அருள்தரும் சக்தி பீடங்கள் - 42

திருவாலங்காடு பத்ரகாளியம்மன்
அருள்தரும் சக்தி பீடங்கள் - 42

அம்மனின் சக்தி பீட வரிசையில் திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு வண்டார்குழலி சமேத வடாரண்யேஸ்வரர் கோயில் காளி பீடமாகப் போற்றப்படுகிறது. திருநாவுக்கரசர் 2 பதிகங்கள், சம்பந்தர் 1 பதிகம், சுந்தரர் 1 பதிகம் என்று இத்தலத்தின் மீது 4 பதிகங்கள் அமைந்துள்ளன. தேவாரப் பாடல்பெற்ற 274 சிவன் கோயில்களில் இது 248-வது தேவாரத்தலம் ஆகும்.

சிவபெருமான் இத்தலத்தில் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார், நடராஜபெருமான் நடனம் புரியும் ஐம்பெரும் அம்பலங்களில் இது ரத்தின சபை ஆகும். ஆலமரக் காடாக இருந்த இடத்தில் ஈசன் நடனம் புரிந்ததால் இங்குள்ள சிவன் வட ஆரண்யேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.

தல வரலாறு

சுனந்த முனிவர், சிவபெருமானின் தாண்டவக் கோலத்தைக் காண வேண்டும் என்று விரும்பினார். அதனால் சிவபெருமானை நோக்கி தவம் மேற்கொண்டார். முனிவரின் தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான், அவரிடம் திருவாலங்காட்டின் பெருமைகளைக் கூறி அங்கு சென்று, ஆலமரங்கள் சூழ்ந்த காட்டின் நடுவே அமர்ந்து தவம் இயற்றக் கூறினார். அதன்படி சுனந்த முனிவரும் திருவாலங்காடு வந்திருந்து தவமியற்றினார், நெடுங்காலமாக அவர் தவம் மேற்கொண்டிருந்ததால், அவர் அமர்ந்திருந்த இடத்தைச் சுற்றி புல் வளர்ந்து, அதன் உச்சியில் முஞ்சிப் புல்லும் (நாணல்) வளர்ந்து விட்டது. இதனால் அவருக்கு ‘முஞ்சிகேசர்’ என்ற பெயரும் ஏற்பட்டது.

அதேசமயத்தில் சிவபெருமானின் திருக்கரத்தில் ஆபரணமாக இருந்த கார்கோடகன் பாம்பு ஈசனின் கரங்களிலேயே நஞ்சைக் கக்கியது. கோபத்தில் சிவபெருமான், கார்கோடகன் பாம்பை சபித்து விடுகிறார். அந்த சாப விமோசனத்துக்காக கார்கோடகன் பாம்பையும் திருவாலங்காட்டில் தவமியற்றப் பணித்தார். முஞ்சிகேசரின் அருட்பார்வை பட்டதும், கார்கோடகன் பாம்பின் சாபம் நீங்கப் பெறும் என்றும், அப்போது தானும் தோன்றி அருள்பாலிப்பதாகவும் சிவபெருமான் கூறுகிறார். அதன்படி கார்கோடகன் பாம்பு, கார்கோடக முனிவராக இருந்து பல தலங்களை தரிசித்துவிட்டு, நிறைவாக இத்தலம் வந்து முஞ்சிகேசரின் அருட்பார்வையால் சாபம் நீங்கப்பெற்றதாகக் கூறப்படுகிறது.

ஆலமரங்கள் சூழ்ந்த காட்டில் தங்கிய சும்பன், நிசும்பன் என்ற இரு அசுரர்கள், அவ்வப்போது வெளியே வந்து மனிதர்களுக்கும் தேவர்களுக்கும் பல வித இன்னல்களை அளித்து வந்தனர். அசுரர்கள் குறித்து யாரிடம் முறையிடுவது என்று யோசித்த தேவர்கள், சிவபெருமானிடமும் பார்வதியிடமும் முறையிடலாம் என்று முடிவுசெய்து அவர்களிடம் சென்று கூறினர்.

இதற்கு, தானே ஒரு முடிவுகட்டுவதாகக் கூறிய பார்வதி, தன் பார்வையால் காளியை தோற்றுவித்தார், மேலும், அசுரர்களை அழித்தபின் அவரையே ஆலங்காட்டுக்கு தலைவியாக்குவதாக உறுதியளித்தார். காளியும் அசுரர்களை அழித்து ஆலங்காட்டுக்கு தலைவி ஆனார்.

அசுரர்களை அழித்து அவர்களது குருதியையே உணவாக உட்கொண்ட காளி, பல கோர செயல்களை செய்யத் தொடங்கினார். முஞ்சிகேசர், கார்கோடக முனிவருக்கு தரிசனம் தரும் சமயம் வந்துவிட்டதால், சிவபெருமான் கோர வடிவம் கொண்டு ஆலங்காட்டை அடைந்தார். காளியை நடனம் புரிய அழைக்கிறார் சிவபெருமான். காளியும் அதற்கு உடன்பட்டு, “என்னுடன் நடனம் ஆடி நீங்கள் வெற்றி பெற்றால் இந்த ஆலங்காட்டை நீங்களே ஆளலாம்” என்று கூறுகிறார்.

இருவரும் நடனம் புரிகின்றனர். சிவபெருமான் ஊர்த்துவ தாண்டவம் ஆடியதும், தன்னால் இதுபோல் நடனம்புரிய இயலாது என்று கூறிய காளி, தனது தோல்வியை ஒப்புக்கொள்கிறார்.

உடனே சிவபெருமான், “என்னையன்றி உனக்கு சமமானவர் இவ்வுலகில் யாரும் இல்லை. அதனால் இத்தலத்தில் என்னை வழிபட வருபவர்கள் முதலில் உன்னை வழிபட்ட பின்னர் என்னை வழிபட்டால்தான் முழு பலன் கிடைக்கும்” என்று வரம் அளித்தார், அன்று முதல் இத்தலத்தில் காளி, தனி கோயில் கொண்டு அருள்பாலிக்கிறார். முஞ்சிகேசர் மனநிறைவோடு இந்த தாண்டவத்தை கண்டு களித்தார். இக்கோயில் அருகே முஞ்சிகேச முனிவரின் ஜீவ சமாதி அமைந்துள்ளது.

ஊர்த்துவ தாண்டவம்
ஊர்த்துவ தாண்டவம்

ஊர்த்துவ தாண்டவம்

திருவாலங்காட்டில் உள்ள நடராஜ தாண்டவம் ஊர்த்துவ தாண்டவம் என்று கூறப்படுகிறது. வலதுகாலை உடம்புடன் ஒட்டி உச்சங்கால் வரை தூக்கி நின்றாடும் நடனம், ஊர்த்துவ தாண்டவம் என்று அழைக்கப்படும். வழக்கமாக தனது பாதத்தை செங்குத்தாக உடலை ஒட்டி தூக்கி நின்று ஆடாமல் உடலின் முன்பக்கத்தில் முகத்துக்கு நேராக பாதத்தை தூக்கி ஆடுவதே இந்த நடனம் ஆகும். சிவபெருமானுக்கும் காளிக்கும் இடையே நடைபெற்ற போட்டியில், சிவபெருமான் தன் காதில் இருந்த மணியை கீழே விழுமாறு செய்து, பின் அதை தன் இடது கால் பெருவிரலால் எடுத்து மீண்டும் தன் காதில் பொருத்தினார்.

பிறவாமை வேண்டும்

63 நாயன்மார்களுள் ஒருவர் காரைக்கால் அம்மையார். இவர் ஈசனை தரிசிக்க கைலாயத்துக்கு தலைகீழாக நடந்து சென்றார். அப்போது ஈசன் இவரை, “அம்மையே” என்று அழைத்தார். பின்னர் “யாது வரம் வேண்டும்?” என்று கேட்டார், அப்போது காரைக்கால் அம்மையார் ஈசனிடம், “பிறவாமை வேண்டும், அப்படியே பிறந்தாலும் உனது நடனத்தைக் காணும் பேறு வேண்டும்” என்றார். ஈசனும் அவ்வண்ணமே அருள் செய்தார். அதன்பிறகு திரு ஆலங்காடு வந்த காரைக்கால் அம்மையார், மூத்த திருப்பதிகம் பாடினார்.

காரைக்கால் அம்மையார்
காரைக்கால் அம்மையார்

அதன் பின்னர் மன்னன் ஒருவனின் கனவில் தோன்றிய ஈசன், தனது சந்நிதிக்குப் பின்புறம் காரைக்கால் அம்மையாருக்கு சந்நிதி எழுப்பும்படி கூறினார். அதன்படி மன்னன் நடராஜப் பெருமானுக்கு பின்புறம் சந்நிதி எழுப்பினான். இதில் காரைக்கால் அம்மையார் ஐக்கியமானார். இன்றும் இவர் ஈசனின் தாண்டவத்தை ரசித்துக் கொண்டிருப்பதாக ஐதீகம்.

கோயில் அமைப்பும் சிறப்பும்

கிழக்கில் உள்ள ஐந்து நிலை ராஜகோபுரம், சுதை வேலைப்பாடுகளுடன் அமைந்துள்ளது. கோயில் கோபுர நுழைவு வாயிலுக்கு இடதுபுறத்தில் வல்லப கணபதி அருள்பாலிக்கிறார். வலதுபுறத்தில் சுப்பிரமணியர் வள்ளி தெய்வானையுடன் அருள்பாலிக்கிறார். பலிபீடம், கொடிமரத்தைக் கடந்து சென்றால், அங்கு மூன்று நிலைகள் கொண்ட இரண்டாவது கோபுரம் உள்ளது. அதையொட்டிய மதில்சுவரின் மேல்இடதுபுறத்தில் காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாறும் வலதுபுறத்தில் மீனாட்சி கல்யாண வரலாறும் சுதைச் சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளன.

இரண்டாவது பிரகாரம் வலதுபுறத்தில் வண்டார் குழலம்மை சந்நிதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது, அம்பிகை நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். வண்டுகள் மொய்க்கும் வகையில் வாசமுள்ள கூந்தலை உடைய அன்னையாக உள்ளதால், இத்தலம் தலைக்கு உரிய தலமாகப் (திருமுடித் தலம்) போற்றப்படுகிறது.

அம்பிகை சந்நிதிக்கு நேரே இறைவன் கருவறைக்குச் செல்லும் நுழைவு வாயில் உள்ளது. நுழைவு வாயிலின் மேற்புறம் சிவபெருமானின் ஐந்து சபைகளும் சுதைச் சிற்பங்களாக காட்சி தருகின்றன. பிரகாரத்தில் ஆருத்ரா அபிஷேக மண்டபம், ரத்தின சபை வாசல் உள்ளது. நடராஜர் சந்நிதிக்கு எதிரே காளி சந்நிதி அமையப்பெற்றுள்ளது. எட்டு கைகளுடன் நான்கு அடி உயரத்தில் உள்ள பத்ரகாளி, சிவபெருமானுடன் நடனம் புரிந்தார்.

சந்நிதியில் சிற்பக் கலையழகு வாய்ந்த கல்தூண்கள் உள்ளன. ரத்தின சபையில் நடராஜப் பெருமானின் ஊர்த்துவ தாண்டவ உற்சவத் திருமேனி அமைந்துள்ளது. அருகே சிவகாமி, காரைக்கால் அம்மையார் திருமேனிகள் உள்ளன. இங்குள்ள பெரிய ஸ்படிகலிங்கம் மற்றும் சிறிய மரகதலிங்கங்களுக்கு நான்கு கால அபிஷேகங்கள் நடைபெறுகின்றன.

பத்ரகாளி
பத்ரகாளி

ரத்தின சபையை வலம் வரும்போது சாளரத்தில் சண்டேஸ்வரரின் உருவம் உள்ளது. ரத்தின சபையின் விமானம் செப்புத்தகடு வேயப்பட்டு, ஐந்து கலசங்கள் கொண்டதாக அமைந்துள்ளது. தாமரை மலர் விரித்தது போல் அமைந்து, அதன் மீது உள்ள ‘கமலத் தேர்’ குறிப்பிடத்தக்கது. தமிழக சரித்திர செப்பேடுகள் திருவாலங்காட்டில் கிடைக்கப்பெற்று, அவை தற்போது சென்னை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. சென்னை – அரக்கோணம் ரயில் பாதையில் உள்ளது திருவாலங்காடு. ரயில் நிலையத்தில் இருந்து 4 கிமீ தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.

தலத்தை சிறப்பிக்கும் நூல்கள்

‘தலைவலி மருந்தீடு, காமாலை, சோகை, சுரம்’ எனத் தொடங்கும் பழநி திருப்புகழில், ‘மாகாளி நாண முளம் அவைதனில் நடித்தோனை’ என்ற அடிகளில் இத்தலத்தில் காளியைத் தோற்கடித்த சிவபெருமான் குறித்து கூறப்பட்டுள்ளது.

காரைக்கால் அம்மையார் அருளிய மூத்த திருப்பதிகம் சிறப்புடையது. பத்து பாடல்கள் கொண்ட இத்தொகுப்பு பதினோராம் திருமுறையில் அமைந்துள்ளது. இப்பாடல்களை தினமும் பாடுவதால் கிடைக்கும் பலன்கள் குறித்து பதினோராம் பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒப்பினை இல்லவன் பேய்கள்கூடி

ஒன்றினை ஒன்றடித் தொக்கலித்துப்

பப்பினை யிட்டுப் பகண்டை யாடப்

பாடிருந் தந்நரி யாழ் அமைப்ப

அப்பனை அணிதிரு ஆலங்காட்டுள்

அடிகளைச் செடிதலைக் காரைக்காற்பேய்

செப்பிய செந்தமிழ் பத்தும்வல்லார்

சிவகதி சேர்ந்தின்பம் எய்துவாரே...

திருநாவுக்கரசர் பெருமான் பாடிய நான்காம் திருமுறையில்,

கூடினார் உமைதன் னோடே குறிப்புடை வேடங் கொண்டு

சூடினார் கங்கை யானைச் சுவறிடு சடையர் போலும்

பாடினார் சாம வேதம் பைம்பொழிற் பழனை மேயார்

ஆடினார் காளி காண ஆலங்காட் டடிகளாரே... என்று இவ்வூர் காளியின் நடனம் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேரோட்டம்
தேரோட்டம்

திருவிழாக்கள்

மார்கழி திருவாதிரை, பங்குனி உத்திர பிரம்மோற்சவம் (10 நாள்) இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. பங்குனி சுவாதி நட்சத்திர தினத்தில் காரைக்கால் அம்மையார் ஐக்கிய விழா நடைபெறும். நடனக்கலையில் தேர்ச்சி பெற, கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை ஓங்க பக்தர்கள் இங்கு வழிபாடு செய்வது வழக்கம். வட ஆரண்யேஸ்வரரை ஐப்பசி மாத பௌர்ணமி தினத்தில் தரிசனம் செய்தால் அனைத்து இன்பங்களும் கிடைக்கும் என்று தல புராணம் தெரிவிக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in