அருள்தரும் சக்தி பீடங்கள் - 48

பத்ரிநாத் பத்ரகர்ணிகை
அருள்தரும் சக்தி பீடங்கள் - 48

அம்மனின் சக்தி பீட வரிசையில், உத்தராகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் உள்ள அரவிந்தவல்லி சமேத பத்ரிநாராயணர் கோயில் பத்ர கர்ணிகை பீடமாகப் போற்றப்படுகிறது. திருமாலின் மங்களாசாசனம் பெற்ற 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாகக் கருதப்படும் இக்கோயில் அலக்நந்தா ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.

இமயமலையில் உள்ள கடுமையான குளிர் காரணமாக, இக்கோயில் ஆண்டுக்கு ஆறு மாதங்கள் (மே கடைசியில் இருந்து டிசம்பர் தொடக்கம் வரை) மட்டுமே திறந்திருக்கும். பெரியாழ்வார், திருமங்கையாழ்வார் இத்தலத்தை மங்களாசாசனம் செய்துள்ளனர்.

தல வரலாறு

முன்பொரு காலத்தில் சிவபெருமானைப் போல் பிரம்மதேவருக்கும் 5 தலைகள் இருந்தன. இதனால் சிலசமயம் பார்வதி தேவி குழப்பம் அடைந்தார். இதுகுறித்து சிவபெருமானிடம் கூறினார் பார்வதி தேவி. உடனே சிவபெருமான், பிரம்மதேவரின் ஒரு தலையைக் கிள்ளி எறிந்தார். இதைத் தொடர்ந்து, சிவபெருமானுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது. பிரம்மதேவரின் தலை சிவபெருமானின் கையை விட்டு விழவில்லை.

இதுகுறித்து சிவபெருமான், திருமாலிடம் ஆலோசனை கேட்டார். பூலோக மங்கை ஒருவரிடம் இருந்து யாசகம் பெற்றால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கிவிடும் என்று திருமால் கூறினார். அதன்படி சிவபெருமானும் கைலாயத்தைவிட்டு பூலோகத்துக்கு வந்தார்.

அந்த சமயத்தில் பத்ரிகாஸ்ரமத்தில் ஒருவருக்கு தாரக மந்திரத்தை திருமால் உபதேசித்துக் கொண்டிருந்தார். அருகில் திருமகளும் வீற்றிருந்தார். அப்போது சிவபெருமான் வந்து யாசகம் கேட்க, திருமகளும் சில பொருட்களை அளிக்க, சிவபெருமானின் பிரம்மஹத்தி தோஷம் நீங்கியது. அவர் கையில் இருந்த பிரம்ம கபாலமும் கீழே விழுந்தது. இந்த இடமே ‘பிரம்ம கபாலம்’ என்று அழைக்கப்படுகிறது.

இந்த இடத்தில் முன்னோருக்கு, கயா போல பிண்டமிட்டு, அலக்நந்தா ஆற்றில் பிண்டத்தைக் கரைத்தால் புண்ணியம் ஏற்படும் என்று வேதத்தில் கூறப்பட்டுள்ளது. நமக்கு நாமே ஆத்ம பிண்டமும் இட்டுக் கொள்ளலாம்.

பத்ரிநாராயணர்

அனைத்து யுகங்களிலும், உலகைக் காக்க பெருமாள் அவதாரம் எடுக்கிறார். பிரம்மதேவர், தேவர்கள், முனிவர்கள் ஆகியோர் பெருமாளை மற்றொரு அவதாரம் எடுக்குமாறு வேண்டினர். அப்போது, திருமால், அசரீரி வாயிலாக, “கலியுகத்தில் அன்பு, பாசம் இல்லாத கல்நெஞ்சம் கொண்ட மக்கள், என் தரிசனம் காணாது தவிக்கும்போது, நாரத குண்டம் அலக்நந்தாவில் இருக்கும் எனது பாஷாண மூர்த்தியை அங்கிருந்து எடுத்து வந்து பத்ரிநாத்தில் பிரதிஷ்டை செய்யவும். அப்போது நான் பக்தர்களுக்கு காட்சி தருவேன்” என்றார்.

அதன்படி பிரம்மதேவர் உள்ளிட்டோர், நாரத குண்டத்தில் இருந்த மூர்த்தியை பத்ரிநாத்தில் பிரதிஷ்டை செய்தனர், அன்று முதல் பத்ரிநாத்தில் பத்ரிநாதர் வழிபாடு தொடங்கியது.

மூலவர் பத்ரிநாராயணர் கருப்பு நிற சாளக்கிராமத்தால் ஆனவர். கிழக்கு நோக்கி அமர்ந்த கோலத்தில் 4 கரங்களுடன் அருள்பாலிக்கிறார். இடது கையில் சங்கும், வலது கையில் சக்கரமும், மற்ற இரு கரங்களையும் இணைத்து யோக முத்திரை, அபயவரதம் காட்டி அருள்பாலிக்கிறார்.

அரவிந்தவல்லி

வேதங்களைப் படைத்து, தானே ஆதி குருவாகத் தோன்றி உலக மக்களைக் காப்பதற்காக, திருமால், நர நாராயணராக இமயமலையில் அவதாரம் எடுத்து தவம் மேற்கொண்டார். அப்போது திருமகள், பத்ரியாக (இலந்தை மரம்) வடிவம் கொண்டு திருமாலுக்கு நிழல் கொடுத்து, அவருடைய தவத்துக்கு உதவி புரிந்தார். இதன் காரணமாகவே, இவ்விடத்துக்கு பத்ரிகாஸ்ரமம் என்ற பெயர் ஏற்பட்டது. திருமாலின் தவம் நிறைவு பெற்றபின், தானே குருவாக இருந்து, அஷ்டாட்சர மந்திரத்தை மானிடர் ஒருவருக்கு (நரன்) உபதேசம் செய்ததாகக் கூறப்படுகிறது. உலகில் தோன்றிய ஞானம் அனைத்துக்கும் தொடக்க இடமாக இத்தலம் விளங்குகிறது.

கோயில் அமைப்பும் சிறப்பும்

கிபி 9-ம் நூற்றாண்டில் பத்ரிகாஸ்ரமத்தில் மூர்த்தி பிரதிஷ்டை செய்யப்பட்டது. உத்திரப்பிரதேச மாநிலம் தேவப் பிரயாகையில் இருந்து 124 கிமீ தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. டேராடூனில் இருந்து பேருந்து மூலம் இத்தலத்தை அடையலாம். மலைப்பாதை என்பதால் பேருந்துகள் காலை 6 மணியளவில் புறப்பட்டு, மாலை 4-30 வரை பயணிக்கும். பின்பு மறுநாள் காலை புறப்பட்டு மாலையில் பத்ரிநாத்தை அடையும். 2 நாள் பேருந்து பயணம் என்பதால், இடையில் ஜோஷி மடத்தில் இப்பேருந்துகள் நிறுத்தப்படும்.

பத்ரிநாதர் கோயில் கடல் மட்டத்தில் இருந்து 10,248 அடி உயரத்தில் உள்ளது. செல்லும் பாதைகள் பெரும் வளைவுகளைக் கொண்டு அமைந்துள்ளன. மிகவும் குளிர்ந்த பகுதி என்பதால், வைகாசி மாதத்தில் இருந்து கார்த்திகை மாதம் வரை பக்தர்களுக்கு நடை திறக்கப்படும். மார்கழியில் இருந்து சித்திரை மாதம் வரை நடை சாத்தப்படும். அப்போது தேவர்கள் மட்டும் இங்கு தங்கி சுவாமி தரிசனம் செய்வதாக ஐதீகம்.

பத்ரிகாஸ்ரமம் கோயில் 18-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. கருவறை, தரிசன மண்டபம், சபா மண்டபம் கொண்டு அமைந்துள்ள இக் கோயிலில் கருடாழ்வார், குபேரன், நாரதர், மகாலட்சுமி, ஆதிசங்கரர், சுவாமி தேசிகன், ராமானுஜரின் சீடர் பரம்பரர், நாராயணர் விக்கிரகங்கள் உள்ளன.

விஷால் என்று அழைக்கப்படும் பத்ரிநாராயணர், மகாலட்சுமியைத் திருமணம் புரிய, குபேரனை அழைத்து மிகவும் ஆடம்பரமான முறையில் திருமண ஏற்பாடுகளைச் செய்யப் பணித்தார். அதனால் திருமணம் கைகூடாதவர்கள், இத்தலத்துக்கு வந்து வழிபாடு செய்தால், நன்மை நடைபெறும் என்பது நம்பிக்கை.

இத்தலத்தில் இருந்து 9 கிமீ தொலைவில் குபேரன் வசிக்கும் அளகாபுரி உள்ளது. இங்குள்ள அலக்நந்தா நதி, குபேரபட்டினத்தில் உற்பத்தியாகிறது. இந்த நதி தேவபிரயாகையில் பாகீரதி நதியுடன் இணைந்து கங்கை என்ற பெயரைப் பெற்றது. இத்தலத்தில் திருமந்திரம் உருவானதாகக் கூறப்படுகிறது.

வெந்நீர் தீர்த்தம்

குளிர்ந்த இடமான பத்ரிகாஸ்ரமத்தில் ஐந்து தீர்த்தங்கள் உள்ளன. அவை தப்த குண்டம், நாரத குண்டம், கூர்ம தாரா, பிரகலாத தாரா, ரிஷிகங்கர் ஆகியனவாகும். ஒவ்வொரு தீர்த்தமும் ஒவ்வொரு செயல்பாடுகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. கூர்மதாரா தீர்த்தம் அன்னதானத்துக்குப் பயன்படுத்தப்படுகிறது. தப்த குண்டத்தில் நீராடிய பிறகே பக்தர்கள் கோயிலுக்குள் செல்கின்றனர். குளிர்ந்த இடமாக இருந்தாலும், இத்தீர்த்தத்தில் உள்ள நீர் வெப்பம் நிறைந்ததாக இருக்கிறது என்பது ஆச்சரியமாக உள்ளது.

ஒருசமயம் அதிக நெய் சேர்த்துக் கொண்டதால், அக்னி பகவானுக்கு அஜீரணக் கோளாறு ஏற்படுகிறது. இது தொடர்பாக திருமாலை நோக்கி தவம் மேற்கொண்டார். உடனே, திருமால் அக்னி பகவானை நீர் வடிவில் பிரவேசிக்கச் செய்து, அதில் பக்தர்கள் நீராடினால் அவர்கள் பாவம் நீங்குவதுடன், அக்னி பகவானின் அஜீரணக் கோளாறும் தீரும் என்று அருள்பாலித்தார். அதுமுதல் அக்னி பகவான் பத்ரி நாராயணரின் திருவடியில் இருந்து நீர்த்தாரையாகப் பிரவேசித்து தப்த குண்டத்தில் இருந்து விழுந்து பிறகு சிதள குண்டத்தை அடைகிறார். உடல் ஏற்கும் அளவுக்கு சூடாக இருக்கும் நீரானது, குண்டத்துக்கு அருகில் அலக்நந்தா நதியாக பெருக்கெடுத்து ஓடும்போது, உடல் ஏற்க முடியாத அளவுக்கு குளிர்ச்சியாக உள்ளது.

ஆதிசங்கரர் ஏற்பாட்டின்படி இங்கு கேரள முறைப்படி வழிபாடு நடைபெறுகிறது. ஆதிசங்கரர் இந்து மதத்தை தழைத்தோங்கச் செய்யும் பொருட்டு தெற்கே சிருங்கேரியிலும், வடக்கே பத்ரிநாத்திலும், கிழக்கே பூரியிலும், மேற்கே துவாரகையிலும் சிருங்கேரி மடங்களை நிறுவினார். பத்ரிநாத் கோயில் வருடம்தோறும் தீபாவளி பண்டிகையை ஒட்டி மூடப்படும். அதற்கு முன்னர் போதுமான நெய் வாங்கி விளக்கேற்றி விட்டு கோயிலை மூடுவர். பின்னர் மே மாதத்தில் இக்கோயில் திறக்கப்படும்போது, இந்த தீபம் அணையாமல் எரிந்து கொண்டிருக்கும் என்பது தனிச்சிறப்பு.

தப்த காஞ்சன விமானம், அக்னி சப்த குண்டநீர், நாராயணர் தவம் செய்த இடங்கள், ஆதிசங்கரர் நிறுவிய ஜோஷி மட் ஆகியன இப்பகுதியில் காணப்பட வேண்டிய இடங்களாக அமைந்துள்ளன.

பத்ரிநாத்தில் தவம் புரிந்தவர்களின் பெயரிலேயே குகைகள், அருவிகள், ஆறுகள், புஷ்கரிணிகள் அமைந்துள்ளன. பத்ரிகாஸ்ரம புராணத்தில் பஞ்ச பத்ரி தலங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவை யோகபத்ரி, வ்ருத்த பத்ரி, த்யானபத்ரி, தபோ பத்ரி (பத்ரி விஷால்), பவிஷ்ய பத்ரி ஆகும்.

உத்தவருக்கு தரிசனம்

கிருஷ்ணாவதாரம் நிறைவு பெற்றதும், திருமால் வைகுண்டம் கிளம்ப ஆயத்தமானார். அப்போது அவரது நண்பரும் அமைச்சருமான உத்தவர், தானும் திருமாலுடன் வைகுண்டம் வருவதாகக் கூறினார். அர்ஜுனனுக்கு கீதையை உபதேசம் செய்தது போன்று, உத்தவருக்கு உத்தவ கீதையை உபதேசம் செய்தார் திருமால். பின்னர், திருமால் உத்தவரிடம், “உன் வாழ்நாள் காலம் முடிந்ததும் வைகுண்டம் வரலாம். அதுவரை பத்ரிகாஸ்ரமத்தில் தங்கி, இறைவனை தியானித்துக் கொண்டு இருக்கவும். உன் வாழ்நாள் இறுதியில் என்னை வந்து அடைவாய்” என்று கூறினார். அதன்படி உத்தவர் பத்ரிநாத் அருகில் உள்ள பதரி ஆசிரமத்தில் தங்கி, பகவானை தியானித்துக் கொண்டு வாழ்நாள் முடிந்த பின்னர் திருமால் திருவடியை அடைந்தார்.

தேவி பாகவதம்

ஸ்ரீமன் நாராயணரின் அம்சமான வியாசர் இத்தலத்தில் தவம் மேற்கொண்டுள்ளார். அந்தத் தவமே, தாயாரின் கருணையோடு அவருக்கு தேவி பாகவதத்தை இயற்றும் திறனை அளித்துள்ளது. தேவி கூறிய வாசகமெல்லாம் அவருடைய படைப்புகளாக உருவாகி உள்ளன. நான் பத்ரிஸ்தானத்தில் பத்ரகர்ணிகையாக வீற்றிருக்கிறேன் என்று தேவி, பாகவதத்தில் கூறியுள்ளது, வியாஸர் மூலமாக நமக்கு கிடைக்கப் பெற்றுள்ளது. மேலும், மணிபத்ரபூர் (மாணாக்ராம்) மாணா கிராமத்தில் ஒரு குகையில் அமர்ந்து வியாசர் மகாபாரதத்தை இயற்றினார். இது வியாச குகைக்கு எதிரில் உள்ளது.

திருவிழாக்கள்

கிருஷ்ண ஜெயந்தி, ஜூன் மாத பத்ரி கேதார் திருவிழா (8 நாள்) சிறப்பாக கொண்டாடப்படும். பத்ரிநாதருக்கு பால், தேன், திருமஞ்சனம், மஹாபோக் என்ற நிவேதனம் செய்து பக்தர்கள், தங்கள் நேர்த்திக் கடனை செலுத்துவது வழக்கம். 108 வைணவ திவ்ய தேசமாகவும், சக்தி பீடமாகவும் இத்தலம் விளங்குவதால், தரிசனத்துக்குத் திறக்கும் நாட்களில் எல்லாம் பக்தர்கள் கூட்டம் நிறைந்து காணப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in