அருள்தரும் சக்தி பீடங்கள் - 49

முக்திநாத் ஸ்ரீதேவி
அருள்தரும் சக்தி பீடங்கள் - 49

அம்மனின் சக்தி பீட வரிசையில் நேபாள நாட்டில் முஸ்தாங் மாவட்டத்தில் இமயமலை, முக்திநாத் பள்ளத்தாக்கில் உள்ள ஸ்ரீதேவி நாச்சியார் சமேத முக்திநாதர் கோயில் பிரதான கோயிலாகப் போற்றப்படுகிறது. 3,710 மீட்டர் உயரத்தில் அமைந்த இந்து, பௌத்தர்களின் புனிதத் தலமாகக் கருதப்படும் இத்தலம், 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகவும் சிறப்பிக்கப்படுகிறது.

மார்ச் முதல் ஜூன் மாதம் வரையான காலகட்டமே முக்திநாத் தரிசனம் செய்ய ஏற்ற காலமாக கூறப்படுகிறது. திருமங்கையாழ்வார், பெரியாழ்வார் ஆகியோர் இத்தல பெருமாளை மங்களாசாசனம் செய்துள்ளனர். பெரியாழ்வார் சாளக்கிராமமுடைய நம்பியை கண்ணனாகவும், திருமங்கையாழ்வார் ராமபிரானைக் காண்கின்றனர். ராமானுஜரும் இத்தலத்தில் எழுந்தருளி வழிபாடு செய்துள்ளார்.

முக்திநாத்தில் பாயும் கண்டகி ஆற்றில் கிடைக்கும் சாளக்கிராமத்தை வைணவர்கள் திருமாலின் அம்சமாகக் கருதி இல்லத்தின் பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்கின்றனர். சாக்தர்கள் முக்திநாத்தை 51 சக்தி பீடங்களில் ஒன்றாகக் கருதுகின்றனர். திபெத்திய பௌத்தர்கள், இத்தலத்தை நூறு புனித நீர்நிலைக்களுக்கு சமமாகக் கருதி போற்றுகின்றனர். தாந்திரீக திபெத்திய பௌத்தர்கள் முக்திநாத்தை டாகினி என்ற பெண் தெய்வத்தின் இருப்பிடமாகக் கொண்டாடுகின்றனர்.

தல வரலாறு

முக்கிய நதிகள் அனைத்துக்கும் திருமாலுடனான பந்தம் உள்ளது. இதை அறிந்த கண்டகி (நதி), திருமால் தன்னிலும் அவதாரம் எடுக்க வேண்டும் என்று விருப்பம் கொண்டாள். தனது எண்ணத்தை நிறைவேற்றும் பொருட்டு அவரை நோக்கி தவம் இயற்றினாள். கண்டகியின் தவத்தில் மகிழ்ந்த திருமால், இந்த நதியில் தினம் தினம் சாளக்கிராம ரூபத்தில் அவதரித்து, கண்டகி நதிக்கு சிறப்பு சேர்ப்பதாக உறுதியளித்தார்.

பிரம்மதேவரின் வியர்வையில் இருந்து கண்டகி நதி தோன்றியதாகக் கூறப்படுகிறது. கண்டகி தவம் புரிந்தபோது, அவளுக்கு தேவர்கள் வரமளிக்க முன்வந்தனர். அப்போது அவர்களை தன் குழந்தைகளாக அவதரிக்கும்படி கண்டகி வேண்டினாள். ஆனால், இதற்கு தேவர்கள் உடன்படவில்லை. உடனே கோபம் கொண்ட கண்டகி, அவர்களை புழுவாக மாறும்படி சபித்துவிடுகிறாள். உடனே தேவர்கள், கண்டகியை ஒரு ஜடமாக மாறும்படி சபித்தனர்.

கண்டகிக்கும் தேவர்களுக்கும் இடையேயான பிரச்சினைக்கு ஒரு முடிவு கட்டவேண்டும் என்று எண்ணிய பிரம்மதேவர், ருத்ரன், இந்திரன் ஆகியோர் திருமாலை அணுகி இவர்களது சாபத்தை நீக்க வேண்டும் என்று வேண்டினர். மூவருக்கும் பதிலளித்த திருமால், “இந்த சாபங்களை நீக்க முடியாது. நான் சாளக்கிராம தலத்தில் (முக்திநாத்) சக்ர தீர்த்தத்தில் வாசம் செய்கிறேன். தேவர்கள் வஜ்ரகீடம் என்ற புழுக்களாக மாறி அங்குள்ள கூழாங்கற்களை ஆதாரமாகக் கொண்டு வாழ்ந்து வர வேண்டும். கண்டகி நதி வடிவமாக அவற்றின் மீது பாய்ந்து வருவாள். இதன் மூலம் கண்டகியின் விருப்பம் நிறைவேறும். தேவர்கள், தேவ அம்சமும், திருமால் அம்சமும் பொருந்திய சாளக்கிராமங்களாக மாறுவர். எம்பெருமான் திருவுள்ளப்படி சாளக்கிராமங்களை வழிபட்டவர்களும் எம்பெருமான் நித்யவாசம் செய்யும் வைகுண்டப் பதவியை அடைவர்” என்று அருளினார்.

கஜேந்திர மோட்சம்

சாளக்கிராம தலத்தில் கஜேந்திர மோட்சம் நடைபெற்றதாக போற்றப்படுகிறது. பிரம்மதேவர், ருத்ரன், இந்திரன் முதலானோர் கண்டகி நதிக்கும் தேவர்களுக்கும் இடையேயான பிரச்சினை குறித்து திருமாலிடம் பேசிக் கொண்டிருந்தபோது, “நான் சாளக்கிராம தலத்தில் முதலைக்கும், யானைக்கும் மோட்சம் அருளிய பின்னர், அவற்றின் உடல்களில் தேவர்கள் வஜ்ரகீடம் என்ற புழுக்களாகவும், பூச்சிகளாகவும் கற்களுக்கு இடையே வாழ்வார்கள். பின்னர் கண்டகி நதிநீர் பட்டு அவர்கள் சாளக்கிராமங்களாக மாறுவார்கள்’ என்று அருளினார். கண்டகி நதியில் நீராடி முக்திநாதரை வழிபட்டால், பூலோகத்தில் சுகமாக வாழ்க்கை நடத்தி பின்னர் வைகுண்டத்தில் தன்னுடன் இருக்கலாம் என்று திருமால் அருளியுள்ளதாக ஐதீகம்.

சாளக்கிராம வடிவம்

முன்பொரு சமயம் ஜலந்திரன் என்ற அரக்கன் வாழ்ந்து வந்தான். அவனது மனைவி பிருந்தை, கணவனையே ஸ்ரீகிருஷ்ணராக நினைத்து தினமும் பணிவிடைகள் செய்து வந்தாள். ஒரு சமயம், ஜலந்திரன், சாகா வரம் வேண்டி, பிரம்மதேவரை நோக்கி தவம் மேற்கொண்டான். தவத்தின் உக்கிரம் தாங்க முடியாமல், அவன் முன்னர் தோன்றிய பிரம்மதேவர், “உனக்கு மரணம் இல்லை என்று என்னால் கூற முடியாது. ஆனால், எப்போது உன் மனைவியின் பதிவிரதத் தன்மை மாசுபடுகிறதோ, அந்த நேரத்தில் உனக்கு மரணம் சம்பவிக்கும்” என்று கூறுகிறார். என்றுமே தனது மனைவியின் பதிவிரதத் தன்மை மாசுபடாது என்று எண்ணிய ஜலந்திரன் ஆணவம் கொண்டு ஈரேழு உலகங்களுக்கும் இன்னல்கள் அளித்து வந்தான்.

தேவலோகம் சென்று அங்கு சிவபெருமானையும் போருக்கு அழைத்தான். இதுகுறித்து பிரம்மதேவர் திருமாலிடம் முறையிட்டார். இந்நிலையில் சிவபெருமானுக்கும் ஜலந்திரனுக்கும் போர் தொடங்கியது. ஜலந்திரனைக் காப்பது அவனது மனைவியின் பதிவிரதத் தன்மைதான் என்பதை உணர்ந்த திருமால், ஜலந்திரன் ரூபத்தில் அவனது அரண்மனைக்குச் செல்கிறார்.

கணவர்தான் வந்துவிட்டார் என்று எண்ணிய பிருந்தை, அவருக்கு பல உபசரிப்புகளைச் செய்கிறாள். கணவர் என்று எண்ணி மற்றொருவருக்கு சேவைகள் புரிந்ததால் பிருந்தையின் பதிவிரதத் தன்மை மாசு அடைகிறது. அதேசமயம், ஜலந்திரனின் தலையை சிவபெருமான் சாய்த்தார். ஜலந்திரனின் தலை, பிருந்தையை அடைந்ததும், தன் சுய உருவத்தை திருமால் காட்டி அருளினார்.

கோபமும் துயரமும் அடைந்த பிருந்தை, “கணவரைத் தவிர பெருமாளைத் தான் வணங்கி வருகிறேன். அப்படிப்பட்ட என்னை பதிவிரதத் தன்மை இழக்கச் செய்ததால், நீ கல்லாகி போவாய்” என்று திருமாலிடம் கூறி, தன் உடலைத் தியாகம் செய்ய முற்படுகிறாள்.

கண்டகி நதி
கண்டகி நதி

உடனே திருமால், “உனது எண்ணம் ஈடேறும், நேபாளம் கண்டகி நதியில் நான் சாளக்கிராமமாக வெளிப்படுவேன். பாற்கடலில் அமிர்தக் கலசம் தோன்றும்போது என் கண்களில் இருந்து ஆனந்தக் கண்ணீர் துளிர்க்கும். அது நிலத்தில் விழுந்து துளசிச் செடியாக மாறும். நீதான் அந்தத் துளசி. கார்த்திகை சுத்த துவாதசி தினத்தில் நான் உன்னை மணப்பேன். எனது பூஜைக்கு உன்னைத் தவிர வேறு எதுவும் உயர்ந்தது இல்லை. அனைவராலும் பூஜிக்கப்படத் தக்கவளாக நீ விளங்குவாய். உன் பதிவிரதத்தன்மை அனைத்துப் பெண்களுக்கும் கிடைக்கும்” என்று அருளினார். அதனாலேயே அனைத்து பெருமாள் பூஜைகளிலும், துளசி முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.

மேலும், திருமால் துளசியை நோக்கி, “நீ என்னை மணக்க விரும்பியதால், நீ கண்டகி நதியாக ஓட, நான் உன்னில் சாளக்கிராம கற்களாக இருப்பேன். அந்தக் கற்களில் சங்கு, சக்கரச் சின்னங்கள் உண்டாகும். சாளக்கிராமமாக நானே இருப்பதால், பக்தர்கள் அந்தக் கற்களை வணங்குவர். பல இடங்களுக்கு எடுத்துச் சென்று அவர்களது இல்லங்களில் வைத்து என்னை வழிபடுவர். நான் அவர்களது இல்லத்தையே கோயிலாகக் கொண்டு அங்கே எழுந்தருள்வேன். சாளக்கிராமத்தில் நான் வசிக்கிறேன். சாளக்கிராமம் இருக்கும் இல்லத்தில் தோஷமே கிடையாது. நான் அவர்களுக்கு மகிழ்ச்சி, சௌபாக்கியம், முக்தி என்று அனைத்தையும் அருள்வேன்.

கங்கையைப் போன்று நீயும் போற்றப்படுவாய். உன்னில் வந்து நீராடும் பக்தர்களுக்கு நான் எப்போதும் அருள்பாலிப்பேன். இத்தலத்துக்கு வர முடியாதவர்கள், துளசியால் என்னை அர்ச்சித்தால் போதும். துளசி தீர்த்தத்தைப் பருகினால் அனைத்து துன்பங்களில் இருந்து அனைவரும் விடுபடுவர்” என்றும் அருள்கிறார்.

சாளக்கிராம கற்கள் பலவிதமான வடிவங்களிலும் நிறங்களிலும் கிடைக்கும். இங்கு கிடைக்கும் வெண்மை நிற சாளக்கிராமம் வாசுதேவன் வாசம் செய்யும் இடமாகவும், கருமை நிற சாளக்கிராமம் விஷ்ணு வாசம் செய்யும் இடமாகவும், பச்சை நிறம் ஸ்ரீமன் நாராயணன் வாசம் செய்யும் இடமாகவும், பசும்பொன் நிறம் ஸ்ரீநரசிம்மர் வாசம் செய்யும் இடமாகவும், மஞ்சள் நிறம் வாமனர் வாசம் செய்யும் இடமாகவும், கருநீல சாளக்கிராமம் ஸ்ரீகிருஷ்ணர் வாசம் செய்யும் இடமாகவும் கருதப்படுகிறது.

முக்திநாதர்

சாளக்கிராம கோயிலின் முன்னர் இரண்டு குளங்கள் உள்ளன. கருவறையில் சாளக்கிராம சுயம்பு திருமேனியாக முக்தி நாராயணப் பெருமாள் அருள்பாலிக்கிறார். சங்கு சக்கரம், கதை போன்ற ஆயுதங்களுடன் ஸ்ரீதேவி, பூதேவி, கருடாழ்வார் மற்றும் ராமானுஜருடன் பெருமாள் சேவை சாதிக்கிறார். கருவறைக்குள் சென்று பக்தர்களே சுவாமிக்கு வஸ்திரம், மலர், மாலைகள அணிவித்து பூஜை செய்யலாம்.

கோயிலுக்கு வெளியே சந்நிதியைச் சுற்றி 108 திவ்ய தேசங்களின் தீர்த்தத்துக்குச் சமமான 108 கோமுக தீர்த்தங்கள் (108 பசுமாட்டின் முகங்கள்) கொட்டிக் கொண்டே இருக்கின்றன. இங்கு திருப்பாற்கடல், பரமபதம் உள்ளிட்ட அனைத்து திவ்ய தேச தீர்த்தங்களும் உள்ளன. ஸ்வயம் வ்யக்த தலங்களில் (திருவரங்கம், நாங்குநேரி, ஸ்ரீமுஷ்ணம், திருவேங்கடம், புஷ்கரம், நைமிசாரண்யம், பத்ரிநாத், சாளக்கிராமம், முக்திநாத்) இத்தலமும் ஒன்று. இதில் புஷ்கரம் மற்றும் ஸ்ரீமுஷ்ணம் திவ்ய தேச வரிசையில் இல்லை.

நீல நிறம் செல்வம், சுகத்தையும், பச்சை நிறம் பலம், தைரியத்தையும், வெண்மை நிறம் ஞானம், பக்தி, மோட்சத்தையும், கருப்பு நிறம் புகழ், பெருமையையும் தருவதாக கூறப்படுகிறது. ஸ்ரீ தேவி பாகவதமும், நரசிம்ம புராணமும் சாளக்கிராம வழிபாட்டை புகழ்கின்றன.

பெரியாழ்வார் திருமொழி

இத்தலத்தை பெரியாழ்வார் 2 பாசுரங்களைக் கொண்டும், திருமங்கையாழ்வார் 10 பாசுரங்களைக் கொண்டும் மங்களாசாசனம் செய்துள்ளனர்.

பாலைக் கறந்து அடுப்பு ஏற வைத்துப் பல்வளையாள் என்மகள் இருப்ப

மேலை அகத்தே நெருப்பு வேண்டிச் சென்று இறைப் பொழுது அங்கே பேசி நின்றேன்

சாளக்கிராமம் உடைய நம்பி சாய்த்துப் பருகிட்டு போந்து நின்றான்

ஆலைக் கரும்பின் மொழி அனைய அசோதை நங்காய்! உன் மகனைக் கூவாய்

(பெரியாழ்வார் திருமொழி 2-9-5)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in