அருள்தரும் சக்தி பீடங்கள் – 16

பிரபாசா பார்வதி
பிரபாசா பார்வதி - சிவன்
பிரபாசா பார்வதி - சிவன்

அம்மனின் சக்தி பீட வரிசையில் பிரபாசா பார்வதி - சோமநாதர் கோயிலும் முக்கியமான தலம். குஜராத் மாநிலத்தின் தென்மேற்குக் கரையில் கிர்சோம்நாத் மாவட்டத்தில் பிரபாச பட்டினக் கடற்கரையில் அமைந்துள்ள இக் கோயில், பிரபாசா பீடமாகக் கருதப்படுகிறது. அம்மனின் வயிற்றுப் பகுதி இங்கு விழுந்ததாகக் கூறப்படுகிறது. 12 ஜோதிர்லிங்கத் தலமாகவும் இக் கோயில் கருதப்படுகிறது.

பிரபாச பட்டணம், தேவ பட்டணம் என்று அழைக்கப்படும் சோமநாதர் கோயில், மிகவும் பழமை வாய்ந்த கோயிலாகும். பிதுர்க்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை நிறைவேற்றுவதற்காக பாண்டவர்கள் இத்தலத்துக்கு வந்து வழிபாடு செய்ததாகக் கூறப்படுகிறது. சந்திரனின் சாபம் நீங்கப் பெற்ற தலமாகவும் இது விளங்குகிறது.

தல வரலாறு

சந்திர பகவானுக்கு சோமன் என்ற பெயர் உண்டு. மிகவும் அழகான தோற்றம் கொண்டவர். தக்‌ஷப்பிரஜாபதி என்பவருக்கு 27 மகள்கள் இருந்தனர். அவர்கள் அனைவரும் சந்திரனை விரும்பியதால், அனைவரையும் சந்திரனுக்கு மணம் முடித்து வைத்தார் தக்‌ஷப்பிரஜாபதி.

சோமநாதர் கோயில்
சோமநாதர் கோயில்

திருமணம் ஆன புதிதில் அனைவரையும் சமமாக நினைத்த சந்திரன், காலப்போக்கில் ரோகிணியிடம் மட்டுமே அன்பு செலுத்தி வந்தார். இது, ரோகிணியின் சகோதரிகளுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. தாங்கள் சந்திரனால் அலட்சியப்படுத்தப்படுவதாக தந்தையிடம் கூறினர்.

மகள்களின் வருத்தத்தை சந்திரனிடம் கூறினார் தக்‌ஷப்பிரஷாபதி. அவர் பல முறை கூறியும் எதற்கும் செவி மடுக்காமல் சந்திரன் இருந்ததால், கோபமடைந்த தக்‌ஷப்பிரஜாபதி, சந்திரனுடைய கலைகள் அனைத்தும் அழிந்து நலியும்படி சாபம் கொடுத்தார்.

சோமநாதர்
சோமநாதர்

சாபத்தின் காரணமாக, சந்திரனின் கலைகள் அழிந்து நலியத் தொடங்கின. சந்திரனுக்கு தொழுநோய் உண்டாகி, அவரது அழகு குலைந்தது. உலகின் உயிர்கள் வாழ வழிசெய்யும் அமிர்தம் சுரக்கும் சக்தி குறைந்தது. சந்திரனின் 16 கலைகளும் ஒவ்வொன்றாக அழியத் தொடங்கின. உலகில் உள்ள உயிர்கள் வாடின. தேவர்களுக்கு கிடைக்க வேண்டிய அவிர்ப்பாகம் நின்றுவிட்டது. இதனால் தேவர்கள் அவரை அழைத்துச் சென்று பிரம்மதேவர் முன்னர் நிறுத்தினர். (குஜராத்தில் உள்ள) திரிவேணி சங்கமத்தில் (பிரபாசத் தீர்த்தம் – இரண்யா நதி, கபில நதி, சரஸ்வதி நதி) நீராடுமாறு, பிரம்மதேவர் சந்திரனைப் பணித்தார். அத்துடன் சிவபெருமானை நோக்கி தவம் இருக்குமாறு கூறினார்.

தன்னுடைய நிலைமையை எண்ணி கவலை கொண்ட சந்திரன், பிரம்மதேவர் கூறியபடி சிவபெருமானிடம் சரண் புகுந்தார். ஓராயிரம் ஆண்டுகள் சந்திரன் சிவபெருமானை நோக்கி தவம் இருந்தார்.

சந்திரனைக் காப்பாற்ற திருவுளம் கொண்ட சிவபெருமான், அவரை தன் தலையில் சூடிக்கொண்டதோடு மட்டுமல்லாமல், 15 நாட்கள் சந்திரனின் கலைகள் குறையவும், 15 நாட்கள் சந்திரனின் கலைகள் வளர்வதற்கும் அருள்புரிந்தார். அதற்கு நன்றி செலுத்தும் பொருட்டு, சோமன் என்ற பெயரைத் தாங்கிய சந்திரன், இந்தத் தலத்தில் தேவியுடன் இணைந்த ஜோதிர்லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து வணங்கினார்.

சோமனால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர் என்பதால் இத்தலத்தில் சிவபெருமான் ‘சோமநாதர்’ என்ற பெயரில் கோயில் கொண்டு அருள்பாலிக்கிறார். ‘பிரபாசா பட்டணம்’ என்ற இத்தலம் ‘சோமநாதத் தலம்’ என்றும் அழைக்கப்பட்டது. சோமநாதபுரத்தின் கடற்கரையில் சந்திரனின் ஒளி பிரகாசமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட சமயத்தில் மட்டும் இங்கு சூரியனின் ஒளியும், சந்திரனின் ஒளியும் மிகவும் பிரகாசமாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தேவியின் கருணை

பல தலங்களில் தேவியும் பிறை சூடிய வடிவத்துடன் அருள்பாலிக்கிறார். ஈசனின் இடப்பாகத்தைப் பெற்றதால் ஈசனின் பெருமைகள் அனைத்தும் தேவிக்கும் உண்டு. மார்க்கண்டேயனுக்காக காலனை இடது காலால் உதைத்த சிவபெருமான், சந்திரனை தன் தலையில் சூடியதோடு, அவரது கலைகளையும் வளரச் செய்தார். இடது பாகத்தில் சந்திரனை சூடியதால், அது தேவியின் பகுதி ஆகிறது. இதன் காரணமாகவே தேவிக்கு பல தலங்களில் பிறை சூடும் வழக்கம் உண்டாயிற்று.

மார்க்கண்டேயனுக்காக காலனை உதைத்தது தேவியின் திருவடி என்பது அறியப்படுகிறது. தாயின் கருணையோடு சந்திரனுக்கு அருள்பாலித்தது, மார்க்கண்டேயனுக்காக காலனை உதைத்தது தேவி என்பதால், தேவியின் அருள் இருந்தாலே அனைத்தும் உலகில் சாத்தியமாகும் என்பது நம்பிக்கை.

அன்னையின் (சந்திரபாகா) சக்தியும், ஈசனின் (சோமநாதர்) அருளும் சேர்ந்து தன்னைக் காத்ததால், இருவரும் கலந்த உருவத்தையே அமைத்து, சந்திரன் வழிபட்டுள்ளார். தேவியின் வயிற்றுப் பகுதி இத்தலத்தில் விழுந்ததால், இத்தலம் சக்தி பீடமாகவும், ஜோதிர்லிங்கத் தலமாகவும் விளங்குகிறது.

கோயில் அமைப்பு

முதலில் இக்கோயில் தங்கத்தால் கட்டப்பட்டிருந்தது. பிறகு வெள்ளியாலும், மரத்தாலும், கற்களாலும் அமைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. பல முறை இக்கோயில் இடிக்கப்பட்டும் கட்டப்பட்டும் வந்துள்ளது. கிறிஸ்து சகாப்தம், அரேபியர்கள் என்று ஒவ்வொருவரது ஆட்சியிலும் இக்கோயில் இடிக்கப்பட்டுள்ளது. ஐந்தாவது முறையாக கிபி 1114-ல் இக்கோயில் குமார பாலா என்பவரால் விஸ்தரித்துக் கட்டப்பட்டது. கஜினி முகம்மது காலத்தில் இக்கோயில் தரைமட்டமாக்கப் பட்டது. அதன்பிறகு வெகுகாலம் இக்கோயில் கட்டப்படாமல் இருந்துள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, சர்தார் வல்லபாய் பட்டேலின் தீவிர முயற்சியால், தற்போதுள்ள கோயில் கட்டப்பட்டது.

இந்தக் கோயில் அமைந்திருப்பது கடற்கரையில் என்பதால், அரிப்பு ஏற்படாமல் காப்பதற்காக, ஒரு பெரிய கற்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. சுவருக்கும் கோயிலுக்கும் இடையே ஒரு கல் ஸ்தம்பம் காணப்படுகிறது. இந்த ஸ்தம்பமே, பழைய கோயிலின் அடையாளச் சின்னமாகக் கருதப்படுகிறது.

பழைய கோயிலில் காணப்பட்ட சிற்பங்களைச் சேகரித்து, கோயில் அருகில் ‘சாட்சி சாலை’ அமைக்கப்பட்டுள்ளது. பழம்பொருள் ஆராய்ச்சியாளர்கள் பலர் இன்னும் இதுகுறித்து ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளனர். தற்போதுள்ள கோயில் மாடக்கோயில் போன்று அமைக்கப்பட்டுள்ளது. ‘சாண்ட்ஸ் ஸ்டோன்’ என்ற சிவப்பு நிறக் கற்களால் இக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது. இடையிடையே சலவைக் கற்கள் பொருத்தப்பட்டு, சிற்ப வேலைகள் நிறைந்து காணப்படுகிறது.

கிழக்குப் பார்த்த நுழைவாயிலுடன், பெரிய பெரிய தூண்கள் நிறுத்தப்பட்டு, இரண்டு மாடிக் கட்டிடம் போல் அமைக்கப்பட்ட இக்கோயிலுக்கு, பல படிகள் ஏறிச் செல்ல வேண்டும். மகா மண்டபத்தில் சலவைக் கல்லால் ஆன நந்தி உள்ளது. அதற்கு இருபக்கத்து சுவர்களிலும் ஹனுமன், விநாயகர், துர்கை, பைரவர், காளி போன்ற பல வடிவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த இடத்தில் பார்வதி தேவியின் வடிவமும் உள்ளது.

இதற்கு அடுத்த விதானம் 16 தூண்களால் தாங்கப்பட்டுள்ளது. இதற்குப் பின்னால் அமைந்த கருவறையில் 3 அடி உயரத்தில் சோமநாதர் லிங்க வடிவில் அருள்பாலிக்கிறார். அன்னை பார்வதி தேவியின் பிம்பமும் அதில் இணைந்திருப்பது உணரப்படுகிறது. ஆதியில் சோமனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஜோதிர்லிங்கம், இத்தலத்துக்கு கீழே 100 அடி ஆழத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

பிற கோயில்கள்

இத்தலத்தில் சிவபெருமானுக்கு 135 கோயில்களும், திருமாலுக்கு 5 கோயில்களும், பார்வதி தேவிக்கு 25 கோயில்களும், சூரியனுக்கு 16 கோயில்களும், விநாயகருக்கு 5 கோயில்களும் உள்ளன. மேலும், நாகர், சந்திரனுக்கும் கோயில்கள் உள்ளன.

சோமநாத புரத்தில் அகல்யா பாய் என்ற அரசி கட்டிய கோயில் அமைந்துள்ளது. இது ‘அகல்யா பாய் கோயில்’ என்றே அழைக்கப்படுகிறது. இக்கோயிலில் கரனீசர் (ஈசன்) கோயில் கொண்டுள்ளார். பாதாள லிங்கம், விநாயகர், அன்னபூரணி, திருமால், மகிஷாசுரமர்த்தினி ஆகியோருக்கு தனிச் சந்நிதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

‘தேகோத் சர்க்கம்’ என்ற இடத்தில் கிருஷ்ண பரமாத்மா உயிர் நீத்து சுவர்க்கம் புகுந்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, இந்த இடம் ‘சுவர்காரோ கணம்’ என்று அழைக்கப்படுகிறது. இரண்யா நதிக்கரையில் குர்ரா மரத்தில் அமர்ந்திருந்த வேடன் ஒருவன், மான் ஒன்று ஓடுவதாக நினைத்து அம்பு எய்தினான். அந்த அம்பு கிருஷ்ணரின் காலைத் தைத்தது. இந்த சமயத்தில் தன் மேனியை இவ்விடத்தில் விட்டுவிட்டு கிருஷ்ணர் வானுலகம் சென்றதாகக் கூறப்படுகிறது.

கிருஷ்ணரின் அண்ணன் பலராமனும் இந்த இடத்தில்தான் தன் சரீரத்தை விட்டுச் சென்றார். பல தலைகளுடன் கூடிய பாம்பின் சிலை, பலராமர் மேனியை நீத்த இடத்தை குறிப்பிடுவதாகக் கூறப்படுகிறது. லட்சுமி நாராயணர் கோயில், பீமேஸ்வரர் சந்நிதி ஆகியவையும் இங்கு அமைந்துள்ளன.

புராண ஆதாரம்

ஸ்கந்த புராணத்தில் ‘ப்ரபாச காண்டம்’ பகுதியில், ஆதி சோமநாதர் கோயிலின் லிங்கம், சூரியனைப் போன்ற பிரகாசத்துடன் பூமிக்கடியில் உள்ளதாகக் கூறப்படுகிறது. சந்திரன் இத்தலத்தில் சிவபெருமானை வழிபட்ட சம்பவம், மகாபாரதத்தில் கூறப்பட்டுள்ளது. பாண்டவர்கள் தங்கள் பாட்டனாரான பீஷ்மர், ஆச்சாரியரான துரோணர், பங்காளிகளான துரியோதன சகோதரர்கள், சகோதரனான கர்ணன் ஆகியோரை போரில் இழந்தனர். சிறு வயதில் தந்தை பாண்டு மகாராஜாவையும் இழந்தனர். பிதுர்க்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளைச் செய்ய பாண்டவர்கள் இங்கு வந்ததாகவும் கூறப்படுகிறது. அவர்கள் பல நாட்கள் இங்கு தங்கியிருந்து, தவம் செய்ததாகவும் அறியப்படுகிறது. கிருஷ்ணர் உயிர் நீத்த இடம் இதுதான் என்று பாகவத புராணம் கூறுகிறது.

இந்த சரித்திர ஆதாரங்களை அடிப்படையாக வைத்து, கஜினி முகமது, இக்கோயிலை பலமுறைத் தாக்கி, இங்குள்ள பொன், பொருட்களைக் கவர்ந்து சென்றதாகக் கூறப்படுகிறது.

திருவிழாக்கள்

கார்த்திகை சோமவாரம், மகா சிவராத்திரி, பிரதோஷ தினங்களில் சோமநாதருக்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்படும். சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், வில்வ இலைகள், மலர்களால் அர்ச்சனை செய்து பக்தர்கள் வழிபடுவர். சகல பாவங்கள் நீங்கவும், இறப்புக்குப் பின் முக்தி கிடைக்கவும் இங்கு சோமநாதருக்கு வேண்டுதல் நிறைவேற்றப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in