அருள்தரும் சக்தி பீடங்கள் -17

கொடுங்கல்லூர் பகவதி அம்மன்
அருள்தரும் சக்தி பீடங்கள் -17

அம்மனின் சக்தி பீட வரிசையில் கேரளாவின் திருச்சூர் மாவட்டம் கொடுங்கல்லூர் பகுதியில் அமைந்துள்ள பகவதி அம்மன் கோயில் சிறப்புடையதாகக் கருதப்படுகிறது. இத்தலம் ‘மகாசக்தி பீடம்’ என்று அழைக்கப்படுகிறது. கொடுங்கல்லூரம்மை, கண்ணகி, பத்ரகாளி ஆகிய பெயர்களில் அழைக்கப்படும் தேவி, சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் இருந்து தோன்றியுள்ளார்.

தேவியின் விக்கிரகம் பலா மரத்தால் (வரிக்க பிலாவு) செய்யப்பட்டது என்பதால் வழக்கமான அபிஷேகங்கள் இங்கு செய்யப்படுவதில்லை. ‘சாந்தாட்டம்’ என்ற சந்தன அபிஷேகம் மட்டும் செய்யப்படும்.

தலவரலாறு

சிலப்பதிகார நாயகன் கோவலனுக்கும், நாயகி கண்ணகிக்கும் திருமணம் நடைபெறுகிறது. காலப்போக்கில் தன் செல்வங்கள் அனைத்தையும் இழந்துவிடுகிறான் கோவலன். பிழைப்பு தேடி மனைவி கண்ணகியுடன் மதுரை நகருக்கு கிளம்புகிறான். மதுரை வந்தடைந்ததும், தன் மனைவியின் கால் சிலம்பை ஓரிடத்தில் விற்க முற்படுகிறான். ஆனால் அந்த நேரம், காணாமல் போன அரசியின் கால் சிலம்பும், கண்ணகியின் சிலம்பும் ஒரே மாதிரியாக இருக்க, அரசியின் சிலம்பை கோவலன் திருடிவிட்டான் என்று குற்றம் சாட்டப்பட்டு, அரசரின் கட்டளையால் மரண தண்டனை பெறுகிறான்.

கணவன் இறந்த செய்தி கேட்டு, கண்ணகி அரசபைக்குச் சென்று மன்னரிடம் நியாயம் கேட்கிறாள். மதுரையை எரித்து, மன்னரை சபிக்கிறாள். மதுரையை எரித்த பிறகு ஆவேசத்துடன் சேர நாட்டுக்குச் செல்கிறாள்.

சேர நாட்டில் கொடுங்கல்லூர் தலத்தில் எழுந்தருளிய பகவதி அம்மனை வேண்டுகிறாள் கண்ணகி. பகவதி அம்மன் அவளை அப்படியே ஆட்கொள்கிறார். கண்ணகிக்கு முக்தி அருளிய தலமாக இத்தலம் கருதப்படுகிறது. பின்னாட்களில் சேரன் செங்குட்டுவன் என்ற அரசர், பகவதி அம்மனுடன் இணைந்த கண்ணகிக்கு கோயில் எழுப்பியுள்ளார்.

அன்று முதல் பகவதி அம்மன், கண்ணகி அம்மன், கொடுங்கல்லூரம்மை, பத்ரகாளி ஆகிய பெயர்களில் தேவி அழைக்கப்பட்டு வணங்கப்படுகிறார். தாட்சாயணியின் உடல்பாகம் விழுந்த இடமாகவும் இத்தலம் கருதப்படுவதால், மகாசக்தி பீடம் என்ற சிறப்பையும் பெறுகிறது.

உக்கிரகாளி

கொடுங்கல்லூர் பகவதி அம்மன், மிகவும் உக்கிரம் வாய்ந்த அம்மனாகக் கருதப்படுகிறார். எட்டு கரங்களுடன் அருள்பாலிக்கும் அம்மன், இங்கு வாழும் மக்களின் இல்லங்களில் நடைபெறும் அனைத்து விசேஷங்களிலும் முதல் மரியாதை பெறுகிறார். மிகவும் உக்கிரமாக இருந்த காலங்களில், மக்கள் அம்மனைக் கண்டு பயந்து நடுங்கினார்கள். ஆதிசங்கரர் ஸ்ரீசக்கரம் யந்திர பிரதிஷ்டை செய்து அம்மனை சாந்தரூபியாக மாற்றினார். அதன்பிறகு அம்மனின் உக்கிரம் குறைந்ததாகக் கூறப்படுகிறது.

தொடக்க காலத்தில் பகவதி அம்மனுக்கு உயிர் பலி கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. கிராமத்து மக்கள் கள்ளைப் படைத்ததாகவும் கூறப்படுகிறது. யந்திர பிரதிஷ்டைக்குப் பிறகு, உயிர் பலிக்குப் பதில் குங்கும குருதி அபிஷேகமும், கள்ளுக்குப் பதில் இளநீரும் படைக்கப்படுகிறது.

பகவதி அம்மன் எட்டு கரங்கள், பெரிய கண்கள், சிறிய இடை, உக்கிர முகம், ஆறடி உயரம் கொண்டு, வலது காலை மடக்கி, இடது காலை தொங்கவிட்டபடி வடக்கு நோக்கி, தலையில் சூடி, கொடுங்கல்லூர் அரசி போல் அமர்ந்து அருள்பாலிக்கிறார்.

கோயில் அமைப்பு

பகவதி அம்மன் கோயில் கருவறை அருகே சிறிய அறை உள்ளது. அதுவும் மூலஸ்தானமாக கருதப்பட்டு பூஜைகள் நடைபெறும். அருகே கிழக்கு முகமாக சிவபெருமானுக்கு தனி சந்நிதி அமைந்துள்ளது. ஒரே நேரத்தில் சிவபெருமானையும், பகவதி அம்மனையும் தரிசிக்கலாம். ருருஜித் விதானம் என்ற தாந்திரீக முறைப்படி ஒருபுறம் சிவபெருமானும், மறுபுறம் கணபதி, ஏழு கன்னியர் அமர்ந்திருக்க நடுவே தேவி நிறுவப்பட்டுள்ளார்.

கோயில் முழுவதும் செப்புத் தகடுகள் வேயப்பட்டுள்ளன, நுழைவு வாயிலில் 12 அடி உயரத்தில் ஷேத்ர பாலகர்கள் உள்ளனர். தினமும் இவர்களுக்குச் சர்க்கரை அன்னத்தில் தயிர் சேர்த்து நிவேதனம் செய்யப்படுகிறது. முதல் மரியாதை பகவதி அம்மனுக்கே செய்யப்படுகிறது.

தென்மேற்கு மூலையில் கூரையற்ற கோயிலில் வடக்கு முகமாக ‘வைசூரிமாலை’ அம்மன் அருள்பாலிக்கிறார். அம்மை நோய் தீர, வைசூரிமாலை அம்மனுக்கு மஞ்சள் பூசி வழிபடுவது வழக்கமாக உள்ளது. கோயிலுக்கு 50 அடி தள்ளி திருக்குளம் அமைந்துள்ளது.

வைசூரிமாலை அம்மன்

இத்தலத்தில் உள்ள துவாரபாலகர்களும், வைசூரிமாலை அம்மனும், கோவலன் – கண்ணகிதான் என்று பக்தர்கள் மத்தியில் நம்பிக்கையாக உள்ளது. கொடுங்கல்லூர் பகவதி அம்மனுக்கு லோகாம்பிகை, கன்யாதேவி ஆகிய பெயர்களும் உண்டு. மனோதரி என்பவர் கன்யாதேவியிடம் சென்று, தன் அசுர கணவர் குறித்து முறையிட்டார், மேலும் தன் கணவரிடம் இருந்து தன்னைக் காப்பாற்றும்படி வேண்டினார்.

தேவியும் தன் உடலில் இருந்து வெளியேறிய சில வியர்வைத் துளிகளை அவரிடம் கொடுத்து, ஆபத்து காலத்தில் பயன்படுத்திக் கொள்ளப் பணித்தார். ஆனால் அதற்கு முன்பாகவே கன்யாதேவி, அசுரனை மாய்த்து விடுகிறார். இதனால் கோபம் அடைந்த மனோதரி, அந்த வியர்வைத் துளிகளை கன்யாதேவி மீது தெளிக்கிறார். இதனால் கன்யாதேவிக்கு வெப்ப நோய் உண்டாயிற்று. பாதிக்கப்பட்ட கன்யாதேவி, சிவபெருமானின் அருளால், அந்நோயில் இருந்து நீங்கப் பெற்றார். மனோதரிக்கும் இத்தலத்தில் சந்நிதி உள்ளது. அவரே ‘வைசூரிமாலை’ என்று அழைக்கப்படுகிறார்.

குல தெய்வம்

ஒருகாலத்தில், திருமாலின் அவதாரமான பரசுராமருக்கும் அவருக்கு உதவிய மக்களுக்கும், தருகா என்ற அரக்கன் பல இன்னல்களை அளித்து வந்தான். அரக்கனிடம் இருந்து தன்னை தற்காத்துக்கொள்ள, சிவபெருமானை நோக்கி, பரசுராமர் தவம் மேற்கொண்டார். பரசுராமருக்கு உதவும் பொருட்டு, சிவபெருமான் பார்வதி தேவியை காளியாக அவதாரம் எடுக்கச் செய்தார். அதன்பலனாக சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் இருந்து பத்ரகாளி வடிவத்தில் தோன்றிய பார்வதி தேவி, அரக்கனை அழித்து, பரசுராமரையும் மக்களையும் காத்தருளினார்.

இதைத் தொடர்ந்து, பரசுராமர், தான் இருந்த இடத்தில் சக்தி தேவிக்கு ஒரு கோயிலை நிறுவி, பகவதி அம்மனாக வழிபட்டார். ஆதியில் சிவன்கோயிலாக இருந்த இத்தலம் அம்மன் கோயிலாக மாறியதாகக் கூறப்படுகிறது.

கேரள தேசத்தை உண்டாக்கிய பரசுராமர், 108 சிவன் கோயில்களையும், 108 அம்மன் கோயில்களையும் தோற்றுவித்தார். தனித்தனி பெயர்கள் இல்லாவிட்டாலும், அனைத்து அம்மன்களும் பகவதி அம்மன் என்ற பெயரிலேயே அழைக்கப்படுகின்றனர்.

கொடுங்கல்லூர் அரச குடும்பத்தினருக்கும் பகவதி அம்மனே குலதெய்வமாக இருப்பதால், அம்மன் கோயில் திருக்கதவுகள் திறக்கப்படும்போது மன்னர் வந்திருந்து, பட்டுக்குடை விரிப்பது உண்டு. இக்கோயில் அருகிலேயே, ஆதி மூலக் கோயிலாக கருதப்படும் ஆதி குரும்பா மூலக் கோயில் உள்ளது. குடும்பி குலத்து மக்கள் இக்கோயிலை பராமரித்து வருகிறார்கள்.

அம்மனின் சிறப்பு

அம்மை நோயால் அவதிப்படுபவர்கள், கண் திருஷ்டியால் பாதிக்கப்பட்டவர்கள், மன அமைதி நாடுபவர்கள், எதிரிகள் தொல்லை உள்ளவர்கள், இத்தலத்துக்கு வந்து பகவதி அம்மனுக்கு சிறப்பு ஆராதனைகள் செய்து வழிபாடு செய்வர். குழந்தை பாக்கியம் வேண்டி, இங்கு தம்பதிகள் ‘துலாபார வழிபாடு’ செய்வதுண்டு. வேண்டுதல் நிறைவேறியதும் இங்கு வந்து அன்னதானம் செய்வது இன்றும் நடைமுறையில் உள்ளது.

பல மாநிலங்களில் இருந்தும் இத்தலத்துக்கு பக்தர்கள் வந்திருந்து தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றுகின்றனர். கேரள மாநிலம் திருச்சூரில் இருந்து 45 கி.மீ தொலைவிலும், குருவாயூரில் இருந்து 52 கி.மீ தொலைவிலும், எர்ணாகுளத்தில் இருந்து 55 கி.மீ தொலைவில் உள்ளது கொடுங்கல்லூர் தலம்.

கடல் வாணிபம்

கடற்கரைக்கு அருகே இத்தலம் அமைந்திருப்பதால், கடல் வாணிபம் செழித்து விளங்கியதற்கான ஆதாரங்கள் கிட்டியுள்ளன. மத்திய கிழக்கு நாடுகளான சிரியா, ஆசியா, எகிப்து போன்றவற்றுடன் வாணிபத் தொடர்பு இருந்துள்ளது. வாசனைப் பொருட்கள் ஏற்றுமதி, மிளகு (யவனப்ரியா) ஏற்றுமதி சிறப்புடன் நடந்துள்ளன.

கடல் மற்றும் உப்பங்கழி நீர்த்தேக்கங்களால் சூழப்பட்ட இந்நகரம், கி.மு 1-ம் நூற்றாண்டிலேயே கடல் வாணிபத்தில் செழித்து இருந்துள்ளதாக வரலாற்று ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

திருவிழாக்கள்

தைமாதம் பொங்கல் திருநாளை ஒட்டி, நான்கு நாட்களுக்கு ‘தாழப்புலி (தாலப்பொலி) உற்சவம் நடைபெறும். இந்நாட்களில் குடும்பி குலத்து பெண்கள், சுமங்கலிப் பெண்கள், பக்தர்கள், யானைகள் முன்செல்ல, பஞ்சவாத்தியங்கள் முழங்க மங்களப் பொருட்களான தேங்காய், அரிசி, தீபம், எண்ணெய், குங்குமம், மஞ்சள், பூ ஆகியவற்றை தட்டில் ஏந்தி ஊர்வலமாகச் சென்று அம்மனுக்குப் படைப்பார்கள். நவராத்திரி, சிவராத்திரி, ஆடி மாதம் முழுவதும், தை வெள்ளிக்கிழமை தினங்களில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

கும்ப மாதத்து பரணி நட்சத்திர நாள் தொடங்கி, மீன மாதத்து பரணி நட்சத்திர நாள் வரை பரணி விழா கொண்டாடப்படுகிறது. ‘கோழிக்கல்லுமூடல்’ என்று நிகழ்வுடன் பரணி விழா தொடங்கும். அனைத்து குலத்தினரும் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவதை நினைவு கூர்ந்து ‘காவு தீண்டல்’ என்ற நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. சந்தனப்பொடி சாத்துதல் நிகழ்ச்சியும் நடைபெறும்.

பரணி விழாவின் மூன்றாம் நாளில் தொடங்கி, இக்கோயில் அருகே உள்ள ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் சிறுவர்கள் பங்குபெறும் ‘குத்தியோட்டம்’ என்ற நிகழ்வு நடைபெறும். தினமும் கோயில் குளத்தில் நீராடி, அம்மன் சந்நிதியில் ஈர உடையுடன் அமர்ந்து, அம்மனின் திருநாமங்களை உச்சரிப்பார்கள். 7 நாட்களுக்குள் அம்மனின் 1,008 திருநாமங்களையும் கூறி முடித்தால் அவர்களது எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்பது நம்பிக்கை. இச்சிறுவர்கள், மகிஷாசுரமர்த்தினியுடன் சூரனை எதிர்த்து போர் புரிந்த வீரர்களாக கருதப்படுகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in