அருள்தரும் சக்தி பீடங்கள் - 18

சிம்லா சியாமளா தேவி
சிம்லா சியாமளா தேவி
சிம்லா சியாமளா தேவி

அம்மனின் சக்தி பீட வரிசையில் சிம்லா சியாமளா தேவி கோயிலும் ஒன்று. பிரம்மாண்ட வடிவில் காளியாக, பத்ரகாளியாக வடிவம் கொண்டு பல கோயில்களில் அருள்பாலிக்கும் அன்னை, இத்தலத்தில் சித்துவடிவமாக சியாமளா தேவி என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். அன்னையின் பெயரே பிற்காலத்தில் மருவி, இத்தலம் ‘சிம்லா’ என்று அழைக்கப்பட்டதாகவும் ஒரு தகவல் உண்டு.

சிறிய மூர்த்தி

சிம்லா கடல் மட்டத்தில் இருந்து 7 ஆயிரம் அடிக்கு மேல் உள்ள பிரதேசமாகும். சியாமளா தேவி கோயில் சிம்லாவுக்கு தெற்கே உள்ள தாரா தேவி மலைச் சிகரத்தில், சிறிய அளவில் சதுரமான இடத்தில் அமைந்துள்ளது. ஓட்டுக் கூரை வேய்ந்து இக்கோயில் கட்டப்பட்டுள்ளது. 1845-ல் கட்டப்பட்டுள்ள இதுவே அர்த்த மண்டபம், மகா மண்டபம் என்று அழைக்கப்படுகிறது.

‘மூர்த்தி சிறிதெனினும் கீர்த்தி பெரிது’ என்ற கூற்றுக்கு ஏற்ப, இத்தலத்தில் தேவி, சிறிய வடிவம் கொண்டு அருள்பாலித்து வருகிறார். ஒரே அறையில் அனைத்து சந்நிதிகளும் அடங்கியுள்ளன.

பக்தர்களுக்கு சகல நலன்களையும், செல்வத்தையும் அருள்வதற்காக, சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகிய மூவரின் சக்திகளும் ஒருங்கே பெற்றவராக உள்ள சியாமளா தேவி, ராஜ மாதங்கி, காதம்பரி, ராஜ சியாமளா, வாக் விலாசினி ஆகிய பெயர்களிலும் அழைக்கப்படுகிறார்.

சியாமளா தேவி என்றால் நீலம் கலந்த பச்சை நிறம் கொண்டவர் என்று பொருள்படும். இங்கு கரிய நிறத்தவராக, ஓர் அடி உயரத்தில், மரத்தால் ஆன உருவத்துடன் எழுந்தருளியுள்ளார் அன்னை. அவரது முகம் மட்டுமே தெரியக்கூடிய விதமாக, தலையில் கிரீடம் கழுத்து நிறைய மணிகள், ஆபரணங்கள், மலர் மாலைகள் அணியப்பட்டுள்ளன. அருகில் பம்பை போன்ற வாத்தியங்கள் உள்ளன.

தாரா தேவி என்று அழைக்கப்படும் சியாமளா தேவி, தாட்சாயணியின் அம்சமாக விளங்குகிறார். சியாமளா என்றால் கரிய நிறமுடைய காளி என்றும் பொருள். தாட்சாயணியின் கோபத்தில் இருந்து வெளிப்பட்ட மாகாளி, அநீதியை அழிக்கப் புறப்பட்ட ஆவேசத்துடன் இங்கு கோயில் கொண்டுள்ளார்.

தாரா தேவி கோயில்

தாரா என்பதற்கு நட்சத்திரம் என்ற பொருள் உண்டு. வானில் இருந்து நட்சத்திரம் நம்மைப் பார்ப்பதுபோல, தாராதேவி நம்மைப் பார்த்தபடி காவல் புரிகிறார். சிம்லா மக்களின் குல தெய்வமாகவும், ஆற்றலின் அதிபதியாகவும் விளங்குகிறார்.

ஒருசமயம், வங்க மன்னரான பூபேந்திர சென், ஜாகர் காட்டுக்கு வேட்டையாட வந்தபோது, அங்கு தங்கினார். அப்போது அவரது கனவில் தோன்றிய தாராதேவி, தனக்கு கோயில் எழுப்பப் பணித்தார். அதன்படி 1766-ல் இக்கோயிலை எழுப்பினார் பூபேந்திர சென். பின்னர் 1825-ல் மரத்தால் ஆன கோயிலை எழுப்பினார் மன்னர் பால்பீர் சென். அப்போது புதிய சிலையும் நிறுவப்பட்டது. 2018-ல் ரூ. 6 கோடி செலவில் இக்கோயில் சீரமைக்கப்பட்டது.

காளி, சரஸ்வதி தேவி, பகவதி அம்மனுக்கு தனி சந்நிதிகளும், பைரவருக்கு தனியாக கோயிலும் எழுப்பப்பட்டன. மரத்தால் ஆன கண்ணாடி மாளிகையாக அர்த்த மண்டபம் சீரமைக்கப்பட்டது, இதன் மீது கூம்பு வடிவ விமானம் அமைக்கப்பட்டுள்ளது.

அசுர சம்ஹாரம்

அசுரர்களை அழிக்க சிவபெருமானால் ருத்ர காளி ஏவப்பட்டார். அவரே சியாமளா தேவி, காளி, நீலி, சாமுண்டி, சக்கர தாரினி, மாயையாகத் திகழ்கிறார். கருமை நிறத்தவராக இருந்தாலும் சிவப்பு, பச்சை, நீலம் ஆகிய நிறங்களுடனும் காட்சி அளிப்பார். நீல நிறத்துடன் மாலினியாகவும், திரிபுர சுந்தரியாகவும் அருள்பாலிக்கிறார் அன்னை. தீய சக்திகளை அழிக்கும்பொருட்டு, தோன்றிய வடிவம், நல்லதைக் காப்பாற்றவும் செய்வதால், கல்விச் செல்வம் உள்ளிட்ட அனைத்து நன்மைகளையும் பக்தர்களுக்கு அளிப்பார் என்பது நம்பிக்கை.

மதங்க முனிவரின் மகள்

மதங்க முனிவர், அன்னை பராசக்தி தனக்கு மகளாகப் பிறக்க வேண்டும் என்றும், சிவபெருமான் தனது மருமகன் ஆகவேண்டும் என்றும் சிவபெருமானை நோக்கி தவம் புரிந்தார். சிவபெருமானும் அவ்வரத்தை அருளினார். அதன்படி அன்னையின் மந்திர சக்தி மதங்க முனிவரின் மகளாகப் பிறந்தது. தமிழகத்தில் திருவெண்காட்டு தலத்தில் உள்ள மதங்க புஷ்கரணியில், ஆடிமாத வெள்ளிக்கிழமையில் நீலோத்பல மலரில் ராஜ மாதங்கி பிறந்தார். அன்னை ஸ்ரீ லலிதாம்பிகையின் கரும்பு வில்லே ராஜ மாதங்கியாக அவதரித்ததாகக் கூறப்படுகிறது. தக்க பருவத்தில் சிவபெருமானும், சித்திரை மாத வளர்பிறை சப்தமி திதியில் மதங்கேஸ்வரராகத் தோன்றி ராஜ மாதங்கியை மணந்தார் என்று திருவெண்காட்டு தலபுராணம் கூறுகிறது.

மாதங்கி தேவியின் அங்க தேவதைகளாக ஹசந்தி சியாமளா, சுக சியாமளா, சாரிகா சியாமளா, வீணா சியாமளா, வேணு சியாமளா, லகு சியாமளா என 6 தேவிகள் தோன்றி கலைகளின் அதிபதியாகத் திகழ்ந்தனர். லலிதா சஹஸ்ர நாமம், ஸ்ரீ சாக்த பிரமோதத்தம், மீனாட்சி பஞ்ச ரத்னம், ஸ்ரீவித்யார்ணவம், சாரதா திலகம், நவரத்தின மாலா போன்ற நூல்கள் ராஜ மாதங்கியின் சிறப்புகளைப் போற்றுகின்றன.

ராஜ மாதங்கியின் மரகதப் பச்சை வண்ணம் ஞானத்தையும், கைகளில் உள்ள வீணை சங்கீத ஞானத்தையும், கிளி பேச்சுத் திறமை பெற அம்பிகையின் அருள் அவசியம் என்பதையும், ஆத்ம ஞானத்தையும் உணர்த்துகின்றன,. மேலும், மலர் அம்பு கலைகளில் தேர்ச்சியையும், பாசம், ஈர்ப்பு சக்தியையும், கரும்பு உலகியல் ஞானத்தையும், அங்குசம் அடக்கி ஆளும் திறனையும் குறிக்கின்றன.

சியாமளா தண்டகம்

மகாகவி காளிதாசர் இயற்றிய ஸ்ரீ சியாமளா தண்டகத்தில், சியாமளா தேவியின் சிறப்புகள் கூறப்பட்டுள்ளன.

‘மாணிக்கக் கற்கள் இழைத்த வீணையை தன் மடியில் வைத்து வாசிப்பவராக, இனிய சொற்களைப் பேசுபவராக, மகேந்திர நீலமணியில் ஒளிவாய்ந்த மேனி கொண்டவராக, மதங்க முனிவரின் திருமகளாக விளங்குகின்ற சியாமளா தேவி, தலையில் பிறை நிலவு, நான்கு கரங்களில் கரும்பு வில், பாசம், அங்குசம், மலர்கணைகள் ஆகியவற்றை கொண்டு அருள்பாலிக்கிறார். குங்குமப் பூச்சால் சிவந்த நிறம் கொண்டவராக உள்ளார். மரகதம் போல் கரிய நிறத்தவராகவும், கதம்ப வனத்தில் உறைபவராகவும், மங்கள ரூபிணியாகவும் விளங்குகிறார்.

யானைத் தோல் உடுத்திய சிவபெருமானின் தேவியாகவும், நீலோத்பவ மலரின் ஒளியைப் பெற்றவராகவும், இசையை ரசிப்பவராகவும், போற்றிக் கொஞ்சும் கிளியிடம் மகிழ்பவராகவும் உள்ளார். யாழின் இசைக்கேற்ப அசைந்தாடும் காதணியை அணிந்தவராகவும், உலகோரின் அனைத்து விருப்பங்களை நிறைவேற்றுபவராகவும் சியாமளா தேவி விளங்குகிறார். யோகிகள், சான்றோரால் வணங்கப்படும் சியாமளா தேவி அனைவருக்கும் நன்மை செய்பவராக உள்ளார்.

இந்திரன், திருமால், சிவபெருமான், வருணன், பிரம்மதேவர், எமதேவர், நிருதி, குபேரன், வாயுதேவன், அக்னிதேவன் போன்ற தேவர்கள் சியாமளா தேவியைப் பணிகின்றனர். அவரே பார்வதி தேவியாகவும், மகாலட்சுமியாகவும், சரஸ்வதி தேவியாகவும் விளங்குகிறார். விநாயகர், துர்காதேவி, வடுகர், எட்டு பைரவர்கள், ஷேத்ர பாலர், மாதங்கன்னி ஆகியோரால் சூழப்படும் தேவி, மஞ்சுளா, மேனகா, வாமை முதலிய மங்கையரால் வணங்கப்படுகிறார். யட்சர், கந்தர்வர் மற்றும் சித்தர்களின் மனைவியரால் பூஜிக்கப்படும் தேவி, மன்மதன், ரதியால் வணங்கப்படுகிறார்.

அனைத்து தீர்த்த, மந்திர, தந்திர, யந்திர, பீட, தத்துவ, ஆற்றல், அறிவு, யோக, ஒலி, சொல், எழுத்து, உலக வடிவினராக விளங்கும் தேவி, எங்கும் நிறைந்துள்ளார், அவர் அனைவரையும் தாய் போன்று காத்தருள்வார்.’

இவ்வாறு சியாமளா தண்டகத்தில் சியாமளா தேவியின் சிறப்புகள் கூறப்பட்டுள்ளன.

காளி பாலி கோயில்
காளி பாலி கோயில்

பிற கோயில்கள்

தாரா தேவி கோயில் தவிர அதே பகுதியில் ‘காளி பாலி’ என்ற சிறிய காளி கோயில் அமைந்துள்ளது. கோயில் கட்டிடம் முழுவதும் சலவைக் கற்களால் எழுப்பப்பட்டுள்ளது. எந்த நேரமும் பஜனையும், பூஜையும் நடந்து கொண்டிருப்பது தனிச் சிறப்பு. கடின பயணம் மேற்கொண்டு காளியைத் தரிசித்தால், நினைத்த காரியம் நிறைவேறும் என்பது நம்பிக்கை. டாமி என்ற பகுதியில் உள்ள காளி கோயிலில், காளி மீது கற்களை வீசி, பக்தர்கள் வழிபாடு செய்கின்றனர்.

ஜக்கோ மலைப் பகுதியில் சிம்லாவை விட ஆயிரம் அடி உயரத்தில் உள்ளது அனுமார் கோயில். இங்கு பிரதான தெய்வமாக 108 அடி உயரத்தில் ஆஞ்சநேயர் திகழ்கிறார். சிறிய வடிவத்தில் ராமபிரான் அருள்பாலிக்கிறார். நுண்ணிய பொருட்களில் இருந்தே பிரம்மாண்ட சக்திகள் பிறக்கின்றன என்பதை உணர்த்தும் விதத்தில் சியாமளா தேவி கோயிலும், அனுமார் கோயிலும் அமைந்துள்ளன.

ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் இங்கு நிறைய பனிப்பொழிவு இருக்கும். சிகரங்கள், வீட்டுக் கூரைகள், மரங்கள் அனைத்தும் பனியால் மூடப்பட்டிருக்கும். மனதுக்கு ரம்மியமான சூழல் காணப்படுவதால், இந்நாட்களில் சியாமளா தேவி கோயில் எந்நேரமும் பக்தர்கள் சூழ்ந்து காணப்படும்.

ஆஞ்சநேயர் கோயில் முகப்பு...
ஆஞ்சநேயர் கோயில் முகப்பு...

திருவிழாக்கள்

நவராத்திரி நாட்களில் சிறப்பு வழிபாடுகள், பூஜைகள், சிறப்பு விருந்து நடைபெறும். துர்கா பூஜை தினத்தில் பக்தர்கள் இங்கு வந்து சுவாமி தரிசனம் செய்வர். தீபாவளி பண்டிகையின்போது, முப்பெரும் தேவியரின் அம்சமாக இருக்கும் சியாமளா தேவியைக் குடும்பத்துடன் வழிபடுவர். செவ்வாய்க் கிழமையில் வரும் அமாவாசை தினங்களிலும், வியாழக் கிழமைகளிலும் இங்கு சிறப்பு பூஜை நடைபெறும். மாசி மாத நவராத்திரி சியாமளா நவராத்திரியாக கொண்டாடப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in