அருள் தரும் சக்தி பீடங்கள் - 25

நைமிசாரண்யம் லிங்கதாரிணி
அருள் தரும் சக்தி பீடங்கள் - 25
Picasa

அம்மனின் சக்தி பீட வரிசையில் இடம்பெற்றுள்ள லிங்கதாரிணி கோயில் அமைந்துள்ள நைமிசாரண்யம் திருத்தலம் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இறைவன் இங்கு ஆரண்ய வடிவில் அருளாட்சி புரிகிறார். அன்னையே ஆரண்யமாகவும் லிங்க சொரூபமாகவும் வணங்கப்படுகிறார்.

நைமிசாரண்யம் என்பதை நேமி + ஷ + ஆரண்யம் என்று பிரித்தால் சக்கரத்தின் வட்டம் + இடம் + காடு என்ற பொருளை உணர்த்துகிறது. சக்கர வட்டமான நிலை பெற்று, நின்ற இடமாகிய காடு என்பதை உணர்ந்தால், இறைவனே காடு வடிவம் தாங்கி அருள்பாலிக்கிறார் என்பதை அறியலாம். இயற்கை வழிபாடு தோன்றிய காலத்தில் வன உருவத்தை வழிபடும் முறை இருந்து வந்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோ ரயில் நிலையத்தில் இருந்து வடக்கே 90 கிமீ தொலைவில், சீதாப்பூர் மாவட்டத்தில் கோமதி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது நைமிசாரண்யம் தலம். இங்கு இறைவன் தேவராஜன் என்ற பெயரைத் தாங்கியும், இறைவி ஸ்ரீஹரிலட்சுமி என்ற பெயரைத் தாங்கி அருள்பாலிக்கின்றனர்.

தல வரலாறு

முன்பொரு காலத்தில் முனிவர்கள் அனைவரும் சேர்ந்து யாகம் செய்வதற்கான புனிதமான ஒரு தலத்தைத் தேடிக் கொண்டிருந்தனர். பிரம்மதேவர் படைப்புத் தொழிலை நிறைவு செய்திருந்த சமயத்தில், முனிவர்கள் அனைவரும் சேர்ந்து, அவரை சந்தித்து தங்கள் எண்ணம் ஈடேறுவதற்கான வழியைக் கேட்டனர்.

பிரம்மதேவர், அவர்களுக்கு நேரிடையாக பதில் ஏதும் கூறாமல், ஒரு சக்கரத்தை உருவாக்கி, அதை உருண்டோடும்படி செய்தார். அச்சக்கரம் எங்கு நின்று விழுமோ, அந்த இடமே யாகம் செய்வதற்கு ஏற்ற இடம் என்று முனிவர்களிடம் தெரிவித்தார். அதன்படி சக்கரம் உருண்டோடி இத்தலத்தில் வந்து நின்றது. இந்த இடத்தில் அன்னையின் உடற்கூறு விழுந்ததால், இப்பகுதி முழுவதும் சக்தி நிறைந்ததாகக் கருதப்படுகிறது.

இந்த காட்டில் நாராயணன் எப்போதும் வசிக்கிறார் என்று ஸ்தோத்ர ரத்னாகரமும், அம்மையப்பனின் கரம், இங்கு உள்ளதாக யோகினி தந்திரமும், ஆறு தலங்கள் (பிரயாகை, புஷ்கரம், கோகர்ணேச்சுவரம், கேதார்நாத், சேதுபந்த ராமேசுவரம், நைமிசாரண்யம்) விரைவில் சித்தியளிக்கக் கூடியன என்று பிரம்மயாம்ல தந்திரமும் தெரிவிக்கின்றன.

லிங்க தாரிணி

முனிவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து யாகம் செய்ததன் பலனாக, மிகப் பெரிய சக்தி ஒன்று தோன்றியது. அவ்வாறு வெளிப்பட்ட சக்திக்கு, முனிவர்கள் ‘லலிதாதேவி’ என்று பெயரிட்டு, கோயில் எழுப்பினர். சக்கர தீர்த்தத்தில் நீராடி லலிதாதேவியை வழிபடுபவர்களுக்கு ஆயிரம் அஸ்வமேத யாகம் செய்த பலன்கிட்டும் என்றும் ஆயுள், ஆரோக்கியம் சீர்படும் என்றும் சத்தியாமல தந்திரம் கூறுகிறது. லலிதாதேவி என்ற சக்தி, அன்னையின் உருவமாக ‘லிங்கதாரிணி’ என்ற பெயரைத் தாங்கி அருள்பாலிப்பதாக ஐதீகம்.

இதிகாசத் தொடர்பு

சக்கர தீர்த்தத்தின் அருகே உள்ள ‘ஸ்ரீசி சுத்தி’ என்ற இடத்தில் சூத புராணீகர், 80 ஆயிரம் முனிவர்களுக்கு இதிகாசப் புராணங்கள் குறித்த தகவல்களைத் தெரிவித்தார். ‘ஸ்ரீவியாச சுத்தி’ என்ற பகுதியில் அமைந்துள்ள ஆலமரத்தடியில் அமர்ந்தவாறு வியாஸர், 18 புராணங்களையும், மகாபாரதத்தையும் இயற்றினார் என்று கூறப்படுகிறது. அன்னை லிங்கதாரிணியே தன் மைந்தன் விநாயகப் பெருமானை, மகாபாரதத்தை எழுத அனுப்பியுள்ளதால், நைமிசாரண்யம் கூடுதல் சிறப்பைப் பெறுகிறது.

கிருஷ்ண பரமாத்மாவின் அண்ணன் பலராமர், இத்தலத்துக்கு தீர்த்த யாத்திரை வந்தபோது, தன்னை வணங்காத சுகர் மகரிஷியை தண்டித்துள்ளார். பின்னர் அவரை மன்னித்து அருளியுள்ளார். இதன்மூலம் மரியாதைக்குரியவர்களை, வணங்குவது முறை என்பது அறியப்படுகிறது. மதியாமை காரணமாக பெரும் ஆற்றல் படைத்தவர்களில் பலர் பலவித துன்பங்களுக்கு ஆட்பட்டுள்ளனர்.

பெரியோரை வணங்குதல், இறையருளின் கருணை, உலகத்தின் போக்கு, புராணங்கள் கூறும் நீதி நெறிமுறைகள், மகாபாரதத்தின் படிப்பினைகள், தவம் இயற்றியவர்களின் சிறப்புகள் ஆகியவற்றை உரைக்கும் அறச்சாலையாக நைமிசாரண்யம் விளங்குகிறது. மேலும், வேதங்கள், வேதாகமங்கள், புராணங்கள், இதிகாசங்கள் அனைத்துக்கும் ஊற்றுக் கண்ணாக விளங்குவதால் நைமிசாரண்யம் ‘கற்பகத்தரு’ என்றும் அழைக்கப்படுகிறது.

சத்திய யுகத்தில் ஸ்வாயம்புவ மனுவும், அவர் மனைவி சத்ரூபையும் இத்தலத்துக்கு வந்திருந்து, ஆயிரம் முனிவர்களுடன் சேர்ந்து தவம் செய்ததாகக் கூறப்படுகிறது. புராணங்களும், இதிகாசங்களும் நைமிசாரண்யத்தில் படைக்கப்பட்டிருந்தாலும், ஆன்மிகத் தத்துவங்கள் அனைத்தும் அயல்நாடுகளுக்கும் பரவியுள்ளன.

சீதா குண்டம்

திரேதா யுகத்தில் ராமபிரான், இத்தலத்தில் அஸ்வமேத யாகம், நிகழ்த்திக் கொண்டிருந்தபோது, வால்மீகி முனிவர் லவ குசர்களுடன் வந்து சீதா தேவியை அழைத்துக்கொள்ள வேண்டினார். அப்போது சீதாதேவியின் வாக்குமூலத்தை அனைத்து முனிவர்களும் கேட்க வேண்டும் என்று பணித்தார் ராமபிரான். அதன்படி வசிஷ்டர், வாமதேவர், ஜாபாலி, காச்யபர், விஸ்வாமித்ரர், தீர்க்கதமர், துர்வாஸர், புலஸ்தியர், தர்மவானான், சதானந்தர், பரத்வாஜர், தேஜஸ்வி, அக்னிபுத்திரர், நாரதர், பர்வதர், கௌதமர் முதலிய முனிவர்கள், சீதாதேவியின் பிரமாண வாக்கைக் கேட்கக் காத்திருந்தனர்.

சீதாதேவியும் இத்தலத்துக்கு வந்து, “நான் மனோ, வாக்கு காயங்களால் ராமபிரானையே பூஜித்துக் கொண்டிருப்பது உண்மையானால், பூமாதேவி, தானாகவே என்னை தன் மடியில் சேர்த்துக் கொள்ளட்டும்” என்றார். அவர் இவ்வாறு சொல்லிக் கொண்டிருக்கும்போது, பூமி பிளந்து, அதில் இருந்து ஒரு சிம்மாசனம் வெளிப்பட்டது. அதில் வீற்றிருந்த பூமாதேவி, சீதாதேவியைத் தன் மடியில் அமர வைத்து, அவருடன் பூமிக்குள் பிரவேசித்தார். இந்த இடமே நைமிசாரண்யத்தில் ‘சீதா குண்டம்’ என்று அழைக்கப்படுகிறது.

தலச் சிறப்பு

108 வைணவ திவ்ய தேசங்களில் இத்தலத்தில் மட்டுமே வன வழிபாடு காணப்படுகிறது. சக்கர நதிக்கரையில் சக்கரத்தாழ்வார், ராமபிரான், சீதாதேவிக்கு கோயில்கள் அமைந்துள்ளன. விநாயகப் பெருமானுக்கு தனி சந்நிதி உள்ளது.

கோமுகி நதிக்குச் செல்லும்வழியில் ‘வியாஸ கட்டி’ என்ற இடத்தில் வேதவியாசருக்கு கோயில் உள்ளது, மற்றொரு புறத்தில் குன்றின் மீது ‘அனுமான் கட்டி’ கோயில் உள்ளது. இங்கு ராமபிரான், லட்சுமணரைத் தாங்கியபடி அனுமன் எழுந்தருளியுள்ளார். இத்தலம் குறித்து திருமங்கையாழ்வார், 10 பாசுரங்கள் இயற்றியுள்ளார்.

திருமால் தானாகவே விரும்பி எழுந்தருளிய 8 தலங்களுள் (திருப்பதி, ஸ்ரீரங்கம், ஸ்ரீமுஷ்ணம், நாங்குநேரி, புஷ்கரம், பத்ரி, சாளக்கிராமம்) நைமிசாரண்யமும் ஒன்று. புனிதக் காடாகக் கருதப்படும் நைமிசாரண்யம் 9 தபோவனங்களுள் (தண்டகாரண்யம், சைந்தவரண்யம், ஜம்புகாரண்யம், புஷ்காரண்யம், அருபுதரண்யம், உத்பலாரண்யம், பத்ரிகாரண்யம், குருஜங்கலரண்யம்) ஒன்றாகும். நைமிசாரண்யத்தைச் சுற்றிலும் இருபதுக்கும் மேற்பட்ட தீர்த்த கோயில்கள் அமைந்துள்ளன. 84 கோசத்தில் 12 சுற்றளவில் வேறு தீர்த்தங்களும் கோயில்களும் காணப்படுகின்றன.

ருத்ராவர்த்

கோமதி நதிக்கரையில் நைமிசாரண்யத்துக்கு 12 கிமீ தொலைவில் உள்ள ‘ருத்ராவர்த்’ என்ற இடத்தில் சிவன் கோயில் அமைந்துள்ளது. தரையில் இருக்கும் ஆவுடையார் மீது சிறு லிங்கம் உள்ளது. இந்த லிங்கத்துக்கு பக்தர்கள் தானாகவே அபிஷேகம் செய்து அர்ச்சித்து வழிபடலாம். அருகில் இருந்த குளத்தில் வில்வ இலையைப் போட்டால், அது தண்ணீரில் மூழ்கிவிடும். வாழைப்பழங்களை தண்ணீரில் போட்டால், அவை உடனே மூழ்கி, சற்று நேரத்தில் செங்குத்தாக மிதந்து வரும். இக்குளத்தருகே நாகர், பகளாமுகிதேவிக்கும் சந்நிதிகள் அமைந்துள்ளன.

கயாசுரன் வரலாறு

கயாசுரன் என்ற அசுரன், திருமாலை நோக்கி தவம் புரிந்தான். அவனது தவத்தில் மகிழ்ந்து திருமால், வரம் அளிப்பதாக உறுதி கூறினார். அதன்படி வரம் அளிக்கும் சமயத்தில், திருமாலைவிட தான் மிகவும் பலம் பெற்றதாக, கயாசுரன் கூறியதால், அவன் மீது சக்கரத்தை ஏவினார் திருமால். அப்போது, கயாசுரனின் உடல் மூன்று பகுதிகளாகப் பிளந்து மூன்று இடங்களில் விழுந்தன.

தலைப்பகுதி விழுந்த இடம் சிரோ கயா (பத்ரி) என்றும், நடுப்பகுதி விழுந்த இடம் நாபி கயா (நைமிசாரண்யம்) என்றும், கீழ்ப்பகுதி விழுந்த இடம் சரண கயா (கயை) என்றும் அழைக்கப்படுகின்றன. இந்த மூன்று இடங்களும், பித்ருக்களுக்கு கடன்கள் செய்ய ஏற்ற இடங்கள் என்று அறியப்படுகிறது.

லலிதா சஹஸ்ரநாமம்

அன்னையின் ஆயிரம் நாமங்களைப் போற்றிப் பணிந்தால், அனைத்து நலன்களும் கிட்டும் என்பது நம்பிக்கை. ஸ்ரீ மாதா, லலிதா, மகா திரிபுரசுந்தரி, சிவனோடு ஒன்றிணைந்த பிரிக்க முடியாத ஆதி பரம்பொருளாக சிவசக்தி விளங்குகிறார். லலிதா தேவியின் பெருமைகளைக் கூறுவதால் நோய்கள் அனைத்தும் தீரும். செல்வம் பெருகும். அகால மரணம் ஏற்படாது. பிள்ளைப் பேறு கிட்டும்.

லலிதா சஹஸ்ரநாமம் கூறுவதால், கங்கை முதலான புண்ணிய நதிகளில் பலமுறை நீராடிய பலன் கிடைக்கும். காசியில் கோடி லிங்கம் பிரதிஷ்டை செய்த புண்ணியம் கிடைக்கும். கிரகண காலத்தில் கங்கைக் கரையில் அஸ்வமேத யாகம் செய்த பலன்கள் கிடைக்கும். வறண்ட பகுதியில் கோடி நீர்நிலைகள் அமைத்த புண்ணியம் கிட்டும். பஞ்ச காலத்தில் எண்ணற்றவர்களுக்கு உணவளித்த பலன் கிடைக்கும்.

திருவிழாக்கள்

நவராத்திரி, தீபாவளி தினங்களில் இங்கே சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். பக்தர்கள் வந்திருந்து சக்கர தீர்த்தத்தில் நீராடி, சிவன் கோயில்களிலும், பெருமாள் கோயிலிலும் வழிபாடுகள் செய்வது வழக்கம். வன வழிபாடும் செய்யப்படுவதும் உண்டு. காசியில் கங்கா ஆர்த்தி செய்யப்படுவதுபோல், கோமுகி நதிக்குக்கும் தினமும் ஆர்த்தி காண்பிக்கப்படுகிறது. ஆனி, பங்குனி மாதங்களில் வன மகா உற்சவம் கொண்டாடப்படுகிறது. காசி, கயா போன்ற தலங்களுக்குச் செல்பவர்கள், இத்தலத்தையும் தரிசிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in