கண்ணாரத் தரிசித்தால் காதாரக் கேட்பான் ஐயப்ப சுவாமி!

- திருச்சி ஐயப்ப சுவாமி ஆலயத்தின் மகிமை
கண்ணாரத் தரிசித்தால் காதாரக் கேட்பான் ஐயப்ப சுவாமி!
படங்கள் உதவி : காத்தபெருமாள்

வாழ்வில் நிம்மதியும் அமைதியும் இருந்தால், எந்தக் குறைகளையும் சமாளித்துவிடலாம். நிதானமும் தெளிவும் பிறந்து, செய்கிற காரியத்திலும் செம்மையாக பணிபுரிந்துவிடலாம். அமைதியை நாடியே கோயிலுக்குச் செல்கிறோம். மனதில் தூய்மையுடன் வாழவேண்டும் என்பதுதானே அனைவரின் விருப்பம். இறைவனிடம் வேண்டிக் கொண்டால், கேட்டவற்றைத் தந்தருள்வார் என்பதுதானே நம் பிரார்த்தனை! நமக்கு இவற்றையெல்லாம் தருகிற அற்புத ஸ்தலமாகத் திகழ்கிறது திருச்சி கன்டோன்மென்ட்டில் உள்ள ஐயப்பன் ஆலயம்.

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து ஒரு கி.மீ. தொலைவில் உள்ளது ஸ்ரீஐயப்பன் ஆலயம். சித்திரை விஷு, பங்குனி உத்திரம், கார்த்திகை மாதப்பிறப்பு ஆகிய நாட்களில் இங்கே சிறப்பு பூஜையும் வழிபாடுகளும் நடைபெறுகிறது. அதிலும் கார்த்திகையும் மார்கழியும் வந்துவிட்டால், தினமும் வழிபாடுகளும் விசேஷ பூஜைகளும் அமர்க்களப்படும்.

எங்கு பார்த்தாலும் தூய்மை. எல்லா இடங்களிலும் அமைதி! இந்தியாவின் புண்ணியத் தலங்களிலிருந்து, பக்தர்களால் கொண்டுவரப்பட்ட 444 புனிதக் கற்கள், இங்கே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. அந்தப் புனிதக் கற்களை அனைவரும் வணங்கி வழிபட்டுச் செல்கின்றனர்.

சிவபெருமானின் பஞ்சபூத தலங்கள், இமயமலை, திருக்கயிலாயம், காசி, ராமேஸ்வரம், ஆஞ்சநேயர் அருள்பாலிக்கும் நாமக்கல், சுசீந்திரம், அனந்தமங்கலம், முருகப்பெருமானின் அறுபடைவீடுகள், காவிரி, தாமிரபரணி, கிருஷ்ணா, கங்கை, பம்பை, சரஸ்வதி, கோதாவரி, யமுனா முதலான புண்ணிய நதிகள், நவக்கிரக தலங்கள், திருப்பதி, குருவாயூர், மதுரை, திருக்கடையூர், சோட்டானிக்கரை, கொல்லூர், சபரிமலை சந்நிதிக்குச் செல்லும் பாதையில் உள்ள முக்கிய இடங்கள் என பல தலங்களில் இருந்து கற்களெல்லாம் கொண்டுவரப்பட்டு பக்தர்களின் பார்வைக்கு மேடை மேல் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை வணங்கினால் நாம் அனைத்து இடங்களுக்கும் ஒரே நேரத்தில் சென்று தரிசித்த பலன் உண்டு என்கிறார்கள் பக்தர்கள்.

தங்களின் கோரிக்கைகள் நிறைவேற இங்கு வந்து சாஸ்தாவை பிரார்த்தனை செய்கிறார்கள். பிரார்த்தனை நிறைவேறியதும் மாலை அணிவித்து விரதமிருந்து திருச்சி ஐயப்பன் கோயிலுக்கு வருகிறார்கள்.

விரதம் துவங்கிய ஐயப்ப சாமிகளும் திரளாக வருகின்றனர். திருச்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஊர்களிலிருந்தும் எண்ணற்ற பக்தர்கள் வந்து ஸ்வாமி தரிசனம் செய்கிறார்கள். அத்தனைக் கூட்டமிருந்தும் இங்கே இரைச்சலுக்கோ சலசலப்புக்கோ வழியில்லை. அத்தனைக் கூட்டங்களையும் தன்னகத்தே கொண்டுள்ள கோயிலில், எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது பேரமைதி.

‘’சூழல் சுத்தமாவும் அமைதியாவும் இருந்தால், கடவுளை நினைப்பதும் அவருக்குள்ளேயே பக்தர்கள் ஐக்கியமாவதும் நம்மைப் போன்ற சாமான்ய பக்தர்களுக்கு எளிது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்தாலும், ஒவ்வொருவரும், இங்கே ஸ்வாமியும் நாமளும்தான் இருக்கிறோம் என நி னைக்கும் பக்குவத்தை அமைதியான சூழல் கொடுத்துவிடும்’’ என்கின்றனர் ஆலய நிர்வாகிகள்.

தினமும் சுமார் 2,000 பக்தர்கள், இங்கு வந்து தரிசனம் செய்கின்றனர். விழாக்காலங்களில் சுமார் 10,000 பக்தர்களுக்கும் குறைவின்றி வருவார்கள். அந்தக் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக, ’எல்லாரும் வரிசையில வாங்க...’ என்று கையில் கழியை வைத்துக்கொண்டெல்லாம் எவரும் சொல்வதில்லை. கண்டிப்பு காட்டுவதில்லை. ஆனாலும், தாங்களாகவே ஒழுங்குக்குக் கட்டுண்டு அமைதியாக வந்து ஐயன் ஐயப்ப சுவாமியைத் தரிசித்துச் செல்கின்றனர்.

வேகமோ பதற்றமோ இல்லாமல், நின்று நிதானமாக ஸ்ரீஐயப்ப ஸ்வாமியைத் தரிசித்து, நிம்மதியுடன் திரும்புகின்றனர்.

தூய்மை மற்றும் நிர்வாகத்தைத் திறம்பட நடத்தி வருகிறது ஆலய நிர்வாகம். கோயில் அமைந்திருக்கும் சாலையைப் பராமரிக்கும் பணியையும் மாநகராட்சியிடம் கேட்டு வாங்கிச் செய்து வருகிறது. இத்தனைக்கும் கோயிலில் உண்டியல், வசூல் என ஏதுமில்லை.

மெய்யான உலகத்தையும் இன்பத்தையும் வலியுறுத்துகிற ஆலயத்தில், ஓரிடத்தில் அழகிய கல்வெட்டு ஒன்று, ’அம்மாவிடம் பொய் சொல்லாதே!’ என்று அறிவுறுத்துகிறது. சிறு வயதில் அம்மாவிடம் விளையாட்டாகச் சொல்கிற பொய்கள்தானே பின்னாளில் பெரிய பொய்களுக்கும் தவறுகளுக்கும் அச்சாரம் போடுகிறது என்ற எண்ணத்தில்தானோ என்னவோ, இப்படி ஓர் அறிவிப்பு!

கோயிலில் நடைபெறும் விழாக்களுக்கு, நன்கொடைகள் எங்கிருந்தெல்லாமோ வந்து குவிகின்றன. அதேநேரம், எந்த ஒரு பக்தரும் ஒரு விஷயத்துக்கு மொத்தமாக நிதியளிப்பதை கோயில் நிர்வாகம் அனுமதிப்பதும் இல்லை. ’’எல்லாரும் சேர்ந்து செய்யறதுதான் சிறப்பு! தனியொருத்தராச் செய்யும்போது, மனசுக்குள் தன்னை அறியாமல் ஓர் அலட்டலும் ஆணவமும் கர்வமும் வந்துடும். இப்படி மனசுக்குள் குடியேறினா, ஐயப்பன் எப்படிக் கருணை காட்டுவார்?’’ என்கின்றனர் கோயில் நிர்வாகிகள்.

கோயிலில், ஒவ்வொரு நட்சத்திரத்துக்கான ஆலயங்கள், அந்த நட்சத்திரக்காரர்களுக்கு உகந்த மரங்கள் என அறிவிப்புடன் வளர்க்கப்பட்டிருக்கின்றன. ’மரங்களை வளர்ப்போம்’ எனும் வாசகங்களும் அங்கே இடம்பெறத் தவறவில்லை. ஆலயத்துக்கு வரும் ஐயப்ப பக்தர்கள் அனைவரும், மரம் வளர்க்க வேண்டும் எனும் உயரிய கருத்தைச் சொல்லாமல் சொல்கிறது இந்த அறிவிப்புப் பலகை. இவை மட்டும்தானா? ரத்த தானம். கண் தானம், உடலுறுப்பு தானம், கல்விச் சேவை, மருத்துவ உதவி, யோகா மற்றும் மூச்சுப் பயிற்சிகள். தேவார - திருவாசக வகுப்புகள் என.... ஆன்மிகம், உடல்நலம், பொதுநலம் ஆகிய மூன்றையும் போதிக்கின்றனர் இங்கே!

பக்தியைக்கூட இயந்திரத்தனமாகக் கடைப்பிடிக்கிற உலகமாகிப்போன சூழலில், திருச்சி ஸ்ரீஐயப்பன் ஆலயத்தில் அமைதி, சுற்றுச் சூழல், தூய்மை ஆகியவற்றையும் நல்லொழுக்கத்தையும் பக்தர்களின் மனதுக்குள் விதைப்பதால், ஸ்ரீஐயப்ப ஸ்வாமி குடிகொண்டிருக்கும் இந்தக் கோயில் மிகப்பெரிய மறுமலர்ச்சி! நம்மைப் போன்ற பக்தர்களுக்குக் கிடைப்பதோ புத்துணர்ச்சி!

திருச்சி ஐயப்பன் கோயிலின் இன்னொரு சிறப்பும் வியப்பைத் தருகிறது. கவிஞர் வாலி எழுதி, ஜேசுதாஸ் பாடிய ‘மன்னன்’ திரைப்படப் பாடலான ‘அம்மா என்றழைக்காத உயிரில்லையே’ பாடல் வரிகள் முழுவதையும் கல்வெட்டுகளாகப் பொறித்திருப்பதை இந்தக் கோயிலில் பார்க்கலாம்!

பக்தியையும் பண்பையும் வலியுறுத்துகிற திருச்சி ஐயன் ஐயப்ப சுவாமி ஆலயம் சென்று, அவரை கண்ணாரத் தரிசிப்போம். நம் குறைகளைக் காதாரக் கேட்டு அருள்பாலிப்பான் ஸ்ரீமணிகண்டன்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in