அருள்தரும் சக்தி பீடங்கள் - 43

திருஈங்கோய்மலை லலிதாம்பாள்
அருள்தரும் சக்தி பீடங்கள் - 43

அம்மனின் சக்தி பீட வரிசையில் திருஈங்கோய்மலை லலிதாம்பாள் சமேத மரகதாசலேஸ்வரர் கோயில், சாயா சக்தி பீடமாகப் போற்றப்படுகிறது. அகத்திய மாமுனிவர் ஈ வடிவில் சிவபெருமானை வழிபட்டதால் இம்மலை திருஈங்கோய்மலை என்று அழைக்கப்படுகிறது.

பார்வதி தேவி இத்தலத்துக்கு வந்து ஈசனை வழிபட்டதால், சிவசக்தி மலையாகவும் இம்மலை போற்றப்படுகிறது. தேவாரப் பாடல் பெற்ற 274 சிவத்தலங்களில் இது 65-வது தலமாகும். காவிரியின் தென்கரையில் உள்ள கடம்பந்துறையைக் காலையிலும், திருவாட்போக்கியை நண்பகலிலும், ஈங்கோய்மலையை மாலையிலும், ஒரே நாளில் நடந்துசென்று வழிபடுவதால் பல நன்மைகள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

தல வரலாறு

சிவபெருமான் மீது தீவிர பக்தி கொண்ட பிருகு முனிவர், எப்போது வழிபட்டாலும் சிவபெருமானை மட்டுமே வழிபடுவார்; அருகில் இருக்கும் அம்பாளை வழிபட மாட்டார். பக்தர் வழிபாட்டில் சக்தி வழிபாடும் உண்டு என்பதையும், சக்திக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதையும் பக்தர்களுக்கு உணர்த்த நினைத்த சிவபெருமான், பிருகு முனிவரின் இச்செயலைக் கண்டதும் பார்வதி தேவிக்கு கோபம் வரவழைத்தார். சிவபெருமானின் எண்ணப்படி பார்வதி தேவிக்கு கோபம் வந்தது.

உடனே கைலாய மலையை விட்டு பூலோகம் வந்தடைந்த பார்வதி தேவி, திருஈங்கோய்மலையில் அமர்ந்து தவம் மேற்கொண்டார். பார்வதி தேவிக்கு காட்சி கொடுத்த சிவபெருமான், தனது இடப்பாகத்தை சக்தி கொடுத்துவிடுவதாக இத்தலத்தில் உறுதியளித்தார்.

மரகதாசலேஸ்வரர்

ஒருசமயம் ஆதிசேஷனுக்கும் வாயு பகவானுக்கும் தங்களில் யார் உயர்ந்தவர் என்ற போட்டி எழுந்தது. வாயு பகவான் தனது பலத்தை, உலகறியச் செய்ய வேண்டும் என்பதற்காக, காற்றை பலமாக வீசச் செய்தார். இதைக் கண்ட ஆதிசேஷன், தன் பலத்தை நிரூபிக்க வேண்டும் என்பதற்காக மந்திர மலையை இறுக சுற்றிக்கொண்டார். அந்த சமயத்தில் மலையில் இருந்து வைரம், சிவப்பு மணி, மரகதம், மாணிக்கம், நீலம் ஆகியன சிதறி விழுந்தன, அவற்றுள் மரகதம் (பச்சைக் கல) விழுந்த இடமே ஈங்கோய் மலை என்பர். பிற மணிகள் விழுந்த இடங்களும் சிவத்தலங்களாக மாறின. வைரம் திருப்பாண்டிக் கொடுமுடியிலும், மாணிக்கம் திருவாட்போக்கியிலும், நீலம் பொதிகை மலையிலும் சிவப்புக் கல் திருவண்ணாமலையிலும் விழுந்தன.

ஆதிசேஷனுக்கும், வாயு பகவானுக்கும் மோதல் வலுப்பெற்ற நிலையில், சிவபெருமான் இம்மலையிலேயே மரகதலிங்கமாக எழுந்தருளி, இருவரையும் சமாதானம் செய்தார். மரகத அசலத்தில் (மலையில்) எழுந்தருளியவர் என்பதால் மரகதாசலேஸ்வரர் என்று பெயர் பெற்றார் சிவபெருமான். ‘திரணத் ஜோதீஸ்வரர்’ என்றும் சிவபெருமான் அழைக்கப்படுகிறார்.

மரகதாம்பிகை

சக்திக்கு தன் இடப்பாகத்தை தர சிவபெருமான் உறுதி அளித்த மலை என்பதால் இம்மலை சக்திமலை என்று அழைக்கப்படுகிறது. இதை உணர்த்தும் விதமாக கோயிலின் முன்மண்டபம் மற்றும் மலையில் அர்த்தநாரீஸ்வரர் வடிவங்கள் காணப்படுகின்றன. லலிதாம்பிகை எனவும், மரகதாம்பிகை எனவும் அழைக்கப்படும் அம்பிகை, கோபுரம் போன்ற அமைப்பில் மூன்று கலசங்களுடன் உள்ள விமானத்தின் கீழ் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். கருவறை கோஷ்டத்தில் இரண்டு துர்கை வடிவங்கள் காணப்படுகின்றன.

மகிஷாசுரனை வதம்செய்த துர்கையாகவும், சாந்த சொரூபியாக அருள்பாலிக்கும் துர்கையாவும் ஒரே இடத்தில் இரண்டு துர்கைகள் இருப்பது அரிது.

ஈங்கோய் மலை

ஒரு சமயம் அகத்திய முனிவர், பிற முனிவர்களுடன் தீர்த்த யாத்திரையாக கேதாரம் முதல் ராமேஸ்வரம் வரை சென்றுகொண்டிருந்தார். அப்போது வழியில் கடம்பவனத்தை அடைந்து கடம்பநாதருக்கு அபிஷேகம் செய்ய எண்ணினார். உடனே காவிரியில் இருந்து 12 குடம் நீர் எடுத்து சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து அர்ச்சனை செய்தார். பின்னர் ரத்தினகிரிக்குச் சென்று சூரிய தீர்த்தத்தில் நீராடி, காவிரியில் இருந்து மூன்று குடம் புனிதநீர் எடுத்து வந்து சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து மலர்களால் அர்ச்சனை செய்தார்.

வேதகீதங்களால் சிவபெருமானைத் துதித்து, கோயிலை மூன்று முறை வலம் வந்து, கடம்பவனத்தை அடைந்தார் அகத்திய முனி. மாலை நேரம் நெருங்குவதை அறிந்து, காவிரியைக் கடந்து மரகதாசலத்தை அடைந்தார். ஆனால், இம்மலையை அடைந்த சமயத்தில் நடை சாத்தப்பட்டது. தனக்கு காட்சியளிக்கும்படி சிவபெருமானை வேண்டினார் அகத்திய முனிவர்.

அப்போது, “மலை அடிவாரம் சென்று அங்குள்ள தீர்த்தத்தில் நீராடிவிட்டு வந்தால் சுவாமி தரிசனம் கிடைக்கும்” என்ற அசரீரி கேட்டது. அதன்படி தீர்த்தத்துக்குச் சென்று அகத்திய முனிவர் நீராடினார். நீராடியபோது அவரது உருவம் மாறியது. ஈ வடிவம் பெற்ற அகத்திய முனிவர் பறந்து வந்து சிவபெருமானின் சந்நிதிக் கதவின் சாவித் துவாரம் வழியே உள்ளே புகுந்து சுவாமி தரிசனம் செய்தார்.

வெளியே வந்ததும் மீண்டும் சுய உருவம் பெற்றார், ஈ வடிவத்தில் சிவபெருமானை வழிபட்டதால், இம்மலைக்கு ‘ஈங்கோய் மலை’ என்றும், சிவபெருமானுக்கு ‘ஈங்கோய் நாதர்’ என்றும் பெயர் உண்டு.

புளிய மரம் இல்லாமல் போன கதை

ஈங்கோய் மலை தலத்தின் விருட்சம் புளிய மரம். ஆனால், தற்போது இம்மரம் இத்தலத்தில் இல்லை. இதற்குக் காரணமாக ஒரு சம்பவம் கூறப்படுகிறது. சிவபெருமானும் சுந்தரமூர்த்தி நாயனாரும் சிறந்த நண்பர்களாக இருந்தார்கள். அதனால் சுந்தரர், தான் வேண்டிய சமயத்தில் சிவபெருமானிடம் இருந்து பொன்னும் பொருளும் கேட்டுக் கொள்வார். ஒருசமயம் நண்பருடன் விளையாட நினைத்த சிவபெருமான், சுந்தரருக்குத் தெரியாமல் ஒரு புளிய மரத்துக்குள் ஒளிந்து கொண்டார்.

எங்கு தேடியும் சிவபெருமான் தன் கண்ணுக்கு தெரியாததால் மிகவும் சோர்ந்து போய் இருந்தார் சுந்தரர். அப்போது, ஒரு தங்க புளியங்காயை மட்டும் சுந்தரருக்குக் கிடைக்கும்படி செய்தார் சிவபெருமான். சுந்தரர் அதை எடுத்தபோது, அது உடனே மறைந்து விட்டது. சினம் கொண்ட சுந்தரர், தனக்குக் கிடைக்காத புளி யாருக்கும் கிடைக்காமல் போகட்டும் என்று கூறிவிட்டு அந்த இடத்தைவிட்டுச் செல்கிறார். அதனால் இத்தலத்தில் எங்கேயும் புளியமரம் தென்படாமல் போனது.

கோயில் அமைப்பும் சிறப்பும்

சிவபெருமானின் பாடல் பெற்ற கோயில்களில் மலை மீதிருக்கும் கோயில்கள் மிகவும் குறைவு. ஈங்கோய் மலை கோயில் ஐநூறு படிகளுடன் அமைந்த மலைக் கோயில் ஆகும். காவிரியின் வடகரையில் உள்ள இக்கோயிலுக்கு நேர் எதிரே காவிரிக்கு அக்கரையில் திருவாட்போக்கி தலம் உள்ளது.

கோயில் கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, விமானத்தில் வீணை தட்சிணாமூர்த்தி, கால்களை மாற்றி அமர்ந்த நிலையில் உள்ள தட்சிணாமூர்த்தி என்று இத்தலத்தில் தட்சிணாமூர்த்தியின் வித்தியாசமான வடிவங்களைக் காணலாம். பிரகாரத்தில் வல்லப விநாயகர், மகா விஷ்ணு உள்ளனர். மாசி சிவராத்திரியின்போது, இங்கே மூன்று நாட்களுக்கு சிவபெருமானின் மீது சூரிய ஒளிக்கதிர்கள் விழுகின்றன. அந்த சமயத்தில் லிங்கம் நிறம் மாறி காட்சியளிப்பது தனிச்சிறப்பு. சிவபெருமானுக்கு தீபாராதனை காட்டும்போது லிங்கத்தில் ஜோதி ஜொலிப்பதைக் காணலாம்.

பிரம்மதேவரின் வழிபாடு

பிரம்மதேவர் இத்தலத்துக்கு வந்து மரகதாசலேசுவரரைப் பூஜித்து படைப்புத் தொழிலுக்குத் தேவையான வலிமையைப் பெற்றதாகக் கூறப்படுகிறது. மகாவிஷ்ணுவும் இங்கு வந்து வழிபட்ட பின்னரே காக்கும் தொழிலைச் செய்யும் அதிகாரத்தைப் பெற்றார். யமுனை, ரோமச ரிஷி ஆகியோரும் இத்தலத்தில் வழிபாடு செய்துள்ளனர்.

தனக்கு ஏற்படும் ரஜோ குணம் நீங்க வேண்டும் என்பதற்காக, பிரம்மதேவர் கிருத யுகத்தில் இத்தலத்தை அடைந்தார். தனக்கென்று பிரம்ம தீர்த்தத்தை ஏற்படுத்தி, மந்திரங்களை உச்சரித்தபடி நீராடினார். பின்னர் புளியமர நிழலில் தவம் மேற்கொண்டார். நிறைய தானங்கள் செய்தபடி சிவபூஜை செய்து வந்தார். எனவே, இவ்விடத்தில் செய்யப்படும் பூஜைகளுக்கு சிறப்புப் பலன்கள் உண்டு என்று கூறப்படுகிறது.

வழிபாட்டுச் சிறப்பு

ஈங்கோய் மலைக்கு வந்து ஈங்கோய் நாதரை வழிபாடு செய்வதால் மறுமைப் பலன்கள் பெற்று உத்தம லோகத்தை அடையலாம் என்று கூறப்படுகிறது. நவராத்திரியின்போது வரும் நவமியில் கருநெய்தல் மலர்களால் தேவியின் பாதங்களை அர்ச்சித்தால் கலைகளில் பிரகாசிக்கலாம். லட்சுமி தீர்த்தத்தைக் காண்பவர்கள் உயர்ந்த சிந்தனை கொண்டவர்களாக இருப்பார்கள். கார்த்திகை வெள்ளிக்கிழமைகளில் லட்சுமி தீர்த்தத்தில் நீராடி பாயசான்னம் செய்து தானம் செய்தால் துன்பங்கள் அனைத்தும் நீங்கும்.

மார்கழி மாத செவ்வாய்க்கிழமையில் இங்குள்ள தீர்த்தங்களில் நீராடினால் பிறவித் துயர் நீங்கும். மாசி மாதப் பௌர்ணமியில் அகத்தியர் நற்பலன்களைப் பெற்றதால், அந்த நாளில் சர்ப்ப நதியில் நீராடி, இயன்ற அளவு தானங்கள் செய்தால் பாவங்கள் நீங்கப்பெற்று, விரும்பிய அனைத்தும் அடையலாம் என்பது நம்பிக்கை. வைகாசி பிரம்மோற்சவத்தில் தேர் திருவிழாவைக் கண்டு, முத்து, பவளம், ஸ்படிகம், ருத்ராட்சம் ஆகியவற்றால் ஆன மாலையை சிவபெருமானுக்கு அணிவித்தால் சாயுஜ்ஜிய பதவி கிடைக்கும்.

திருமணத் தடை நீங்க, குழந்தை வரம் கிடைக்க, கல்வியில் சிறந்து விளங்க, சிவபெருமானுக்கு நேர்த்திக் கடன் செலுத்தி, பக்தர்கள் வழிபடுகின்றனர். திருஈங்கோய் மலை மீதாக சம்பந்தர் அருளிய 10 பதிகங்களைப் பாடினால் அனைத்து கவலைகளும் நீங்கும் என்பது ஐதீகம்.

ஈங்கோய் எழுபது

சுந்தரர், திருஞான சம்பந்தர் பதிகங்கள் பாடியுள்ளார். 10-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நக்கீர தேவ நாயனார் ‘ஈங்கோய் எழுபது’ என்ற பாமாலை பாடியுள்ளார். பதினோராம் திருமுறையில் இடம்பெற்றுள்ள இப்பாமாலை சிவபெருமான் மீது பாடப்பட்ட 70 வெண்பாக்களைக் கொண்டது. இதில் ஈங்கோய் மலையின் செல்வ வளம், அதன் குளிர்ச்சி, வாழும் மக்களின் வாழ்க்கை முறை, சிவபெருமானின் பெருமைகள் எடுத்துக்கூறப்பட்டுள்ளன.

திருவிழாக்கள்

தைப்பூச தினத்தில் சுவாமி, அம்பாள் இருவரும் காவிரிக்கரையில் எழுந்தருள்வது வழக்கம். ஆடிக் கிருத்திகை மற்றும் பௌர்ணமி நாட்களில் பக்தர்கள் இங்கு கிரிவலம் செல்கின்றனர். பங்குனி பிரம்மோற்சவம், மாசிமகம் உற்சவம் இங்கே சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. அந்நாட்களில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். வெவ்வேறு வாகனங்களில் சுவாமியும், அம்பாளும் எழுந்தருளி வீதியுலா வருவது உண்டு.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in