அருள்தரும் சக்தி பீடங்கள் - 32

திருகாளஹத்தி ஞானாம்பிகை
அருள்தரும் சக்தி பீடங்கள் - 32

அம்மனின் சக்தி பீட வரிசையில், திருகாளஹத்தி ஞானாம்பிகை கோயில் ஞான சக்தி பீடமாக வழிபடப்படுகிறது. சிவபெருமானின் தேவாரப் பாடல் பெற்ற 274 கோயில்களில் இது 252-வது தலம் ஆகும். பஞ்ச பூதத் தலங்களுள் இத்தலம் வாயு (காற்று) தலமாகப் போற்றப்படுகிறது.

ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ள இக்கோயிலில் காளத்திநாதர் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். மூலஸ்தானத்தில் இருக்கும் விளக்கு தீபம் எப்போதும் காற்றில் ஆடிக் கொண்டிருக்கும். திருநாவுக்கரசர், சுந்தர மூர்த்தி நாயனார், திருஞானசம்பந்தர் ஆகியோர் இத்தலத்தை போற்றி பதிகங்கள் பாடியுள்ளனர்.

Aanmeegam

தலவரலாறு

முன்பொரு காலத்தில் ஆதிசேஷனுக்கும் வாயுதேவனுக்கும் தங்களில் யார் பெரியவர் என்ற போட்டி வந்தது. அவரவர் தன்னுடைய பலத்தை நிரூபிக்க வேண்டும் என்று ஒப்புக்கொள்ளப்பட்டது. ஆதிசேஷன் வாயுதேவனைப் பார்த்து, “நான் என்னுடைய உடம்பால், கயிலை மலையைச் சுற்றி இறுக்கி மூடிக்கொள்வேன். நீ உன் பலத்தால், மலைச் சிகரங்களை பெயர்த்து எடுத்தால், நீ பெரியவன் என்பதை நான் ஒப்புக் கொள்வேன்” என்கிறார்.

போட்டி தொடங்கியதும், கயிலை மலையை, தனது ஆயிரம் தலைகளாலும், உடல், வாலால், மூடி மறைத்து விட்டார் ஆதிசேஷன். தனது பலம் முழுவதையும் செலுத்தி, காற்றை வீசினார் வாயுதேவன். ஆனால், அவரால் சிகரங்களைப் பெயர்க்க இயலவில்லை, சரியான தருணத்துக்காக காத்திருந்தார் வாயுதேவன். பல நூறு ஆண்டுகளுக்குப் பின், ஆதிசேஷன் லேசாக அசைந்தபோது, தனது பலத்தைக் காட்டி, கயிலை மலையில் இருந்து மூன்று சிகரங்களை ஊதித் தள்ளினார் வாயுதேவன், அந்த மூன்று சிகரங்கள் தென்பகுதியில் வந்து விழுந்தன, அவற்றில் ஒன்றுதான் திருக்காளஹத்தி மலை என்று கூறப்படுகிறது.

யானை, பாம்பின் பக்தி

சிவபெருமான் மீது பக்தி கொண்டிருந்த பாம்பு, தினமும் பாதாளத்தில் இருந்து, மாணிக்கங்களைக் கொண்டு வந்து சிவலிங்கத்துக்கு பூஜை செய்தது. பாம்பு தன் பூஜையை நிறைவு செய்துவிட்டுச் சென்றதும் அங்கு வரும் யானை, மாணிக்கங்களை தனது தும்பிக்கையால் அப்புறப்படுத்திவிட்டு, பூக்கள், தண்ணீர், வில்வ இலைகளைக் கொண்டு சிவலிங்கத்துக்கு பூஜை செய்தது.

தினமும் வந்து, தான் வைக்கும் மாணிக்கங்களை அப்புறப்படுத்துவது யார் என்பதை அறிய நினைத்த பாம்பு, ஒருநாள் பூஜையை நிறைவு செய்த பின் அங்கேயே காத்திருந்தது. சிறிது நேரத்தில் யானை, வந்து மாணிக்கங்களை அகற்றிவிட்டு, பூஜை செய்தது, இதனால் கோபம் கொண்ட பாம்பு, யானையின் துதிக்கை வழியாக அதன் தலைக்குள் புகுந்தது, மூச்சுவிட முடியாமல் தவித்த யானை, சிவலிங்கத்தை தொட்டு வழிபட்டு, பின்னர் அருகில் இருந்த பாறையில் மோதி உயிரிழந்தது. யானையின் தலைக்குள் இருந்த பாம்பும் நசுங்கி உயிரிழந்தது.

சிலந்தியின் பக்தி

சிவபெருமான் மீது பக்தி கொண்ட சிலந்தி, தினமும் சிவலிங்கத்தை வழிபட்டு வந்தது. தனது உடலில் இருந்து வரும் நூலால், சிவபெருமானுக்கு கோபுரம், பிரகாரம் என்று கோயில் கட்டி பூஜை செய்து வந்தது, காற்றில் நூல் அறுந்து போனாலும் மீண்டும் அவற்றைக் கட்டியது சிலந்தி. ஒருசமயம் சிலந்தி கட்டிய நூல் கோபுரம் எரிந்து சாம்பல் ஆனது. கோபம் கொண்ட சிலந்தி, எரிந்து கொண்டிருக்கும் தீபத்தை விழுங்கச் சென்றது. சிலந்தியின் பக்தியைக் கண்ட சிவபெருமான், என்ன வரம் வேண்டும் என்று சிலந்தியைக் கேட்டார். சிலந்தியும், மீண்டும் பிறவாமை வேண்டும் என்று கேட்டது. உடனே சிலந்தியை தன்னுடன் ஐக்கியமாக்கிக் கொண்டார் சிவபெருமான்.

Aanmeegam

இதை உணர்த்தும்விதமாக, இத்தலத்தில் சிவபெருமானின் திருமேனியின் கீழ்பாகத்தில் யானையின் தந்தங்கள், நடுவில் பாம்பு, பின்புறம் சிலந்தி ஆகியவற்றைக் காணலாம். சிலந்தி (சீ), காளம் (பாம்பு), அத்தி (யானை) மூன்றும் சிவபெருமானை வழிபட்டு முக்தி அடைந்த தலம் என்பதலால் இத்தலம் ‘சீகாளத்தி (திருகாளஹத்தி) என்று பெயர் பெற்றது.

கோயில் அமைப்பு

கருவறை அகழி போன்ற அமைப்பில் கட்டப்பட்டுள்ளது. கோயிலின் நுழைவு வாயிலின் எதிரில் கவசமிட்ட கொடிமரம் ஒன்றும், 60 அடி உயரமுடைய ஒரே கல்லால் ஆன கொடி மரம் ஒன்றும் உள்ளது. கோயில் உள்பிரகாரத்தில் திருகாளஹத்தியப்பருக்கும் ஞானாம்பிகைக்கும் தனி சந்நிதிகள் உள்ளன. மூலவரின் எதிரில் வெள்ளைக் கல் நந்தியும், பித்தளை நந்தியும் உள்ளன, காசி விஸ்வநாதர், பால ஞானாம்பாள், நந்திதேவர், விநாயகர், சுப்பிரமணியர், அஷ்டோத்ர லிங்கம், சுயம்பு நந்தி, வாயுலிங்கம், கண்ணப்ப நாயனார், சஹஸ்ர லிங்கம், சனிபகவான், துர்காதேவி சந்நிதிகளுடன் 63 நாயன்மார்களுக்கும் இங்கே தனி சந்நிதிகள் உண்டு. கருவறையை அடுத்து உள்ள மண்டபத்தில் கண்ணப்ப நாயனாரின் விக்கிரகம் உள்ளது.

திருகாளஹத்தி ஞானாம்பிகை

கிழக்கு நோக்கிய சந்நிதியில் அம்பாள் ஞானப்பூங்கோதை நின்ற கோலத்தில் இரு கரங்களுடன் அருள்பாலிக்கிறார். திருவடியில் ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ‘அர்த்த மேரு; உள்ளது. அம்பாளின் இடுப்பில் அணிவிக்கப்படும் ஒட்டியாணத்தில் கேதுவின் உருவம் காணப்படுகிறது. அம்மனுக்கு எதிரில் சிம்மம் உள்ளது. வெளிப் பிரகாரத்தின் மேற்பகுதியில் ராசிச் சக்கரம் எழுதப்பட்டுள்ளது. அம்பாளுக்கு வெள்ளிக் கிழமைதோறும் தங்கப்பாவாடை சார்த்தப்படுகிறது. அம்பிகையை வழிபட்டால் ஞானத்தை அருள்வாள் என்பது ஐதீகம்.

பாதாள விநாயகர்

ஒருசமயம் அகத்திய முனிவர் சிவபெருமானையும் விநாயகரையும் வழிபட மறந்தார். விநாயகர் கோபம் கொண்டதால், காளஹத்தியை ஒட்டி ஓடும் ‘பொன்முகலி’ என்று அழைக்கப்படும் சொர்ணமுகி ஆறு வற்றியது. தன் தவறை உணர்ந்த அகத்திய முனிவர், விநாயகருக்கு பூஜைசெய்து வழிபட்டார். காலப்போக்கில் விநாயகர் கோயில் அமைந்திருந்த பகுதியைவிட, அதன் அருகில் இருந்த பகுதிகள் உயர்ந்துவிட்டன. இதனால் விநாயகர் கோயில் பாதாளத்துக்குச் சென்றுவிட்டது. தற்போது 20 படிகள் இறங்கி, விநாயகரை தரிசிக்க வேண்டும். சிவன் கோயிலின் வெளிப் பிரகாரத்தில் இக்கோயில் அமைந்துள்ளது.

கோயில் சிறப்பு

அன்புக்கு சான்றான கண்ணப்ப நாயனார் வாய்கலசமாக முகலீநீர் கொண்டு வந்து காளஹத்தியப்பருக்கு அபிஷேகம் செய்ததால், இத்தலத்தில் திருநீறு வழங்கும் வழக்கம் இல்லை, அதற்கு பதில் பச்சை கற்பூரத்தை பன்னீர்விட்டு அரைத்து, தீர்த்தத்தில் கலந்து பக்தர்களுக்கு வழங்குகிறார்கள். மூலவருக்கும் பச்சைக் கற்பூர நீரால் அபிஷேகம் செய்யப்படுகிறது. மற்ற பொருட்களைக் கொண்டு, மூலவர் லிங்க பீடமான ஆவுடையாருக்கே அபிஷேகம் செய்யப்படுகிறது.

‘அட்டமா சித்திகள் அணைதரு காளத்தி’ என்று சிறப்பிக்கப்படும் தலமாக இத்தலம் விளங்குகிறது. நக்கீரர், ‘கயிலை பாதி காளத்தி பாதி’ என்று பதினோராம் திருமுறையில் பாடியுள்ளார். ‘தென் கயிலாயம்’ என்று அழைக்கப்படும் இத்தலத்தில் முசுகுந்தன், பரத்வாஜ முனிவர், சிவகோசரியார் வழிபட்டுள்ளனர். கண்ணப்பரின் பக்தியை வியந்து, ஆதிசங்கரர் தனது சிவானந்த லஹரியில் பாடியுள்ளார். அர்ச்சுனன், தன் தீர்த்த யாத்திரையில் இங்கு வந்து இறைவனை வழிபட்டு, பரத்வாஜ முனிவரையும் சந்தித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.

கயிலை பாதி காளத்தி பாதி

ஒருசமயம் நக்கீரருக்கு கயிலை மலைக்குச் சென்று சிவபெருமானை தரிசனம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. அதன்பொருட்டு கயிலைக்கு பயணம் மேற்கொண்டார். செல்லும் வழியில் தடாகம் ஒன்றில் நீர் பருகி, ஆலமர நிழலில் இளைப்பாறினார். அப்போது மரத்தில் இருந்து இலை ஒன்று, உதிர்ந்து நீரில் பாதியும் நிலத்தில் பாதியுமாக விழுந்தது. நீரில் படிந்த இலைப் பாகம் மீனாகவும், நிலத்தில் கிடந்த இலைப் பாகம் பறவையாகவும் உருமாறி, ஒன்றை ஒன்று இழுத்துக் கொண்டன. இதைக் கண்டு அதிசயித்து நக்கீரர், தன்னை மறந்திருந்த நிலையில் பூதம் ஒன்று அவரை இழுத்துச் சென்று சிறையில் அடைத்தது. அங்கு ஏற்கெனவே 999 பேர் அடைக்கப்பட்டிருந்தனர். நக்கீரரோடு சிறைவாசிகள் 1,000 ஆயினர்.

பூதம் அனைவரையும் ஒருசேர உண்ண நினைத்து நீராடச் சென்றது. நக்கீரர் வராமல் இருந்திருந்தால், 999 பேரும் உயிருடன் இருந்திருக்கலாம் என்று நினைத்து, அனைவரும் நக்கீரரிடம் கோபத்தை வெளிப்படுத்தினர். உடனே நக்கீரர் முருகப் பெருமானை நினைத்து திருமுருகாற்றுப்படை பாடினார். முருகப் பெருமான் வந்து அனைவரையும் விடுவித்ததுடன், “திருக்காளத்தி தரிசனம் செய்தால் போதும். அதுவே திருக்கயிலையை தரிசித்த பலனைத் தரும்” என்று கூறி அருள் புரிந்தார். நக்கீரரும் ‘கயிலை பாதி காளத்தி பாதி’ அந்தாதி பாடி ஈசனருள் பெற்றார்.

ராகு, கேது பரிகாரத் தலம்

திருகாளஹத்தி காளஹத்தீஸ்வரர் கோயில் ராகு மற்றும் கேது கிரகங்களின் பரிகாரத் தலமாக விளங்குகிறது. ராகு, கேது தோஷம், சர்ப்ப தோஷம், திருமணத் தடை, குழந்தை வரம் இல்லாமை, தீராத பிரச்சினைகள் ஆகியவற்றுக்கு இத்தலத்தில் நிவாரண பூஜைகள் நடைபெறுகின்றன. .இறைவனுக்கு அணிவிக்கும் கவசத்தில் நவகிரகங்கள் இடம்பெற்றிருக்கும். கிரகதோஷ தலம் என்பதால், இத்தலத்தில் நவகிரக சந்நிதி கிடையாது. சனீஸ்வரருக்கு மட்டும் சந்நிதி உண்டு. இத்தலத்தில் உள்ள சரஸ்வதி தீர்த்தத்தில் நீராடி அந்நீரை அருந்தினால், பேச்சு சரளமாக வராத குழந்தைகளுக்கு நன்கு பேச்சு வரும் என்பது நம்பிக்கை.

நூல்கள்

தெலுங்கு கவிஞரான ‘தூர்ஜாட்டி’ என்பவர் இத்தலத்தைப் புகழ்ந்து ‘ஸ்ரீ காளஹஸ்தீஸ்வர மகாத்மியம்’ என்ற கவிதைத் தொகுப்பை நூலாக வெளியிட்டுள்ளார். வீரை நகர் ஆனந்தக் கூத்தர் ‘திருக்காளத்தி புராணம்’, கருணைப் பிரகாசர், ஞானப் பிரகாசர், வேலப்ப தேசிகர் ஆகிய மூவரும் ‘தலபுராணம்’ பாடியுள்ளனர். சேறைக் கவிராயர் திருக்காளஹத்தியப்பர் மீது உலா பாடியுள்ளார்.

திருவிழாக்கள்

மாசித் திருவிழா, கார்த்திகை, பொங்கல், மகா சிவராத்திரி நாட்களில் சிறப்பு ஆராதனைகள், உற்சவங்கள் நடைபெறும். சிவராத்திரியை முன்னிட்டு மலை வலம் வரும் விழா, திருத்தேர் பவனி நடைபெறும். வெள்ளிக்கிழமைதோறும் அம்பாளுக்கு ஊஞ்சல் சேவை நடைபெறும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in