அருள்தரும் சக்தி பீடங்கள் - 39

அருள்தரும் சக்தி பீடங்கள் - 39

திருவொற்றியூர் திரிபுரசுந்தரி

அம்மனின் சக்தி பீட வரிசையில் திருவொற்றியூர் திரிபுரசுந்தரி சமேத ஆதிபுரீஸ்வரர் கோயில் இட்சு சக்தி பீடமாகப் போற்றப்படுகிறது. சிவபெருமானின் தேவாரப் பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 253-வது தேவாரத் தலம் ஆகும்.

தல வரலாறு

பிரளய காலத்தில் உலகம் அழிவுற்று, மீண்டும் புதிய உலகம் தோற்றுவிக்கப்படும். அப்போது பிரம்மதேவர் தோன்றி, உயிர்களைப் படைப்பார். ஒரு பிரளய காலம் வந்த சமயத்தில், உலகம் அழிவதை பிரம்மதேவர் விரும்பவில்லை. அதனால் சிவபெருமானை நோக்கி தவம் புரிந்தார். அப்போது யாகத்தின் இடையே அக்னி வடிவில் தோன்றிய சிவபெருமான், உலகம் அழியாமல் காப்பதாக உறுதி அளித்தார். அதன்படி லிங்க ரூபமாக எழுந்தருளினார். யாக குண்டம் கோயிலாக உருவானது.

பிரளயம் நீங்கி உலகம் மீண்டும் தொடங்கிய சமயத்தில் எழுந்தருளியதால், இத்தலத்து ஈசன், ‘ஆதிபுரீஸ்வரர்’ என்றும், பிரளய வெள்ளத்தை விலகச் செய்ததால் (ஒற்றச் செய்ததால்) இத்தலம் ‘திருவொற்றியூர்’ என்றும் அழைக்கப்படுகிறது.

சுயம்பு மூர்த்தியாக இத்தலத்தில் சிவபெருமான் அருள்பாலிக்கிறார். சிவபெருமான் பாணலிங்க வடிவில் உயரமாகக் காட்சியளிக்கிறார். இத்தலத்தில் பைரவர், நாய் வாகனம் இல்லாமலும், துர்கையம்மன் காலடியில் மகிஷாசுரன் இல்லாமலும் அருள்பாலிக்கின்றனர்.

இத்தலத்தில் மூலவர் ஆதிபுரீஸ்வரர், ஒற்றீஸ்வரர், அம்பிகை வடிவுடையாம்பிகை, வட்டப்பாறையம்மன், தல விருட்சங்கள் அத்தி, மகிழம், தீர்த்தங்கள் பிரம்ம தீர்த்தம், அத்தி தீர்த்தம், ஆகம பூஜை, காரணம், காமீகம் என்று அனைத்தும் இரண்டாக அமைந்திருப்பது தனிச்சிறப்பு.

மூன்று அம்பிகையர் தரிசனம்

சென்னை சுற்றுவட்டாரப் பகுதியில் மூன்று அம்பிகையர் இச்சா, கிரியா, ஞான சக்திகளாக இருந்து அருள்புரிகின்றனர். பல்லாண்டுகளுக்கு முன்பு, சிற்பி ஒருவர், மேலூர் திருமணங்கீஸ்வரர் கோயிலில் சிலை செய்து பிரதிஷ்டை செய்வதற்காக, பெரிய பாறையைக் கொண்டு சென்றார். வழியில் அந்தப் பாறை வெடித்து மூன்று பாகங்களாகச் சிதறியது. இதன் காரணமாக, உயிரை விடத் துணிந்தார் சிற்பி. அப்போது அவர் முன்னர் தோன்றிய பார்வதி தேவி, தன்னை மூன்று வடிவில் சிலையாக வடித்து மேலூர், திருவொற்றியூர், திருமுல்லைவாயில் தலங்களில் பிரதிஷ்டை செய்யும்படி அருளினார். சிற்பியும் அவ்வாறே செய்தார்.

திருவொற்றியூர் தலத்தில் அருள்பாலிக்கும் திரிபுரசுந்தரி ஞான சக்தியாகவும், இத்தலத்தில் இருந்து 15 கி.மீ தொலைவில் உள்ள மேலூரில் அருள்பாலிக்கும் திருவுடையநாயகி இச்சா சக்தியாகவும், இத்தலத்தில் இருந்து 25 கி.மீ தொலைவில் உள்ள திருமுல்லைவாயிலில் அருள்பாலிக்கும் கொடியிடை நாயகி கிரியா சக்தியாகவும் போற்றப்படுகின்றனர்.

சுயம்வர புஷ்பாஞ்சலி

திருவொற்றியூர் தலத்து விநாயகர் செல்வ விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். அம்பாள் வடிவுடை நாயகி (திரிபுரசுந்தரி), வட்டப்பாறை அம்மன் இருவரும் தனித்தனி சந்நிதிகளில் அருள்பாலிக்கின்றனர். திரிபுரசுந்தரி அம்பாளுக்கு கீழே ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. தெற்கு நோக்கி நின்ற கோலத்தில் வீற்றிருக்கும் வடிவுடையம்மன், நான்கு கரங்களுடன், அபய வரத முத்திரையுடன் பக்தர்களின் குறைகேட்கும் விதமாக, வலதுபுறம் தலை சாய்த்தபடி அருள்பாலிக்கிறார்.

தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் அம்பாள் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு, புஷ்பாஞ்சலி சேவையில் அருள்பாலிக்கிறார். திருமணத் தடை உள்ளவர்கள் அம்பாளுக்கு இச்சேவை புரிந்து வழிபாடு செய்கின்றனர். இச்சேவை ‘சுயம்வர புஷ்பாஞ்சலி’ என்று அழைக்கப்படுகிறது.

வடிவுடை நாயகி மீது பக்தி கொண்டிருந்த வள்ளலார், தினமும் இங்கு வந்து அம்பிகையை வழிபடுவார். ஒருசமயம் அர்த்த ஜாம பூஜையைப் பார்த்துவிட்டு, கோயிலில் இருந்து இல்லத்துக்கு தாமதமாகச் சென்றார் வள்ளலார். வீட்டின் கதவு அடைத்திருந்ததால், பசியுடன் திண்ணையில் படுத்துக் கொண்டார். பக்தரின் பசியை உணர்ந்த அம்பிகை, ஓர் இலையில் வெண்பொங்கல் வைத்து அவருக்கு கொடுத்தருளினார். இச்செய்தியை வள்ளலார், தனது அருட்பாவில் குறிப்பிட்டுள்ளார்.

வட்டப்பாறை அம்மன்

மதுரையை எரித்துவிட்டு, உக்கிரத்துடன் கிளம்பிய கண்ணகி, இத்தலத்துக்கு வருகிறாள். அப்போது சிவபெருமானும், அம்பிகையும் சொக்கட்டான் விளையாடிக் கொண்டிருந்தனர். கண்ணகி வருவதை கவனித்த சிவபெருமான், அவளது கோபத்தைத் தணிப்பதற்காக, தான் விளையாடிக் கொண்டிருந்த தாயக்கட்டையை உருட்டி, அருகில் இருந்த கிணற்றில் விழச் செய்தார். தாயக்கட்டையை எடுக்க, கிணற்றுக்குள் இறங்கினாள் கண்ணகி. அந்த சமயம், சிவபெருமான் அங்கிருந்த வட்டப்பாறையை வைத்து கிணற்றை மூடிவிடுகிறார். சற்று நேரத்தில், கண்ணகி பாறையின் வடிவில் எழுந்தருளினாள். அதன் காரணமாக, கண்ணகி ‘வட்டப்பாறை அம்மன்’ என்று பெயர் பெற்றாள். பின்னாட்களில் பாறை அருகே, அம்மனுக்கு சிலை வைக்கப்பட்டது. வட்டப்பாறை அம்மனின் கோபத்தை தனிப்பதற்காக, ஆதிசங்கரர், அம்மன் சந்நிதியில் ஸ்ரீசக்கரத்தை பிரதிஷ்டை செய்தார்.

கோயில் அமைப்பு

திருவொற்றியூர் திரிபுரசுந்தரி சமேத தியாகராஜர் கோயில், கிழக்கு நோக்கிய ஐந்து நிலை ராஜ கோபுரத்துடன் அமைந்துள்ளது. பல்லவர் காலத்தில் செங்கற்றளியாக இருந்து, முதலாம் ராஜேந்திர சோழன் காலத்தில் கற்றளியாக எழுப்பப்பட்டது. கஜபிருஷ்ட வடிவில் சுவாமியின் கருவறை அமைந்துள்ளது. ராஜ கோபுரத்தின் எதிரே பிரம்ம தீர்த்தம் அமைந்துள்ளது. வலதுபுறம் தெற்கு நோக்கிய வடிவுடையம்மன் சந்நிதி உள்ளது. அருகே தொன்மையான மகிழ மரம், விநாயகர், சுப்பிரமணியர், குழந்தையீசர் சந்நிதிகள் அமைந்துள்ளன.

இடதுபுறத்தில் கொடிமரம், பலிபீடம் அருகே நந்திதேவர் அருள்பாலிக்கிறார். அருகே ஜெகந்நாதர் சந்நிதியும், எதிரே சூரியன், சமயக் குரவர் நால்வர், சகஸ்ர லிங்கம், ராமநாதர், அமிர்தகடேஸ்வரர் சந்நிதிகள் அமைந்துள்ளன. கொடிமரத்தின் மேற்கே மாணிக்க தியாகராஜர் சந்நிதி, மூலவர் சந்நிதி, நடராஜர் சந்நிதிகள் அமைந்துள்ளன. மூலவர் ஆதிபுரீஸ்வரர் கிழக்கு நோக்கியபடி, கவசம் சார்த்தப்பட்டு நாக வடிவில் சிவலிங்கத் திருமேனியில் சதுர வடிவ ஆவுடையாரில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். கார்த்திகை பௌர்ணமி தொடங்கி மூன்று நாட்களுக்கு கவசம் நீக்கப்பட்டு, நிஜ லிங்க தரிசனம் தருகிறார். அந்நாட்களில் மூலவருக்கு புணுகுச் சட்டம், ஜவ்வாது, சாம்பிராணி தைலம் சார்த்தப்படுகிறது. மூலவர், படம்பக்க நாதர், புற்றிடங் கொண்டார், எழுத்தறியும் பெருமான் என்ற பெயர்களாலும் ஆதிபுரீஸ்வரர் அழைக்கப்படுகிறார்.

பிரம்மதேவர், விஷ்ணு, வாசுகி (நாகம்), ஐயடிகள் காடவர்கோன், திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி நாயனார், சங்கிலி நாச்சியார், கலிய நாயனார், ஆதிசங்கரர், பட்டினத்தார், கம்பர், கவி காளமேகம், தியாகராஜ சுவாமிகள், முத்துசுவாமி தீட்சிதர், வீணை குப்பய்யர், வள்ளலார், மறைமலை அடிகள், சிதம்பர முனிவர், திருவொற்றியூரான் அடிமை, கபாலி சாஸ்திரிகள் முதலானோர் இத்தலத்தில் வழிபாடு செய்துள்ளனர்.

கோயில் சிறப்பு

இத்தலம் சுந்தரர், சங்கிலியாரை மணந்துகொண்ட தலமாகும். மாசி மாதம் மகம் நட்சத்திரத்தில் சுந்தரரின் திருமணம் நடந்தேறியது, அப்போது சிவபெருமான் மகிழ மரத்தடியில் எழுந்தருளி, சுந்தரருக்கு திருமணம் செய்து வைப்பார். இந்த விழா, ‘மகிழடி சேவை’ என்று அழைக்கப்படும்.

கலிய நாயனாரின் அவதாரத் தலம் என்பதால், இக்கோயிலில் அவருக்கு தனி சந்நிதி உண்டு. கலியநாயனார் தினமும் சுவாமிக்கு விளக்கேற்றி வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒருசமயம் தீபம் ஏற்ற எண்ணெய் வாங்கக்கூட பணம் இல்லாதபோது, தன் ரத்தத்தில் தீபம் ஏற்ற முயன்றார். அப்போது சிவபெருமான் அருட்காட்சி கொடுத்து, அவரது பக்தியை உலகறியச் செய்தார்.

பட்டினத்தடிகள் முக்திபெற்ற தலமாக இத்தலம் விளங்குகிறது. காவிரிப்பூம்பட்டினத்தில் வசித்த பட்டினத்தார் என்ற வணிகர், முக்தி வேண்டி சிவபெருமானை வழிபட்டார். சிவபெருமான் அவர் முன் தோன்றி, ஒரு கரும்பை அளித்து, எந்த இடத்தில் நுனிக்கரும்பு இனிக்கிறதோ, அந்த இடத்தில் முக்தி என்று அருள்கிறார். பல இடங்களுக்குச் சென்ற பட்டினத்தார், நிறைவாக, திருவொற்றியூர் வந்தபோது, நுனிக்கரும்பு இனித்ததை உணர்ந்தார். அதன்படி இங்கேயே லிங்க வடிவமாக மாறி முக்தி பெற்றார்.

இத்தலத்தின் முன்பண்டபத் தூண்களில் அற்புதமான சிற்பங்கள் காணப்படுகின்றன. மேலே உள்ள தூணில் - விதானத்தில் சூரியன் தலைப்புறமும், சந்திரன் காற்புறமும் அமைய மனிதனுடைய உடல் அமைக்கப்பட்டு, அவ்வுடலில் பஞ்சாட்சர விளக்கம் (கற்சிற்பம்) அமைத்துக் காட்டப்பட்டுள்ளது. கோயில் சுவர்களில், வள்ளலாரின் பாடல்களும், திருமுறைப் பதிகங்களும் கல்லில் பொறித்துப் பதிக்கப்பட்டுள்ளன. மேலும், சோழர்கள், பல்லவர்கள், பாண்டியர்கள், ராஷ்டிரகூடர்கள், விஜயநகர மன்னர்கள், சம்புவராய மன்னர்கள் கால கல்வெட்டுகளும் இக்கோயிலில் காணப்படுகின்றன.

திருவொற்றியூர் பஞ்சரத்தினம்

சத்குரு தியாகராஜ சுவாமிகள், வீணை குப்பய்யரின் வேண்டுகோளுக்கு இணங்க திருவொற்றியூர் வடிவுடையம்மன் மீது 5 கீர்த்தனைகளை தெலுங்கு மொழியில் இயற்றியுள்ளார். அவை கன்ன தள்ளி (சாவேரி), சுந்தரி நின்னு (ஆரபி), சுந்தரி நன்னிந்தரிலோ (பேகடா), சுந்தரி நீ திவ்ய (கல்யாணி), தாரிணி தெலுசுகொண்டி (சுத்த சாவேரி) ஆகும். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி நாயனார், மாணிக்கவாசகர், காளமேகப் புலவர், இரட்டைப் புலவர்கள், முத்துசுவாமி தீட்சிதர், மறைமலையடிகளார், வள்ளலார் போன்றோரும் திருவொற்றியூர் சுவாமி, அம்பாள் மீது பாடல்கள் புனைந்துள்ளனர்.

திருவிழாக்கள்

சித்திரையில் வட்டப்பாறை அம்மன் உற்சவம், வைகாசியில் 15 நாட்கள் வசந்த உற்சவம், ஆனித் திருமஞ்சனம், ஆடிப் பூரம், கலியநாயனார் வீதியுலா, ஆவணியில் விநாயகர் சதுர்த்தி, புரட்டாசியில் நவராத்திரி, ஐப்பசியில் பௌர்ணமி விழா (அன்னாபிஷேகம்), கந்த சஷ்டி, கார்த்திகையில் தீபத் திருவிழா, மூலவர் கவசம் திறப்பு, மார்கழியில் ஆருத்ரா தரிசனம், மாணிக்க தியாகராஜர் 18 திருநடனம், தைப்பூசத் திருவிழா, மாசி மக உற்சவம், பங்குனியில் பசுந்தயிர் அபிஷேகம் நடைபெறும். இவ்விழாக்களின்போது, சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். பல்வேறு வாகனங்களில் சுவாமி, அம்பாள் எழுந்தருளி வீதியுலா நடைபெறும். சிவபெருமானை பிரம்மதேவர், திருமால், வாசுகி மூவரும் வழிபட்டதால், கார்த்திகை பௌர்ணமி தொடங்கி மூன்று நாட்களுக்கு இத்தலத்தில் சிறப்பு ஆராதனைகள் நடைபெறும்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in