அஷ்டமி, நவமியை ஏன் புறக்கணிக்கிறோம்?

அஷ்டமி, நவமியை ஏன் புறக்கணிக்கிறோம்?

’அஷ்டமியில் எதுவும் செய்யக் கூடாது... நவமியா இருக்கு, எதுவா இருந்தாலும் நாளைக்கிப் பாத்துக்குவோம்; பேசிக்குவோம்’ என்றெல்லாம் நம்மில் பெரும்பாலானோர் சொல்லக் கேட்டிருப்போம். ஏன்... நாமே கூட சொல்லியிருப்போம். ‘அஷ்டமி, நவமியை ஏன் நல்லநாள் பெரியநாளுக்கு ஒதுக்குகிறோம். இத்தனைக்கும் கோகுலாஷ்டமியைக் கொண்டாடுகிறோம்; ராமநவமி நாளில் பூஜைகள் செய்து கொண்டாடுகிறோம்’ என்று கேட்கலாம்.

அஷ்டமி, நவமி குறித்து மட்டுமின்றி நவ கோள்கள் குறித்தும் பூமி குறித்தும் சூரிய சந்திரர்கள் குறித்தும் வான சாஸ்திர நூல்கள் விரிவாகவே சொல்லிவைத்திருக்கின்றன.

ஒவ்வொரு மாதமும் அமாவாசையும் பெளர்ணமியும் வரும். பூமி மற்றும் சந்திரனின் சுழற்சியால் இவை ஏற்படுகின்றன என்கின்றன வானியல் சாஸ்திரம். அமாவாசையில் இருந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கணக்கின்படி இயங்குகிறது. அதேபோல, பெளர்ணமியில் இருந்து ஒவ்வொரு நாளும் கணக்கின்படியே இயங்குகிறது.

உதாரணமாக, அமாவாசைக்கு அடுத்தநாளை பிரதமை என்பார்கள். பெளர்ணமிக்கு அடுத்த நாளும் பிரதமை. பிரதமை என்றால் முதல் நாள் என்று அர்த்தம். அடுத்து துவிதியை. துவிதியை என்றால் இரண்டாம் நாள். த்ருதியை என்றால் மூன்றாம் நாள் என்று அர்த்தம். சதுர்த்தி என்றால் நான்காம் நாளைக் குறிக்கும். பஞ்சமி என்றால் ஐந்தாம் நாளைச் சொல்கிறோம்.

ஸ்ரீகிருஷ்ணர்
ஸ்ரீகிருஷ்ணர்

சஷ்டி என்பது ஆறு. சப்தமி என்றால் ஏழு என்று அர்த்தம். அஷ்டமி என்றால் எட்டாம் நாள். அஷ்ட வக்கிரம் என்றால் எட்டுக்கோணங்கள். இதையே அஷ்ட கோணங்கள் என்கிறோம். ஒன்பதாம் நாளை நவமி என்கிறோம். நவம் என்றால் ஒன்பது. நவக்கிரகம் என்று அதனால்தான் ஒன்பது கிரகங்களைச் சொல்லுகிறோம்.

தசமி என்றால் பத்து. தசம் என்றால் பத்து. தசாவதாரம் என்றால் பத்து அவதாரங்கள் என்று பொருள். ஏகாதசி என்பது, பதினொன்றாம் நாள். துவாதசி என்றால் பன்னிரண்டாம் நாள். த்ரயோதசி என்பது பதிமூன்றாம் நாளைக் குறிக்கும். சதுர்த்தசி என்றால் பதினான்காம் நாள். இந்த பதினான்காம் நாளுக்கு அடுத்து பதினைந்தாம் நாளாக அமாவாசை அல்லது பெளர்ணமி வரும் என்பது வானியல் சாஸ்திரக் கணக்கு.

அமாவாசைக்குப் பிறகு வரும் எட்டாவது நாள் அஷ்டமி; ஒன்பதாம் நாள் நவமி. இதேபோல், பெளர்ணமிக்குப் பின்னர் வரும் எட்டாவது மற்றும் ஒன்பதாவது நாட்களும் அஷ்டமி நவமி.

‘’கிருஷ்ண பரமாத்மாவின் அவதாரம் நிகழ்ந்தது அஷ்டமி திதியில்தான். அதனால்தான் அவர், மிகப்பெரிய யுத்தத்தைக் கையாள வேண்டியிருந்தது. அதேபோல், ஸ்ரீராமபிரான், நவமியில் அவதரித்தார். அதனால்தான் ஸ்ரீராமர், 14 வருட வனவாசத்தை அனுபவித்தார் என்றெல்லாம் சொல்கிறோம். உண்மையில் அப்படியெல்லாம் இல்லை’’ என்கிறார் முநீஸ்வர சாஸ்திரிகள்.

’’பூமியானது தன்னைத்தானே சுற்றிக்கொள்வதை ஒருநாள் என்கிறோம். அதே பூமியானது, தன்னைத்தானே சுற்றிக்கொண்டு, சூரியனையும் சுற்றி வருவதை ஒரு வருடம் என்கிறோம். சந்திரன், அதாவது நிலவு தன்னைத்தானே சுற்றிக்கொண்டு பூமியைச் சுற்றி வருவதை ஒரு மாதம் என்று கணக்கிட்டிருக்கிறோம். அதனால்தான் மாதம் என்பதை ‘திங்கள்’ என்றும் சொல்லுகிறோம். அப்படி நிலவு சுற்றி வருவதை பாதிச்சுற்றாகப் பார்த்த்தால் பதினைந்தாம் நாள் அமாவாசை என்றும் அடுத்த சுற்றைக் கணக்கிட்டால், பதினைந்தாம் நாளை பெளர்ணமி என்றும் சொல்லுகிறோம்.

ஸ்ரீராமபிரான்
ஸ்ரீராமபிரான்

இதில் எட்டாம் நாளான அஷ்டமியின் போது பூமியானது சூரியனுக்கும் சந்திரனுக்கும் நடுவே வருகிறது. அப்போது, சூரிய சக்தியும் சந்திர சக்தியும் பூமியை தங்களின் பக்கம் இழுப்பதால், ஒருவித அதிர்வு ஏற்படுகிறது. இந்த அதிர்வு, பூமியில் உள்ள சகல ஜீவராசிகளுக்கும் எதிரொலிக்கும் என கணித்துக் கொடுத்திருக்கிறது வானியல் சாஸ்திரம். இந்த அதிர்வு, புத்தியை மந்தமாக்கும். காரியத்தை தாமதமாகச் செய்யவைக்கும். அப்படியே செயல்பட்டாலும் மனம் முழுமையாக ஈடுபடாமல் தடுமாறும். அஷ்டமி மற்றும் நவமி திதிகளில் எதிர்மறை எண்ணங்களை இந்த அதிர்வு நமக்குள் ஏற்படுத்தும். அதனால்தான், இந்தச் சமயங்களில், எந்தக் காரியமும் செய்யவேண்டாம், முக்கியமாக புதிய காரியங்களில் ஈடுபடவேண்டாம் என்று சொல்லி வைத்திருக்கிறார்கள் முன்னோர்கள்.

மற்றபடி, அஷ்டமி திதியில் அவதரித்த ஸ்ரீகிருஷ்ணரையும் வணங்குகிறோம். நவமி திதியில் அவதரித்த ஸ்ரீராமரையும் பிரார்த்தனைகள் செய்கிறோம். ஆகவே அஷ்டமி, நவமி திதிகளைப் புறக்கணிப்பதற்கு, வேதங்கள் எதையும் பரிந்துரைக்கவில்லை. வான சாஸ்திரங்களே நமக்கு அறிவுறுத்தியிருக்கின்றன’’ என விவரிக்கிறார் முநீஸ்வர சாஸ்திரிகள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in