அருள்தரும் சக்தி பீடங்கள் - 29

அஸ்தினாபுரம் ஜெயந்தி மாதா
அருள்தரும் சக்தி பீடங்கள் - 29

அம்மனின் சக்தி பீட வரிசையில் அஸ்தினாபுரத்தில் அமைந்துள்ள முக்தி நாயகி ஜெயந்தி பீடமும் பிரதான இடம் பெறுகிறது. இத்தலத்தில் லட்சுமி தேவியாகவும், ஜெயந்தி மாதாவாகவும் பெயர் தாங்கி, தேவி அருள்பாலிக்கிறார்.

இந்த பூமியில் எத்தனையோ ஏற்றத் தாழ்வுகள் நிகழ்ந்துள்ளன. அவை அனைத்துக்கும் ஈடுகொடுத்து இந்த பூமியானது தலைதூக்கி நின்று கொண்டிருக்கிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் இறைவன் அல்லது இறைவி எழுந்தருளி, உலகைக் காக்கும் பொருட்டு, பல அவதாரங்களை எடுத்து, உலகை நல்வழிப்படுத்தி வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்வதாக காலங்காலமாக ஒரு நம்பிக்கை இருக்கிறது.

இதிகாசத் தொடர்பு

பண்டைய இதிகாசத்தில் மிகவும் பெருமைக்குரிய இடமாக டெல்லி திகழ்ந்திருக்கிறது. அஸ்தினாபுரத்தைத் தலைநகராகக் கொண்டு கௌரவர்களும், அதை ஒட்டிய இந்திரபிரஸ்தத்தைத் தலைநகராகக் கொண்டு பாண்டவர்களும் ஆட்சி புரிந்துள்ளனர். டெல்லி மாநகர்தான் பண்டைய காலத்தில் அஸ்தினாபுரமாக அழைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் தேவியின் உடற்கூறு விழுந்துள்ளதாகக் கருதப்படுவதால், அஸ்தினாபுரம் சக்தி பீட வரிசையில் இடம்பெற்றுள்ளது.

பஞ்ச பாண்டவர்கள், அஸ்தினாபுரத்தை ஒட்டி ஒரு புதிய நகரை உருவாக்கினர். அதற்கு ‘இந்திரபிரஸ்தம்’ என்று பெயர் சூட்டி, அரசாட்சி புரிந்து வந்தனர். ஒருமுறை, அங்கு வந்திருந்த கௌரவர்களுக்கு அவமானம் ஏற்பட்டதால், இரு அணிக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டது.

சூதாட்டத்தில் தோல்வியுற்ற பஞ்ச பாண்டவர்கள் நாட்டைவிட்டு காட்டுக்கு அனுப்பப்பட்டார்கள். இவர்கள் உருவாக்கிய இந்திரப்பிரஸ்தம்தான் தற்போது டெல்லி என்று அழைக்கப்படுகிறது. பழைய டெல்லி, புது டெல்லி ஆகிய பகுதிகளுள்தான் தற்போது கூறப்படும் அஸ்தினாபுரம் அடங்கியுள்ளது. இதற்கு ஆதாரமாக ‘புராணகிலா’ என்று அழைக்கப்படும் பழைய கோட்டை உள்ளது.

லட்சுமி நாராயணன் கோயில்

டெல்லி மாநகரைச் சுற்றி பல கோயில்கள் இருந்தாலும், லட்சுமி நாராயணன் (பிர்லா மந்திர்) கோயிலே பிரதானமாகக் கருதப்படுகிறது. சுகல் கிஷோர் பிர்லா என்பவர் இக்கோயிலைக் கட்டிய காரணத்தால் பிர்லா மந்திர் என்றே இக்கோயில் அழைக்கப்படுகிறது. இங்கு வீற்றிருக்கும் தேவி, ஜெயந்தி என்றும் லட்சுமி என்றும் அழைக்கப்படுகிறார். எத்தனையோ எதிர்ப்புகளையும் போர்களையும் சந்தித்த இடத்தில் எழுந்தருளிய தேவி, அனைவரையும் அனைத்து இன்னல்களில் இருந்தும் காப்பார் என்பது நம்பிக்கை.

ஒடிசா என்னும் கலிங்கப்பிரதேசத்தில் அமைந்துள்ள கோயிலைப் போன்று இக்கோயில் கட்டப்பட்டுள்ளது. மூன்று சிகரங்களைக் கொண்ட இக்கோயில் தமிழக கோயில்களில் காணப்படும் மாடத்தின் அமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. பல படிகள் ஏறிச் செல்ல வேண்டும். இக்கோயில் முழுவதும் சிவந்த கற்களாலும், வெண்சலவைக் கற்களாலும் கட்டப்பட்டுள்ளது. சுவர்களில் பகவத் கீதை, உபநிஷத்களில் இருக்கும் வாக்கியங்கள் எழுதப்பட்டுள்ளன.

இங்கு மூலவராக லட்சுமியுடன் நாராயணன் அருள்பாலிக்கிறார். வீரிய லட்சுமியாக, கெஜலட்சுமியாக, ஆதிலட்சுமியாக, சந்தான லட்சுமியாக, விஜயலட்சுமியாக, ஜெயலட்சுமியாக பல பெயர்களைத் தாங்கி தேவி அருள்பாலிக்கிறார். அனைவருக்கும் ஜெயத்தை அருள்பவராக இருப்பதால், ஜெயந்தி என்றும் அழைக்கப்படுகிறார். வெற்றித் தெய்வமாக அனைவராலும் போற்றப்படுகிறார்.

பிற தெய்வங்கள்

கோயிலின் நுழைவாயிலில் அனுமனும், விநாயகரும் அருள்பாலிக்கின்றனர். கோயிலின் வலதுபுறத்தில் காளிதேவிக்கு தனி சந்நிதி அமைந்துள்ளது. இடதுபுறத்தில் சிவபெருமானுக்கு தனி சந்நிதி அமைக்கப்பட்டுள்ளது. அருகே பூங்காவைக் கடந்து சென்றால், மேற்கு வாயிலில் தமிழகக் கோயில்களின் கோபுரத்தையும், தெற்குப் பகுதியில் அசோகன், விக்கிரமாதித்தன் பிருதிவிராஜன் சிலைகளையும் காணலாம்.

அருகே உள்ள இரண்டு யானை சிலைகளைக் கடந்து சென்றால், தென்புறத்தில் அமைந்துள்ள புத்தர் கோயிலை அடையலாம். கயையில் அமைக்கப்பட்டுள்ள சிகரம் போலவே இக்கோயிலுக்கும் சிகரம் அமைக்கப்பட்டுள்ளது. சுவர்களில் நீதி வாக்கியங்கள் எழுதப்பட்டுள்ளன. பிரார்த்தனை செய்வதற்கு தனி கூடமும் அமைக்கப்பட்டுள்ளன.

வடக்கு புறத்தில் கீதா மந்திரும், தர்மசாலையும் கட்டப்பட்டுள்ளன. டெல்லி வருபவர்கள் இந்த தர்மசாலையில் இலவசமாக மூன்று நாட்கள் தங்க அனுமதிக்கப்படுவர். கீதா மந்திரில் எப்போதும் பஜனை, பாராயணம் நடந்துகொண்டிருக்கும்.

ஜாக்மாயா கோயில்

மீராபாய் தம்பூரா ஏந்தி பாடிக்கொண்டிருப்பது போன்ற சிலை அமைக்கப்பட்டுள்ள இடத்துக்கு அருகே ராமர் கோயில் உள்ளது. ராமர் கோயில் தரிசனம் முடித்து குதுப்மினார் அருகே வந்தால் ஜாக்மாயா கோயிலை அடையலாம். ஜாக்மாயா கிருஷ்ணனின் சகோதரி ஆவார். அளவற்ற அன்பு காரணமாக, பாண்டவர்களுக்கு கிருஷ்ணன் உதவினான். பாண்டவர்களும் கிருஷ்ணன் மீது அளவற்ற அன்பு கொண்டிருந்தனர். அந்த அன்பு காரணமாக கிருஷ்ணனின் சகோதரியான ஜாக்மாயாவுக்கு தருமர் கோயில் எழுப்பியுள்ளார். 400 சதுர அடி விஸ்தீரனத்தில் இந்தக் கோயில் அமைக்கப் பட்டுள்ளது. டெல்லியில் இருந்து 130 கி.மீ தொலைவில் அஸ்தினாபுரம் உள்ளது. அங்கும் ஜெயந்திதேவிக்கு சிறு கோயில் கட்டி வழிபாடு நடைபெறுகிறது.

பிற ஜெயந்தி சக்தி பீடங்கள்

மேகாலயா தலைநகரம் ஷில்லாங்கில் இருந்து 63 கி.மீ தொலைவில் நார்டியாங்க் கிராமத்தில் ஜெயந்தியா மலையின் மீது அமைந்துள்ள வன துர்க்கை கோயிலில் ஜெயந்தி (ஜெயந்தேஸ்வரி, மச்யோதரி) என்ற பெயரில் தேவி அருள்பாலிக்கிறார். சைல்ஹெட்டில் இருந்து சில்லாங் செல்லும் வழியில் உள்ள ஜெயந்தியாபூர் என்ற ஊரில் பௌர்பாக் காளி கோயில் அமைந்துள்ளது. மேற்கு வங்கத்தின் ஜல்பாய்குரி மாவட்டம் பக்ஸா புலிகள் காப்பகம் அமைந்துள்ள காட்டுப்பகுதி கிராமமான ஜெயந்தியில் உள்ள மஹாகாள் குகையில் ஜெயந்தி சக்தி பீடம் அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மகாலட்சுமி அஷ்டகம்

செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமி அஷ்டகம் கூறினால் அதிக நன்மை ஏற்படும் என்பது ஆன்றோர் வாக்கு. ‘நமஸ்தேஸ்து மஹா மாயே ஸ்ரீபீடே ஸுரபூஜிதே’ எனத் தொடங்கும் மகாலட்சுமி அஷ்டகத்தைக் கூறினால் அனைத்து விதமான செல்வங்களும் கிடைக்கும்.

‘வணக்கத்துக்கு உரியவராக விளங்கும் மஹா மாயை ஆனவரே... ஸ்ரீபீடத்தில் நிலைத்து வசிப்பதால், தேவர்கள் உங்களை வணங்குகிறார்கள். சங்கு, சக்கரம், கதை முதலானவற்றை தாங்கி அருள்பாலிக்கும் உங்களை வணங்கி மகிழ்கிறேன். கருட வாகனத்தில் பயணிப்பவரே... கோலாசுரன் என்ற அசுரனுக்கு எதிராகப் போரிட்டு அவனை வீழ்த்திய உங்களை வணங்குகிறேன்.

அனைத்துப் பாவங்களையும் அழிப்பவரே... உயர்ந்த ஞானத்தின் இருப்பிடமாக விளங்குபவரே... அறிவும் சிந்தனையும் தேர்ந்து எய்தும், தெய்விக வெற்றியை அருள்பவரே... மோட்சத்துக்கான நல்ல ஞானத்தை அளித்து, மந்திரங்களின் வடிவாகத் திகழ்பவரே... முதலும் முடிவும் அற்ற தேவியான நீங்கள் பிரபஞ்சத்தின் முதல் சக்தியான மகேஸ்வரியாக விளங்குபவர்; யோக நிலையில் தோன்றியவர். யோக வடிவாகத் திகழ்பவர். பூவுலகில் காணும் வடிவங்களாக விளங்குபவர். பத்மாசனத்தில் அமர்ந்து பரப்ரம்மத்தின் வடிவமாகத் திகழ்பவர். பரமேஸ்வரியான தாங்கள் அனைத்து உயிர்களுக்கும் அன்னையாக விளங்கும் மகாலட்சுமி’

- என்ற இந்த மகாலட்சுமி அஷ்டகத்தை தினமும் ஒரு முறை சொல்லி வழிபட்டால் பாப வினைகள் அழியும். இருமுரை சொல்லி வழிபட்டால் இல்லத்தில் தனமும் தான்யமும் குறைவின்றி நிறையும். மூன்று முறை கூறி வழிபட்டால் எதிரிகளை எளிதாக வென்று, மகாலட்சுமியின் பேரருளைப் பெறலாம்.

கனகதாரா ஸ்தோத்திரம்

‘அங்கம் முழுவதும் ஆபரணங்கள் அணிந்து ஒளிபொருந்தியவராகக் காட்சியளிக்கும் தேவியே... தாயின் கருணையோடு அனைத்து செல்வங்களையும் அருள்வீராக. பாற்கடலின் திருமகளே, தங்கள் பார்வையை என் மீது தவழவிட வேண்டும். அரிதுயில் கொள்ளும் முகுந்தனை இமையால் நோக்கி ஆனந்தப் பெருமிதப்பில் ஆழ்த்தும் அன்னையே... திருமாலின் திருமார்பில் உள்ள துளபமாலை, உங்கள் பார்வையால் இந்திர நீலக்கல்லாக மாறும். அதுபோல் உங்கள் பார்வையால் நான் மேன்மை அடைய வேண்டும்.

செய்த தவத்தின் பயனாக பிருகு முனிவர், தங்களை மகளாக அடைந்தார். பார் முழுதும் தங்களை அன்னையாக நினைத்து பக்தியோடு வேண்டுகின்றனர். அனைவருக்கும் தாங்கள் அருள்பாலிக்க வேண்டும். மங்கலங்கள் அத்தனையும் தங்கும் இடம் எதுவோ, திருமாலுக்கே வலிமை தரும் பார்வை எதுவோ, திறம்படைத்த திருமாலின் சௌலப்யம் எதுவோ, அந்தப் பார்வையே தங்கள் திருப்பார்வை. அப்பார்வை என் மீது பட வேண்டும்.

விளையாட்டாய் தங்கள் பார்வை யார் மீது பட்டாலும், அவர், விண்ணுலக அமரேந்திரன் ஆவார். தங்கள் பார்வை முழுவிழி திருஷ்டியால் முகுந்தனும் ஆனந்தத் துயில் கொள்கிறார். சாதனை புரியத் துடித்தேன். எனது ஏழ்மை நிலை மாற வேண்டினேன். சிருஷ்டியில் கலைமகளாகத் திகழ்பவரே... அனைவரையும் காக்கும் திருமகளே... அரக்கர்களை அழிக்கும் பொருட்டு துர்காதேவியாக விளங்கும் வல்லமை படைத்தவரே... பிறைச் சந்திரனைச் சூடும் பெம்மானுக்கு பிரியமானவரே... உங்கள் திருவடியைப் போற்றி வணங்குகின்றேன்.

வேதப்பிரம்ம ஸ்வரூபமாக விளங்கும் அன்னையே... பாற்கடலில் உதித்த லட்சுமி தேவியே... அமுதத்தை உடன்பிறப்பாகப் பெற்றவரே... தங்கத் தாமரை மலரில் அமர்ந்தவரே... தரணிக்கெல்லாம் தலைவியானவரே... கமலக் கண்ணனின் கருணை வெள்ளமே. உங்களைத் துதிப்பதால் கீர்த்தி, கல்வி, நிறை செல்வம், ஆரோக்கியம், நிறை ஆயுள், புத்தி, சக்தி அனைத்தும் கிட்டும் என்பது திண்ணம்.’

- ஆதிசங்கரர் அருளிய இந்த கனகதாரா ஸ்தோத்திரத்தை செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் சொல்லி வந்தால், அனைத்துவித ஐஸ்வர்யங்களும் கிட்டும் என்பது நம்பிக்கை.

திருவிழாக்கள்

நவராத்திரி, சிவராத்திரி, பௌர்ணமி, அமாவாசை தினங்களில் இத்தலத்தில் சிறப்பு ஆராதனைகள் நடைபெறும். துர்கா பூஜை விசேஷமான முறையில் கொண்டாடப்படும். வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்திருந்து வழிபாடு செய்வதுண்டு. செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பல்வேறு குழுக்களைச் சேர்ந்தவர்கள், கோயிலில் அமர்ந்து மகாலட்சுமி அஷ்டகம், கனகதாரா ஸ்தோத்திரம் கூறுவது வழக்கம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in