அருள்மாரி பொழியும் நெல்லுக்கடை மாரி!

நெல்லுக்கடை மாரியம்மன்
நெல்லுக்கடை மாரியம்மன்

நாகப்பட்டினத்தில் குடிகொண்டு தன்னை நாடி வருவோருக்கெல்லாம் அருள்மாரி பொழிந்துகொண்டிருக்கிறாள் நெல்லுக்கடை மாரியம்மன். ஊருக்கு நடுவே ஒய்யாரமாகக் கோயில் கொண்டு, உலகையே ஆட்சி செய்துகொண்டிருக்கிறாள் இந்த மாரியம்மன். அழகிய ஆலயம். சக்தியும் சாந்நித்தியமும் கொண்ட ஆலயம் என்பதை பிராகாரம் வரும்போதே உணரமுடியும்.

அந்த ஊரில், பெரியநாயகத்தம்மாள் என்பவர், நெல் விற்கும் கடை வைத்திருந்தார். ஒருநாள், அவரது கடைக்கு சிறுமி ஒருத்தி வந்து நின்றாள். அந்த அம்மாவைப் பார்த்து புன்னகைத்தாள். “கொஞ்சம் நெல் தருகிறீர்களா?” என்று கேட்டாள். கண்களில் கனிவும் புன்னகையில் கருணையுமாக இருந்த சிறுமியைப் பார்த்ததும், கடைக்குள் சென்ற பெரியநாயகத்தம்மாள், கூடை நிறைய நெல்லை எடுத்துக்கொண்டு வந்து, அந்தச் சிறுமிக்கு வழங்குவதற்காக வாசலுக்கு வந்தாள். ஆனால், அந்தச் சிறுமியைக் காணோம்.

அன்றிரவு, பெரியநாயகத்தம்மாளின் கனவில் அம்மன் வந்தாள். “நான் மகமாயி. உன் வீட்டுக்கு அருகில் உள்ள வேம்பில்தான் குடிகொண்டிருக்கிறேன். எனக்குக் கோயில் கட்டி வழிபடுங்கள். இந்த ஊரையும் நீரையும் நிலத்தையும் காப்பேன்” என்று அம்மன் அசரீரியாகச் சொல்ல, தடக்கென எழுந்தாள். விடிந்ததும் வேப்பமரத்துக்குச் சென்றாள். அங்கிருந்த புற்றுக்கு மஞ்சள் குங்குமமிட்டு வழிபட்டாள். ஊர்மக்களுக்கும் தனது கனவில் அம்மன் வந்ததைச் சொன்னாள். அவர்களும் புற்றை வணங்கி வழிபடத் தொடங்கினார்கள்.

பின்னர், அந்த இடத்தில் அம்மனுக்கு திருவுருவம் செய்து பிரதிஷ்டை செய்தார்கள். சிறிய அளவில் கோயிலும் எழுப்பினார்கள். அந்த அம்மன் மாரியம்மன் என அழைக்கப்பட்டாள். நெல்லுக்கடைகள் நிறைந்த இடத்துக்கு நடுவே எழுந்தருளியதால் நெல்லுக்கடை மாரியம்மன் என்று இன்றும் அழைக்கப்பட்டு வருகிறாள்.

இந்த அம்மனை சக்தியான தெய்வம் என நாகப்பட்டினம் சுற்றுவட்டார மக்கள் கொண்டாடுகின்றனர். கிழக்கு நோக்கிய கோயில். அம்மனும் கிழக்குப் பார்த்தபடி இருக்கிறாள். ஆண்டுக்கு ஒருமுறை அம்மனுக்கு தைலக்காப்பு சாத்தப்படுவது இங்கே விசேஷம். அம்மனுக்கு எதிரிலேயே அருகிலேயே சிறியதொரு அம்மன் விக்கிரகம் உள்ளது. அபிஷேக ஆராதனைகள் எல்லாம் இந்த அம்மனுக்குத்தான்.

அம்மனுக்கு மாவிளக்கு ஏற்றுவது இங்கே விசேஷம். வேப்பிலைக் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்களும் இருக்கிறார்கள்.

அம்மனுக்கு பால் குடம் எடுத்துவந்து பிரார்த்தனை செய்துகொண்டால், விரைவில் குழந்தை வரம் கிடைக்கும் என்பது ஐதீகம். மேலும், நெல்மணிகளை வைத்து வேண்டிக்கொண்டால், அந்த வருடத்தில், அவர்களின் நிலத்தில் அமோக விளைச்சலைத் தந்திடுவாள் அம்மன் என்று சிலாகித்துச் சொல்கிறார்கள் விவசாயிகள்.

செடல் சுற்றும் வழிபாடு என்பது சித்திரை மாதத்தில் இங்கு நடைபெறும் முக்கியத் திருவிழா. குழந்தைப் பருவத்தில் ஏதேனும் நோய், திடீர் பயம், மனச்சோர்வு, சரியாக உணவு உட்கொள்ளாமல் இருத்தல் முதலான பிரச்சினைகளுடன் குழந்தைகள் இருந்தால், அவர்களை செடலில் சுற்றவைக்கிற பிரார்த்தனை இது. குழந்தைகள் பூரண குணமடைந்தவுடன் செடலேறுதல் நிகழ்வில், பங்கெடுக்க வைத்து, நேர்த்திக்கடனைச் செலுத்துகிறார்கள் பக்தர்கள்.

செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் நாகை செடல்முத்து மாரியம்மனை, நெல்லுக்கடை மாரியம்மனை வேண்டிக்கொண்டால், வேண்டியதெல்லாம் தந்திடுவாள் அம்மன் .

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in