அருள்தரும் சக்தி பீடங்கள் - 26

குருஷேத்திரா பத்ரகாளி
பத்ரகாளி
பத்ரகாளி

அம்மனின் சக்தி பீட வரிசையில் குருஷேத்திராவும் முக்கியமான தலம். ஹரியாணா மாநிலத்தில் அமைந்துள்ள குருஷேத்திராவில் தேவியின் வலது கணுக்கால் விழுந்ததாகக் கூறப்படுகிறது. தானேஷ்வர் ரயில் நிலையத்தில் இருந்து 3 கிமீ தொலைவில் உள்ள உபதேச பீடத்தில், ‘ஸ்தாணுபிரியை’ என்ற பெயரில், பார்வதிதேவி அருள்பாலிக்கிறார்.

குருஷேத்திராவில் மகாபாரதப் போர் 18 நாட்கள் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. இங்கு பார்வதி தேவி பத்ரகாளியாக எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் திறந்தவெளியில் வலது பாதத்தை மட்டுமே வெளிக்காட்டி தேவி அருள்பாலிக்கிறார்.

பத்ரகாளி வரலாறு

தேவி மகாத்மியத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஆதி பராசக்தி, துர்கை, தேவி, மகாதேவி, மகாமயை, மகாகாளி, சாமுண்டி, காளி, பத்ரகாளி என்று அழைக்கப்படுகிறார். நல்லவற்றைப் பாதுகாக்கும் மகாகாளியாக தேவி வணங்கப்படுகிறார். தாருகாஜித் (தாரிகா அரக்கனை அழித்தவர்), தக்ஷாஜித் (தட்சணை அழித்தவர்), ருருஜித் (ருரு என்ற அரக்கனை அழித்தவர்) மற்றும் மஹிஷாஜித் (மஹிஷாசூரனை அழித்தவர்) என்று நான்கு வடிவங்களில் பத்ரகாளி வணங்கப்படுகிறார்.

பத்ரா என்றால் ஒழுக்கமானவர் என்று விளக்கப்படுகிறது. ‘ப’ என்ற எழுத்து ‘மாயை’ என்ற பொருளையும், ‘டிரா’ என்பது ‘உயர்நிலை’ என்ற பொருளையும் தருவதாக கூறப்படுகிறது. ‘பத்ரகாளி’ என்பவர் ‘மிகப் பெரிய’ என்ற அளவில் கூறப்பட்டு, ‘மகாமயா காளி’ என்று அறியப்படுகிறார்.

தாருகா வதம்

கேரள மாநிலத்தில் பத்ரகாளி வழிபாடு குறித்து கூறப்படுகிறது. மார்க்கண்டேய புராணத்தில் தாருகா வதம் குறித்து விளக்கப்படுகிறது. தாருகன் என்ற அசுரனின் மனைவி மனோதரி, தன் கணவரை யாரும் வெல்ல இயலாதபடி தன்னிடத்தே சிறப்பு மந்திரத்தை வைத்திருந்தார். அதனால் அனைத்து உலகங்களையும் துன்புறுத்தியும், தேவர்களை வதைத்தும் வந்தான் தாருகன். அசுரனின் கொடுமைகளை அறிந்த சிவபெருமான், அவனை அழிப்பதற்காக தீ உமிழும் மூன்றாவது கண்ணைத் திறந்தார். அதிலிருந்து மூர்க்க வடிவம் பத்ரகாளியாக வெளிப்பட்டது. இந்த தேவி அவதாரம் சிவபெருமானின் மகளாக உணரப்படுகிறது. இந்த பத்ரகாளியின் வாகனமாக வேதாளம் இருந்தது.

துர்க்காஷ்டமி

காளி என்றால் அவரது உக்கிர உருவமும், பயமும் முதலில் தோன்றும். தீய சக்திகளை அழிக்க அம்பிகை எடுத்த அவதாரமே காளி அவதாரம், பத்ரகாளியை வணங்கினால், எதிரிகள் தொல்லை அழியும். காளி தேவியை நினைத்து அவர் நாமங்கள் உச்சரித்து, தேவி பாகவதம் படித்தால் எண்ணற்ற பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

சிவபெருமானைவிட தானே உயர்ந்தவர் என்ற எண்ணம் தட்சனுக்கு ஏற்பட்டது. அதனால் சிவபெருமானை அழைக்காது யாகம் ஒன்றை நடத்தினார். இதில் கோபம் அடைந்த பார்வதி தேவி, தந்தையாகவே இருந்தாலும், அடுத்தவரை அவமதிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்ததால், அவருக்கு தக்க பாடம் புகட்ட எண்ணினார். தந்தை மேற்கொண்ட யாகத்தை அழிக்கத் துணிந்தார். சக தேவதைகளுடன் சேர்ந்து உக்கிர வடிவத்துடன் துர்க்காஷ்டமி தினத்தில் ‘பத்ரகாளி’ என்ற பெயர் தாங்கி அவதரித்தார்.

காளிதேவியின் கண்களில் கோபம் தெறிக்க, கையில் சூலம் ஏந்தி, காலின் கீழ் ஓர் அசுரனை மிதித்து வதம் செய்தபடி, கழுத்தில் மண்டை ஓடு மாலை சூடிக் கொண்டு, பத்து கரங்களிலும் பத்து ஆயுதங்களைத் தாங்கியபடி தோன்றியுள்ளார். பார்வதி தேவி, தீயவர்களை அழிக்கவே உக்கிர வடிவம் எடுத்துள்ளாரேயன்றி, பக்தர்களுக்கு என்றுமே அவர் சாந்தசொரூபியாகவே இருக்கிறார்.

நவராத்திரி உற்சவத்தில் துர்க்காஷ்டமி தினத்தில் ஸ்ரீதுர்கா தேவி, பத்ரகாளி, காளி என்று அழைக்கப்படும் தேவியை பூஜித்து, ஸ்தோத்திரம் சொல்லி, சண்டி ஹோமம் முதலான ஹோமங்கள் செய்து வழிபடுவதால் நன்மை பயக்கும். ஸ்ரீவித்யா மார்க்கத்தில், பத்து விதமான அம்மனை வழிபட்டு மேன்மை அடைந்தவர்கள் பலர். காளிதாஸர், கவிச்சக்ரவர்த்தி கம்பர், ஒட்டக் கூத்தர், வீர சிவாஜி, தெனாலிராமன் போன்றோர் காளியின் அருள் பெற்றவர்கள். ராமகிருஷ்ண பரமஹம்சர், காளியை தரிசித்துள்ளார்.

‘ஓம் க்ரீம், க்ரீம் க்ரீம் ஹும் ஹும் ஹ்ரீம், ஹ்ரீம், தக்ஷிணே காளிகே க்ரீம், க்ரீம், க்ரீம் ஹும் ஹும் ஹ்ரீம் ஹ்ரீம் ஸ்வாஹா’ என்ற மந்திரத்தை முறையாக குருவிடம் பயின்று, சரியான நேரத்தில் சரியான எண்ணிக்கையில் உச்சரித்தால், மந்திர சக்தியால் வீட்டில் எவ்வித தீய சக்தியும் அண்டாது என்பது நம்பிக்கை. செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் அம்மன் கோயில்களில் நெய் அல்லது நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவதால் பிரச்சினைகள் தீரும் என்பது ஐதீகம்.

பாத தரிசனம்

குருஷேத்திராவில் திறந்தவெளியின் நடுவே தாமரை போன்ற வடிவமைப்பில் தேவியின் வலது பாதம் வெள்ளை மார்பிலால் அமைக்கப்பட்டு, பீடத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. பாதத்தில் வேலைப்பாடுகளுடன் கூடிய கொலுசுகள் அணிவிக்கப்பட்டுள்ளன. பாதத்துக்கு தினமும் பூஜைகள், ஆராதனைகள் நிகழ்த்துப்படுகின்றன. நறுமணமிக்க மலர்களால் அலங்கரித்து, தேவிக்கு இணையாக, பக்தர்கள் இப்பாதத்தை வணங்கி வருகின்றனர். தேவிக்கும் பாதத்துக்கும் தனித்தனியே ஆராதனைகள் நடைபெறும்.

பத்ரகாளி தரிசனம்

பத்ரகாளி உக்கிரமானவர் என்றாலும் வெள்ளை மார்பிலில் பதிக்கப்பட்டு, அமைதியை அளிக்கும் கண்களை உடையவராக அருள்பாலிக்கிறார். வெள்ளை நிறத்தவராக சிவந்த ஆடை உடுத்தி, தாயின் அன்புடன் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். அன்னையின் இடது திருக்கரங்களுக்கு கீழ் வெள்ளியால் ஆன வலது கணுக்கால் பாதத்துடன் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள தேவிக்கு ‘சாம்பவி விமலா’ என்ற பெயரும் உண்டு.

பாண்டவர்கள் கௌரவர்களுடன் மகாபாரத யுத்தத்தின் இறுதிப் போரில் ஈடுபடுவதற்கு முன்னர் இக்கோயிலில் சிறப்பு ஆராதனைகள் செய்ததாகக் கூறப்படுகிறது.

நேர்மையே வெல்லும் என்பதற்கு ஏற்ப பாண்டவர்கள் வெற்றி பெற்றதும், தேவியை வணங்கி, தங்களிடம் இருந்த குதிரைகளை காணிக்கையாக செலுத்தினார்கள். அதன்படி பக்தர்களும் தங்கள் பிரார்த்தனைகள் நிறைவேறியதும் டெரகோட்டாவில் செய்யப்பட்ட குதிரைகளை இக்கோயிலுக்கு வழங்குகிறார்கள்.

கோயில் சிறப்பு

குருஷேத்திரா பூமியில் (ஜோதீஸ்வார்) பழமையான ஆலமரத்தடியில் அமர்ந்து ஸ்ரீ கிருஷ்ணர், அர்ச்சுனனுக்கு கீதையை உபதேசித்தார். அர்ச்சுனனுக்கு பாசுபதம் வழங்க அன்னை வேடுவ கோலத்தில் இறைவனுடன் வந்திருந்து அருள்பாலித்தார். திரௌபதியின் சபதத்துக்கு உறுதுணையாகவும் பத்ரகாளி இருந்துள்ளார்.

கோயிலில் ராதையுடன் கண்ணன் அருள்பாலிக்கிறார். இங்கு அருள்பாலிக்கும் சிவபெருமானுக்கு (சிவலிங்கம்) ஸ்தாணு ஸம்வர்த்தன் என்ற பெயர் உண்டு. கஜமுகன், சரஸ்வதி தேவிக்கும் விக்கிரகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாடிப்படி ஏறும் இடத்தில் கௌரவர்களின் குரு துரோணர், தேவியை வேண்டி அமைத்த வியூகம் காணப்படுகிறது. இந்த வியூகத்தின் அருகில் அமர்ந்து, பக்தர்கள் தங்கள் கால் விரல்களை நகர்த்தி நடுப்பகுதிக்குச் சென்று திரும்பி வந்தால் நினைத்த செயல் நடைபெறும் என்பது நம்பிக்கை.

பிரம்ம சரோவர்

இக்கோயிலில் 360 தீர்த்தங்கள் உள்ளன. அதில் முக்கிய தீர்த்தங்களாக தானேச்வர சரஸ்வதி தீர்த்தம், ஸ்தானுவாரம், பஞ்சப்ராசி, ஸரோவரம் ஸன்னி ஹிததலால், பானிகங்கா, பெஹோவா, ஜ்யோதிஸாரம் ஆகியனவாகும். மேலும், இங்குள்ள மற்றொரு புனித குளம் ‘பிரம்ம சரோவர்’ என்று அழைக்கப்படுகிறது. மத்ஸ்ய புராணம், பத்ம புராணம் இக்குளத்தின் மகிமையைப் பற்றி கூறுகின்றன. சூரிய கிரகணத்தின்போது இக்குளத்தில் நீராடினால் 1,000 அஸ்வமேத யாகம் செய்த பலன்களைப் பெறலாம் என்று புராணங்கள் கூறுகின்றன. அக உடலும், புற உடலும் தூய்மையாகும். இப்புனித தீர்த்தங்களில் காணப்படும் வெள்ளை, செந்தாமரை மலர்கள், யுத்த களத்தில் உயிர் துறந்தவர்களாகவே கருதப்படுகின்றன.

பிற முக்கிய தலங்கள்

பத்ரகாளி கோயிலுக்கு அருகில் தானேஸ்வரர் மகாதேவ் கோயில் அமைந்துள்ளது. இங்கு லட்சுமி குண்ட், துர்க்க கூவ், சதுர்முக பிரம்ம தீர்த்தம், பிராய சீர் தீர்த்தம், சரஸ்வதி நதி, குபேர் குண்ட், குரங்கு குண்ட், பாண கங்கா ஆகியவை உள்ளன.

அதர்மம் அழிந்து தர்மம் நிலைநாட்டப்பட்ட இடம் என்பதால், இத்தலம் புண்ணிய பூமியாக போற்றப்படுகிறது. செஞ்சோற்றுக் கடன் தீர்க்க, பிதாமகர் பீஷ்மர் கௌரவர்களுக்கு ஆதரவாகப் போர் புரிந்தார். அதனால் யுத்த களத்தில் அம்புப் படுக்கையில் (சர சயனம்) இங்கு இருந்தார். அவர் நிகழ்த்திய ஞானோபதேசம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். ஓர் அரசர் எவ்விதம் அரசாள வேண்டும் என்பதை தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். துரியோதனக் கூட்டம் அழிந்த பிறகு, தருமர் இங்கு வந்திருந்து, கிருஷ்ணரிடம் இருந்து உபதேசங்களைப் பெற்றுள்ளார்.

காளி வழிபாடு

ஆதிகாளி, பத்ரகாளி, ச்மசான காளி, காலகாளி, குஹ்யகாளி, காமகலா காளி, தனகாளி, சித்திகாளி, சண்டி காளி, டம்பர காளி, கஹனேச்வர காளி, ஏகதாரா காளி, சாமுண்டா காளி, வீர காளி, காத்யாயணி, சாந்தா, முண்டமர்தினி, பத்ரா, த்வரிதா, வைஷ்ணவி, ரமண்யா காளி, ஈசான காளி, தனதா காளி, வஜ்ராவதி காளி, மந்த்ரமாலா காளி, சம்ஹார காளி என்று காளி பல வடிவங்களில் வணக்கப்படுகிறார், ‘ஓம் காளிகாயை வித்மஹே ச்மசானவாசின்யை தீமஹி தன்னோ கோரா ப்ரசோதயாத்’ என்ற ஸ்ரீ காளி காயத்ரீயை இடைவிடாமல் கூறிவந்தால் அனைத்து ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

திருவிழாக்கள்

இக்கோயிலில் காளி தேவியின் பல்வேறு அவதார ரூபங்களைக் காணலாம். சிவப்பு பாறைக்கற்களால் அமைக்கப்பட்டுள்ள இக்கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்திருந்து வழிபாடுகள் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். நவராத்திரி நாட்களில் கோயில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, இசை, கலைநிகழ்ச்சிகள் நடைபெறும். மாத சிவராத்திரி, அமாவாசை, செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் தேவிக்கு சிறப்பு ஆராதனைகள் செய்யப்படுகின்றன.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in