அருள்தரும் சக்தி பீடங்கள் 38

திருவையாறு தர்மசம்வர்த்தனி

அருள்தரும் சக்தி பீடங்கள் 38

அம்மனின் சக்தி பீட வரிசையில் தஞ்சை மாவட்டம், திருவையாறு தர்மசம்வர்த்தனி அம்பாள் உடனுறை ஐயாறப்பர் கோயில் தர்ம சக்தி பீடமாகப் போற்றப்படுகிறது. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் சோழநாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 51-வது சிவத்தலமாகும்.

திரு+ஐந்து+ஆறு - ஒற்றை ஆறாக உருண்டு வரும் காவிரியானது திருவையாறு அருகே காவிரி, குடமுருட்டி, வெண்ணாறு, வெட்டாறு, வடவாறு என்று ஐந்து கிளை ஆறுகளாகப் பிரிந்து செல்வதால் இவ்வூர் திருவையாறு என்று பெயர் பெற்றது.

தல வரலாறு

சிலாது மகரிஷி யாகசாலை நிலத்தை உழுதபோது அவருக்கு பெட்டியில் கிடைத்த குழந்தை நந்திகேசர். அந்தக் குழந்தைக்கு ஆயுள் 16 ஆண்டுகளே என்பதை அறிந்த மகரிஷி அதுகுறித்து கவலை அடைந்தார். குழந்தை வளர்ந்த பிறகு கழுத்தளவு திருக்குள நீரில் நின்று கடும் தவம் புரிந்த நிலையில், சிவபெருமான் அக்குழந்தையை அரவணைத்து, ஐந்து விதமான அபிஷேகங்கள் செய்தார். அம்பிகையும் தாயுள்ளத்தோடு குழந்தைக்குப் பால், அமிர்தம், சைவ தீர்த்தம், சூரிய புஷ்கரிணி தீர்த்தம், நந்தி வாய் நுரைநீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்தார். இந்த காரணத்தால் இத்தல ஈசன் ‘ஐயாறப்பர்’ என்று அழைக்கப்படுகிறார். நந்திகேசர் திருக்கைலாய பரம்பரையை தோற்றுவித்தவர். தருமபுரம் ஆதீனமும், திருவாவடுதுறை ஆதினமும் இப்பரம்பரையைச் சேர்ந்தவை.

அறம் வளர்த்த நாயகி

ஆண்கள் தர்மம் செய்வதைவிட ,குடும்பத்தில் உள்ள பெண்கள் தர்மம் செய்தால், பலன் இரட்டிப்பாகும் என்பது ஐதீகம். அதன்படி ‘தர்மசம்வர்த்தனி’ என்ற பெயரை ஏற்று, பார்வதி தேவி இத்தலத்தில் எழுந்தருளி, தர்மத்தின் அவசியத்தை பெண்களுக்கு அறிவுறுத்துகிறார். அனைத்து நாட்களும் நல்ல நாட்களே என்பதை வலியுறுத்தும் விதமாக இங்கே அஷ்டமி திதியில் அம்பாளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடத்தப்படுகிறது.

அம்பாள், மேல் கரங்களில் சங்கு சக்கரத்துடனும் இடக்கரத்தை இடுப்பில் ஊன்றியும் திருமால் அம்சமாக அருள்பாலிக்கிறார். அதனால், திருவையாறு எல்லைக்கு உட்பட்ட இடங்களில் திருமாலுக்குக் கோயில்கள் இல்லை. காஞ்சி காமாட்சியைப் போன்று இறைவனிடம் இரு நாழி நெல் பெற்று, 32 அறங்களையும் செய்ததால், அம்பாள் ‘அறம் வளர்த்த நாயகி’ என்று அழைக்கப்படுகிறார்.

தனக்குத் தானே அபிஷேகம்

திருவையாறு ஐயாரப்பருக்கு தினமும் அபிஷேக, ஆராதனைகள் செய்யும் அர்ச்சகர், ஒருசமயம் காசிக்குச் சென்றதால், குறித்த நேரத்தில், பூஜை செய்ய கோயிலுக்கு வர இயலவில்லை. இச்செய்தி மன்னருக்கு தெரிவிக்கப்பட்டது. ஆனால், மன்னர் வந்து பார்த்தபோது, அர்ச்சகர் ஐயாரப்பருக்கு பூஜை செய்து கொண்டிருந்தார். காசிக்குச் சென்ற அர்ச்சகர் மறுநாள் திருவையாறு வந்தடைந்தார். ஊராரும், மன்னரும் ஆச்சரியப்பட்டனர். அர்ச்சகரால் வரமுடியாத சூழல் ஏற்பட்டதால் ஐயாரப்பரே அர்ச்சகர் வடிவில் வந்திருந்து, தனக்குத் தானே அபிஷேகம் செய்து கொண்டுள்ளார். உண்மையான பக்தி கொண்டு தன்னை வணங்குபவர்களுக்கு அன்பு செய்பவர் ஐயாரப்பர் என்பது இதன் மூலம் அறியப்படுகிறது.

கோயில் அமைப்பு

ஐயாரப்பர் கோயில் 15 ஏக்கரில் அமைந்துள்ளது. திருவீதிகள் உட்பட 5 பிரகாரங்களைக் கொண்ட இக்கோயிலில் சோழர் கால கல்வெட்டுகளும், சிற்பங்களும் நிறைந்துள்ளன. முதல் பிரகாரத்தில் ஐயாரப்பர் சந்நிதி அமைந்துள்ளது, அதே திருச்சுற்றில் உமா மகேஸ்வரர், சங்கர நாராயணர், பிரம்ம தேவர், திரிபுரசுந்தரி மற்றும் பரிவார மூர்த்தங்கள் அருள்பாலிக்கின்றனர்.

இரண்டாம் பிரகாரத்தில் பஞ்சபூத லிங்கங்கள், சப்த மாதாக்கள், ஆதி விநாயகர், நவக்கிரங்கள் எழுந்தருளிய ஐப்பேசுர மண்டபமும், சோமாஸ்கந்தர் சந்நிதியும் அமைந்துள்ளன. சுவாமி, அம்பாள் சந்நிதிகளுக்கு தனித்தனி ராஜ கோபுரங்கள் உண்டு. கிழக்கிலும் தெற்கிலும் இரு கோபுரங்கள் உள்ளன. திருவிழாவின்போது, தெற்கு கோபுர வாசல் வழியாக ஐயாரப்பர் வீதியுலா வருவார். தென்கோபுர வாயிலில் ஆட்கொண்டார் எமனை காலின் கீழ் வைத்து வதைக்கும் கோலத்தில் எழுந்தருளியுள்ளார். குங்கிலியம் இட்டு இங்கு வழிபாடு செய்யப்படும். குங்கிலியப் புகை பரவும் எல்லைவரை எமபயம் மற்றும் விஷம் இருக்காது என்பது நம்பிக்கை.

மூன்றாம் பிரகாரத்தில் தென்மேற்கு மூலையில் நின்று வடக்கு நோக்கி ‘ஐயாரப்பா’ என்று சொன்னால் ஏழு முறை எதிரொலிக்கும். நான்காம் பிரகாரத்தில் சூரிய புஷ்கரணி குளம், தென்கயிலாயம் (அப்பர் கையிலையைக் கண்டு தரிசித்தது), வடகயிலாயம் (ஓலோக மாதேவிச்சுரம்) அமைந்துள்ளன.

சுண்ணாம்பு மற்றும் கருப்பட்டி கலந்து கட்டப்பட்டுள்ள தியான மண்டபத்தில் நான்கு குழிகள் காணப்படுகின்றன. சுண்ணாம்பு, கருப்பட்டியை சேகரித்து வைக்க இரண்டு குழிகளும், மண்டபத்தைக் கட்டியவர்களுக்கு தரப்படும் தங்கத்தையும், வெள்ளியையும் சேகரித்து வைக்க இரண்டு குழிகளும் தோண்டப்பட்டன. இந்த நான்கு குழிகளை இன்றும் கோயிலில் காணலாம். இந்தத் தியான மண்டபத்தில் அமர்ந்து பஞ்சாட்சரம் ஓதினால், அது லட்சம் மடங்கு பலன் தந்து, மன நிம்மதி கிடைக்கும் என்பது நம்பிக்கை.

சப்தஸ்தான விழா

நந்திகேசருக்கு அருள்பாலித்த சிவபெருமான், அவருக்கு ஞானோபதேசமும், சிவகணத் தலைமையும், முதல் குருநாதனாம் தகுதியும் அளித்தார். மேலும், தானே முன்னின்று திருமழபாடியில் வியாக்ரபாதரின் திருமகளாம் சுயசாம்பிகையை, பங்குனி புனர்பூச தினத்தில் திருமணம் செய்து வைத்தார். இதுதொடர்பான விழாவே சப்தஸ்தான விழாவாகும். திருவையாறு (ஐயாரப்பர்), திருப்பழனம் (ஆபத்சகாயேஸ்வரர்), திருச்சோற்றுத்துறை (சோற்றுத்துறை நாதர்), திருவேதிகுடி (திருவேதிகுடி ஈசன்), திருக்கண்டியூர் (பிரமசிரக்கண்டீசுவரர்), திருப்பூந்துருத்தி (புஷ்பவனேஸ்வரர்), தில்லைஸ்தானம் (நெய்யாடியப்பர்) ஆகிய ஊர்களில் இருந்து பல்லக்குகளில் சிவபெருமான் அம்பிகையுடன் எழுந்தருளி, ஒரே இடத்தில் சங்கமித்து, பூச்சொரிதல் விழா நடைபெறும். விழாவின் இறுதியில் ஏழு கோயில் இறைவனும் இறைவியும் அவரவர் கோயில்களுக்குச் திரும்பிச் செல்கின்றனர்.

திருவையாற்றில் கைலாயக் காட்சி

திருநாவுக்கரசர், கைலாயம் சென்று சிவபெருமானை தரிசிக்க வேண்டும் என்று விரும்பினார். முதலில் நடந்து சென்று பயணத்தைத் தொடங்கிய நாவுக்கரசர், பின்னர் தவழ்ந்து செல்லத் தொடங்கினார், அடியாரின் சிரமத்தைப் பார்த்த ஈசன், அவரை ஆட்கொள்ள எண்ணினார்.

ஒரு முனிவர் போன்று வேடம் தரித்த ஈசன், அருகில் மானசரோவர் குளத்தை அமைத்தார். நாவுக்கரசரிடம் சென்று, கைலாயம் செல்லும் வழியில் உள்ள சிரமங்களைக் கூறி, திரும்பி ஊருக்குச் செல்லப் பணித்தார். ஆனால், கைலாயம் சென்று ஈசனை தரிசிக்காமல் ஊர் திரும்ப இயலாது என்பதில் நாவுக்கரசர் உறுதியாக இருந்தார். மானசரோவர் குளத்தில் மூழ்கி, திருவையாற்றில் உள்ள சூரிய புஷ்கரணியில் எழுந்து வருமாறு, நாவுக்கரசரைப் பணித்தார் ஈசன். அவ்வாறே செய்த நாவுக்கரசருக்கு, திருவையாற்றில் கைலாய தரிசனம் அளித்தார் சிவபெருமான்.

தட்சிணாமூர்த்தி

சுவாமி பிரகாரத்தில் உள்ள தட்சிணாமூர்த்தியை திருமால் வழிபட்டதாகக் கூறப்படுகிறது. அதனால் அவருக்கு ‘ஹரிஉரு சிவயோக தட்சிணாமூர்த்தி’ என பெயர். முயலகனுக்கு பதிலாக இவர் ஆமையை மிதித்துக் கொண்டிருப்பது தனிச்சிறப்பு. மேல் நோக்கிய வலது கரத்தில் கபாலமும், கீழ் நோக்கிய வலது கரத்தில் சின்முத்திரையும், மேல் நோக்கிய இடது கரத்தில் சூலமும், கீழ் நோக்கிய இடது கரத்தில் சிவஞான போதமும் காணப்படுகின்றன.

கோயில், தேர் சிறப்பு

நவக்கிரகங்களில் இது சூரியத் தலமாகும். ஆட்கொண்டேஸ்வரருக்கு இத்தலத்தில் வடைமாலை சாற்றுவது வழக்கம். சுந்தரரும், சேரமான் நாயனாரும் இத்தலத்துக்கு வரும்போது காவிரியாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சுந்தரர் பதிகம் பாடி, வெள்ளம் ஒதுங்கி அவருக்கு வழி கொடுத்தது.

காசிக்குச் சமமாகக் கருதப்படும் 6 சிவஸ்தலங்களில் (திருவெண்காடு, சாயாவனம், மயிலாடுதுறை, திருவிடைமருதூர், ஸ்ரீவாஞ்சியம், திருவையாறு) திருவையாறும் ஒன்று. திருவையாறு தலத்தில் சிவபெருமானின் ஜடாமுடி கருவறையின் பின்பக்கம் பரந்து கிடப்பதாக ஐதீகம். அதனால் சந்நிதியை வலம் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

காவிரிக் கரையின் அருகே கர்னாடக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜ சுவாமிகளின் சமாதி அமைந்துள்ளது. தை மாத பகுள பஞ்சமி தினத்தில், இசைக் கலைஞர்கள் ஒன்றுகூடி அவருக்கு இங்கே இசை அஞ்சலி இசைப்பது வழக்கம்.

5 படி நிலைகளில், பதினெட்டே முக்கால் அடி உயரத்தில், 12.9 அகலத்தில் பழமை மாறாமல் இத்திருக்கோயிலின் தேர் அமைக்கப்பட்டுள்ளது. 60 டன் இலுப்பை மரங்கள், 2 டன் தேக்கு மரங்கள், 2.5 டன் இரும்பு பொருட்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள இந்தத் தேரில் விநாயகர், சுப்பிரமணியர், சுவாமி, அம்பாள், சண்டிகேசுவரர், 63 நாயன்மார்கள், அப்பர் கைலாயக் காட்சி, தசாவதாரக் காட்சி, சப்தஸ்தான திருவிழாக் காட்சி, மீனாட்சி திருக்கல்யாணக் காட்சி, சிவபுராணக் காட்சி உள்ளிட்ட 750 சிற்பங்கள் அமைந்துள்ளன.

திருவையாற்றுப் பதிகம்

கைலாயக் காட்சியை கண்டபோது, திருநாவுக்கரசர் திருவையாற்றுப் பதிகத்தைப் பாடியுள்ளார். இறைவனின் ஆணைப்படி பொய்கையில் மூழ்கிய அப்பர், திருவையாற்றில் குட்டையில் எழுந்தார். அப்போது யானை, சேவல், குயில், அன்னம், மயில் என அனைத்து உயிர்களும் சிவபெருமான், சக்தி வடிவங்களாகத் தெரிந்தன. இந்த உலகமே கைலாயத்தின் வடிவம்தான் என்பதை உணர்ந்தார். இந்த உலகைத் தவிர வேறு ஒரு கைலாயம் என்று தனியாக இல்லை என்பதை உணர்ந்து தெளிந்தார். தன் கண் முன்னால் இருந்த ஒன்றை தற்போது அறிந்து கொண்டேன் என்பதைக் குறிக்கும் விதமாக ஒவ்வொரு பாடலின் முடிவிலும் ‘கண்டு அறியாதனக் கண்டேன்’ என்று பாடியுள்ளார் அப்பர். இந்தத் தொகுப்பு பன்னிரு திருமுறையில் நான்காம் திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ளது. திருவையாறு பதிகம் பாடினால், கணவன் – மனைவி ஒற்றுமை ஓங்கும் என்பது நம்பிக்கை.

திருவிழாக்கள்

சிவராத்திரி, பிரதோஷம், நவராத்திரி, அமாவாசை, ஆடிப் பூர விழா, பௌர்ணமி தினங்களில் சுவாமி, அம்பாளுக்கு இங்கே சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். வாகனங்களில் எழுந்தருளி, விதியுலா நடைபெறும். சப்தஸ்தான (பங்குனி) விழாவின்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்து சுவாமி தரிசனம் செய்வதுண்டு. சிவபெருமான் தன்னைத் தானே பூஜித்த ஆத்மபூஜை உற்சவம், சித்திரையில் நடைபெறும். ஆடி அமாவாசை தினத்தில் அப்பர் கைலாயக் காட்சி விழா நடைபெறும்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in