அருள்தரும் சக்தி பீடங்கள் – 28

பிருந்தாவனம் ராதா ராணி
ராதா ராணி
ராதா ராணி

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பிருந்தாவனம் அருகே பர்ஸானா என்ற தலத்தில் அமைந்துள்ள ராதா ராணி கோயில், அம்மனின் சக்தி பீட வரிசையில் சிறப்பிடம் பெறுகிறது. துவாரகாட்டில் ருக்மிணி தேவியாக எழுந்தருளிய அன்னை, பிருந்தாவனத்தில் ராதையாக எழுந்தருளி கண்ணன் புகழ் பாடுகிறார்.

மதுராவுக்கு வடக்கே ஐந்து மைல் தொலைவில் அமைந்துள்ளது பிருந்தாவனம். இங்கு சோலைகளில் கிருஷ்ண பரமாத்மா எந்நேரமும் குழலூதியபடி இருந்துள்ளார். இங்குள்ள கோயில்களில் கோவிந்த தேவன், மதன மோகனன், கோபிநாதன் கோயில்கள் மிகவும் சிறப்புமிக்கதாகச் சொல்லப்படுகின்றன.

ராதை அவதாரம்

பிருந்தாவனம் அருகே உள்ள பர்ஸானா என்ற இடத்தில் ஆதி சக்தியின் அம்சமாக ராதை தோன்றியுள்ளார். இதற்கு ஆதாரமாக இப்பகுதியில் ராதையின் தந்தை விருஷபானு, தாயார் கலாவதி (கீர்த்திதா) ஆகியோருடைய மர விக்கிரகங்கள் காணப்படுகின்றன. பாத்ரபத மாதம் (ஆகஸ்ட்- செப்டம்பர்) அமாவாசை திதிக்குப் பிறகு வரும் அஷ்டமி தினத்தில் ராதை அவதரித்தார். கிருஷ்ணரின் ஜென்மாஷ்டமியில் இருந்து 14-ம் நாள் ராதை பிறந்த ராதாஷ்டமி வருகிறது. ராதையின் பிறந்த நாளை பர்ஸானா, ப்ரஜ் பூமியின் அனைத்துப் பகுதிகளிலும் கொண்டாடுகிறார்கள்.

ஒருசமயம் விருஷபானு யமுனையில் நீராடுவதற்காக இறங்கியபோது, தங்கத் தாமரை ஒன்று அவர் மீது வந்து இடித்தது. தாமரையில் ஒரு பெண் குழந்தை இருந்தது. உடனே பிரம்மதேவர் அவர் முன்பு தோன்றி, “இக்குழந்தை இறைவனின் ஹ்லாதினி சக்தி. இவளை அன்போடு வளர்த்து வருக” என்று கூறி மறைந்தார்.

குழந்தையை திருமகளாக நினைத்து விருஷபானு – கலாவதி தம்பதி வளர்க்கின்றனர். ஆனால், குழந்தை என்ன காரணத்தாலோ ஒரு வயது வரை கண் திறக்கவே இல்லை. காதும் சரியாகக் கேட்பதாகத் தெரியவில்லை. இந்நிலையை நினைத்து விருஷபானு வருந்திய சமயத்தில், ஏதோ ஒரு நிகழ்வுக்காக பிருந்தாவனத்தில் அனைவரும் ஒன்று கூடினர். அப்போது அங்கு நந்தகோபருடன் வந்த ஒரு வயதுக் குழந்தையான கிருஷ்ணர், ஓடிவந்து ராதையின் கைகளைப் பிடிக்கிறார். அதுவரை யோக சமாதி நிலையில் இருந்த ராதை, கண் திறந்தார். விருஷபானு, சிறிய குன்றின் மீது அரண்மனை அமைத்துக் கொண்டு அங்கேயே வந்துவிட்டார். அனைவரும் ராதையை லாலி என்று அழைத்து மகிழ்ந்தனர்.

கிருஷ்ணரின் சிறுவயதில் அவருக்கு தோழியாக உடனிருந்து, விளையாடியதால் அவருக்கு மிகவும் பிரியமானவர் ராதை என்பது உணரப்படுகிறது. 10 முதல் 12 வயதுக்குள்ளான காலகட்டங்களில் கிருஷ்ணரும் ராதையும் சேர்ந்து விளையாடிய இடமாக இருப்பதால், பர்ஸானா கூடுதல் சிறப்பைப் பெறுகிறது. தன்னுடைய 12-வது வயதில் பிருந்தாவனை விட்டுச் சென்ற கிருஷ்ணர் மீண்டும் இங்கு வரவேயில்லை.

வசுதேவர் – தேவகி மைந்தனாக அவதரித்து, நந்தகோபர் – யசோதை மகனாக வளர்ந்து, பின்னர் துவாரகையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்தார் கிருஷ்ணபரமாத்மா. தன்னலமற்ற அன்பு, தியாகத்தின் உருவமாக ராதை விளங்குவதால், ராதை என்று அழைத்தால் உடனே கண்ணன் ஓடோடி வருவார் என்பது நம்பிக்கை.

புனிதமான அன்புக்கும், பக்திக்கும் ஓர் எடுத்துக்காட்டாக ராதை விளங்குகிறார். பிரம்ம வைவர்த்த புராணம், பத்ம புராணம், நாரத புராணம், கர்க சம்ஹிதா போன்ற நூல்களில் ராதையைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. மதுராவில் இருந்து 45 கிமீ தொலைவில் உள்ள பர்ஸானா என்ற நகரம் ஒருகாலத்தில் பிரம்மஸரின் என்று அழைக்கப்பட்டது.

ராதா – பொருள் விளக்கம்

‘ராதா’ என்ற வார்த்தையை ஆராய்ந்து பார்த்தால் ‘ரா’ என்பது தருவது / ஒப்புக் கொள்வது என்ற பொருளையும், ‘தா’ என்பது விடை பெறுதல் / பிடிப்பை தளர்த்துதல் என்ற பொருளையும் தருகிறது. தருவதற்கும் பெறுவதற்கும் விரும்புதல், மனதை ஒருமுகப்படுத்துதல் என்றும் பொருள் கொள்ளலாம். ‘நான்’ என்ற பிடிப்பைத் தளர்த்தி, உண்மையின் மீது மனதைச் செலுத்தினால், நமக்குள் இருக்கும் உண்மையான ஸ்வருபத்தையும், உலகில் விரவி இருக்கும் சாந்நித்யத்தையும் அறிந்து கொள்ளும் பேற்றைப் பெறுகிறோம்.

அதேசமயம் ‘நான்’ எனும் பிடிப்பைத் தளர்த்தாவிட்டால், அதனால் எந்தப் பயனும் இல்லை. நம்முள் இருக்கும் தெய்வீகத் தன்மையையும் உணர முடியாது. இறைவனின் பாதங்களை சரணடைவதே சரணாகதி. உண்மையான பக்தி, நம்பிக்கையுடன் தெய்வீகத்தின் மீது நாம் வைக்கும் ஆழ்ந்த அன்பே ‘ராதா’ என்று குறிப்பிடப்படுகிறது.

கீத கோவிந்தம்

ராதைக்கும் கிருஷ்ணருக்கும் இடையேயான அன்பை விளக்கும்விதமாக பன்னிரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஸ்ரீஜெயதேவர் என்பவர் இயற்றிய கீத கோவிந்தம் அமைந்துள்ளது. இதில் பிருந்தாவனத்தின் செழிப்பு, புனித இடங்கள், ராதை – கிருஷ்ணர் விளையாடிய இடங்கள் விளக்கப்பட்டுள்ளன. ஐந்தாவது சர்க்கத்தில் விளக்கப்பட்டுள்ள இடங்கள், தற்போதைய பிருந்தாவனத்தைப் போன்றே உள்ளன. மதுவனம், சிறைச்சாலையில் கண்ணன் அவதரித்தது, நந்தகோபர் மைந்தனாக வளர்ந்தது, பிருந்தாவனத்தில் விளையாடியது, மாடுகளை மேய்த்தது, குழல் இசைத்தது, வெண்ணெய் உண்டது, யமுனை நதிக்கரையில் அமர்ந்து இயற்கைச் சூழலை ரசித்தது ஆகிய சம்பவங்கள் விளக்கப்பட்டுள்ளன.

பக்தி இலக்கியத்தில் முக்கியமான நூலாகவும் சம்ஸ்கிருத கவிதை நூல்களுக்கு ஓர் எடுத்துக்காட்டாகவும் கீத கோவிந்தம் திகழ்கிறது. கீத கோவிந்தத்தில் ஒவ்வொரு பாகமும் 24 பிரபந்தங்களை உள்ளடக்கியது, ஒவ்வொரு பிரபந்தத்திலும் 8 இருவரிச் செய்யுள்கள் இருக்கும், அதனால் இவற்றுக்கு ‘அஷ்டபதி’ என்று பெயர். கருணை, வீரம், சாந்தி முதலான ஒன்பது ரசங்களிலும் அஷ்டபதி அமைந்திருந்தாலும் பிரதானமாக சிருங்கார ரசமே அமைந்துள்ளது. தற்போதும் பல இடங்களில் இந்த அஷ்டபதிகள் பஜனைகள், இசை, நாட்டிய நிகழ்ச்சிகளில் பாடப்படுகின்றன.

பரமாத்மாவை (கிருஷ்ணர்) ஞான குருவாகக் கொண்டு ஜீவாத்மா (ராதை) அதை அடைய முயல்வதாக அஷ்டபதியில் விளக்கப்படுகிறது. பிருந்தாவனம் இறைசக்தி கலந்த தலமாகும். திருமாலின் அம்சமாகிய கண்ணன், தீய சக்திகளான கம்சன், சிசுபாலன், ஜராசந்தன், துரியோதனன் போன்றோரை அழிப்பதற்காக உலாவிய இடம் என்பதால், பக்திக்கு ஏற்ற இடமாகப் போற்றப்படுகிறது. பக்தர்களுக்கு தந்தை, தாயாக விளங்கும் கிருஷ்ணரும் ராதையும் வாழ்ந்த இடமாக இத்தலம் இருப்பதால், புண்ணிய பூமியாகக் கருதப்பட்டு, எந்த நேரமும் மக்கள் நடமாட்டத்துடன் காணப்படுகிறது.

ராதா ராணி கோயில்

250 மீட்டர் உயரம் கொண்ட பானுகர் மலையின் உச்சியில் ராதா ராணிக்காக கட்டப்பட்டுள்ள இக்கோயில் லாட்லி லால் (மகள், மகன்) கோயில் என்றும், ஸ்ரீஜி கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. கிருஷ்ண பரமாத்மாவின் கொள்ளுப் பேரன் வஜ்ரநாப் என்பவரால் சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இக்கோயில் கட்டப்பட்டுள்ளது. வளைவுகள், தூண்கள், சிவப்பு மணற்கற்கள் கொண்டு அரண்மனை போன்று கிபி 1675-ல் சீரமைக்கப்பட்டது. தரையில் இருந்து பிரதான கோயிலுக்குச் செல்ல 200-க்கும் மேற்பட்ட படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. படிகள் அருகே விருஷபானு மகாராஜாவின் அரண்மனை உள்ளது. அங்கு கீர்த்திகா, ராதாவின் உடன்பிறப்பு ஸ்ரீதாமா, ஸ்ரீராதிகா சிலைகள் உள்ளன. அரண்மனை அருகே பிரம்மதேவர் கோயில் அமைந்துள்ளது. அருகில் உள்ள அஷ்டசாகி கோயிலில் ராதா தனது நண்பர்களுடன் வழிபடுவதுபோல் சிற்பம் அமைந்துள்ளது. கோயில் வளாகத்தில் இருந்து பர்ஸானா நகரம் முழுவதையும் காணலாம்.

ராதா ராணி கோயில் அருகே உள்ள பலராமர் கோயிலில் நிறைய பிரம்புகள் காணப்படுகின்றன. இங்குள்ள மக்கள் பூரி ஜகந்நாதரை தரிசித்துவிட்டு அங்கிருந்து பிரம்பை வாங்கி வந்து, பலராமர் கோயிலில் கட்டுவது வழக்கம். அருகே பக்த மீராபாய் கோயில், காளிங்கமடு ஸ்ரீரங்கநாதர் கோயில்கள் அமைந்துள்ளன.

காலிய டோஹ தீர்த்தம், கேசி என்ற அசுரன் கொல்லப்பட்ட இடம், பாண்டியரின் வட யக்ஞபத்திகள் கிருஷ்ணருக்கு அன்னதானம் செய்த இடம், கிருஷ்ணரின் பால்ய விளையாட்டுகள் நடைபெற்ற இடம் ஆகியன இன்றும் பிருந்தாவனத்தில் காணப்படுகின்றன.

வளையல் கேட்ட ராதை

சரஸ்வதி நதிக்கரையில் வசித்து வந்த உத்தாலகன் என்பவர், தினமும் ராதையை வணங்கி வந்தார். அவருக்கு தரிசனம் தருவதற்கு ராதை திருவுளம் கொண்டார். சரஸ்வதி நதிக்கரையில் ஒரு பெண் துணி துவைத்துக் கொண்டிருந்தாள். அப்போது வளையல் விற்பவர் அங்கு வந்ததும் அவரிடம் வளையல் கேட்ட அப்பெண், வளையலைப் பெற்றுக் கொண்டு, பணத்தை தன் தந்தை உத்தாலகனிடம் இருந்து பெற்றுக் கொள்ளப் பணித்தாள். மேலும், “அவர் பணம் இல்லை என்று கூறினால், அவர் வணங்கும் ராதை படத்தருகே பணம் இருக்கும். அதை எடுத்துக் கொள்ளுங்கள்” என்றாள்.

ராதா ராணி கோயில்
ராதா ராணி கோயில்

வளையல் வியாபாரியும் உத்தாலகன் இல்லத்துக்குச் சென்று, அவர் மகள் வாங்கிய வளையலுக்காக பணம் கேட்டார். திடுக்கிட்ட உத்தாலகன், தான் பிரம்மச்சாரி என்றும், தனக்கு மகளே கிடையாது என்றும் கூறுகிறார். வியாபாரி பணம் இருக்கும் இடத்தைக் கூறியதும், ராதை படம் அருகே சென்று பார்த்தால் பணம் இருந்தது. அப்போது தன்னிடம் விளையாடியது ராதைதான் என்பதை உத்தாலகன் உணர்ந்து கொண்டார்.

Azim Knan Ronnie

திருவிழாக்கள்

பங்குனி மாதம் அமாவாசைக்குப் பிறகு வரும் அஷ்டமியில் இத்தலத்தில் ஹோலி பண்டிகை விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. அன்பின் தத்துவத்தை விளக்கும் உற்சவமாக இப்பண்டிகை கருதப்படுகிறது. கிருஷ்ணர் கோபிகைகளின் மீதுள்ள அன்பை விளக்கும்விதமாக, வண்ணப் பொடிகளை ஒருவர் மீது ஒருவர் தூவி மகிழ்வது வழக்கம். ஜென்மாஷ்டமி, ராதாஷ்டமி நாட்களில் சிறப்புப் பூஜைகள், ஆராதனைகள் நடைபெறும். அப்போது ஆரத்தி முடிந்ததும் 56 வகையான உணவு வகைகள், ராதை, கிருஷ்ணருக்கு படைக்கப்படுகிறது.

ராதை, கிருஷ்ணருடன் யமுனை நதிக்கரையில் விளையாடிய பகுதி, ‘தீர்ஸ்டீரம்’ என்று அழைக்கப்படுகிறது. கதம்ப (புன்னை) மரங்கள் சூழ்ந்து காணப்படும் இவ்விடத்தில் எப்போதும் வனபூஜை நடைபெறும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in