அருள்தரும் சக்தி பீடங்கள் – 14

ஜலந்தர் திரிபுரமாலினி
திரிபுரமாலினி
திரிபுரமாலினி

அம்மனின் சக்தி பீட வரிசையில் ஜலந்தரில் உள்ள தேவி திருபுரமாலினி கோயில் முக்கியத் தலமாகக் கருதப்படுகிறது. தேவியின் தனங்களில் ஒன்று இத்தலத்தில் விழுந்ததாகக் கூறப்படுகிறது. மகாசரஸ்வதி, மகாலட்சுமி, மாகாளி ஆகிய சக்திகளின் ஒருங்கிணைந்த சக்தியாக தேவி திரிபுரமாலினி விளங்குகிறார்.

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் திரிபுரமாலினி திருத்தலம் உள்ளது. டெல்லியில் இருந்து அமிர்தசரஸ் செல்லும் வழியில் உள்ளது ஜலந்தர். பஞ்சாப் மாநிலத்தின் தலைநகரமான சண்டிகர், தேவியின் பெயரைத் தாங்கி உள்ளது. அன்னையின் (சண்டி) அருள் நிழலில் அமைக்கப்பட்ட நகரம் என்பதால் இது சண்டிகர் என்று பெயர் பெற்றுள்ளது.

அன்னை சண்டியே, இத்தலத்தில் திரிபுரமாலினி என்ற பெயரைத் தாங்கி அருள்பாலிக்கிறார். கால்கா என்ற பகுதியில் ‘காளி’ என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். கல்கத்தா காளி கட்டத்தில் காளியாக அருள்பாலிக்கிறார். பல்வேறு இடங்களில் பல்வேறு வகையான வடிவங்களையும், பெயர்களையும் பெற்றிருந்தாலும் சக்தி ஒன்றே என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை.

ஜலந்தரன் வரலாறு

தேவர்களின் தலைவன் இந்திரன் ஒருசமயம் கயிலை மலை வழியாக பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது சிவபெருமான், முதியவர் வேடம் தாங்கி வழியில் நின்று கொண்டிருந்தார். தான் வருவதை அறிந்தும், ஒரு முதியவர் வழியில் நிற்பதை உணர்ந்த இந்திரன், அவர் மீது கோபம் கொண்டு அவர் மீது வச்சிராயுதத்தை ஏவினார். ஆனால், வச்சிராயுதம், பொடிப் பொடியாக விழுந்தது.

வச்சிராயுதத்தை ஒருவர் பொடியாக்கிவிட்டார் என்றால், அவர் நிச்சயமாக சாதாரணமானவராக இருக்க முடியாது. தான் சென்ற வழியில் குறுக்கே நின்றது சிவபெருமான் என்பதை உணர்ந்த இந்திரன், அவரிடம் மன்னிப்பு கோரினார். அறியாமல் செய்து விட்டதாக, அவர் பாதங்களில் விழுந்து வணங்கினார். சிவபெருமானும் இந்திரனை மன்னித்தருளினார்.

இந்திரன் சிவபெருமானை வச்சிராயுதத்தால் தாக்கிய சமயம், ஏற்பட்ட சினம், வியர்வைத் துளிகளாக, சிவபெருமானின் மேனியில் இருந்தது. சிவபெருமான் வியர்வைத் துளியை வழித்து எறிந்தார். அந்த வியர்வைத் துளி, கடலில் விழுந்து, ஓர் அசுரனாக உருவம் பெற்றது. சமுத்திர ராஜனும் அந்த அசுரனை தன் மகனாக எண்ணி வளர்த்து வந்தார். ஜலத்தில் இருந்து பிறந்ததால் அசுரனுக்கு ‘ஜலந்தரன்’ என்று பெயர் சூட்டினார்.

ஜலந்தர் பெயர்க் காரணம்

சிறந்த வல்லமை படைத்தவனாக ஜலந்தரன் வளர்ந்து வந்தான். தனக்கென்று ஒரு நகரத்தை அமைத்துக் கொண்டு ஆட்சி புரிந்து வந்தான். தக்க வயதில் காலநேமி என்பவருடைய பெண் பிருந்தையை மணந்தான். அனைத்து வளங்களையும் பெற்றிருந்ததால், ஆணவம் கொண்டான் ஜலந்தரன். தானாக வலியச் சென்று தேவர்களுக்கு துன்பத்தை விளைவித்தான். சிவபெருமானையும் வெற்றி காண வேண்டும் என்ற எண்ணம் கொண்டான்.

அந்த எண்ணத்தை நிறைவேற்ற கயிலையை நோக்கி பயணித்தான். ஜலந்தரன் வருவதை அறிந்த முனிவர்கள் ஓடி ஒளிந்தனர். இனி கொடியவனால் என்ன நேருமோ என்று அஞ்சினர். அப்போது வேதியர் வேடம் தாங்கி சிவபெருமான், ஜலந்தரன் செல்லும் பாதையில் அவனை நோக்கி வந்தார். யார்? எங்கிருந்து வருகிறாய்? எங்கே செல்லப் போகிறாய்? என்று ஜலந்தரனைப் பார்த்து வினவினார் சிவபெருமான். அதற்கு, தன் பெயர் ஜலந்தரன் என்றும், சிவபெருமானுடன் போரிட்டு அவரை வெல்லச் செல்வதாகவும் ஆணவத்துடன் கூறினான். வேதியரும், முதலில் தன்னை வென்றுவிட்டு, பிறகு சிவபெருமானுடன் போரிடச் செல்லுமாறு பணித்தார்.

இதைக் கேட்டு சிரித்தான் ஜலந்தரன். “தேவாதி தேவர்களே என்னிடம் தோற்று விட்டார்கள். நீயா என்னை வெல்லப் போகிறாய்?” என்று வேதியரைப் பார்த்து ஏளனம் செய்தான். வேதியரும், தேவாதி தேவர்களை வெற்றி கண்டதுபோல, தன்னிடமும் போரிட்டு, அதில் வெற்றி பெற்றுவிட்டு சிவபெருமானுடன் போரிடச் செல்லலாம் என்று கூறினார்.

கோபம் கொண்ட ஜலந்தரன், வேதியரை நோக்கி, “இனி எமலோகம் செல்லப் போகிறாய்” என்று கர்ஜித்தான். உடனே வேதியர் தன் கால் கட்டை விரலால் ஒரு சக்கரத்தை வரைந்தார். பூமியில் வரையப்பட்ட அந்த சக்கரத்தை தூக்கிவிட்டு, சிவபெருமானிடம் போர் புரியலாம் என்று ஜலந்தரனை அறிவுறுத்தினார் வேதியர்.

அந்த சக்கரத்தை அலட்சியமாக எண்ணி, ஜலந்தரன் தூக்கத் தொடங்கினான். முழு பலத்தையும் உபயோகித்து அதை தூக்கியபோது, அந்த சக்கரம் அவனை இரு துண்டுகளாக்கியது. இப்படி, ஆணவத்துடன் செயல்பட்ட ஜலந்தரனை, சிவபெருமான் அழித்து, முனிவர்களையும் தேவர்களையும் காத்த இடம் என்பதால், இந்த இடம் ஜலந்தர் என்று அழைக்கப்படுகிறது.

திரிபுரமாலினி

மூன்று உலகங்களையும் (திரிபுரம்) நடுங்க வைத்த ஜலந்தரன், அம்மையப்பனால் (திரிசடையன்) அழிக்கப்பட்ட இடத்தில் தேவியின் உடற்கூறு விழுந்ததால், இங்கு தேவி, திரிபுரமாலினி என்ற பெயர் தாங்கி அருள்பாலிக்கிறார். திரிசடையனின் சரிபாதியைக் கொண்டவர் தேவி என்பதால், தேவிக்கு ‘திரிபுரமாலினி’ என்ற பெயர் வந்தது. அதர்மம் அழிக்கப்படும் இடங்களில் எல்லாம் தேவியின் உடற்கூறு விழுந்து அவை சக்தி பீடங்களாகப் போற்றப்படுகின்றன.

மூவுலங்களிலும் ஆட்சி செலுத்துபவராக திரிபுரமாலினி விளங்குகிறார். அவ்வுலகங்களில் உள்ள அனைவரையும் தன் குழந்தைகளாக பாவித்து அருள்கிறார். காளி தேவியின் அம்சமாக ஜலந்தரில் அருள்பாலிக்கும் திரிபுரமாலினி, நல்லோரைக் காத்து, தீயோரை அழிக்கும் அரசியாக விளங்குகிறார். மேலும், மகா காளி, மகாலட்சுமி, மகாசரஸ்வதியின் அம்சமாக திரிபுரமாலினி விளங்குகிறார்.

சண்டி தேவி

இந்தியா சுதந்திரம் பெற்றபோது, பஞ்சாபின் தலைநகரான லாகூர் பாகிஸ்தானுடன் இணைந்தது. அதனால் பஞ்சாப் மாநிலத்துக்கு தலைநகராக சண்டிகர் தேர்ந்தெடுக்கப்பட்டது. இதற்கு அடுத்துள்ள மலைத் தொடரில் சண்டி தேவிக்கு கோயில் இருந்தது. மக்கள் அனைவரும் சண்டி தேவியை வணங்கி வந்துள்ளதால், அப்பகுதி சண்டிகர் என்று அழைக்கப்பட்டுள்ளது.

காளியாகிய சண்டி தேவி இங்கு ஆட்சி புரிந்து வருகிறார். ஆணவத்தால் சிவபெருமானை போருக்கு அழைத்த ஜலந்தரன் அழிக்கப்பட்ட இடமாகவும் சண்டிகர் விளங்குகிறது. இதே காளி, திரிபுரமாலினி என்ற பெயரில் ஜலந்தரில் ஆட்சி புரிகிறார் என்பது மக்களின் நம்பிக்கை. மனிதர்களிடம் உள்ள அசுர குணங்களான ஆணவம், சூது, வஞ்சகம், கயமை போன்றவற்றை அழிக்கும் சக்தியாக திரிபுரமாலினி விளங்குகிறார். தன் குழந்தைகள் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்று ஒவ்வொரு தாயும் நினைப்பதுபோல திருபுரமாலினி, பக்தர்களைக் காத்து அருள்கிறார்.

பைரவர்

ஜலந்தர் சக்தி பீடத்தில் சிவபெருமான் பைரவராக வணங்கப்படுகிறார். அவருக்கு ‘பிஷான்’ என்ற பெயரும் உண்டு. இக்கோயிலில் மிகப் பெரிய தீர்த்தக் குளம் உண்டு. ஸ்தன பீடம், திர்கர்த் தீர்த்தம், ஜலந்தர் பீடம் என்று அழைக்கப்படும் இத்தலத்தில் சிந்தாபூர்ணி, ஜ்வாலா, வைஷ்வாஸ்வரி, கங்க்ரா மாதா ஆகிய அம்சங்கள் இணைந்து அருள்பாலிப்பதாக ஐதீகம். கங்க்ரா பள்ளத்தாக்கில் கங்க்ரா சக்தி பீடமாக அழைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இங்கு விஷ்வாக்‌ஷ்மி தேவியாக அருள்பாலிக்கிறார். குழந்தைகளுக்கு கல்விச் செல்வத்தையும் அருள்கிறார். அதன் காரணமாக, திரிபுரமாலினி மகா காளி, மகா லட்சுமி, மகா சரஸ்வதியாகவும் போற்றப்படுகிறார். அமர்நாத் குகைக் கோயிலைப் போன்று இக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் அமைக்கப்பட்டு 200 ஆண்டுகளுக்கும் மேல் ஆனதாக வரலாறு தெரிவிக்கிறது. தேவி தலாப் கோயில் என்று அழைக்கப்படும் இக்கோயில் வளாகத்தில் மேலும் சில கோயில்களும் அமைந்துள்ளன. ராம் மந்திர், காளி மந்திர் அமைந்துள்ளன.

தேவி பாகவதம்

சக்தி பீடங்கள் குறித்து வியாசர் தனது தேவி பாகவதத்தில் கூறும்போது, சக்தி பீடங்களைப் பற்றிய செய்திகளை படிக்கும்போது, கேட்கும்போது, மனதால் சிந்திக்கும்போது, நேரில் சென்றால் என்ன பலன்கள் கிட்டுமோ, அவை கிட்டும் என்கிறார். அவர்கள் சகல பாவங்களில் இருந்து விடுபட்டு அனைத்து நன்மைகளையும் பெறுவர் என்று தேவி பாகவதத்தில் கூறப்பட்டுள்ளது. பிரம்மதேவர், சிவபெருமான், திருமால் மூவரும் தேவியை நோக்கியே தியானம் செய்தனர் என்று இதில் கூறப்பட்டுள்ளது.

தேவி பாகவதத்தைப் படிப்பதால் அஸ்வமேத யாகம் செய்த பலனை அடையலாம். இந்நூலை தானம் செய்தால் குழந்தை வரம், தனப் பிராப்தி, கல்விச் செல்வம் கிட்டும். நவராத்திரி நாட்களில் தேவி பாகவதத்தை வைத்து பூஜித்தால், துர்கா, லட்சுமி, சரஸ்வதி மூவரும் தீய சக்திகளை அழித்து, நீங்காத செல்வமும், கல்வியும் வரமாக அருள்வர் என்று வியாசர் குறிப்பிட்டுள்ளார்.

திருவிழாக்கள்

நவராத்திரி சமயத்தில் இங்கே துர்கா பூஜை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தேவிக்கு விதவிதமான உடைகள், ஆபரணங்கள் உடுத்தி வழிபடுவது வழக்கமாக உள்ளது. அப்போது மகிஷாசுர மர்த்தினி, துர்கா மாதா ஸ்துதி கூறப்பட்டு, தேவிக்கு சிறப்பு ஆரத்தி காண்பிக்கப்படும். ஜீன் மாதா சாலீஸா, ஸ்ரீ துர்கா சாலீஸா, ஸ்ரீ விந்த்யேஸ்வரி சாலீஸா கூறப்படும். மா கார்த்தாயணிக்கு ஆரத்தி, குஷ்மாண்ட அம்மாவுக்கு ஆரத்தி, ஸ்கந்த மாதாவுக்கு ஆரத்தி, அம்பே கவுரி மாதாவுக்கு ஆரத்தி, மாதா வைஷ்ணோ தேவிக்கு ஆரத்தி, பிரம்மசாரிணி தேவிக்கு ஆரத்தி, சந்திரகாந்தா மாதாவுக்கு ஆரத்தி, ஸ்ரீ ஜீன் மாதாவுக்கு ஆரத்தி என்று கூறப்பட்டு ஆரத்தி காண்பிக்கப்படும். நவராத்திரி நாட்களில் பக்தர்கள் ஏராளமானோர் இங்கு வந்து வழிபாடு செய்வது வழக்கம்.

டிசம்பர் மாதத்தில் இங்கு ஹரிவல்லப் சங்கீத் சம்மேளன் நிகழ்ச்சி நடைபெறும். அதுசமயம் இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் இசைக் கலைஞர்கள் இங்கு வந்திருந்து இசை நிகழ்ச்சிகள் நடத்துவர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in