அருள்தரும் சக்தி பீடங்கள் - 33

நெல்லை காந்திமதி அம்மன்
காந்திமதி அம்மன்
காந்திமதி அம்மன்

அம்மனின் சக்தி பீட வரிசையில், திருநெல்வேலி காந்திமதி அம்மன் கோயில், காந்தி சக்தி பீடமாக கருதப்படுகிறது. சிவபெருமானின் தேவாரப் பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 204-வது தலம் ஆகும். சிவபெருமானின் பஞ்ச சபைகளுள் இத்தலம் தாமிர சபையாகப் போற்றப்படுகிறது.

வேதபட்டன் என்பவர் தினமும் இறைவனுக்கு நைவேத்யம் படைப்பதற்காக நெல் உலரப்போட்டிருந்தார். அந்த நெல் மழையால் நனையாதவாறு இறைவனே வேலியிட்டு காப்பாற்றியதால், இங்குள்ள இறைவனுக்கு நெல்வேலிநாதர் என்ற பெயர் ஏற்பட்டது. இறைவன் கோயில் கொண்ட இத்தலம் திருநெல்வேலி என்று அழைக்கப்படுகிறது.

தல வரலாறு

நின்ற சீர் நெடுமாறன் என்ற பாண்டிய மன்னரால், கிபி 7-ம் நூற்றாண்டில் இக்கோயில் திருப்பணி செய்யப்பட்டு பெரிதாகக் கட்டப்பட்டது. வேணுவன புராணம், திருநெல்வேலி தல புராணங்கள் இக்கோயிலின் சிறப்பை விளக்குகின்றன. திருஞானசம்பந்தரின் தேவாரப் பாடல்கள் நெல்லையப்பர் - காந்திமதி அம்மனின் பெருமைகளை சிறப்பித்து உரைக்கின்றன.

வேணுவனத்தின் வழியாக ராமக்கோன் என்பவர் தினமும் பாண்டிய மன்னனின் அரண்மனைக்கு பால் கொண்டு செல்வார். ஒருநாள் பால் கொண்டு செல்லும்போது, பாறையில் இடறி மொத்தப் பாலும் கொட்டிவிட்டது. தொடர்ந்து சில நாட்கள் இப்படி நிகழ்ந்ததால், ராமக்கோனுக்கு கோபம் வந்தது. அனைத்துக்கும் பாறையே காரணம் என்று எண்ணி, பாறையை வெட்டினார். உடனே, அதிலிருந்து ரத்தம் பெருக்கெடுத்தது. இத்தகவல் அறிந்து அங்கு வந்த பாண்டிய மன்னருக்கு சிவபெருமான் காட்சி கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

மூன்று மூலவர்கள்

நெல்லையப்பர் தலத்தில் மட்டுமே மூன்று மூலவர்கள் உள்ளனர். சுயம்பு மூர்த்தியாகத் தோன்றிய ‘வேண்ட வளர்ந்தநாதர்’ பெரிய லிங்கமாக பிரதான சந்நிதியில் அருள்பாலிக்கிறார். இவருக்கு நெல்லையப்பர், வேணுவனேஸ்வரர், வெய்முத்தீசர் ஆகிய திருநாமங்கள் உள்ளன. இந்த லிங்கத்தின் மத்தியில் காந்திமதி அம்பிகையின் உருவம் தெரியும். அதனால் நெல்லையப்பர் ‘சக்தி லிங்கம்’ என்றும் அழைக்கப்படுவார்.

மூலஸ்தானம் அருகில் தனி சந்நிதியில் திருமால், சிவலிங்க பூஜை செய்தபடி உள்ளார். அருகில் உற்சவர் மகாவிஷ்ணு, மார்பில் சிவலிங்கத்துடன் அருள்பாலிக்கிறார். தன் சகோதரியை மணந்த சிவபெருமானை விஷ்ணு மார்பில் தாங்கினார் என்று கூறப்படுகிறது, அவரது கையில் தாரைவார்த்துக் கொடுத்த தீர்த்தப் பாத்திரமும் இருக்கிறது.

மூலவர் சந்நிதிக்கு முன்புள்ள பாதாளத்தில் திருமூல மகாலிங்கம் சந்நிதி உள்ளது. அகத்தியர் பிரதிஷ்டை செய்ததாகக் கூறப்படும் பாதாள லிங்கமே ஆதிமூலவர் என்று அழைக்கப்படுகிறார். இவருக்கே முதல் பூஜை நடைபெறுகிறது. சாலி வாடீஸ்வரர், விருகி விடுதீஸ்வரர், ஸ்ரீதான மூர்த்தி ஆகிய திருநாமங்களால் ஆதிமூலவர் அழைக்கப்படுகிறார். பாதாள லிங்கம் அருகே பஞ்ச தட்சிணாமூர்த்தி அருள்பாலிக்கிறார்.

பொருநை என்ற தாமிரபரணி நதியாலும், அதன் கரைகள் சிந்துபூந்துறை, கொக்கு உறைகுளம் என்று அழைக்கப்படும் இடங்களாலும் சிறப்புற்ற நெல்லைக்கு, 14 ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்டு நெல்லையப்பர் கோயில், காந்திமதி அம்மன் கோயில் ஆகிய இரட்டைக் கோயில் அமைப்பு மேலும் சிறப்பைத் தருகிறது.

காந்திமதி அம்மன்

உலகம் அனைத்தும் இறுதிக் காலத்தில் அம்பிகையிடம் ஐக்கியமாவதை உணர்த்தும் விதமாக காந்திமதி அம்மனுக்கு தினமும் அர்த்தஜாம பூஜையின்போது வெண்ணிற ஆடை அணிவிக்கப்படுகிறது. மறுநாள் காலை விளாபூஜை வரை அம்பிகை வெண்ணிற ஆடையிலேயே அருள்பாலிக்கிறார்.

ஐப்பசி மாத பிரம்மோற்சவத்தின் போது நடைபெறும் திருக்கல்யாண உற்சவத்தில் காந்திமதி அம்பிகையும், சீர் கொண்டு செல்கிறார். முதல் 10 நாட்கள், சிவபெருமானை மணம் புரிய வேண்டி சிவபெருமானை நோக்கி தவம் புரிகிறார். 10-ம் நாள் கம்பை நதிக்கு எழுந்தருள்கிறார். 11-ம் நாள் திருமால், தன் சகோதரியை மணந்து கொள்ளும்படி சிவபெருமானை அழைப்பார். அவரது அழைப்பை ஏற்று சிவபெருமானும் அம்பிகையை மணம் புரிவார். இந்த ஐதீகத்தால் பக்தர்கள் மணமக்களுக்கு திருமண ஆடைகள் கொடுக்கும் வழக்கம் இன்று உள்ளது. 12-ம் நாளில் இருந்து தம்பதியர் இருவரும் 3 நாட்களுக்கு ஊஞ்சல் உற்சவம் காண்பர். 14-ம் இரவில் இருவரும் மறுவீடு செல்கின்றனர். அப்போது அம்பிகை அப்பம், முறுக்கு, லட்டு என்று சீர் பலகாரங்கள் கொண்டு செல்வார். இதற்கு ‘காந்திமதி சீர்’ என்று பெயர்.

நெல்லையப்பருக்கு உச்சிக் காலத்தில், காந்திமதி அம்மன் அன்னம் பரிமாறி உபசரிப்பதாக ஐதீகம். தினமும் அம்மன் சந்நிதியில் இருந்து மேளதாளத்துடன் சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, எலுமிச்சை, பருப்பு, சாம்பார் சாதம் என்று பல வகை நைவேத்தியங்கள், நெல்லையப்பர் சந்நிதிக்கு கொண்டு செல்லப்படுகின்றன. சிவபெருமானுக்கு படைத்த பிறகு, அவை அனைத்தும் அம்பாளுக்கு படைக்கப்படுகின்றன.

பிரதோஷ சமயத்தில் சிவபெருமான் சந்நிதி எதிரே இருக்கும் நந்திதேவருக்கு மட்டுமின்றி, அம்பாள் சந்நிதி முன்னர் இருக்கும் நந்திதேவருக்கும் பிரதோஷ பூஜை நடைபெறுகிறது. அப்போது அம்பிகை ரிஷப வாகனத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். சிவபெருமானும் சக்தியும் ஒன்று என்பதன் அடிப்படையில் சிவராத்திரி தினத்தில் அம்பிகைக்கும் நான்கு ஜாம அபிஷேகம், பூஜைகள் நடைபெறும்.

கோயில் அமைப்பு

நெல்லையப்பருக்கும் காந்திமதி அம்மனுக்கும் தனித்தனி ராஜ கோபுரம் உண்டு. இரண்டு சந்நிதிகளையும் சங்கிலி மண்டபம் இணைக்கிறது. தனித்தனி கோயில் போன்ற அமைப்பு இருப்பதால் நெல்லையப்பருக்கு காமீக ஆகமப்படியும், காந்திமதி அம்மனுக்கு காரண ஆகமப்படியும் ஆறு கால பூஜை நடைபெறுகிறது. அம்பிகை சந்நிதியில் பண்டாசுரனை வதம் செய்த விக்கிரகம் உள்ளது. ‘மஞ்சன வடிவாம்பிகை’ என்று அழைக்கப்படும் இவர் துர்கை அம்சமாக கருதப்படுகிறார்.

இத்தலத்தில் உள்ள விநாயகர், முக்குறுணி விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். இந்த விநாயகர் வலது கையில் மோதகம், இடது கையில் தந்தம் என்று மாற்றி வைத்திருப்பது வித்தியாசமான அம்சமாகும்.

பிரகாரத்தில் கன்னி விநாயகர், நந்திதேவர், பாண்டியராஜா சந்நிதிகள் உள்ளன. நெல்லையப்பர் கோயிலுக்குள் பொற்றாமரைக் குளமும், நடுவில் நீராழி மண்டபமும் உள்ளது. இக்கோயிலில் ஆயிரங்கால் மண்டபம், 96 தூண்கள் உடைய ஊஞ்சல் மண்டபம், மகா மண்டபம், நவக்கிரக மண்டபம், சோமவார மண்டபம், சங்கிலி மண்டபம், வசந்த மண்டபம் உள்ளிட்டவையும் உள்ளன.

சிங்கம் மற்றும் மான் வாகனத்துடன் தெற்கு நோக்கியபடி துர்கை அருள்பாலிக்கிறார். நவக்கிரக சந்நிதியில் புதன் பகவான் கிழக்கு நோக்கி இல்லாமல் வடக்கு நோக்கி உள்ளார்.

பொல்லாப் பிள்ளையார் சந்நிதியில் 12 துளைகள் கொண்ட கல் ஜன்னல் உள்ளது. விநாயகரிடம் வேண்டுதல் வைத்து குழந்தை வரம் பெற்றவர்கள், குழந்தையை ஜன்னல் வழியாக கொடுத்து வாங்கி நேர்த்திக் கடன் செலுத்துகின்றனர். இதனால் குழந்தைகள் விநாயகரின் பாதுகாப்பைப் பெற்று, கல்வியில் சிறந்து விளங்கி, நீண்ட ஆயுள் பெறுவர் என்பது ஐதீகம்.

தாமிரபரணி தாய்

நாயன்மார் சந்நிதி அருகில் தாமிரபரணி தாய்க்கு சிலை வைக்கப்பட்டுள்ளது. சித்ரா பௌர்ணமி, ஆவணி மூலம், தைப்பூச தினங்களில் தாமிரபரணி நதிக்கு நீராடுவதற்கு இத்தாய் அழைத்துச் செல்லப்படுகிறார். தாமிரபரணி நதியில் நீராடினால் அனைத்து பாவங்களும் போகும் என்பதை உணர்த்த, தாமிரபரணியே தனது உண்மை வடிவத்தில் நீராடுவதாக கூறப்படுகிறது. கங்கையும் யமுனையும் தாமிரபரணிக்கு பாதுகாவல் புரிவதை உணர்த்தும் பொருட்டு, இக்கோயிலில் அம்மன் சந்நிதிக்கு முன்பாக கங்கை, யமுனை இருவரும் துவாரபாலகிகளாக உள்ளனர்.

பத்ரதீபம், லட்சதீபம்

ஒவ்வொரு வருடமும் தை அமாவாசை தினத்தில் பத்ரதீபம் (பத்தாயிரம் விளக்குகள்) ஏற்றப்படும். ஆறாண்டுகளுக்கு ஒருமுறை லட்சதீபம் ஏற்றப்படும். இக்காலங்களில் மணி மண்டபத்தில் தங்கவிளக்கு, 2 வெள்ளி விளக்குகள், அவற்றைச் சுற்றி 8 தீபங்களை வைத்து பூஜை நடைபெறும். நீத்தார் கடன்களை சரிவர செய்யாதவர்கள், இந்த தீபத் திருநாட்களில் தீபம் ஏற்றினால், குடும்ப சாபங்கள் விலகி, வாழ்க்கை செம்மையடையும் என்பது நம்பிக்கை.

காந்திமதி அம்மை பிள்ளைத் தமிழ்

19-ம் நூற்றாண்டில் சொக்கநாதப் பிள்ளை என்பவர் நெல்லை காந்திமதி அம்மன் மீது பிள்ளைத் தமிழ் இயற்றியுள்ளார். காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி ஆகிய ஆண், பெண்ணுக்குரிய பொதுப் பருவங்களையும், அம்மானை, கழங்கு, ஊசல் ஆகிய பெண்ணுக்குரிய பருவங்களையும் உள்ளடக்கி இப்பிள்ளைத் தமிழ் இயற்றப்பட்டுள்ளது.

‘வடிவு’ என்றழைக்கப்படும் காந்திமதி அம்மையின் அழகு, அருளாற்றல், வீரதீரச் செயல்கள், திருவிளையாடல்கள், அருமை பெருமைகள், மூர்த்தி – தலம் – தீர்த்தம் ஆகியவற்றின் சிறப்புகள் அனைத்தையும் கூறுகிறது. இந்த சிற்றிலக்கியத்தில், புராணக் கதைகள், தல புராணச் செய்திகள் விளக்கப்பட்டுள்ளன.

குரு வணக்கப் பாடலில் தந்தையை குருவாக எண்ணி பாடல் புனையப்பட்டுள்ளது. அம்மை திருமாலுக்கு தங்கை என்பது, அம்மை அம்மானை ஆடும்போது அவருடைய தோழிகளாக உள்ள திருமகளும், மலைமகளும் அவருக்கு பணிவிடை செய்வது, ஊசல் ஆடும்போது ஊசலின் மணிக்கயிற்றைப் பிடித்து விளையாடுவது, அம்மை பசுங்கிளிக்கு உணவூட்டி இன்சொற்கள் பயிற்றுவிப்பது, அபிராம பட்டருக்கு தன் காதில் அணிந்த குழையை வீசி எறிந்து முழு நிலவை தோன்றச் செய்தது போன்ற செய்திகள் விரிவாகக் கூறப்பட்டுள்ளன.

திருவிழாக்கள்

சித்திரை வசந்த மகோற்சவம், வைகாசி விசாகத் திருவிழா, ஆனி பிரம்மோற்சவம், ஆடிப்பூர உற்சவம், ஆவணி மூலத் திருநாள், புரட்டாசி நவராத்திரி விழா, ஐப்பசி திருக்கல்யாண உற்சவம் ஆகிய உற்சவங்கள் இங்கே விமர்சையாக நடக்கும். அன்னாபிஷேகம், கார்த்திகை தீபம், சோமவாரத் திருவிழா, மார்கழி திருவாதிரை விழா, தைப்பூசத் திருவிழா, மாசி சிவராத்திரி, பங்குனி உத்திர திருவிழா உள்ளிட்டவையும் இங்கு சிறப்பாக கொண்டாடப் படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in