அருள்தரும் சக்தி பீடங்கள்: 50

ஹேமகூடம் மன்மதை
அருள்தரும் சக்தி பீடங்கள்: 50

அம்மனின் சக்தி பீட வரிசையில், கர்நாடக மாநிலத்தின் பெல்லாரி மாவட்டத்தில் பாயும் துங்கபத்ரா ஆற்றங்கரையில் உள்ள ஹம்பி (ஹேமகூடம்) பம்பாதேவி சமேத விருபாட்சர் கோயில் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. விஜய நகரப் பேரரசின் தலைநகரமாக விளங்கியபோது இத்தலம் விஜயநகரம் என்று அழைக்கப்பட்டது.

சமயச் சிறப்பு வாய்ந்த இடமாகக் கருதப்படும் இத்தலத்தில் விஜயநகரத்தோடு தொடர்புடைய பல நினைவுச் சின்னங்கள் காணப்படுகின்றன. துங்கபத்ரா ஆற்றின் பழைய பெயரான ‘பம்பா’ தான் இப்போது ‘ஹம்பே’ (ஹம்பி) என்ற கன்னட சொல் வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது. விஜயநகர அரசர்களின் குலதெய்வமான விருபாட்சரின் பெயராலேயே இத்தலம் ‘விருபாட்சபுரம்’ என்றும் அழைக்கப்படுகிறது.

தல வரலாறு

ஹேமகூட மலையில் முனிவர்கள் பலர் வசித்து வந்தனர். அப்போது அவர்களுக்கு இளம்பெண் ஒருத்தி பூக்களைப் பறித்துக் கொடுப்பது, மாடு, கன்றுகளைப் பாதுகாப்பது போன்ற பணிகளைச் செய்து கொண்டிருந்தாள். யாகம், பூஜைகள் உள்ளிட்ட இறைப் பணியில் ஆழ்ந்திருந்த முனிவர்கள், இந்தப் பெண்ணின் சேவையை மெச்சி, அவளுக்கு வரம் அளிப்பதாகக் கூறினர்.

அனைவரும் வணங்கும் விருபாட்சரையே மணம் புரிய விரும்புவதாக அந்தப் பெண் கூறியதும் முனிவர்கள் ஆச்சரியப்பட்டனர். அம்பாளின் அம்சமாக இருப்பவருக்கே இதுபோன்ற விருப்பம் இருக்கும் என்பதை உணர்ந்த முனிவர்கள், சிவபெருமானை நோக்கி தவம் மேற்கொள்ளுமாறு அப்பெண்ணைப் பணித்தனர். அதன்படி முனிவர்களிடம் இருந்து மந்திர உபதேசங்களைப் பெற்று, சிவபெருமானை நோக்கி அப்பெண் தவம் மேற்கொண்டாள்.

அப்பெண்ணின் தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான், அவள் முன் தோன்றி, வேண்டிய வரங்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்கிறார். அப்பெண்ணும், தன் பெயர் ‘பம்பை’ என்பதையும், சிவபெருமானை மணம் புரிய விரும்புவதையும் தெரிவிக்கிறாள். அவளின் விருப்பப்படியே சிவபெருமானும் அவளை மணம் புரிந்து கொண்டதால், அவர் ‘பம்பா பதி’ என்று அழைக்கப்படுகிறார்.

புவனேஸ்வரி

பம்பை என்று அழைக்கப்படும் அப்பெண்மணி, பார்வதி தேவியின் அம்சமாகவே கருதப்பட்டு, ‘மன்மதை’ என்றும் ‘புவனேஸ்வரி’ என்றும் அழைக்கப்படுகிறார். ஒருவர் இறை சேவை புரிந்து, அவரது அருளுக்கு பாத்திரமானால், அவரது கருணையைப் பெறலாம் என்பதே அம்பிகை அனைவருக்கும் உணர்த்தும் தத்துவம் ஆகும்.

புராணத் தொடர்பு

ஹம்பியில் உள்ள பல இடங்கள் புராணத் தொடர்புடையன. ராமாயணத்தில் வரும் குரங்கு அரசான கிஷ்கிந்தையுடன் இவ்விடங்கள் தொடர்பு படுத்தப்படுகின்றன. ஹம்பிக்கு அருகே உள்ள நிம்பபுரம் என்ற இடத்தில் வாலி வாழ்ந்ததற்கான அடையாளங்கள் காணப்படுகின்றன. இங்குள்ள ‘அஞ்சனாத்ரி குன்று’ அனுமன் பிறந்த இடமாகக் கருதப்படுகிறது. இந்த மலையில் 1,060 படிகள் ஏறிச் சென்றால், அனுமனுக்கும் அவரது தாயார் அஞ்சனா தேவிக்கும் கோயில்கள் உள்ளன. அங்கு தினம்தோறும் வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.

தர்மம் வெல்லும்

மதங்க ரிஷி என்பவர் இத்தலத்தில் அமர்ந்து தவத்தில் ஆழ்ந்தார். ஒருசமயம் சுக்கிரீவனின் அண்ணன் வாலி, ஒரு ராட்சதனைக் கொன்று, அவனது குருதியை இங்கு படரவிட்டான். இதில் கோபமடைந்த ரிஷி, இந்த இடத்துக்கு வாலி வந்தால் அவனது தலை சுக்கு நூறாகச் சிதறும் என்று சபித்தார். அதன் காரணமாக, வாலி இந்த மலைப் பக்கம் வராமல் இருந்தான். இதைப் பயன்படுத்திக் கொண்டு சுக்ரீவன் இந்த மலையில் ஒளிந்து கொண்டு ராமபிரானை சந்தித்து, தர்மத்தை நிலை நாட்ட எண்ணினான். எந்தப் பகுதியில் இருந்து சுக்ரீவன் விரட்டியடிக்கப்பட்டானோ, அதே இடத்தில் அவனுக்கு அடைக்கலம் கிடைத்துள்ளது.

கோயில் அமைப்பும் சிறப்பும்

தென்னிந்திய வரலாற்றுச் சின்னமாகக் கருதப்படும் ஹம்பி கிராமமானது துங்கபத்திரை ஆறும், மூன்று புறமும் கற்குவியலாய் காணப்படும் குன்றுகளும் சூழ்ந்து காணப்படுகிறது. துங்கபத்ரா ஆற்றங்கரையில் உள்ள ஹேமகுடா மலை அடிவாரத்தில் அமைந்துள்ள விருபாட்சர் கோயில், பம்பாவதி கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. கிழக்குப் பகுதியில் உள்ள ராஜகோபுரம் 165 அடி உயரம் கொண்டதாக உள்ளது. ராஜகோபுரத்தின் நிழல் ஒரு துளையின் வழியே கோயிலில் உள்ள சுவற்றின் மேல் தலை கீழாகத் தெரிவது அதிசயமாகும். 7-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இக்கோயில் யுனெஸ்கோ உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாக உள்ளது.

அடுத்ததாக ஒரு சிறு கோபுரம், துங்கபத்ரா நதிக்குச் செல்லும் வழியில் அமைந்த வடபுறக் கோபுரம் (கனககிரி கோபுரம்) அமைந்துள்ளன. சிவபெருமான், புவனேஸ்வரி, பம்பை ஆகியோருக்கு தனித்தனி சந்நிதிகள் அமைந்துள்ள இக்கோயில், கிபி 1510-ம் ஆண்டில் கிருஷ்ணதேவராயர் முடிசூட்டிக் கொண்டபோது சிரமைக்கப்பட்டது. சிறு கோபுரமும், தூண்கள் அமைந்த மண்டபமும் 500 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்தவையாகும்.

கோயில் வளாகத்தில் சிவபெருமான், பம்பை தேவி கருவறைகள், அந்தராளம் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் தூண்களுடன் கூடிய முக மண்டபம், மிகப் பெரிய அரங்க மண்டபம், தூண்களுடன் கூடிய பிரகார மண்டபம், பாடலேஸ்வரர், நரசிம்மர், மகிஷாசுர மர்த்தினி, சப்த மாதா, சூரிய நாராயணர், தாரகேஸ்வரர், சரஸ்வதி தேவி, வித்யாரண்யர் சந்நிதிகள் அமைந்துள்ளன.

விருபாட்சர் சந்நிதிக்கு முன்னர் நந்தியெம்பெருமானின் மூன்று சிலைகள் அமைந்துள்ளன. முன்பொரு காலத்தில் மூன்று தலை, ஓர் உடலுடன் இருந்த நந்தியெம்பெருமான் சிலை இருந்துள்ளது. அந்நியர் படையெடுப்பால் நந்திதேவரின் முகம் சிதிலமடைந்ததால், மூன்று நந்திதேவர் சிலைகள் அமைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. பார்வதி தேவி, புவனேஸ்வரி தேவி சந்நிதிகள் கிபி 12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டவை. சங்கீத மண்டபத்தில் உள்ள 56 தூண்கள், ஒவ்வொன்றும் வெவ்வேறு இசைக் கருவிகளின் ஒலி வரும்படி அமைந்துள்ளன. ராஜகோபுரத்தின் அடித்தளம் கருங்கல்லாலும், மேல் தளங்கள் செங்கல், சுண்ணாம்பு, சுதையாலும் அமைக்கப்பட்டுள்ளன.

கிழக்கு முகமாக உள்ள ராஜகோபுரம் 9 நிலைகளையும், சிறு கோபுரம் 3 நிலைகளையும், வடக்கு கோபுரம் 5 நிலைகளையும் கொண்டு அமைந்துள்ளன. அரங்க மண்டப கூரை ஓவியங்கள் மிகவும் போற்றப்படுகின்றன. இதிலுள்ள வித்யாரண்யர் ஊர்வலம், தீபாலங்காரம், தசாவதாரம், கிரிஜா திருமணம், மத்ஸ்ய இயந்திரத்தை குறிவைக்கும் அர்ஜுனன், திரிபுர சிவபெருமான் ஓவியங்கள் குறிப்பிடத்தக்கவை.

தேரின் சக்கரத்தில் மட்டும் யானைப் படை, குதிரைப் படை, ஒட்டகப் படைகள் வரிசையாக செல்வது போல் சிற்பங்கள் அமைந்துள்ளன. ஹம்பியைச் சுற்றி ரிஷிமுக பர்வதம், அஞ்சனாத்ரி, மதங்கஹரி, ஹேமகூடம், கந்த மாதவ பர்வதம் என 5 மலைகள் அமைந்துள்ளன. அனுமன் கோயில் அருகே விஜயலட்சுமி சந்நிதி, இடது புறம் கஜ கணபதி சிலை (10 விநாயகர் முகங்கள்) உள்ளன. அருகே உள்ள சபரி குகையில் ராமர் பாதம் உள்ளது. இங்கு சபரி ராமபிரானை சந்தித்ததாகக் கூறப்படுகிறது.

ஹேமகூட பர்வதத்தின் மீது 2 பாதங்களும் அவற்றைச் சுற்றி இருப்பது போல் நாகமும் செதுக்கப்பட்டுள்ளன. இரு பாதங்கள் மகா விஷ்ணுவின் பாதங்களாகவும், நாகம் ஆதிசேஷனின் அம்சமாகவும், அம்பிகையின் அம்சமாகவும் கருதப்படுகின்றன.

பிற கோயில்கள்

ஹம்பியில் வரலாற்றுச் சின்னங்களுடன் பல கோயில்கள் காணப்படுகின்றன. அச்சுதராயர் கோயில், படவி லிங்கம், சந்திரமௌலீஸ்வரர் கோயில், மால்யவந்த ரகுநாதசுவாமி கோயில், ஹராரே ராமர் கோயில் வளாகம், ஜைனக் கோயில், கிருஷ்ணர் கோயில், விட்டலர் கோயில்கள் அமைந்துள்ளன.

திருமாலை முதன்மைக் கடவுளாகக் கொண்டு அமைந்துள்ள அச்சுதராயர் கோயில் கிபி 1534-ம் ஆண்டு கட்டப்பட்டது. கந்தமாதனம், மாதங்கா குன்றுகளுக்கிடையே உள்ள பள்ளத்தாக்கில் இக்கோயில் அமைந்துள்ளது. லட்சுமி நரசிம்மர் சிலைக்கு அடுத்துள்ள அறையில் படவி லிங்கம் அமைந்துள்ளது. படவி லிங்கம் உள்ள அறை அருகே ஒரு வாய்க்கால் செல்வதால், அடிப்பகுதி எப்போதும் நீரால் சூழப்பட்டிருக்கும். இந்த லிங்கத்தில் மூன்றாவது கண் உள்ளது குறிப்பிடத்தக்கது.

பழங்கால கட்டிட வடிவத்தில் அமைந்துள்ள மால்யவந்த ரகுநாதசுவாமி கோயில் சுவர்களில் மீன் உள்ளிட்ட கடல்வாழ் உயிரின வடிவ வேலைப்பாடுகள் காணப்படுகின்றன. ஹராரே ராமர் கோயில் உட்சுவர்களில் ராமாயண நிகழ்வுகள் செதுக்கப்பட்டுள்ளன. 14-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஜைன கோயில்களும் காணப்படுகின்றன. முறையாகப் பராமரிக்கப்படாத கிருஷ்ணர் கோயிலின் கிழக்குப் புறத்தில் புண்ணிய தீர்த்தம் அமைந்துள்ளது. விட்டலா கோயில் கல்தேர் கர்நாடக மாநில சுற்றுலாத் துறையின் சின்னமாக உள்ளது. கோயிலில் உள்ள ஊஞ்சல் கூடம் விஜயநகர கட்டிடக் கலைக்கு ஓர் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. இசைத் தூண்கள் கொண்ட மண்டபமும் அருகே உள்ளது.

பாதாள சிவன் கோயில் அகழ்ந்தெடுக்கப்படும்போது, அதன் மேற்புறம் வரை பூமிக்கடியில் புதையுண்டு காணப்பட்டதாகக் கூறப்படுகிறது. கால்வாய்ப் பாலங்கள், கால்வாய்கள், கமலபுரா தொல்லியல் அருங்காட்சியகம், தாமரை மண்டபம், சனானா வளாகம், யானைக் கூடம், அரசரின் தராசு ஆகியவற்றைக் காண இன்றும் சுற்றுலாப் பயணிகள் இங்கு குவிவது வழக்கம்.

கிருஷ்ணதேவராயரின் படையில் இருந்த 11 அரச யானைகளை யானைக் கூடத்தில் கட்டி வைத்திருந்தனர். அருகில் உள்ள கட்டிடத்தில் யானைப் பாகர்கள் தங்கி வந்தனர். ஹாஸ்பேட் ரயில் நிலையத்துக்கு அருகே பெருமாள் கோயில் உள்ளது. இதில் சயன மேடையில் சயனக் கோலத்தில் மகா விஷ்ணு அருள்பாலிக்கிறார். இக்கோயிலின் விதானம் செங்கல், சுண்ணாம்பால் ஆனது. இது கட்டிடக் கலையில் ஓர் அதிசயம் என்று கருதப்படுகிறது.

திருவிழாக்கள்

பிப்ரவரி மாதத்தில் இங்கு வருடாந்திர தேர்த் திருவிழா நடைபெறுகிறது. மாசி மாத சிவராத்திரி, புரட்டாசி நவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேக தினங்களில் விருபாட்சர், பம்பா தேவிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். ஆன்மிகத் தலமாகவும், சுற்றுலாத் தலமாகவும் இத்தலம் விளங்குவதால், எப்போதும் பக்தர்கள் கூட்டம் இங்கு காணப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in