையவரை செல்வந்தர் என்று அழைப்பதைப் போல் அறமு உடையவரே அறவோர்.

அறவோர்கெல்லாம் அறவோர் அவர் புத்தர். தம்மபதம் கூறுகிறது

வெறுப்பு என்னும் வாரையும்

ஆசை விலங்கையையும்

நிந்தனைக் கயிற்றையும்

உள்ளாசைகளையும்

அறியாமைத் தடைகளையும்

அறுத்தெறிந்தவர் புத்தர்

அவரே அறவோர் ( தம்மபதம் 398)

மேற்கண்ட இலக்கணங்கள் இருக்கும் எவரும் அறவோர்தான், அப்படி அறவோர் ஆவதற்கான முயற்சிதான் இந்த வாழ்க்கை.

கோபத்திலிருந்து விடுபட்டு, மேன்மையான அறிவினைப் பெற்று தன் கடமைகளை எல்லாம் ஆற்றி ஆசை அகற்றி தன்னடங்கி, ஊசிமுனையில் கடுகைப் போலவும் தாமரையிலையில் தண்ணீரைப்போலவும் புலன் இன்ப இச்சைகள் ஒட்டாமல் இருப்பவர்தான் அறவோர். அனைவருடனும் பற்றற்ற அன்புடன் எந்த உயிரையும் துன்புறுத்தாமலும் கொல்லாமலும் இருப்பதே அறவோர்க்கான வரைவிலக்கணம்.

சுபாசித சுத்தம் என்னும் ஒரு போதனைப் பகுதி இருக்கிறது. அப்படி என்றால் நன்றாகப் பேசுவது: ஒருமுறை புத்தர் சாவத்தி நகருக்கு அருகில் வனத்தில் தங்கி இருக்கிறார். அங்கு பிக்குகளுக்குப் போதிக்கும் போது நான்கு நற்பண்புகள் கொண்ட பேச்சினைப் பற்றி விளக்கினார்.

தனக்கும் பிறருக்கும் நன்மைப் பயக்கும் நல்ல பேச்சைப் பேசுவது சிறப்பு.

நேர்மையான நியாயமானவற்றைப் பேசவேண்டும். நேர்மைக்கு எதிராகவோ நியாயத்திற்குப் புறம்பாகவோ பேசலாகாது.

கேட்போர் உள்ளங்களில் பிரியமூட்டும் இனிமையானவற்றைப் பேச வேண்டும், வெறுப்பேற்றும் பேச்சுக் கூடாது.

எப்போதும் உண்மையை மட்டுந்தான் பேச வேண்டும். பொய்யே பேசக்கூடாது.

இத்தகைய தன்மை உள்ள பேச்சுடையவர்களே அறவோர்கள்.

கொடுக்கப்படாத எதையும்

அது

நீளமெனினும் குட்டையெனினும்

சிறியதெனினும் பெரியதெனினும்

அழகானதெனினும் அழகற்றதெனினும்

எடுத்துக் கொள்ளாதவரே அறவோர் (தம்மபதம் 409)

அவருக்கு இம்மை மறுமையில் எப்போதும் விருப்பங்கள் இருப்பதில்லை. நிப்பாணத்தை உணர்ந்து அவர்கள் எப்போதும் இறவாதவர்களாக மாறிவிடுகிறார்கள்.

உல்கியல்பு வாழ்வைவிட்டு உறவுகளை விட்டு இச்சைகளை அழித்து பிறர் அறியவே முடியாத இடத்தைத் தன் தம்மத்தால் அறியமுடிந்தவர்தான் அறவோர்,

காலங்களில் ஒட்டாது, பற்றுத் துறந்து, பயமற்று, வணக்கத்திற்கு உரியவராகி மேனறிவும் முழுமையும் அடைந்து ஒளியூட்டம் பெற்று வாழ்பவரே அறவோர் என்கின்றார் புத்தர்.

நானூற்றி இருபத்து மூன்று பாடல்களோடு தம்மபதம் நிறைவுபெறுகிறது. 'தம்மத்தின் பதம்' என்னும் இந்தத் தொடருக்கும் தொடர்ந்து வாசகத்தளத்தைத் திறந்து வைத்த 'காமதேனு'வுக்கும் இதை சாத்தியமாக்கிய நட்புகளுக்கும் அன்பும் நன்றிகளும்.

’தம்மத்தின் பதம்’ நிறைவுபெற்றது

கட்டுரையாளர்: கவிஞர், எழுத்தாளர். ‘தம்மபதம்’ நூலை தமிழில் மொழிபெயர்த்தவர். ‘யாருமற்ற சொல்’, ‘நெடுநல்வாடான்’ உள்ளிட்ட கவிதை தொகுப்புகளையும், ‘சொற்களால் நெய்யப்பட்ட சவுக்கு’ கட்டுரை தொகுப்பு நூலையும் படைத்தவர். தொடர்புக்கு: yazhanaathi@gmail.com
அறியாமைத் தடைகளை

அறுத்தெறிந்த புத்தர்!
சங்கத்தில் சேர்ந்தவர் சாதியை இழக்கிறார்!

Related Stories

No stories found.