
கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டாலே, எங்கு பார்த்தாலும் ஐயப்ப பக்தர்களைப் பார்க்கலாம். ‘சுவாமி சரணம்’ எனும் உச்சரிப்பைக் கேட்கலாம். வருடம் தவறாமல், கார்த்திகை வந்ததும் சபரிமலை ஸ்ரீஐயப்ப சுவாமிக்கு மாலையணிந்து, விரதம் மேற்கொள்கிற பக்தர்கள் லட்சக்கணக்கானோர் இருக்கிறார்கள்.
கார்த்திகை மாதத்தையும் மார்கழி மாதத்தையும் ‘ஐயப்ப சீசன் மாதம்’ என்றே அழைக்கிறார்கள். ஐயப்ப விரதம் மேற்கொள்ள வேண்டிய மாதம் என்றே சொல்லுகிறார்கள். எந்தக் கோயிலுக்குச் செல்வதாக இருந்தாலும் நாமாக ஒருநாளைத் தேர்வு செய்து, நாமாகவே கிளம்பிச் சென்றுவிடலாம். ஆனால் சபரிமலையில் குடிகொண்டிருக்கும் ஐயன் ஐயப்பசுவாமியைத் தரிசிப்பதற்கு, குருநாதரின் துணை மிக மிக அவசியம் என வலியுறுத்துகிறது சபரிமலை ஸ்தல புராணம்.
நாமே மாலையை எடுத்து அணிந்துகொள்வது இங்கு வழக்கமில்லை. குருசாமி யார் எனத் தேர்ந்தெடுத்துக் கொண்டு, அவரின் சொற்படி மாலையணிந்து கொண்டு, அவர் அறிவுரைக்கிற நியமங்களைக் கடைப்பிடித்து, அவர் கரங்களால் இருமுடிக் கட்டிக்கொண்டு சபரிமலை யாத்திரையை மேற்கொள்ளவேண்டும் என சபரிமலை ஸ்தல புராணத்தில், நியமங்கள் வரையறுத்து தெளிவுறச் சொல்லப்பட்டிருக்கின்றன.
பொதுவாகவே வழிபாடுகள், மிகுந்த அனுஷ்டானங்களுடனும் பயபக்தியுடனும் செய்யப்படவேண்டும். குறிப்பாக, ஐயப்ப சுவாமிக்கு மாலை அணிவித்து, விரதம் மேற்கொள்வது சாதாரணமாக எடுத்துக் கொண்டு செய்யக்கூடாது. மிக ஆத்மார்த்தமாகச் செய்யவேண்டும் என 37 வருடங்களாக சபரிமலைக்கு சென்று வரும் சுப்ரமணிய குருசாமி தெரிவிக்கிறார்.
கார்த்திகை மாதம் முதல் தேதி விரதம் மேற்கொள்வார்கள். பலரும் கார்த்திகை பிறந்ததும் குடும்பச் சூழல், உடல்நிலை, வீட்டில் உள்ள பெண்களின் சூழல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு விரதம் இருக்கத் தொடங்குவார்கள்.
அப்படி சபரிகிரிவாசனுக்கு விரதம் மேற்கொள்வதற்கு முதல் விஷயம்... துளசி மாலையுடன் துணைமாலையும் சேர்த்து கழுத்தில் அணிந்துகொள்ளவேண்டும்.
அப்போது,
மூஷிக வாஹந மோதக ஹஸ்த
சாமர கர்ண விலம்பித ஸுத்ர
வாமந ரூப மஹேச்வர புத்ர
விக்ந விநாயக பாத நமஸ்தே என்கிற மகா கணபதி மந்திரத்தை முதலில் சொல்லி, தலையில் குட்டிக்கொண்டு, சுவாமியை வணங்கவேண்டும். எந்த தெய்வத்தை வணங்குவதாக இருந்தாலும், முதல் வணக்கம், முதல்வனுக்கே... முதல்வனான ஆனைமுகனுக்கே என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும்.
அடுத்து, மாலை அணியும் போது சொல்லவேண்டிய மந்திரமும் இருக்கிறது.
ஞானமுத்ராம் சாஸ்த்ரு முத்ராம் குரு முத்ராம் நமாம்யஹம்
வனமுத்ராம் சுத்த முத்ராம் ருத்ர முத்ராம் நமாம்யஹம்
சாந்த முத்ராம் சத்ய முத்ராம் வ்ருத முத்ராம் நமாம்யஹம்
சபர் யாச்ரச சத்யேன முத்ராம் பாது சதாபிமோ
குரு தக்ஷிணயா பூர்வம் தஸ்யா நுக்ரஹ காரிணே
சரணாகத முத்ராக்யம் த்வன் முத்ராம் தாரயாம் யஹம்
சின் முத்ராம் கேசரி முத்ராம் பத்ர முத்ராம் நமாம்யஹம்
சபர்யாசல முத்ராயை நமஸ்துப்யம் நமோ நம
எனும் மந்திரத்தைச் சொல்லிவிட்டு, குருசாமியின் கரங்களால் மாலையணிந்துகொள்ளவேண்டும் என விளக்குகிறார் சுப்ரமணிய குருசாமி.
இதேபோல, சபரிமலையில் பூஜை செய்கிற தந்திரியானவர், ஓதுகிற ஐயப்ப மூல மந்திரம் மிக மிக வலிமை மிக்கது.
ஓம் க்ரும் நம; பராய
கோப்த்ரே நம
ஓம் பூத நாதாய வித்மஹே
பவநந்தனாய தீமஹி
தந்நோ: சாஸ்தா ப்ரசோதயாத்
ஓம் தத் புருஷாய வித் மஹே
பூத நாதாய தீ மஹி
தந்நோ சாஸ்தா பிரசோதயாத்
என்கிற ஐயப்ப சுவாமியின் மூலமந்திரத்தை மாலை அணியும் போது சொல்லி வேண்டிக்கொள்ளவேண்டும். அதேபோல, விரதம் மேற்கொள்கிற ஒவ்வொரு நாள் காலையும் மாலையும் இந்த மூலமந்திரத்தை நம்மால் முடிந்த அளவுக்கு 16 முறை அல்லது 32 முறை அல்லது 54 முறை அல்லது 108 முறை ஜபித்து வருவது, நம் வாழ்வில் நாம் எதிர்பார்க்காத நல்ல திருப்பங்களையும் மாற்றங்களையும் தந்தருளும் என்பது ஐதீகம்!