அருள்தரும் சக்தி பீடங்கள் - 35

மைசூர் சாமுண்டீஸ்வரி
சாமுண்டீஸ்வரி
சாமுண்டீஸ்வரி

அம்மனின் சக்தி பீட வரிசையில் மைசூர் சாமுண்டீஸ்வரி மைசூர் சாம்ராஜ்யத்தின் காவல் தெய்வமாகக் கருதப்படுகிறார். மைசூர் நகரத்தில் இருந்து 13 கி.மீ தொலைவில் சாமுண்டி மலையில் அமைந்துள்ள இக்கோயிலில் நடைபெறும் தசரா விழா உலகப் புகழ்பெற்றது.

முன்பொரு காலத்தில் மைசூர் நகரத்தை மகிஷாசுரன் என்ற அரக்க மன்னன் ஆண்டு வந்தான். இவனது பெயரில் இருந்த மகிஷா காலப்போக்கில் மருவி மைசூர் என்று அழைக்கப்படுவதாக கூறப்படுகிறது. மகிஷனை அழிப்பதற்காக பார்வதி தேவி, சாமுண்டீஸ்வரி அவதாரம் எடுத்து மக்களை காத்ததால், காவல் தெய்வமாக போற்றப்பட்டு, மைசூர் நகரத்திலேயே தங்கிவிட்டார். கிபி 12-ம் நூற்றாண்டில் ஹோய்சாள மன்னரால் இக்கோயில் கட்டப்பட்டது. இக்கோயிலின் கோபுரங்கள், விஜயநகர மன்னர்களால் கிபி 17-ம் நூற்றாண்டில் வடிவமைக்கப்பட்டன.

தல வரலாறு

ஒருசமயம் மகிஷாசுரன் சிவபெருமானை நோக்கி கடும் தவம் புரிந்து வந்தான். அரக்கனின் தவத்தில் மகிழ்ந்த ஈசன், அவனுக்கு வரம் அளிப்பதாக உறுதி அளிக்கிறார். மகிஷாசுரனும், தனக்கு சாகா வரம் வேண்டும் என்று அவரிடம் கூறினான். உடனே சிவபெருமானும், “உனக்கு ஆண்கள், விலங்குகள், நீர் ஆகியவற்றால் மரணம் ஏற்படாது” என்று உறுதி அளிக்கிறார். சிவபெருமானிடம் இருந்து கிடைத்த வரம் காரணமாக, தனக்கு மரணம் நிகழாது என்ற ஆணவத்தில், அனைவருக்கும் தீங்கு இழைத்து வந்தான் மகிஷாசுரன்.

நாளுக்கு நாள் அவன் அளிக்கும் தொல்லைகளால் தேவர்கள் கவலை கொண்டனர். இதுகுறித்து சிவபெருமானிடம் முறையிட்டனர். தானே அரக்கனுக்கு வரத்தை வழங்கிவிட்டு, அவனை எப்படி அழிப்பது என்று யோசனை செய்த சிவபெருமான், தேவர்களை நோக்கி, “அவனுக்கு ஆண்கள், நீர், விலங்குகளால் மரணம் ஏற்படாது என்றுதான் வரம் அளித்துள்ளேன். ஒரு பெண்ணால் அவனை அழிக்க முடியும்” என்று கூறுகிறார்.

சிவபெருமானின் வார்த்தைகளைக் கேட்ட தேவர்கள், தங்களைக் காக்கும்படி பார்வதி தேவியிடம் தஞ்சம் புகுந்தனர். தேவர்களைக் காப்பதாக உறுதியளித்த பார்வதி தேவி, சாமுண்டீஸ்வரி அவதாரத்தை எடுப்பதாகக் கூறினார். அதன்படி ஆடி மாதம் மூன்றாவது வெள்ளிக் கிழமை மைசூரில் சாமுண்டீஸ்வரியாக அவதரித்தார் பார்வதி தேவி, முப்பெரும் தேவியரின் ஆசியைப்பெற்ற சாமுண்டீஸ்வரி, மகிஷாசுரனோடு போர் புரிந்து அவனை அழித்தார்.

சாமுண்டீஸ்வரி அருள்

மக்களின் காவல் தெய்வமாகப் போற்றப்படும் சாமுண்டீஸ்வரி, மிகவும் ஆக்ரோஷத்துடன் இருந்தார். அவரை தேவர்கள் சாந்தப்படுத்தினர். சாமுண்டீஸ்வரியின் உருவத்தை மலைப் பகுதியில் மார்க்கண்டேய மகரிஷி 8 கரங்களுடன் வடிவமைத்தார். இன்றும் அதே வடிவத்துடன் சாமுண்டீஸ்வரி அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார்.

சாமுண்டீஸ்வரி மகிஷாசுரமர்த்தனியின் வடிவம் கொண்டவர்தான். விஷ்ணு தர்மோத்திரத்தில் சாமுண்டீஸ்வரி தங்கமயமான மேனியுடன் சிம்மத்தின் மீது உக்கிர தோற்றம் கொண்டு 20 கைகளில் சூலம், கட்கம், சங்கு, சக்கரம், கேடயம், பரசு முதலிய ஆயுதங்களை ஏந்தியவராக வர்ணிக்கப்பட்டுள்ளார். மேலும், காலின் கீழ் எருமைத் தலையும், அசுர உடலும் கொண்ட மகிஷாசுரன் விழி பிதுங்க அச்சத்துடன் நின்று கொண்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

அம்பிகையை நினைத்து தனது உண்மையான பக்தியுடன் வேண்டினால், அனைத்தும் நிறைவேற்றப்படும் என்பது ஐதீகம். மன்னர்கள் ஆட்சிக் காலத்திலும், தற்போது மக்களாட்சி காலத்திலும், வெற்றி பெறுவதற்கு சாமுண்டீஸ்வரியின் ஆசியைப் பெறாமல் எவ்வித முயற்சியையும் மேற்கொள்வதில்லை.

மன்னரைக் காத்த ஈஸ்வரி

கிபி 1573-ல், மைசூரை நான்காம் சாம்ராஜ உடையார் ஆட்சி செய்துகொண்டிருந்தார். அவர் ஒருநாள் சாமுண்டீஸ்வரியை தரிசனம் செய்துவிட்டு திரும்பும்போது பலத்த மழை பெய்தது. ஒரு மரத்தடியில் பல்லக்கை இறக்கும்படி பணியாட்களைப் பணித்தார் உடையார். பல்லக்கை விட்டு கீழே இறங்கியவர், மலையின் மேலே பார்த்து, தன்னைக் காத்தருளும்படி சாமுண்டீஸ்வரியை வேண்டினார். ஆனால், அப்போது மலைக் கோயில் தெரியவில்லை. அதனால் சற்று தள்ளி வந்து மலைக் கோயிலைக் கண்டார். அந்த சமயத்தில் அவரது பல்லக்கு இருந்த மரத்தின் மீது மின்னலுடன் இடி விழுந்தது. அந்த மரம் தீப்பற்றி எரிந்தது. தன்னைக் காக்கவே, மலைக்கோயிலை தன் கண்களுக்குப் புலப்படாதவாறு சாமுண்டீஸ்வரி செய்துள்ளார் என்று எண்ணி மகிழ்ந்தார் உடையார். அதற்காக சாமுண்டீஸ்வரிக்கு நன்றி தெரிவிக்கும்விதமாக, கோயிலை பெரியதாக விரிவாக்கம் செய்தார்.

கோயில் அமைப்பு

சாமுண்டி மலையில் 3 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்த இக்கோயிலுக்குச் செல்ல கி.பி 1650-ல் படிக்கட்டுகள் நிறுவப்பட்டன. சாமுண்டி மலையில் 800-வது படிக்கட்டில் அமைந்துள்ள சிவன் கோயிலுக்கு எதிரில் 15 அடி உயரமும் 24 அடி நீளமும் கொண்ட கருங்கல் நந்தி சிலை அமைக்கப்பட்டுள்ளது.

மேற்கு நோக்கிச் செல்லும் மலைப்பாதையில் மகிஷாசுரன் சிலை அமைக்கப்பட்டுள்ளது. ஒரு கையில் கத்தியும், மற்றொரு கையில் நாகபாசமும் கொண்டு உயர்ந்த வடிவில் அச்சம் தரக்கூடிய வகையில் மகிஷாசுரன் நிற்கிறான்.

மைசூர் சாமுண்டீஸ்வரி கோயில் நவரங்க மண்டபம், அந்தராளம், பிரகாரம், கருவறை என்று நாற்கர வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. ராஜகோபுரம் 7 நிலைகள், ஏழு தங்கக் கலசங்களைக் கொண்டதாக அமைந்துள்ளது. கருவறையில் சாமுண்டீஸ்வரி எட்டு கரங்களுடன் அமர்ந்த கோலத்தில் அருள்புரிகிறார். கோபுர நுழைவு வாயிலில் விநாயகரும் வாயிலின் இருபுறங்களிலும் துவாரபாலகர்கள் வீற்றிருக்கின்றனர். வாயில் கதவில் அம்மனின் வெள்ளிக் கவசமிட்ட சிற்பங்கள் காணப்படுகின்றன. கருவறை முன் கொடிமரம், அம்பிகையின் திருப்பாதம், நந்தி உள்ளன. கருவறை வாசலில் நந்தினி, கமலினி ஆகிய துவாரபாலகியர் உள்ளனர். சந்நிதியின் வலப்புறம் பைரவர் அருள்பாலிக்கிறார். 1827-ல் கிருஷ்ண ராஜ உடையார் இக்கோயிலுக்கு வாகனங்கள், உயர்ந்த ஆபரணங்கள் வழங்கினார் என்பதால் அவருக்கும் இங்கு ஆறடி சிலை வைக்கப்பட்டுள்ளது.

நவராத்திரி விழா

மகிஷாசுரனை வதம் செய்த சாமுண்டீஸ்வரியைப் போற்றும் விதத்தில் நவராத்திரி பிரம்மோற்சவம் (தசரா விழா) இங்கே சிறப்பாக கொண்டாடப்படுகிறது. 1610-ம் ஆண்டு முதலே நவராத்திரி பிரம்மோற்சவம் கொண்டாடப்படுவதாகக் கூறப்படுகிறது. தசரா விழாவின்போது மைசூர் அரண்மனை மின் விளக்குகளால் அலங்கரிக்கப்படும். யானை மீது சிம்மாசனம் அமைத்து அதில் சாமுண்டீஸ்வரி அமர்ந்து பவனி வருவதைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு கூடுவது வழக்கம். விழாவில் வேத பாராயணம், தசரா கண்காட்சி, வேளாண் கண்காட்சி, இளைஞர் திருவிழா, கலைத்திறன் போட்டி, கலை விழா, தீப்பந்த பேரணி போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெறும்.

மகிஷாசுரன்
மகிஷாசுரன்

சாமுண்டீஸ்வரி ஸ்லோகம்

துர்குணம் கொண்டவர்களுக்கும் தீய சிந்தனை உள்ளவர்களுக்கும் உக்கிரரூபினியாக காட்சியளிக்கும் சாமுண்டீஸ்வரி, தன்னை அன்னையாக பாவித்து வணங்கும் பக்தர்களுக்கு சாந்தரூபினியாக அருள்பாலிக்கிறார்.

‘ஓம் பிசாசத்வஜாய வித்மஹே

சூலஹஸ்தாய தீமஹி

தந்நோ காளி ப்ரசோதயாத்’

- என்ற ஸ்லோகத்தையும்

‘ஓம் சாமுண்டேஸ்வரி வித்மஹே

சக்ரதாரிணி தீமஹி

தந்நோ சாமுண்டிஹ் ப்ரசோதயாத்’

- என்ற ஸ்லோகத்தையும் தினமும் இல்லத்தில் விளக்கேற்றி சொல்லி வந்தால் இல்லத்தில் இதுவரை இருந்த எதிர்ப்புகளும் தீயசக்திகளும் விலகும் என்று ஆச்சார்ய பெருமக்கள் அருளியுள்ளனர். குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்க, ஏழ்மை நிலை நீங்க, தடைகள் விலகி நன்மை பெருக இந்த ஸ்லோகங்கள் துணை புரியும்.

சப்த கன்னியரில் சாமுண்டி

பிராம்மி, மாகேஸ்வரி, கௌமாரி, நாராயணி, வராகி, இந்திராணி, சாமுண்டி (காளி) ஆகியோர் சப்த கன்னியர் என்று அழைக்கப்படுவர். சப்த கன்னியரில் சாமுண்டி வழிபட்ட தலம் நாகப்பட்டினம் மாவட்டம் ஞானாம்பிகை சமேத வதாரண்யேஸ்வரர் கோயில் ஆகும். சாமுண்டி சிவபெருமான் அம்சம் உடையவர், சண்ட, முண்டர்களை அழிப்பதற்காக பார்வதி தேவி சப்த கன்னியர் ரூபம் கொண்டதாகக் கூறப்படுகிறது, மூன்று கண்களும் சூலம், கட்கம் அம்பு, சக்கரம், பாசம், பலகை, வில், சங்கு ஆகியன கொண்ட 8 கரங்களையும் கொண்டவர், சடா மகுடம் உடையவர், மகிஷ வாகனம் கொண்டவர்.

மற்றொரு வடிவத்தில் சாமுண்டி, ஒரு சிரமும், நான்கு கரங்களும் மூன்று கண்களை உடையவர் என்று கூறப்படுகிறது. கோரைப் பற்களும், கருமையான மேனியும் கொண்டு, புலித்தோலை உடுத்தி, முண்ட மாலை அணிந்திருப்பார். கீழ் வலக்கரத்தில் முத்தலைச் சூலமும், மேல் வலக்கரத்தில் கத்தியும். இடக்கையில் முண்டமும், கபாலமும் கொண்டிருப்பார். சடலத்தின் மேல் அமர்ந்து உக்கிர முகத்துடன் காட்சியளிப்பார். சாமுண்டி வெற்றி தேவதையாக கருதப்படுவதால் எதிரிகளிடம் இருந்து காத்துக் கொள்ள வழிபடப் படுகிறார். சாமுண்டியை வேண்டினால், கணவன் மனைவிக்குள் இருந்த கருத்து வேறுபாடு தீரும் என்பது நம்பிக்கை.

ஆடி மாதம் செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் சாமுண்டி அஷ்டசத ஸ்தோத்திரம் கூறினால் வேண்டியது அனைத்தும் நிறைவேறும் என்பது ஐதீகம்.

saitej

திருவிழாக்கள்

தினமும் காலையும் மாலையும் 6 மணி முதல் 7-30 வரை சாமுண்டீஸ்வரிக்கு அபிஷேகம் நடைபெறும். தினமும் காலை 7-30 முதல் மதியம் 2 மணி வரையும், மாலை 3-30 முதல் 6 மணி வரையும், மீண்டும் இரவு 7-30 முதல் 9 மணி வரையும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யலாம். ஆடி மாத செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் சாமுண்டீஸ்வரிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும், ஆடி மாதத்தில் மூன்றாவது வெள்ளிக்கிழமை, சாமுண்டீஸ்வரி தேவியின் ஜெயந்தி தினமாகக் கொண்டாடப்படுகிறது. நவராத்திரி, சிவராத்திரி, கன்னட மாதப் பிறப்பு தினங்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும். தேரோட்ட நிகழ்ச்சியும் நடைபெறும். தெப்பத் திருவிழா சமயத்தில் எண்ணற்ற பக்தர்கள் வந்திருந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். கோயிலுக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் தினமும் இங்கே அன்னதானம் (தசோஹா) வழங்கப்படுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in