`இறப்பால் மனம் ஒடிந்து போனோம்'- தாய்க்கு கோயில் கட்டி வழிபடும் சகோதரர்கள்

`இறப்பால் மனம் ஒடிந்து போனோம்'- தாய்க்கு கோயில் கட்டி வழிபடும் சகோதரர்கள்

பெற்ற தாய், தந்தையை தவிக்க விடும் இக்காலத்தில் இறந்த தாயின் நினைவாக கோயில் கட்டி நாள்தோறும் பால், இளநீர் கொண்டு அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தி வரும் மகன்களின் செயல் வரவேற்பை பெற்றுள்ளது.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே நாமகிரிப்பேட்டை நாவல்பட்டி காட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி முத்துசாமி (82). இவரது மனைவி அலமேலு (72). இவர்களுக்கு முருகேசன், பச்சமுத்து என இரு மகன்கள். மாரியம்மா, ராஜாமணி, ஜெயக்கொடி என 3 மகள்களும் உள்ளனர். கடந்த 3 ஆண்டுகளக்கு முன் முதுமை காரணமாக அலமேலு இறந்துள்ளார்.

இதில் மனமுடைந்த முருகேசன், பச்சமுத்து ஆகிய இருவரும் மன அமைதிக்காக கோயில் கோயிலாக செல்லத் தொடங்கினர். அப்போது தான் பெற்ற தாய்க்கு கோயில் கட்டி வழிபாடு நடத்த வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது. இதனை தங்களது சகோதரிகளிடம் தெரிவித்து ஒப்புதல் பெற்ற இருவரும், தங்களது விவசாய தோட்டத்தின் ஒரு பகுதியில் கருங்கற்களால் கோயில் கட்டினர்.

கோயில் கருவறையில் இரண்டே முக்கால் அடி உயரத்தில் அவரது தாயாரின் முக வடிவில் சிலை அமைக்கப்பட்டது. தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு வெகு விமரிசையாக கும்பாபிஷேகமும் நடத்தப்பட்டது. இதன்பின் நாள்தோறும் தாயின் சிலைக்கு பால் அபிஷேகம், இளநீர் அபிஷேகம் உள்பட பல்வேறு அபிஷேகங்கள் செய்து குடும்பத்துடன் இருவரும் வழிபாடு நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து சகோதரர்கள் இருவரும் கூறுகையில், "தந்தை முத்துசாமி ஆரோக்கியமாக உள்ளார். தாயின் மீது அளவற்ற பாசம் அவரது இறப்பால் மனம் ஒடிந்து போனோம். இதனால் கோயில் கோயிலாக சென்று வந்தோம். தாய் இருக்க நாம் ஏன் கோயில், கோயிலாக சுற்ற வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அதன்பின் எங்களது விவசாய தோட்டத்திலேயே அம்மாவுக்கு கோயில் கட்டினோம்" என்றனர்.

வயதான தாய், தந்தையை கவனிக்க பாரா முகம் காட்டுவோர் மத்தியில் தாய் மீதான இவர்களின் பாசம் உண்மையில் பாராட்டத்தக்கது.

Related Stories

No stories found.