அருள்தரும் சக்தி பீடங்கள் - 51

காமரூபம் காமாக்யா தேவி
காமரூபம் காமாக்யா தேவி
காமரூபம் காமாக்யா தேவி

அம்மனின் சக்தி பீட வரிசையில், அசாம் மாநிலத்தில் நிலாச்சல் குன்றில் உள்ள காமாக்யா கோயில், யோனி பீடம் என்றும் காமகிரி பீடம் என்றும் போற்றப்படுகிறது. குவஹாத்தி நகரில் இருந்து 12 கிமீ தொலைவில் அமைந்துள்ள நிலாச்சல் குன்றில் காளி, தாரா, லலிதா, திரிபுரசுந்தரி, புவனேஸ்வரி, பைரவி, சின்னமஸ்தா, தூமாவதி, பகளாமுகி, மாதங்கி, கமலா தேவி ஆகிய தச மகா வித்யா தேவிகளின் கோயில்கள் அமைந்துள்ளன. அவற்றுள் இக்கோயில் பிரதானமாகக் கருதப்படுகிறது.

காமரூப் என்று அழைக்கப்படும் இந்த இடத்தில் மன்மதனை சிவபெருமான் எரித்துள்ளார். அதன் பிறகு, மன்மதன் தனது சுயரூபம் பெற்றதும் விஸ்வகர்மாவின் உதவியுடன் இக்கோயிலைக் கட்டியுள்ளார் என்று கூறப்படுகிறது.

தல வரலாறு

சக்தி தேவியின் உடல் பாகங்கள் விழுந்த இடங்கள் சக்தி பீடங்கள் என்று அழைக்கப்பட்டு, அவை புனிதமாகப் போற்றி வணங்கப்பட்டு வருகின்றன. சக்தி தேவியின் யோனிப்பகுதி விழுந்த இடமாக காமாக்யா போற்றப்பட்டு வணங்கப்படுகிறது. தாட்சாயணியின் யோனி விழுந்த மலை நீல நிறமாக மாறியதால் இந்த மலைக்கு நீலாச்சல் மலை என்ற பெயர் ஏற்பட்டது.

முற்காலத்தில் இப்பகுதி காமரூபம், ஹரிஷேத்ரம், பிரக்ஜோதிஷபுரம், காமகிரி, காமயோனி மண்டலம், மகாமாயா ஸ்தானம், நீலாச்சலம், நீல பர்வதம் என்ற பெயர்களால் அழைக்கப்பட்டது.

இரண்யாட்சகன் என்ற அசுரன், பூமியை பாதாளத்தில் ஒளித்து வைத்தான். அப்போது திருமால் வராக அவதாரம் எடுத்து பூமாதேவியை மீட்டுவந்தார். அதே அவதாரத்தில் பூதேவியை மணம் புரிந்தார். அவர்களின் மகனான நரகாசுரன் பிரக்ஜோதிஷபுரத்துக்கு அரசனாக்கப்பட்டான். இருப்பினும், பின்னாட்களில் நரகாசுரன் உலக மக்களுக்கு இன்னல்கள் புரிவான் என்றும், அதனால் அவன் கொல்லப்படுவான் என்றும் பூதேவியை எச்சரித்தார் திருமால். அப்படியானால் நரகாசுரன் தன் கைகளால்தான் கொல்லப்பட வேண்டும் என்று பூதேவி, திருமாலிடம் விண்ணப்பித்தார். அவ்வண்ணமே பூதேவிக்கு வரம் அளித்துவிட்டு வைகுந்தம் புறப்பட்டார் திருமால்.

திருமாலிடம் இருந்தும், சக்தி தேவியின் மாயா வடிவமான காமாக்யா தேவியிடம் இருந்தும் பல வரங்களைப் பெற்றான் நரகாசுரன். நிலாச்சல் மலை அடிவாரத்தில் நான்கு பக்கங்களிலும் சொர்க்கபுரி வாயில், அனுமன் வாயில், புலி வாயில், சிங்க வாயில் ஆகிய நான்கு நுழைவு வாயில்களை அவன் அமைத்திருந்தான். அனைத்துலகையும் அடிமைப்படுத்தி, பல கொடுமைகள் புரிந்துவந்தான். இப்படியே பல யுகங்கள் கடந்தன.

கிருஷ்ணாவதார காலகட்டத்தில், நரகாசுரனை அழிக்க வேண்டும் என்று தேவர்கள், கிருஷ்ணரிடம் விண்ணப்பித்தனர். அதன்படி தனது மனைவி சத்யபாமாவுடன் போருக்குப் புறப்பட்டார் கிருஷ்ணர். போர் நடந்த நிலையில், நரகாசுரனின் வரத்தால், கிருஷ்ணரால் அவனை மாய்க்க இயலவில்லை. வேறு வழியில்லாமல் சத்யபாமா, வில்லை தன் கையில் எடுத்து, கிருஷ்ணர் கொடுத்த அஸ்திரத்தை பயன்படுத்தி, நரகாசுரனை வீழ்த்தினார். பூமாதேவி அம்சமான சத்யபாமா, நரகாசுரன் தன் மகன்தான் என்பதை அறியாமல் அவனை மாய்த்துவிட்டார். இச்சம்பவங்கள் அனைத்தும் நடைபெற்ற இடம், நிலாச்சல் மலை என்று அறியப்படுகிறது. நரகாசுரனுக்கு பல வரங்கள் அளித்த காமாக்யா தேவி, அவன் மீதுள்ள கோபத்தில் இந்த இடத்தைவிட்டு வெளியேறி, பின்னர் அவனது மரணத்துக்குப் பிறகு, மீண்டும் இங்கு வந்து கோயில் கொண்டாள் என்பதாக ஐதீகம்.

கோயில் அமைப்பும் சிறப்பும்

பத்தாம் நூற்றாண்டில் அசாம் மன்னர்களால் சீரமைக்கப்பட்ட இக்கோயில், 1665-ல் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. வெளிப்பிரகாரத்தைத் தாண்டி உள்ளே குகை போன்ற அமைப்பில் 10 படிகள் இறங்கிச் சென்றால், பாதாளத்தில் உள்ள கருவறையில் ஓர் எண்ணெய் விளக்கின் வெளிச்சத்தில் காமாக்யா அருள்பாலிக்கிறார். சிறிய மலைப்பாறை போன்ற மேடையை (மேரு வடிவம்) சுற்றி தண்ணீர் போய்க்கொண்டிருக்கிறது. தண்ணீருக்கு அடியில் யோனி பீடம் அமைந்துள்ளது. பண்டாக்களின் உதவியுடன் பக்தர்கள், பீடத்தின் மீது கை வைத்து தேவியை வணங்குவது வழக்கம்.

மேடையின் கீழ் ஓடும் தண்ணீர் ‘சௌபாக்யகுண்ட்’ என்று அழைக்கப்படுகிறது. குகையில் இருந்து வெளியேறும்போது, உலோகத்தால் செய்யப்பட்ட காமேஸ்வர – காமேஸ்வரி சிலைகள், எட்டுவித அமைப்பில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பதைக் காணலாம்.

பிரகாரத்தில் ‘தச மகா வித்யா’ என்ற பெயரில் பத்து தோற்றங்களுடன் தேவி அருள்பாலிக்கிறார். பிரகாரச் சுவர்களில் மங்கள சண்டி, அன்னபூரணி, நீலகண்ட மகாதேவ், மானஸாதேவி சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இத்தலத்துக்கு மறுகரையில் உள்ள சிறிய குன்றில் (மயில் மலை அல்லது பஸ்மாசல மலை) சிவபெருமானின் தவத்தைக் கலைத்த மன்மதன் எரிக்கப்பட்டதாக (காம தகனம்) கூறப்படுகிறது. இச்சம்பவத்தை நினைவுகூரும் விதமாக இங்கு ‘உமானந்த சிவா’ கோயில் அமைந்துள்ளது. அருகே அனுமன் கோயிலும் உள்ளது.

பிரகார வலம் முடிந்த பின்னரே பக்தர்கள் காமாக்யா குகை கோயிலுக்குச் செல்கின்றனர். குகைக் கோயில் தரிசனம் முடிந்து திரும்பும்போது காளிதேவி தன் ஆயுதங்களுடன் சுடுகாட்டில் காட்சி தருவதைக் காணலாம். கோயிலுக்குள் பைரவர், கிருஷ்ணர் (அஷ்வகிரந்தா) சந்நிதிகளும் உள்ளன. அருகில் உள்ள ஹஸ்தகிரி என்ற இடத்தில் அசுரகுரு சுக்கிராச்சாரியார் வழிபட்ட சுக்ரேஸ்வரர் கோயில் உள்ளது. நவக்கிரகங்களுக்கு தனி கோயிலும், சூரியனுக்கு தனி கோயிலும் உள்ளன.

உமானந்தா கோயில்

காமாக்யா பீடத்துக்கான பைரவரின் கோயிலாக விளங்கும் இக்கோயில் பிரம்மபுத்ரா ஆற்றில் அமைந்துள்ள பீகாக் ஐலேண்ட் தீவுப் பகுதியில் உள்ளது. ஆஹோம் வம்சத்து மன்னர் கடாதர் சின்ஹாவின் ஆட்சிக் காலத்தில், இக்கோயிலை பர் புகான் கர்கன்யா ஹந்திக் என்பவர் கட்டியுள்ளார். ஃபெர்ரி படகுகள் மற்றும் மோட்டா படகுகளைப் பயன்படுத்தி இக்கோயிலுக்குச் செல்ல முடியும்.

காமாக்யா தேவி

சுயம்புவாகத் தோன்றிய யோனி வடிவப் பாறையே தேவியாக வழிபடப்படுகிறது. அதன் அருகில் இருந்து இயற்கையாக ஊறி வரும் நீர், அபிஷேகத் தீர்த்தமாக பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. பில்லி, சூன்யம் போன்றவற்றால் பாதிப்பு அடைந்தவர்கள், வசதிகள் இருந்தும் நிம்மதி இல்லாமல் தவிப்பவர்கள், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து தேவியை வழிபடுகின்றனர்.

வசந்த காலத்தில் இக்கோயில் மூன்று நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும். தேவி விலக்காகி இருக்கும் நாட்களாக அவை கருதப்படுகின்றன. அந்நாட்களில் பீடத்தில் இருந்து வரும் நீரூற்று சிவப்பு நிறத்தில் வருவது இன்னொரு அதிசயம். அந்த மூன்று நாட்களில் பக்தர்கள் கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. இருப்பினும், அருகில் உள்ள யோகிகள் கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் வழிபாடு செய்கின்றனர். காமாக்யா தேவியை வணங்குபவர்கள் 108 செம்பருத்தி மலர்களால் ஆன மாலையை அணிவித்து வழிபடுகிறார்கள்.

காலராத்ரி தேவி

காமாக்யா தேவி காலராத்ரி தேவியாகவும் போற்றப்படுகிறார். இத்தலத்துக்கு வந்து வழிபாடு செய்பவர்கள், ‘மகா மாயா மகா காளீமகா மாரீ க்ஷீதா த்ருதா, நித்ரா த்ருஷ்ணா சைகவீரா காலராத்ரிந் துரத்யயா’ என்று காமாக்யா தேவியை வணங்குகின்றனர். மகா மாயா, மகா காளி, மகா மாரி என்று அழைக்கப்படும் காமாக்யா தேவி, பசி, தாகம், தூக்கம் ஆசை ஆகியவற்றை வெற்றி கொண்டவள். நிகரற்ற சக்தி படைத்தவளாகவும், தன்னை எவரும் மீற முடியாமல் காலத்தைக் கடந்து நிற்கும் காலராத்ரி தேவியாகவும் விளங்குகிறாள். காமாக்யா தேவி திரிபுர பைரவி, அமிர்தா, காமா, காமதா, மங்கள கௌரி, காமரூபிணி, யோனி மண்டல வாசினி, காமரூபா, காமேஸ்வரி, நீல பார்வதி என்று அழைக்கப்படும் அவளை வணங்கினால் அனைத்து நலன்களும் கிட்டும் என்பது ஐதீகம். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேரவும், குழந்தை பாக்கியம் பெறவும் இங்கு வந்து வழிபடுகிறார்கள். நீண்ட நாள் வயதுக்கு வராத பெண்கள் இங்கு வழிபாடு செய்வதும் வழக்கம்.

நூல்கள் போற்றும் காமாக்யா

காமாக்யா வழிபாடு குறித்து மகாபாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. விராட பர்வம் மற்றும் பீஷ்ம பர்வத்தில் அர்ஜுனன், தருமர் ஆகியோர் காமாக்யா தேவியை வழிபட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. தந்திர சூடாமணி, காளிகா புராணம், வேத வியாசரின் தேவி பாகவத புராணம் ஆகியன காமாக்யா பீடத்தின் பெருமைகளை எடுத்துரைக்கின்றன. தேவியின் புகழை உரைக்கும் அஷ்ட தச சக்தி பீட ஸ்தோத்திரம், தேவிக்கு 18 மகா சக்தி பீடங்கள் உள்ளதாகக் கூறுகிறது.

திருவிழாக்கள்

இத்தலத்தில் அம்புபச்சி மேளா, துர்கா பூஜா, மானஷா பூஜா சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. ஆண்டுதோறும் ஜூன் மூன்றாவது வாரத்தில் அம்புபச்சி மேளா கொண்டாடப்படுகிறது. அந்நாட்களில் நாகா சாதுக்கள் ஆயிரக்கணக்கில் இங்கு வந்திருந்து காமாக்யா தேவியை வழிபடுவது வழக்கம்.

மேலும் மூன்று விழாக்கள் இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. பஹாக் பிஹி, கொங்காலி பஹ், மக்பிஹி ஆகிய விழாக்கள் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகின்றன. வருடப் பிறப்பை அனுசரித்து ‘பஹா பிஹி’ கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் பக்தர்கள் கோயிலுக்கு வந்து காமாக்யா தேவியை வழிபடுகின்றனர். கார்த்திகை மாத முதல் நாளில் ‘கொங்காலி பஹ்’ கொண்டாடப்படுகிறது. அந்த மாதம் முழுவதும் தோட்டங்களிலும், வயல்களிலும் எண்ணெய் விளக்கேற்றி தேவியை வழிபடுவது வழக்கம்.

தை மாதம் 15-ம் தேதி ‘மக்பிஹி’ விழா கொண்டாடப்படுகிறது. அறுவடை முடிந்ததும் நாட்டுப்புறப் பாடல்களைப் பாடி சர்க்கரைப் பொங்கல் போன்ற ஓர் இனிப்பான அரிசி உணவை தேவிக்கு படைத்து உண்பது வழக்கம். பக்தி, ஞானம், முக்தி ஆகியவற்றை அளிக்கும் அன்னையாகவும், பக்குவத்தின் தொடக்க நிலையில் உள்ளோருக்கு கல்வி, செல்வம், அறிவாற்றல் ஆகியவற்றை அளிக்கும் கருணைக் கடலாகவும் காமாக்யா தேவி விளங்குகிறார்.

காமாட்சியாக, மீனாட்சியாக, விசாலாட்சியாக, அன்னபூரணியாக வீற்றிருந்து, அனைவரது வாழ்விலும் ஞான ஒளி ஏற்றி அறியாமையைப் போக்கி வெளிச்சம் அருள்பவராக விளங்கும் தேவியைப் போற்றி வணங்குவோம்.. அனைத்து செல்வங்களையும் பெற்று வாழ்வில் வெற்றி காண்போம்.

ஓம் சக்தி! ஓம் சக்தி!! ஓம் சக்தி!!!

(சக்தி பீடங்கள் வரிசை நிறைவுற்றது)

அடுத்த வாரத்திலிருந்து, கந்தனின் மகிமை பேசும் ‘கார்த்திகைச் செல்வன்’ - புதிய தொடரை தரிசிக்கத் தயாராகுங்கள்...

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in