அருள்தரும் சக்தி பீடங்கள் – 30

திருக்கடையூர் அபிராமி
அருள்தரும் சக்தி பீடங்கள் – 30

அம்மனின் சக்தி பீட வரிசையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ள திருக்கடையூர் அபிராமி அம்மன் கோயிலும் பிரதானமாகக் கருதப்படுகிறது. கால சக்தி பீடமாகக் கருதப்படும் இக்கோயிலில் அபிராமி அந்தாதியை அருளச் செய்துள்ளார் தேவி. பக்தர்களின் வாழ்வில் இருள்நீக்கி, ஒளியேற்றி, அவர்கள் வேண்டியதை எல்லாம் அம்பிகை அருள்வதால்,எப்போதும் இங்கே பக்தர்கள் குவிந்தவண்ணம் இருப்பது வழக்கம்.

திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவராலும் தேவாரப் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் 47-வது சிவத் தலம் திருக்கடையூர். அட்டவீரட்டானத் தலங்களுள் ஒன்றாக விளங்கும் இத்தலத்தில், குங்கிலியக்கலய நாயனார், காரி நாயனார் வாழ்ந்துள்ளனர். இறைவனே மார்க்கண்டேயருக்காக எமதர்மரை உதைத்தருளினார் என்பதால், இத்தலம் எமபயம் நீக்கும் தலமாக விளங்குகிறது. அதனால் பக்தர்கள் மணிவிழா, பவளவிழா, சதாபிஷேகம் முதலான விழாக்களை இங்கு நடத்துவதுண்டு.

மயிலாடுதுறை – தரங்கம்பாடி சாலை மார்க்கத்தில், மயிலாடுதுறையில் இருந்து 23 கி.மீ தொலைவில் உள்ள திருக்கடையூரில் அகஸ்தியர், புலஸ்தியர், துர்கை, வாசுகி, பூமாதேவி ஆகியோர் வழிபாடு செய்துள்ளனர்.

தல வரலாறு

ஒருசமயம் பிரம்மதேவர், ஞான உபதேசம் பெறும் எண்ணத்தோடு கயிலாய மலை சென்றார். சிவபெருமானும் பிரம்மதேவரின் எண்ணத்துக்கு செவி சாய்த்து, அவரிடம் வில்வ விதைகளை அளித்தார். பூவுலகில் எந்த இடத்தில், விதைக்கப்பட்ட ஒரு நாழிகைக்குள் (24 நிமிடங்கள்) வில்வ மரம் வளர்கிறதோ, அந்த இடத்தில் ஞான உபதேசம் அளிப்பதாக உறுதி அளிக்கிறார். அதன்படி பிரம்ம தேவர், இத்தலத்துக்கு வந்து சிவபெருமானை வழிபட்டார்.

சிவபெருமானும் அவருக்கு அருட்காட்சி அளித்து ஞான உபதேசம் செய்து வைத்தார். கோயிலில் மூல மூர்த்தியாக, சிவனே ஆதி வில்வநாதராக தனிசந்நிதியில் அருள்பாலிக்கிறார். பாற்கடலைக் கடைந்து, அமிர்தம் கிடைக்கப் பெற்ற தேவர்கள், மகிழ்ச்சியில், விநாயகப் பெருமானை தரிசிக்காமல் சென்றனர். இதில் கோபமடைந்த விநாயகர், அந்த அமிர்தக் கலசத்தை மறைத்து வைத்தார்.

தங்கள் தவற்றை உணர்ந்த தேவர்கள், விநாயகரை வணங்கி, அவரிடம் இருந்து அமிர்தக் கலசத்தைப் பெற்று, சிவபூஜை செய்வதற்காக இத்தலத்தில் வைத்தனர். அப்போது அமிர்தக் கலசம் இருந்த இடத்தில் சிவலிங்கம் தோன்றியது. அப்படி அமிர்தத்தில் இருந்து தோன்றியதால், சிவபெருமான், ‘அமிர்தகடேஸ்வரர்’ என்று அழைக்கப்படுகிறார்.

அபிராமி அந்தாதி

பாற்கடலில் இருந்து தோன்றிய அமிர்தத்தை திருமால், தேவர்களுக்கு அளிப்பதற்கு முன், சிவபூஜை செய்ய வேண்டும் என்று பணித்தார். சிவபூஜையின்போது தேவியையும் வணங்க வேண்டும் என்பதால், தனது ஆபரணங்களை கழற்றி வைத்தார். அப்போது அந்த ஆபரணங்களில் இருந்து அபிராமி அம்பிகை தோன்றினார். அதன்பின்னரே சிவபூஜை செய்து தேவர்களுக்கு அமிர்தத்தை அளித்தார் திருமால்.

திருமாலின் ஆபரணங்களில் திருமகள் வாசம் செய்கிறார். அவரது ஆபரணங்களில் இருந்து அபிராமி அம்பிகை தோன்றியதால், அம்பிகையின் அன்னையாக திருமால் போற்றப்படுகிறார்.

ஒருசமயம் அபிராமி அம்பிகையின் பக்தரான சுப்பிரமணிய பட்டர், அம்பிகையை மனதில் நினைத்து தரிசித்துக் கொண்டிருந்தார். அப்போது சரபோஜி மன்னர் கேட்ட கேள்விக்கு, அமாவாசை தினம் என்று பதிலளிப்பதற்கு பதிலாக பௌர்ணமி தினம் என்று கூறுகிறார் பட்டர். உடனே, மன்னர், அந்த நாளை பௌர்ணமி என்று நிரூபிக்காவிட்டால் மரண தண்டனை விதிக்கப்படும் என்று உத்தரவிட்டார்.

செய்வதறியாது தவித்த பட்டர், அம்பிகையை வேண்டி அபிராமி அந்தாதி பாடுகிறார். 79-வது பாடலைப் பாடும்போது, அம்பிகை, தன் காதில் அணிந்த தோட்டை வானில் எறிகிறார். அதுவே முழு நிலவாகக் காட்சியளித்தது.

அபிராமி அந்தாதி பாடப்பட்ட தினம், அமாவாசை தினமாகும், அன்று அம்பிகை புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கொடிமரத்தருகே, அனைவர் முன்னிலையிலும் அபிராமி அந்தாதி பாடப்படும். 79-வது பாடல் பாடப்படும்போது, சிறப்பு தீபாராதனை காட்டப்படும். இந்த வைபவத்தைக் காண, ஏராளமான பக்தர்கள் வருவதுண்டு.

அபிராமி அந்தாதியைப் பாராயணம் செய்தால், ஞானமும் நல்வித்தையும் பெறலாம். பிரிந்தவர்கள் ஒன்று சேர்வார்கள். பற்றுகள் நீங்கி பக்தி பெருகும். முக்காலமும் உணரும் திறன் உண்டாகும். தலைமை பெறுவார்கள். மரணபயம் நீங்கும். மறுமையில் இன்பம் உண்டாகும். மெய்யுணர்வு பெறலாம், மாயையை வெல்லலாம். நல்லடியார் நட்பு கிடைக்கும். பிறவிப் பிணி தீரும். யோக நிலை கிடைக்கும். விதியை வெல்லலாம். நன்னடைத்தை உண்டாகும். மன உறுதி கிடைக்கும். அம்பிகையை நேரில் காணலாம் என்று கூறப்படுகிறது.

கால சம்ஹார மூர்த்தி

மிருகண்டு முனிவர் – மருத்துவதி அம்மாள் தம்பதிக்கு வெகுநாட்களாக குழந்தைப் பேறு கிட்டவில்லை. சிவபெருமானை நோக்கி கடும் தவம் புரிகிறார் மிருகண்டு முனிவர். சிவபெருமான் அவர்களுக்கு குறைந்த ஆயுளும், நிறைந்த அறிவுடன் குழந்தை பிறக்கும் என்று அருள்கிறார்.

பிறந்த குழந்தைக்கு, ‘மார்க்கண்டேயன்’ என்று பெயர் சூட்டப்படுகிறது. குழந்தைக்கு குறைந்த ஆயுள் என்பதால், குடும்பத்தார் கவலையில் மூழ்கினர். சில காலம் கழித்து, இந்த விஷயம் மார்க்கண்டேயனுக்கும் தெரிய வருகிறது. சிவதலங்கள் பலவற்றுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்த மார்க்கண்டேயன், 108-வது தலமாக, திருக்கடையூர் வந்தடைகிறான். அந்த நாள், அவனது வாழ்க்கைப் பயணத்தின் நிறைவு நாளாக அமைய உள்ளதால், சிவபெருமானை மனதார வேண்டினான் மார்க்கண்டேயன்.

எமதர்மர் அவனது உயிரைப் பறிக்க வரும்போது, அமிர்தகடேஸ்வரரை இறுகப் பற்றிக்கொண்டான் மார்க்கண்டேயன். எமதர்மரின் பாசக்கயிறு, அமிர்தகடேஸ்வரர் மீதும் பட்டதால், கோபம் கொள்கிறார் சிவபெருமான். உடனே எமதர்மரை, எட்டி உடைத்து சம்ஹாரம் செய்கிறார். மேலும், “என்றும் பதினாறாய், சிரஞ்சீவியாக இரு” என்று மார்க்கண்டேயனுக்கு அருள்பாலிக்கிறார் சிவபெருமான்.

எமதர்மர் சம்ஹாரம் செய்யப்பட்டதால், பூமியில் இறப்பே இல்லாமல் போனது. பூமாதேவியால் பாரத்தைத் தாங்க முடியவில்லை. இதுகுறித்து தேவி, ஈசனிடம் முறையிடுகிறார். ஈசனும், எமதர்மருக்கு மீண்டும் உயிர் தந்து வரம் அருளினார். அதன் காரணமாக, ‘கால சம்ஹார மூர்த்தி’ என்ற பெயரால் அமிர்தகடேஸ்வரர் அழைக்கப்படுகீறார்.

கால சம்ஹார மூர்த்திக்கு பூஜை நடைபெறும்போது மட்டுமே எமதர்மரை தரிசிக்க முடியும். எமதர்மர் இல்லாமல் சுவாமி கையில் சூலாயுதம் இருந்தால் அது ‘சம்ஹார கோலம்’ என்றும், சுவாமியுடன் எமதர்மர் இருந்தால், அது, ‘உயிர்ப்பித்த கோலம்’ என்று அழைக்கப்படுகிறது. ஒரே சமயத்தில் இந்த சந்நிதியில் சம்ஹார மூர்த்தியையும், அனுக்கிரக மூர்த்தியையும் தரிசிக்கலாம். இச்சந்நிதியில் இரு கரங்களுடன் சிறுமி வடிவில் உள்ள பாலாம்பிகை, லட்சுமி தேவி, சரஸ்வதி தேவி ஆகியோரையும் தரிசிக்கலாம்.

திருக்கடையூர் ரகசியம்

அமிர்தகடேஸ்வரருக்கு வலப்புறத்தில் யந்திரத் தகடு உள்ளது. இந்த யந்திரத் தகடை தரிசித்தால் ஆயுள் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள், முதலில் பாபகரேஸ்வரர், பின்னர் அமிர்தகடேஸ்வரரை தரிசித்த உடன் யந்திரத் தகட்டை வழிபட வேண்டும் என்று கூறப்படுகிறது, இந்த யந்திரத் தகடு, ‘திருக்கடையூர் ரகசியம்’ என்று கூறப்படுகிறது. காலசம்ஹார மூர்த்தி சந்நிதிக்கு எதிரில் எமதர்மர், இரு கரங்களையும் கூப்பி, வணங்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். அருகில் அவரது வாகனம் எருமை உள்ளது.

கங்கை தீர்த்தம்

சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வதற்காக, மார்க்கண்டேயர், காசியில் இருந்து தீர்த்தம் கொண்டு வந்தார். பக்தனின் சிரமத்தைக் குறைக்கும் பொருட்டு, திருக்கடையூர் மயானம் பிரம்மபுரீஸ்வரர் கோயில் அருகில் உள்ள கிணற்றில் கங்கையை பொங்கச் செய்தார் சிவபெருமான். இப்போதும் இந்தத் தீர்த்தத்தில் இருந்து நீர் எடுத்து, சுவாமிக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. பங்குனி மாதம், அசுவினி நட்சத்திர தினத்தில் இத்தீர்த்தத்தில் கங்கை பொங்கியதால், அன்று ஒருநாள் மட்டும் பக்தர்கள் இங்கு நீராட அனுமதிக்கப்படுகின்றனர்.

மார்க்கண்டேயன், இத்தீர்த்தத்தில் இருந்து நீர் எடுத்து வரும்போது, நீருடன் பிஞ்சிலமும் (சாதி மல்லி) இருந்ததாகக் கூறப்படுகிறது. அதனால் இன்றும் இப்பூவால் சுவாமிக்கு அர்ச்சனை நடைபெறுகிறது.

பூர்ணாபிஷேகம்

அமிர்தகடேஸ்வரர் – அபிராமி கோயிலில் பக்தர்கள் பலர் பூர்ணாபிஷேகம் (100 வயது பூர்த்தி), கனகாபிஷேகம் (90 வயது பூர்த்தி), சதாபிஷேகம், பீமரதசாந்தி, மணிவிழா, ஆயுஷ்ய ஹோமம் செய்து கொள்வதுண்டு. இதனால் அவர்களது ஆயுள் கூடும் என்பது நம்பிக்கை. 16 கலசங்கள் வைத்து, நவதானியங்களில் நவகிரகங்களை ஆவாஹனம் செய்து, ஹோமம் நடைபெறும். கலச நீரால் தம்பதிக்கு அபிஷேகம் செய்யப்படும். பின்னர் கடவூர் மயானம் பிரம்மபுரீஸ்வரர் வழிபாடு, அமிர்தகடேஸ்வரர் வழிபாடு செய்து பூஜையை நிறைவு செய்வர்.

கோயில் சிறப்பு

பிரகாரத்தில் ஒரு சந்நிதியில் பார்வதி, முருகப் பெருமானை வலது மடியில் அமர்த்திய கோலத்தில் ‘குகாம்பிகை’யாக அருள்பாலிக்கிறார். ‘கள்ளவாரண விநாயகர்’ துதிக்கையில் அமிர்தக் கலசத்தை வைத்தபடி அருள்பாலிக்கிறார். இத்தலம் விநாயகப் பெருமானின் அறுபடைவீடுகளில் மூன்றாம் படை வீடாகும்.

துயரம் நீங்கி மன அமைதி பெற, வேலை வாய்ப்பு, தொழில் விருத்தி, உத்தியோக உயர்வு ஆகியவற்றுக்காக பக்தர்கள் இங்கு வந்து நேர்த்திக் கடன் செலுத்துவர். சங்காபிஷேகம் ருத்ராபிஷேகம், சப்த திரவிய மிருத்யுஞ்சய ஹோமம், அம்மனுக்கு புதுத்தாலி சாற்றுதல், அன்னதானம் ஆகியவற்றை செய்து பக்தர்கள் வழிபாடு செய்வது இன்றும் நடைபெறுகிறது.

திருவிழாக்கள்

சித்திரை மாதத்தில் 18 நாட்கள் எம சம்ஹார விழா நடைபெறும். கார்த்திகை சோமவாரம் (1,008 சங்காபிஷேகம்), புரட்டாசி மாத நவராத்திரி, மார்கழி விதியபாதம், ஆடிப்பூரம், பௌர்ணமி, கந்தர் சஷ்டி, மகா சிவராத்திரி, பங்குனி உத்திரம், தை அமாவாசை, பிரதோஷம், தீபாவளி, பொங்கல், புத்தாண்டு உள்ளிட்ட தினங்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். இந்த நாட்களில் சுவாமி புறப்பாடும் நடைபெறும். தை அமாவாசை தினத்தில் அபிராமி அந்தாதி பாராயணம் செய்து, நிலவு காட்டி வழிபாடு நடைபெறும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in