பகவான் ஷீர்டி சாயிபாபா, பக்தர்களுக்கு கண்கண்ட தெய்வமாகத் திகழ்கிறார். ‘ஓம் சாய்ராம்’ என்று சொன்னாலே, எங்கிருந்தாலும் ஓடிவந்து நம்மை அரவணைப்பார் என்கிறார்கள் பக்தர்கள்.
பகவான் ஷீர்டி சாய் பகவான், தன்னை நினைக்கும் அடியவர்களுக்கு அளவில்லாமல் அருள்மழை பொழிந்து வருகிறார். தனது பக்தர்களை வழி நடத்தும்பொருட்டு, பதினோரு உபதேசங்களை அருளியிருக்கிறார். இதை ‘சாயிபாபா சொன்ன உறுதிமொழிகள்’ என்று சொல்லிச் சிலிர்க்கின்றனர் பக்தர்கள்!
’எவன் ஒருவன் ஷீர்டி மண்ணை மிதிக்கிறானோ, அவனுடைய துன்பம் முடிவுக்கு வந்து, அவன் எல்லா செளகரியங்களையும் அடைகிறான்!’
’துவாரகாமாயியை அடைந்தவுடனேயே இதுவரை மிகப்பெரிய துன்பத்துக்கு ஆளாகியிருப்பவர்கள், அவற்றில் இருந்து மீண்டு வருவார்கள். அளவற்ற சந்தோஷத்தை அடைவார்கள்’.
’இந்த உலகத்தை விட்ட பிறகும் நான் உங்களுக்காக, என்னுடைய பக்தர்களுக்காக, சர்வ சக்தியுடன் என்னுடைய வேலைகளைச் செய்துகொண்டே இருப்பேன்!’
’என்னுடைய மசூதி என் பக்தர்களுக்கு அநேக ஆசிர்வாதங்களையும் புத்திமதிகளையும் கொடுக்கவல்லது.’ என் புகைப்படம் இருக்குமிடத்தில்கூட என் ஆசியும் அறிவுரையும் அருளுரையும் உங்களுக்குக் கிடைக்கும்’.
’என்னுடைய பூத உடல் இங்கேயுள்ள என் மசூதியிலிருந்து பேசிக்கொண்டுதான் இருக்கும். நீங்கள் அங்கு வந்து முறையிடுவதையெல்லாம் நான் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறேன்!’.
’என்னுடைய மசூதியில் இருந்தபடியே, நான் மிகவும் சுறுசுறுப்பாகவும் தீவிரமாகவும் என்னை அழைப்பவர்களை நோக்கி நெருங்கிக் கொண்டே இருப்பேன்.’
’என்னிடம் வருபவர்களுக்கும் என்னை தஞ்சம் அடைபவர்களுக்கும் என் உபதேசத்திற்காக என் மீது நம்பிக்கை உள்ளவர்களுக்கும் நான் சொல்லிக்கொள்வது இதுதான்... ‘நான் எப்பொழுதும் உங்களுக்காக உயிருடன் இருக்கிறேன்!’
’நீங்கள் என்னை நெருங்க முயற்சித்தால் அந்த நிமிடமே நான் உங்களை நெருங்குகிறேன். மேலும், உங்களைக் காப்பாற்றுகிறேன்’.
’நீங்கள் உங்களின் பளுவை என்னிடம் சுமத்திவிட்டு, உங்கள் செயல்களில் கவனம் செலுத்துங்கள். அந்த பளுவை நான் தாங்கிக் கொண்டு உங்கள் செயல்களில் வெற்றிபெறச் செய்வேன்!’ .
’நீங்கள் என் உபதேசத்திற்காகவும் உதவிக்காகவும் என்னைச் சரணடைந்தால், அவற்றை உடனே உங்களுக்கு வழங்கி, உங்கள் துயரங்களை உங்களை விட்டு விலகச் செய்வேன்!’
’என்னுடைய பக்தர்களுடைய வீட்டில் ஒருபோதும் தேவை என்பதே இருக்காது. உண்மையான அன்பை என்னிடம் செலுத்துவோருக்கு தேவையானவற்றை நான் உடனே வழங்கிவிடுவேன்!’
சாயி பகவானின் இந்தப் பொன்னான வார்த்தைகளை வேத வாக்காக எடுத்துக்கொண்டு ‘சாயி பகவான் திருநாமம்’ சொல்லி தினமும் வழிபட்டு வந்தால், நம் வாழ்க்கையில் என்றென்றும் வழிக்குத் துணையாக வந்து அருளுவார் ஷீர்டி மகான்!