அருள்தரும் சக்தி பீடங்கள் - 47

பாபநாசம் விமலை
பாபநாசம் விமலை
பாபநாசம் விமலை

அம்மனின் சக்தி பீட வரிசையில் திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் உலகம்மை சமேத பாபநாசநாதர் கோயில் விமலை பீடமாகப் போற்றப்படுகிறது.

தல வரலாறு

கைலாயத்தில் சிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் திருமணம் நடைபெற்கிறது. அப்போது தேவர்கள், முனிவர்கள் அனைவரும் வடக்குப் பக்கம் குவிந்ததால், அப்பகுதி தாழ்ந்து, தென்பகுதி உயர்ந்தது. இதை உணர்ந்த சிவபெருமான், பூமியை சமன்படுத்தும் நோக்கில், அகத்திய முனிவரை பொதிகை மலைக்கு அனுப்பினார். மேலும், அவருக்கு சித்திரை மாதப் பிறப்பு தினத்தில் தனது திருமணக் கோலத்தை சிவபெருமான் காட்டியருளினார்.

இந்தக் கோயிலில் கருவறைக்குப் பின்புறம் பிரகாரத்தில் சிவபெருமான் கல்யாணசுந்தரராக, உலகநாயகி அம்பாளுடன் ரிஷபத்தின் மீது அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார். அருகிலேயே அகத்திய முனிவரும் அவரது மனைவி லோபாமுத்திரையும் உள்ளனர்.

Picasa

பாபநாச நாதர்

அசுர குரு சுக்கிராச்சாரியாரின் மகன் துவஷ்டாவை, இந்திரன் தனது குருவாக ஏற்றான். அசுரர்களின் நன்மை கருதி, அவர்களுக்காக, துவஷ்டா யாகம் ஒன்றை நடத்த எண்ணினார். அதற்கு உண்டான ஏற்பாடுகளைச் செய்து, யாகத்தை நடத்தி முடித்தார். தகவல் அறிந்த இந்திரன், குருநாதர் என்றும் பாராமல் அவரைக் கொன்றுவிட்டான்.

இதன் காரணமாக, இந்திரனை பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது. தோஷத்தில் இருந்து விமோசனம் பெற, இந்திரன் பூலோகத்தில் பல தலங்களுக்கும் சென்று சிவதரிசனம் செய்தான். பாபநாசம் தலத்தில் உள்ள ஈசனை வழிபட்டால், தோஷம் நீங்கும் எனறு குரு பகவான் ஆலோசனை வழங்கினார். அதன்படி இந்திரன் இத்தலத்தின் எல்லைப் பகுதிக்கு வரும்போதே தோஷம் நீங்கப்பெற்றான். இந்திரனின் தோஷத்தை நீக்கிய சிவபெருமான் என்பதால், இத்தல ஈசன் ‘பாபநாசநாதர்’ என்று அழைக்கப்படுகிறார். மேலும், இத்தலத்துக்கு ‘இந்திரகீழ ஷேத்திரம்’ என்ற பெயரும் கிட்டியது.

இத்தல லிங்கம் ‘முக்கிளா லிங்கம்’ என்றும் அழைக்கப்படுகிறது. கருவறையில் ருத்திராட்ச வடிவிலும், பிரகாரத்தில் முக்கிளா மரத்தின் கீழும் பாபநாசநாதர் அருள்பாலிக்கிறார். ரிக், யஜுர், சாம வேதங்கள் கிளா மரமாக மாறி ஈசனுக்கு நிழல் தந்தன. அதர்வண வேதம் ஆகாயமாக இருந்து ஈசனை வணங்கி வழிபட்டது. இதனால் ‘முக்கிளா லிங்கம்‘ என்ற பெயரால் இத்தல லிங்கம் அழைக்கப்படுகிறது.

சூரிய கைலாசம்

அகத்திய முனிவரின் சீடர் உரோமச முனிவர், தாமிரபரணி நதிக்கரையில் லிங்க பிரதிஷ்டை செய்ய விருப்பம் கொண்டார். அதற்கான இடங்களைத் தேர்ந்தெடுத்துத் தருமாறு தனது குருநாதரைக் கேட்டார். சிவபெருமானுக்கு பூஜைசெய்த தாமரை மலர்களை தாமிரபரணியில் வீசி, அவை கரை ஒதுங்கும் இடங்களில் லிங்க பிரதிஷ்டை செய்யும்படி அகத்திய முனிவர் பணித்தார்.

அதன்படி உரோமச முனிவர் தாமரை மலர்களை தாமிரபரணியில் வீசினார். 9 பூக்கள் 9 இடங்களில் கரை ஒதுங்கின. அந்த இடங்களில் லிங்க பிரதிஷ்டை செய்தார் முனிவர். அவையே ‘நவ கைலாயங்கள்’ என்று அழைக்கப்படுகின்றன. ஒவ்வொரு தலத்துக்கும் ஒவ்வொரு நவகிரகம் என்று இடம் ஒதுக்கப்பட்டது. அதன்படி பாபநாசம் தலம் சூரியனுக்கு உரியதானது. அதனால் இத்தலம் ‘சூரிய தலம்’ என்றும் ‘சூரிய கைலாயம்’ என்றும் அழைக்கப்படுகிறது.

சேரன்மாதேவி கைலாசநாதர் கோயில் - சந்திரன், கோடகநல்லூர் கைலாசநாதர் கோயில் - செவ்வாய், குன்னத்தூர் கோத பரமேசுவரர் கோயில் - ராகு, முறப்பாடு கைலாசநாதர் கோயில் - குரு, திருவைகுண்டம் கைலாசநாதர் கோயில் - சனி, தென் திருப்பேரை கைலாசநாதர் கோயில் - புதன், ராஜபதி கைலாசநாதர் கோயில் - கேது, சேர்ந்த பூமங்கலம் கைலாசநாதர் கோயில் - சுக்கிரன் ஆகியன பிற கைலாயங்கள் ஆகும்.

இவற்றில் பாபநாசம் சேரன்மாதேவி, கோடகநல்லூர் ஆகியன மேல் கைலாயம் என்றும், குன்னத்தூர், முறப்பாடு, திருவைகுண்டம் ஆகியன நடு கைலாயம் என்றும், தென் திருப்பேரை, ராஜபதி, சேர்ந்த மங்கலம் ஆகியன கீழ் கைலாயம் என்றும் அழைக்கப்படுகின்றன.

உலகநாயகி அம்பாள் பெருமை

உலகநாயகி, உலகம்மை, விமலை என்று அழைக்கப்படும் இத்தல அம்பாள், மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார் . அவரது சந்நிதி முன்னர் உள்ள உரலில் பெண்கள் விரளி மஞ்சளை இட்டு அதை இடிப்பது வழக்கம். இந்த மஞ்சளே அம்பாளுக்கு அபிஷேகம் செய்யும்போது பயன்படுத்தப்படும். அபிஷேக மஞ்சள் நீரை உட்கொண்டால், திருமண வரம், புத்திர பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம்.

பாபநாசத்துக்கு அருகே உள்ள விக்கிரமசிங்கபுரத்தில், ஸ்ரீமத் சிவஞான சுவாமிகளின் சிறிய தந்தையாரான நமச்சிவாயக் கவிராயர் வாழ்ந்து வந்தார். இவர் உலகநாயகி அம்பாள் மீது தீவிர பக்தி கொண்டிருந்தார். தினம்தோறும் அர்த்தஜாமத்தில் பாபநாசம் கோயிலுக்குச் சென்று அம்பிகையை தரிசனம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இல்லம் திரும்பும் வழியில் அம்பாள் மீதான பக்திப் பாடல்களைப் பாடி வருவார். ஒருநாள் இவர் அம்பிகையை தரிசித்துவிட்டு திரும்பும்போது, அம்பிகை இவரைப் பின் தொடர்ந்தார். கவிராயர் தரித்திருந்த தாம்பூலத்தின் எச்சில், இவர் பாடி வரும்போது தெறித்து அம்பிகையின் மீது பட்டது.

அதே கோலத்துடன் அம்பிகை கோயிலுக்கு எழுந்தருளினார். மறுநாள் காலையில் அர்ச்சகர், பூஜைக்கு வரும்போது, அம்பிகையின் ஆடையில் படிந்திருந்த எச்சில் திவலைகளைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து மன்னரிடம் தெரிவித்தார். மன்னரும் இதுகுறித்த விசாரணைக்கு உத்தரவிட்டு, இந்த பாதகச் செயலைச் செய்தவரை தண்டிக்கவும் அறிவுறுத்தினார்.

அன்றிரவு மன்னர் கனவில் தோன்றிய அம்பாள், நடந்ததை விவரித்தார். மறுநாள் காலை கவிராயரை வரவழைத்து, அவருடைய பக்தியை அளவிட எண்ணினார் மன்னர். அதன்படி கவிராயரை அரண்மனைக்கு வந்து கவிபாட அழைத்தார் மன்னர். அதே நேரத்தில் அம்பாளின் கரத்தில் பூச்செண்டை வைத்து, பொன் கம்பிகளால் கட்டினார்.

கவிராயர், அரண்மனைக்கு வந்து கலித்துறையில் அந்தாதி ஒன்றைப் பாடினார். அம்பிகையின் கரத்தில் இருந்த பொன்கம்பிகள் ஒவ்வொன்றாக அறுந்து, பூச்செண்டு கவிராயரின் கைகளுக்குச் சென்று, கவிராயரின் பெருமையை உலகுக்கு உணர்த்தியது.

அகத்திய முனிவர்

சித்த மருத்துவத்தின் தந்தையாகப் போற்றப்படும் அகத்தியர், பொதிகை மலையில் இருந்து பல மூலிகைகளைக் கண்டறிந்துள்ளார். சப்தரிஷிகளுள் ஒருவராகப் போற்றப்படும் அகத்திய முனிவர், ‘அகத்தியம்’ என்ற தமிழ் இலக்கண நூலை எழுதியுள்ளார். அவர் எழுதிய ‘ஆதித்ய ஹிருதயம்’ என்ற நூலைப் படித்த பிறகே ராவணனை போரில் வெல்லும் வித்தையை ராமபிரான் அறிந்து கொண்டார் என்று கூறப்படுகிறது. பாபநாசத்தில் இருந்து 20 கிமீ தொலைவில் உள்ள அம்பாசமுத்திரத்தில் அகத்திய முனிவருக்கு கோயில் அமைக்கப்பட்டுள்ளது.

பாபநாசம் கோயிலைத் தாண்டி மேலே செல்லும் மேற்கு தொடர்ச்சி மலையில் சென்றால் அகத்தியர் நீர்வீழ்ச்சியைக் காணலாம். தற்போது சுற்றுலாத் தலமாக இது மாறியுள்ளது. அதற்கு மேலே காரையார் அணை, பாண தீர்த்த நீர்வீழ்ச்சி உள்ளன. அகத்தியர் மலையில் ஒரு பகுதியாக முண்டன் துறை புலிகள் சரணாலயம் உள்ளது.

கோயில் அமைப்பும் சிறப்பும்

பாபநாசநாதர் கோயிலின் ராஜ கோபுரம் ஏழு நிலைகள் கொண்டதாக அமைந்துள்ளது. கோயிலில் உள்ள அனைத்து கருவறைகளையும் உள்ளடக்கி கருங்கல்லால் ஆன சுற்றுச் சுவர் அமைக்கப்பட்டுள்ளது. ஈசன் கருவறையின் வெளிச் சுற்றில் விநாயகர், சுப்பிரமணியர், தட்சிணாமூர்த்தி, துர்கை, நவகிரக விக்கிரகங்கள் உள்ளன.

கொடிமரத்தை அடுத்துள்ள சிறு கோயிலில் நடராஜப் பெருமான் அருள்பாலிக்கிறார். இங்கு ஆனந்த தாண்டவ கோலத்தில் காணப்படும் நடராஜர் ‘புனுகு சபாபதி’ என்று அழைக்கப்படுகிறார். வியாக்ரபாதர், பதஞ்சலி ஆகியோருக்கு ஒரு தைப்பூச தினத்தில் நடராஜப் பெருமான், நந்திதேவரின் கொம்புகளுக்கு இடையே நின்று நடன தரிசனம் அருளியுள்ளார். இதன் காரணமாக, தைப்பூச தினத்தில் இங்கு நந்திதேவருக்கு சந்தனக் காப்பு செய்து சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெறுகின்றன.

பொதிகை மலையில் உருவாகி, மலைகளில் விழுந்து வரும் தாமிரபரணி, இக்கோயிலுக்கு அருகே சமநிலை அடைந்து பாய்கிறது. தினமும் உச்சிகால பூஜையின் போது நைவேத்தியம் செய்யப்பட்ட உணவு, தாமிரபரணி நதியில் உள்ள மீன்களுக்கு அளிக்கப்படுகிறது.

லலிதோபாக்யானம்

பிரம்மாண்ட புராணத்தின் கடைசி 40 அத்தியாயங்களை கொண்டது, லலிதோபாக்யானம் ஆகும். இது, திரிபுரசுந்தரியான லலிதா பரமேச்வரி தேவியின் சரிதையை ஹயக்ரீவருக்கும் அகத்திய முனிவருக்கும் நடைபெறும் உரையாடலாகத் தெரிவிக்கிறது. அம்பிகையின் அவதார மகிமை, பண்டாசுரனுடன் நடந்த போர், பண்டாசுர வதம், ஸ்ரீநகர வர்ணனை, அம்பிகையின் மந்திர ஜெப தப முறைகள், ஸ்ரீசக்ர வழிபாட்டு முறைகள், தீட்சை விவரங்கள் இதில் கூறப்பட்டுள்ளன.

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் பாராயணம் செய்பவருக்கும், ஸ்ரீதேவி உபாசகருக்கும் இது முதன்மையான நூலாக கருதப்படுகிறது. அம்பிகையின் பாதங்கள் சிந்தாமணி என்னும் ரத்தினம் போல் பிரகாசத்துடன் விளங்குகிறது. சிந்தாமணி நினைத்ததை நினைத்த வண்ணம் அளிக்க வல்லது. தேவர்கள் மற்றும் அசுரர்கள் பாற்கடலைக் கடைந்தபோது சிறிய ரத்தினமே வெளிப்பட்டது. ஆனால், தேவியின் இருப்பிடமான ஸ்ரீநகரம் முழுவதும் சிந்தாமணிக் கற்களால் ஆக்கப்பட்டது என்று லலிதோபாக்யானம் தெரிவிக்கிறது. அகங்காரத்தை முற்றிலும் அழித்து, சம்சார துக்கம் என்ற தாபத்தை நீக்குபவராக அம்பிகை விளங்குகிறார்.

ஒளி மிகுந்த திருவடிகளைக் கொண்டதால் சூரியனாகவும், அமிர்தமயமாக உள்ளதால் சந்திரனாகவும், சிவந்த நிறம் கொண்டதால் செவ்வாயாகவும், தம்மை வந்து வணங்குவோருக்கு சௌம்யம் பொருந்திய புதனாகவும், புத்தியை வாரி வழங்குவதால் குருவாகவும், ஐஸ்வர்யங்களை அளிப்பதால் சுக்கிரனாகவும், மந்தகதி நடையால் சனிபகவானாகவும், பூஜிப்பவர்களுக்கு ஞானத்தை அளிப்பதால் ராகு, கேதுவாகவும் அம்பிகை விளங்குகிறார்.

திருவிழாக்கள்

சித்திரை பிரம்மோற்சவம், சித்திரை வருடப் பிறப்பு (அகத்தியருக்கு திருமணக் காட்சி அருளல்), தைப்பூச தினங்களில் இங்கே சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். குழந்தைகளுக்கு கிரக ரீதியாகவோ, ஜாதக ரீதியாகவோ தோஷம் இருந்தால், இத்தலத்தில் தத்து கொடுத்து வாங்கினால் நன்மைகள் நடக்கும் என்பது ஆன்றோர் வாக்கு.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in