'பூமாதேவி' ஆண்டாள்; வீடு மனை யோகம் தருவாள்!

- மார்கழி மகிமை, திருப்பாவை பெருமை!
'பூமாதேவி' ஆண்டாள்; வீடு மனை யோகம் தருவாள்!

ஸ்ரீஆண்டாள், சீதையின் அம்சம் என்றும் பூமாதேவியின் மறு வடிவம் என்றும் போற்றுகின்றன வைஷ்ணவ புராணங்கள்.

ஆண்டாள் புராணமே மாபெரும் காவியம். நந்தவனப் பூக்களை அரங்கனுக்குப் படைக்க, மாலை கட்டிச் செல்வார் பெரியாழ்வார். அப்போது, அந்தப் பூக்களின் வாசனையை தாம் நுகர்ந்துவிடாமல் இருக்க, முகத்திலே மூக்கை மறைத்தாற் போல் துணியைக் கட்டிக் கொள்வாராம். அந்த அளவுக்கு தூய்மையைக் கடைப்பிடித்த பெரியாழ்வாருக்கு வந்தது ஒரு சோதனை!

பெரியாழ்வார் கட்டிவைத்த மாலைகளின் அழகும் கம்பீரமும் கோதையைப் பெரிதும் கவர்ந்தன. அதைவிட, இவற்றைச் சூடும் அரங்கன் என்ன அழகாகத் தோற்றமளிப்பான் என்ற எண்ணமும் அவள் மனத்தே உதித்தது. மாலையை எடுத்து, தானே சூடி அதன் அழகை ரசித்தாள். பின்னர் அந்த மாலையை அப்படியே கழற்றி, பூக்குடலையினுள் வைத்தாள். நாள்தோறும் நடந்தது இந்த நாடகம். கோதை சூடிக் களைந்த மாலைகளை அரங்கனும் உவப்புடன் சூடிக் கொண்டான். ஒரு நாள்.... அரங்கன் சந்நிதி சென்ற பெரியாழ்வார், பூக்குடலையிலிருந்து மாலையை வெளியே எடுத்தார். அடுத்த நொடி, அதிர்ந்தார். பூமாலையில் நீளமான தலைமுடி!

அவ்வளவுதான்! துக்கம் மேலிட இல்லத்துக்கு ஓடினார். மறுநாள் இதற்கு விடை கிடைத்தது. தன் செல்ல மகள் கோதையின் செயலைக் கவனித்து, கோப வார்த்தைகளால் கடிந்து கொண்டார். அன்று அழகன் மார்பில் இருக்க வேண்டிய மாலைகள் அலங்கோலமாகத் தரையில் கிடந்தன.

அன்றிரவு, துயரத்தின் உச்சத்தில் அழுதபடியே உறங்கிப் போனார் பெரியாழ்வார். அரங்கன், மாலை வராத காரணம் கேட்டான். ஆழ்வாரும், தன் இனிய மகளின் செய்கையைச் சொன்னார். அரங்கன் அவரைத் தேற்றினான். ‘’நீர் அளிக்கும் மாலைகளைக் காட்டிலும், ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலைகளே தமக்கு மிகவும் உவ ப்பானவை’’ என்பதைச் சொல்லி, கோதையின் பிறப்பைப் புரிய வைத்தான். தமக்கு மகளாக வாய்த்த கோதை, மலர்மங்கையின் அவதாரம் எனக் கண்ட பெரியாழ்வார், அவளுக்கு ‘ஆண்டாள்’ என்றும், மாதவனுக்கு உரிய மாலையைத் தாம் சூடி, பின்பு அரங்கனுக்குக் கொடுத்ததால், ‘சூடிக்கொடுத்த நாச்சியார்’ என்றும் பெயரிட்டு அழைத்தார்!

இன்றும், முதல் நாள் ஆண்டாள் சூடிக் களைந்த மாலைகளை மறுநாள் அதிகாலை மங்கல வாத்தியங்கள் முழங்க கொண்டு சென்று, வடபெருங்கோயிலுடையானுக்குச் சாற்றுகின்றனர். சித்ரா பௌர்ணமி அன்று திருமாலிருஞ்சோலை அழகர் வைகை ஆற்றில் இறங்கும் முன்னர், ஆண்டாள் சூடிய மாலைகளை அணிந்துகொள்கிறார்.

திருப்பதிப் பெருமானும் புரட்டாசி பிரம்மோற்ஸவத்தின் 5-ஆம் நாள் கருடோற்ஸவத்தில், வில்லிபுத்தூரிலிருந்து வரும் ஆண்டாள் சூடிய மாலைகளை அணிகிறார்.

இப்படி பல சிறப்புகள் ஆண்டாள் மாலைக்கு உண்டு. பகவான் உகக்கும் இந்த மாலை, பக்தர்களுக்கும் பிரியமானதன்றோ? ஆண்டாளை தரிசித்து அவர் மாலையை பிரசாதமாகப் பெற்று அணிந்து கொள்வதால், திருமண பாக்கியம் உடனே கிடைக்கும் என்பது ஐதீகம்.

மார்கழி மாதத்தில் ஆண்டாளுக்குப் புடவை சார்த்தி வழிபட்டால், கல்யாண தோஷங்கள் விலகும். சந்தோஷங்கள் பெருகும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

திருமணம் ஆன பின், தாயாருக்கு புடவை மற்றும் திருமாங்கல்யம் சார்த்துகிறார்கள் பக்தர்கள். ஆண்டாள்- பூமிப்பிராட்டியின் அம்சம் என்பதால், வீடு, நிலம் வாங்குதல் தொடர்பான வேண்டுதல்களையும் முன்வைத்து நிறைவேறப் பெறுகிறார்கள் பக்தர்கள்.

வீடு மனை யோகம் தரும் ஆண்டாளைப் போற்றுவோம். பிரார்த்திப்போம். பூமாதேவியின் பேரருளைப் பெறுவோம்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in