அருள் தரும் சக்தி பீடங்கள் - 22

ஜ்வாலாமுகி மகாதேவி
அருள் தரும் சக்தி பீடங்கள் - 22

அம்மனின் சக்தி பீட வரிசையில், இமாச்சல பிரதேசம் காங்ரா மாவட்டத்தில் உள்ள ஜ்வாலாமுகி தலத்தில் அமைந்துள்ள மகாதேவி கோயிலும் பிரதானம் பெறுகிறது. இத்தலத்தில் தாட்சாயணியின் நாக்குப் பகுதி விழுந்ததாக ஐதீகம். எண்ணெய், திரி எதுவும் இல்லாமல் பழமையான பாறை இடுக்குகளில் இருந்து வெளிப்படும் நீலநிற தீ ஜுவாலையே இங்கு அன்னையின் வடிவமாக வழிபடப்படுகிறது.

ஒவ்வொரு தலத்திலும் ஒவ்வொரு வடிவத்தில் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் ஆதிசக்தி, இத்தலத்தில் தீச்சுடராக வெளிப்படுகிறார். பிரதான தெய்வமான காளிதேவி, இங்கு ஒன்பது இடங்களில் சரஸ்வதி, லட்சுமி, அன்னபூரணி உள்ளிட்ட பெயர்களைத் தாங்கி ஜுவாலை வடிவத்தில் அருள்பாலிக்கிறார். பல ஆண்டுகளாகத் தோன்றிக் கொண்டிருக்கும் இந்த ஜுவாலையை பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் தரிசித்து தங்கள் நேர்த்திக் கடனைச் செலுத்துவது வழக்கம்.

தல வரலாறு

பல நூற்றாண்டுகளுக்கு முன்னர், காங்ரா நகரை தலைநகராகக் கொண்டு, பூமிசந்த் என்ற அரசர் ஆட்சி புரிந்து வந்தார். அவர் சிறந்த தேவி பக்தராக விளங்கியதால், தேவி அவர் கனவில் தோன்றி, தீ ஜுவாலை வடிவில் தான் கோயில் கொண்டிருக்கும் இடத்தை உணர்த்தினார். அரசரும் அவ்விடத்தைக் கண்டுபிடித்து, அங்கு கோயில் எழுப்பினார். நேபாள மன்னர் ஹங் என்பவர் மண்டபம் அமைத்து, மிகப் பெரிய வெண்கல மணியையும் வழங்கியதாக வரலாற்று ஆவணங்கள் உள்ளன.

மொகலாயப் பேரரசர் அக்பர், இத்தலத்துக்கு தங்கக் குடையை காணிக்கையாகச் செலுத்தியதாகக் கூறப்படுகிறது. 1813-ல், பஞ்சாப் அரசர் ரஞ்சித் சிங் என்பவர், இங்கே சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டு, கோபுரத்துக்கு தங்கக் கலசம் செய்வித்து வெள்ளிக் கதவுகளையும் அமைத்தார்.

கோயில் அமைப்பு

காங்ரா நகரில் இருந்து 30 கிமீ தொலைவிலும், தரம்சாலாவில் இருந்து 55 கிமீ தொலைவிலும், அமிர்தசரஸில் இருந்து 107 கிமீ தொலைவிலும் ஜுவாலாமுகி மகாதேவி கோயில் அமைந்துள்ளது. சிவபெருமான் மகாதேவர் என்ற பெயரைத் தாங்கி இங்கு அருள்பாலிக்கிறார். காங்ரா நகரத்தின் வடமேற்குப் பகுதியில் உயர்ந்திருக்கும் ஒரு குன்றின் மீது சண்டி என்று அழைக்கப்படும் மாகாளிக்கு கோயில் அமைக்கப்பட்டுள்ளது. இது எண்கோண வடிவில் சிறிய அளவில் அமைந்துள்ளது.

கோயிலில் கருமை நிறத்தில் அன்னை அருள்பாலிக்கிறார். வீரம் மிகுந்த இந்த பூமியில் ஜ்வாலாமுகி, சண்டி, மாகாளி ஆகிய பெயர்களைத் தாங்கி, மாவீரர்களை உருவாக்கும் சக்தி பெற்றவராக தேவி விளங்குகிறார். பஞ்ச நதிகள் பிரதேசத்தில் அதிமுக்கிய தேவதையாக தேவி இருக்கிறார். இவரது சந்நிதியில் எந்நேரமும் தீ எரிந்து கொண்டிருக்கிறது. இத்தீயானது நம்முடைய திரைகள் அனைத்தையும் எரித்து சாம்பலாக்குவதற்கு தயாராக இருப்பதாக நம்பப்படுகிறது.

அன்னையின் அருளை மறைக்கும் மற்றொரு திரை, மாயை ஆகும். இல்லாத ஒன்றை இருப்பதாக அறியும் நிலையே மாயை என்று அழைக்கப்படுகிறது. உலகம் மாயை என்பதை உணர தெளிவான வெளிச்சம் வேண்டும். உலகம் என்பது உண்மை என்பதாக நினைத்துக் கொண்டு, இவ்வுலகில் உள்ள அனைத்தும் என்றும் நிலையானவை என்று எண்ணி செயல்பட்டுக் கொண்டிருக்கும் நிலை மகாமாயை எனப்படுகிறது. இந்த எண்ணத்தை/ திரையை உடைத்தெறிய, என்றும் எரிந்து கொண்டிருக்கும் தீ ஜுவாலையாக விளங்கும் அன்னை துணை புரிகிறார்.

மகாதேவர், மகாதேவி சந்நிதிகள், ராவண கிரி, உஷ்ண சுனை, தேவபந்தர், விராடபுரம், தேவி குண்டம் ஏரிக்கரையில் உள்ள கோயில்கள், சண்டி தேவியின் கோயில் ஆகியன இப்பகுதியில் காணவேண்டியவை ஆகும்.

பிற கோயில்கள்

சண்டி கோயிலில் இருந்து கால்கா செல்லும் பாதையில் 13 மைல்கள் வடக்கு நோக்கிச் சென்றால் பிஞ்சோர் தோட்டத்தை அடையலாம். வண்ண வண்ண மலர்கள் பூத்துக் குலுங்கும் இத் தோட்டத்தில் இருந்து 18 மைல்கள் கடந்தால் கால்காவை அடையலாம், இங்கு பிரசித்திபெற்ற காளி கோயில் அமைந்துள்ளது.

ஜுவாலாமுகி கோயிலில் இருந்து 107 கிமீ தொலைவில் அமிர்தசரஸ் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் சிவபெருமானும், உமாதேவியும் வீற்றிருக்கின்றனர். ஸ்ரீ கிருஷ்ணர், ருக்மிணி, சத்யபாமா திருமணம் இப்பகுதியில்தான் நடைபெற்றது. திரௌபதிக்கும் இப்பகுதியில்தான் திருமணம் நடைபெற்றது. இவ்விடங்களுக்கிடையே சலவைக் கற்களால் கட்டப்பட்ட கோயில் அமைந்துள்ளது. இங்கு சிவபெருமான், லட்சுமி, நாராயணன், ராமபிரான், சீதா பிராட்டி, ராதா, ஸ்ரீ கிருஷ்ணர் உருவங்கள் காணப்படுகின்றன. அமிர்தசரஸ் பகுதியில்தான் வால்மீகி முனிவர் ராமாயண காவியத்தை இயற்றினார் என்று கூறப்படுகிறது.

இதிகாசத் தொடர்பு

ஒவ்வொரு சக்தி பீடத் தலத்திலும், ராமாயண, மகாபாரத சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இளவயதில் வழி தவறி சென்று கொண்டிருந்த வால்மீகியை, நல்வழியில் திருப்பி ராமாயண காவியத்தை இயற்றும் அளவுக்கு, அன்னை உயர்த்தியுள்ளார். ஜுவாலாமுகி கோயில் அருகே விராடபுரம் அமைந்துள்ளது. இங்கு பஞ்ச பாண்டவர்கள் தங்கியுள்ளனர் என்று கூறப்படுகிறது. அதர்மத்துக்கு அபாய மணி ஒலித்த இடம் என்றும் இந்த இடத்தை அழைப்பதுண்டு.

கௌரவர்களால் வனத்துக்கு அனுப்பப்பட்ட பஞ்ச பாண்டவர்கள், தங்களது வனவாச காலம் முடிந்ததும் இங்கு வந்துள்ளனர். மறைந்து வாழும் வாழ்க்கையை இங்கு தங்கி கழித்துள்ளனர். தருமபுத்திரர் கங்கன் என்ற பெயரிலும், பீமசேனன் மடப்பள்ளி பணியாளராகவும், அர்ச்சுனன் பிருகந்நளையாகவும், நகுல சகாதேவர் குதிரை, பசுக்களை மேய்ப்பவர்களாகவும் வேடம் தாங்கி இங்கு வாழ்ந்தார்கள். விராடனின் மனைவிக்கு பணிவிடை செய்யும் பெண்ணாக திரௌபதி வாழ்ந்தார்.

‘தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். ஆனால், தருமம் மறுபடியும் வெல்லும்’ என்பதற்கு ஏற்ப சிலகாலம் கழித்து அர்ச்சுனனின் காண்டீப மணி ஒலித்தது. கௌரவர் கூட்டம் அலறும்படியாக அபாயச் சங்கு இந்தப் பகுதியில் ஊதப்பட்டது. தனி ஒருவராகவே இருந்து பிருகந்நளை வேடத்தில் இருந்த அர்ச்சுனன், துரியோதனின் படைகளை புறமுதுகிட்டு ஓடச் செய்தார்.

தீயவர்களை அழிக்க மகாதேவரும், மகாதேவியும் தீச்சுடராகத் தோன்றுவார்கள் என்பது ஐதீகம்.

துர்கா சப்தசதி பாராயணம்

வேத வியாசர் படைத்த மார்க்கண்டேய புராணத்தில் 73-வது அத்தியாயம் முதல் 85-வது அத்தியாயம் வரை உள்ள பாகம் ‘துர்கா சப்தசதி’ என்று அழைக்கப்படுகிறது. சுரதன் என்ற அரசனும், சமாதி என்ற வைசியனும் காட்டுக்கு விரட்டப்பட்டார்கள். அவர்களுக்கு சுமேதன் என்ற முனிவர், தேவியின் மகிமையை எடுத்துக் கூறுவதாக ‘துர்கா சப்தசதி’ தொடங்குகிறது.

இது கர்ம, ஞான, பக்தி யோகங்களின் சிறப்புகளை 700 பாடல்களைக் கொண்டு (சப்த (7) சதி (100)) விளக்குகிறது. இதில் சுருதி, ஸ்ம்ருதி, புராணம், தந்திரம், தரிசனங்களின் சாராம்சம் பொதிந்துள்ளன. மகா காளி, மகா லட்சுமி, மகா சரஸ்வதி ஆகியோரின் வரலாறு இதில் வர்ணிக்கப்பட்டுள்ளன. மகா காளி, திருமாலின் மூலம் மது, கைடபர்களை வதம் செய்தது. மகிஷாசுர வதம், இந்திரன் லட்சுமியை துதிப்பது, மகா சரஸ்வதி மகிமை, தேவிக்கும் தூதருக்கும் உண்டான சம்வாதம், தூம்ரலோசன வதம், சண்ட முண்டாசுர வதம், ரக்தபீஜ வதம், நிசும்ப வதம், சும்பாசுர வதம், நாராயணீ ஸ்துதி, பகவதி வாக்கியம், சுரதனுக்கும் வைசியனுக்கும் வர பிரதானம் ஆகியன விளக்கப்படுகின்றன.

இதில் சைலபுத்ரி, பிரம்மசாரிணி, சந்திரகண்டா, கூஷ்மாண்டா, ஸ்கந்தமாதா, காத்யாயணி, காலராத்ரி, மகா கௌரி, சித்திதாத்ரி, ஆகிய நவதுர்கைகளும், பிராஹ்மி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வாராஹி, நாரசிம்ஹி, இந்திராணி, சாமுண்டி ஆகிய தேவியரும் குறிப்பிடப்படுகிறார்கள். தேவியை போற்றித் துதித்தால், உடலில் ஒளி பொருத்தப்படுகிறது, உடல் நோய், மன நோய்கள் தீர்க்கப்படுகின்றன. அனைத்து விருப்பங்களும் நிறைவேறி, எதிலும் வெற்றி கிட்டும். செல்வம் பெருகும். சென்ற இடமெல்லாம் சிறப்பு வந்து சேரும் என்பது நம்பிக்கை.

பாராயண முறைகள்

சண்டீ சப்தசதி பாராயணம் செய்வதில் பலவித வழிமுறைகள் நடைமுறையில் உள்ளன. முதலில் கவசம், அர்களம், கீலகம், நவார்ண மந்திர ஜபம், ராத்திரி சூக்தம், சப்தசதி, தேவீ சூக்தம் என்று வரிசையாகப் படிப்பது ஒரு முறை. முதல் நாள் முதல் அத்தியாயம், இரண்டாம் நாள் 2, 3, மூன்றாம் நாள் 4, நான்காம் நாள் 5 – 8, ஐந்தாம் நாள் 9,10, ஆறாம் நாள் 11, ஏழாம் நாள் 12, 13-ம் அத்தியாயங்கள், ரஹஸ்ய த்ரயம் படித்து நிறைவு செய்யலாம். மூன்று நாட்களில் மூன்று சரித்திரங்கள் பாராயணம் செய்யும் முறை கூட காணப்படுகிறது.

பாராயணம் பூர்த்தி ஆன பின்பு, அபராத ஸ்தவம் படித்து சண்டீ பரதேவதையிடம் மன்னிப்பு கோர வேண்டும். பாராயணத்தின் பலனை தேவியின் பாதங்களில் சமர்ப்பிக்க வேண்டும். அல்லும் பகலும் மூன்று ஆண்டுகள் தொடர்ந்து பாராயணம் செய்வதால் வாழ்வில் மிக உயர்ந்த நிலையை அடையலாம். சப்தசதியை முழுமையாக பாராயணம் செய்ய இயலாதவர்கள், இதிலுள்ள ராத்திரி சூக்தம், சக்ராதி ஸ்துதி, நாராயணீ ஸ்துதி, தேவீ சூக்தம் பாராயணம் செய்தாலும் சிறப்பான பலன் கிட்டும்.

திருவிழாக்கள்

இத்தலத்தில் நாள்தோறும் பலவித பூஜைகள் நடைபெறுகின்றன. துர்கா சப்தசதி வாசிக்கப்படுகிறது. தினமும் 5 முறை ஆரத்தி காண்பிக்கப்படுகிறது.

நவராத்திரி நாட்களில் சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடைபெறுகின்றன. சிறப்பு விழாக்கள் எடுத்து, ஜுவாலாமுகி தேவிக்கு வழிபாடு நடைபெறுகிறது. பில்லி சூன்யம், ஏவல் போன்ற செய்வினைகள் விலக, மன வேதனை அகல இங்கு வழிபாடு செய்யப்படுகிறது. பில்லி, சூன்யம், ஏவல் விரட்டும் மந்திரவாதிகள் இங்கு யந்திர பூஜை செய்வதும் உண்டு.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in