அருள்தரும் சக்தி பீடங்கள் – 27

பிரயாகை திரிவேணி
அருள்தரும் சக்தி பீடங்கள் – 27

அம்மனின் சக்தி பீட வரிசையில் பிரயாகை (அலகாபாத்) என்று அழைக்கப்படும் திரிவேணி சங்கமம் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. பார்வதி தேவியின் கை விரல்கள் இப்பகுதியில் விழுந்ததாகக் கூறப்படுகிறது.

கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகளின் சங்கமமே பிரயாகையின் சிறப்பாகும். இதிகாச, புராணங்களில் தீர்த்த ராஜா ஸ்தானம் பிரசித்தி பெற்றதாகக் கருதப்படுவதால், யாத்ரீகர்கள், ‘புனித தீர்த்த ராஜா பிரயாகைக்கு ஜெயம் உண்டாகட்டும்’ என்று கொண்டாடுவது வழக்கம்.

தேவி திரிவேணி

நதிகளின் தோற்றங்களைப் பார்க்கும்போது, அன்னை பார்வதி தேவியின் கைவிரல்களில் இருந்தே நதிகள் உற்பத்தி ஆவதை அறியலாம். அதே அன்னையின் கைவிரல்கள் இப்பகுதியில் விழுந்திருப்பதால், இத்தலம் கூடுதல் சிறப்பு பெறுகிறது. மூன்று நதிகளின் சங்கமத்துடன், ‘திரிவேணி’ என்ற நீர் வடிவ பெயரைப் பெற்று அன்னை இங்கு அருள்பாலிக்கிறார். கங்கை நதி நீர் வெண்மையாகவும், யமுனை நதி நீர் கருமையாகவும், சரஸ்வதி நதி அந்தர்வாகினியாகவும் (கண்ணுக்குத் தெரியாமல் கீழே) கலப்பதாக ஐதீகம்.

இதிகாசத் தொடர்பு

துருஷ்கர்களின் காலத்தில் இத்தலத்துக்கு ‘இலகாபாத்’ என்று பெயர் சூட்டப் பெற்றதாக அறியப்படுகிறது. இதிகாசங்களை ஆதாரமாக வைத்துக் கொண்டு ஆய்வு செய்ததில், சத்திய யுகத்தின் ஆரம்பம் என்று கூறப்படுகிறது. சங்கசீரீனிடம் இருந்து வேதங்களைப் பெற்ற பிரம்மதேவர், இந்த இடத்தில் 10 அச்வதேசங்களை உருவாக்கினார். அவர் யாகம் செய்த இடத்துக்கு ‘தசாச்வதே காட்’ என்ற பெயர் உண்டாயிற்று. இதற்கு அருகே மகாதேவருக்கு கோயில் உள்ளது.

ராமாயண, மகாபாரதத்தில் இந்த இடம் குறித்து வர்ணிக்கப்பட்டுள்ளது. கைகேயியின் வரங்கள் காரணமாக கானகம் வந்த ராமபிரான், பிரயாகையில் உள்ள பரத்வாஜ முனிவரின் ஆசிரமத்தில் தங்கியிருந்ததாகவும், ராமபிரான், லட்சுமணர், சீதாதேவி திரிவேணி சங்கமத்தில் நீராடியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

பாண்டவர்களும், குந்திதேவியுடன் இத்தலத்துக்கு வந்துள்ளனர். பாண்டவர்களை அழிப்பதற்காக, துரியோதனன் கட்டிய அரக்கு மாளிகை, இந்த இடத்துக்கு அருகில் தான் இருந்துள்ளது. சதாத்யாயீ, மத்ஸ்ய புராணங்களிலும் திரிவேணி சங்கமம் குறித்து வர்ணிக்கப்பட்டுள்ளது.

திரிவேணி தரிசனம்

பிரயாகையின் மகத்துவம் இந்த திரிவேணி சங்கமத்தில் அடங்கியுள்ளது. இந்த தரிசனம் ‘திரிவேணி தரிசனம்’ என்று அழைக்கப்படுகிறது. பிரயாகையில் காணவேண்டிய இடங்கள் பல உள்ளன. திரிவேணி மாதவன், சோமன், பரத்வாஜர், வாசுகி, அட்சயவடம் ஆகிய இடங்களைத் தவிர தீர்த்தங்களும் கோயில்களும் இங்கு காணப்படுகின்றன.

மாதவ மந்திரம், சதாத்யாயீ என்ற கிரந்தத்தில் பிரயாகையின் முக்கிய தேவதையாக ‘வேணி’ என்ற வார்த்தை குறிப்பிடப்பட்டுள்ளது. முனிவர்கள் பலர் வந்து இங்கு நீராடி முன்னோரை வணங்குவது வழக்கம்.

பிரயாகையில் முண்டம், காசியில் தண்டம், கயையில் பிண்டம் என்ற வழக்கு உண்டு. பாவத்தை களைவதால் நன்மை பல ஏற்படும் என்பதால், பிரயாகையில் முடி எடுத்து பாவங்களைக் களைய வேண்டும் என்று கூறப்படுகிறது. காசியில் விஸ்வநாதர் தரிசனம் முடித்து அங்குள்ள தண்டபாணியை தரிசிக்க வேண்டும். பின்பு கயையில் முன்னோருக்கு பிண்டம் வைத்து தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.

அட்சயவடம்

பிரயாகையில் முக்கியமானது அட்சயவடம் என்று அழைக்கப்படும் ஆலமரம் ஆகும். இதன் வேர்ப்பகுதி பிரயாகையிலும், நடுப்பகுதி காசியிலும், நுனி கயாவிலும் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதனால் இந்த இடங்களில் வரிசையாக பித்ரு காரியங்கள் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. இதற்கு தெற்கு பகுதியில் தேவர்கள், ரிஷிகள், பொதுமக்கள் அனைவராலும் வணங்கப் பெற்ற வைணவ பீடம் இருந்ததாகக் கூறப்படுகிறது. மனிதர்களுக்கு அனைத்து சக்திகளை அளிக்கக் கூடிய பீடமாக பிரயாகை விளங்குகிறது.

ஸ்ரீவேணி மாதவர் கோயில்

தாராகஞ்ச் பகுதியில் உள்ள ஸ்ரீவேணி மாதவர் கோயிலில் பல்வேறு மூர்த்தங்கள் காணப்படுகின்றன. பிரியாகை திரிவேணி, லலிதாம்பாள், தர்மராஜன், அன்னபூரணி, சங்கடமோகனன், மகாலட்சுமி, கௌரி கணேசர், ஆதி கணேசர், பால முகுந்தன் பிரம்மச்சாரி, ப்ரயாக ராஜேஸ்வர மகாதேவன் சூல கண்டேஸ்வரன், சத்யநாராயணர், யம தண்ட மகாதேவர், தண்டபாணி, பைரவர், தத்தாத்ரேயர், மார்க்கண்டேய மகரிஷி, குபேரன், அக்னி தேவன், பார்வதி தேவி, வேத வியாசர், வருண தேவதை, யமராஜ அனந்த மாதவர், அனுசுயா தேவி முதலான மூர்த்திகள் இங்கு அருள்பாலிக்கின்றனர்.

AMAR DEEP

வேணிதானம்

திரிவேணி சங்கமத்தில் பெண்கள் முதலில் தலையில் எண்ணெய் வைத்து நீராடுவது வழக்கம். பின்னர் அவரவர் கணவர் அவர்களுக்கு தலை பின்னிய பின்னர் இருவரும் திரிவேணி சங்கமத்தில் பூஜை செய்வார்கள். பின்னர் வேணிதானம் செய்வது வழக்கம். இதனால் சுமங்கலிப் பெண்களின் ஜென்மம் கடைத் தேறுகிறது என்பது நம்பிக்கை.

புனித நீராடல்

திரிவேணி சங்கமத்தில் நீராட வரும் பக்தர்கள், கரையில் இருந்து படகு மூலம், கங்கையும் யமுனையும் கூடும் இடத்துக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். நின்று நீராடும் அளவுக்கு நீர் இருக்கும் இடத்தில் அவர்கள் இறக்கிவிடப் படுகிறார்கள். புனித நீராடல் நிறைவடைந்ததும், மீண்டும் அவர்கள் கரைக்கு அழைத்து வரப்படுகிறார்கள். படகு சவாரி செய்யும் பக்தர்கள், இயற்கைக் காட்சிகளை ரசித்தபடி செல்வதால், அவர்கள் மனது எவ்வித தடங்கலும் இன்றி, இறைக்காட்சிக்கு தயாராகிறது.

இவ்வளவு பேர் வேணிதானம் செய்த பின்னர், நீரில் முடி சேர்ந்தாலும், அவை ஏதும் நீராடும்போது தெரிவதில்லை. நீர் எப்போதும் தெளிவாக இருக்கிறது. அதுபோல மனமானது அசையாமல் எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் தெளிவாக இருந்தால், அவர்கள் இறைக்காட்சியைக் காணும் தகுதியைப் பெறுகிறார்கள்.

கங்காஷ்டகம்

வற்றாத ஜீவநதியாக விளங்கும் கங்கையின் பெருமைகளை ஒவ்வொருவரும் உணர வேண்டும் என்ற நோக்கில் ஆதிசங்கரர் கங்காஷ்டகத்தை அருளியுள்ளார்.

தன்னில் நீராடுபவர் மட்டுமல்லாமல், தன்னை நினைத்து பூஜிப்பவர்களையும் அனைத்து பாவங்களில் இருந்து விடுவிக்கிறாள் கங்கா தேவி. எவர் ஒருவர் மரணத் தருவாயில் கங்கை நீரை ஒரு துளியேனும் அருந்தி உயிர்விடுகிறாரோ அவர், மரணமில்லாப் பெருவாழ்வை அடைகிறார்.

கார்த்திகை அமாவாசை தினத்தில், கங்காஷ்டகத்தை பாராயணம் செய்வதால், கங்கா தேவியின் அனுக்கிரகம் கிடைத்து, வேண்டுவன அனைத்தையும் பெறலாம் என்பது நம்பிக்கை.

சிவபெருமானின் ஜடாமுடியில் சலசலத்துக் கொண்டும், பேரண்டத்தை உடைத்துக் கொண்டும், சுவர்க்கத்தில் இருந்து கீழே வந்து, மானிடர்களின் பாவத்தை விரட்டி அடிக்கும் கங்கா மாதாவே. அனைவரையும் புனிதமாக்க வேண்டும். உங்கள் அணுவளவு நீரை யார் பருகுகிறாரோ, அவர் சுவர்க்க லோக வாசம் பெறுவர்.

யானைகளின் துதிக்கைகளும், முதலைகளும் கங்கா மாதாவின் வேகத்தை தடை செய்கின்றன. மாதர்கள் நீராடுவதால், அவர்களின் குங்குமம் கரைந்து, கங்கை நதி மஞ்சள் நிறத்தை அடைகிறது. அதிகாலை, மாலை வேளைகளில் முனிவர்கள் பூஜை செய்வதால், தர்ப்பை, பூக்கள் நிறைந்து காணப்படுகிறது.

பிரம்ம தேவரின் நித்ய கர்மானுஷ்டங்களுக்கான பாத்திரத்தில் இருக்கும் நீராகவும், ஆதிசேஷனின் படுக்கையில் அறிதுயில் கொள்ளும் மகாவிஷ்ணுவின் பாதத்தில் வசிப்பவராகவும், சிவபெருமானின் ஜடாமுடி பூஷணமாகத் திகழும் ஜக்னு மகரிஷியின் புதல்வியாகவும் கங்கா மாதா விளங்குகிறார்.

இமயமலையில் இருந்து தனது பயணத்தைத் தொடங்கும் கங்கா மாதா, மக்களின் சம்சார பயத்தை நீக்கி சமுத்திரத்தில் இணைகிறார். ஆதிசேஷன் போலவும், சிவபெருமானின் சிரசில் வில்வதளம் போலவும், கங்கா மாதா விளங்குகிறார். கங்கா மாதாவின் தீர்த்தத்தை ஒரு துளி பருகினால் நன்மைகள் பல கிட்டும். ஓடும் பிரவாகத்தில் நீராடினால் தேவேந்திரப் பதவி கூட எளிதாகக் கிட்டும்.

பகவதி தேவியான கங்கா மாதாவை வணங்கினால், எளிதில் ஐஸ்வர்யம் கிடைக்கும். மேலும், ஹரியும் ஹரனும் ஒன்றே என்ற எண்ணமும் பிறக்கும். தூய்மையான மனதுடனும் பக்தியுடனும் கங்காஷ்டகத்தை பாராயணம் செய்தால், அனைத்து பாவங்களும் நீங்கப் பெற்று, திருமால் மற்றும் சிவபெருமானின் அருள் கிடைப்பது நிச்சயம். மறுபிறப்பில்லா முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம்.

ஆதிசங்கர விமான மண்டபம்

திரிவேணி சங்கம கரையில் தென்னிந்திய முறையில், காஞ்சி காமகோடி பீடத்தால் கட்டப்பட்ட கோயில் இதுவாகும் . நான்கு மாடியுடன், 131 அடி உயரம் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. 1970-ம் ஆண்டு தொடங்கப்பட்ட கட்டிடப் பணிகள், 16 ஆண்டுகள் கழித்து நிறைவடைந்தன. நுழைவாயில் ஆதிசங்கரர், மந்தன் மிஸ்ரா விக்கிரகங்கள் காணப்படுகின்றன. சுவர்களில் ஆதிசங்கரரின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் ஓவியங்களைக் காணலாம். அமர்ந்த கோலத்தில் காமாட்சி தேவி விக்கிரகம், வெளிப்புறச் சுவரில் மூகாம்பிகை, துர்கை, விந்தியவாசினி சிற்பங்கள் காணப்படுகின்றன. இரண்டாவது தளத்தில் பாலாஜி வடிவத்தில் மகாவிஷ்ணு, எதிரே வேணி மாதவர் அருள்பாலிக்கின்றனர். மூன்றாவது தளத்தில் ருத்ராட்ச மண்டபம் உள்ளது. இங்கு யோக சஹஸ்ரலிங்கத்துடன் 1,008 சிறிய சிவலிங்கங்களைக் காணலாம்.

மண்டபத்தைச் சுற்றி சிவலீலையை உணர்த்தும் ஓவியங்கள், சிவபெருமானின் அவதாரங்களைக் காட்டும் சிற்பங்கள் காணப்படுகின்றன. கோயிலைச் சுற்றிச் செல்லும்போது ராமாயணக் காட்சிகளைச் சித்தரிக்கும் ஓவியங்கள், நரசிம்மர், வாமன சிற்பங்களைக் காணலாம். இங்கு தினமும் தென்னிந்திய பண்டிதர்கள் சிறப்பு பூஜை, ஆராதனைகளை செய்து வருகின்றனர்.

திருவிழாக்கள்

பிரயாகையில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பமேளா நடைபெறும். 6 ஆண்டுகளுக்கு ஒரு முறை அர்த்த கும்பமேளா நடைபெறும். இதில் லட்சக்கணக்கான பக்தர்களும், சாதுக்களும் வந்திருந்து புனித நீராடி, தங்கள் முன்னோரை வணங்குவது உண்டு. பித்ரு காரியங்கள் செய்ய பக்தர்கள் வருவதால், பிரயாகை எப்போதும் திருவிழாக் கோலம் பூண்டிருக்கும்.

சித்ரா பௌர்ணமி தினத்தில் (புத்தர் ஞானம் பெற்ற தினம்) ஏராளமான பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் நீராடுவது வழக்கம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in