அருள்தரும் சக்தி பீடங்கள் – 24

காசி விசாலாட்சி
காசி விசாலாட்சி
காசி விசாலாட்சி

அம்மனின் சக்தி பீட வரிசையில் ‘மணிகர்ணிகை பீடம்’ என்று அழைக்கப்படும் காசித் திருத்தலம், சிவபெருமானின் 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் முதன்மையானதாகக் கருதப்படுகிறது. ‘பூலோகக் கைலாயம்’ என்று அழைக்கப்படும் இத்தலம், முக்தி தரக்கூடிய ஏழு தலங்களுள் ஒன்றாகப் போற்றப்படுகிறது.

‘கங்கைக்கு நிகரான நதியும் இல்லை, காசிக்கு நிகரான பதியும் இல்லை’ என்பது ஆன்றோர் வாக்கு. இமயமலையில் பிறந்து விண்ணுக்கும் அடங்காமல் இமயவெற்புக்கும் அடங்காமல் அன்னை சக்தியின் வடிவாகப் பெருக்கெடுத்து வந்த கங்கை நதியைப் பேணி மேனியில் சுமந்தார் சிவபெருமான். கங்கைக் கரையில் அமைந்துள்ள காசி நகரத்தில் ஒருவர் இறக்க நேர்ந்தால், அவருடைய பாப வினைகள் அனைத்தும் தீர்க்கப்பட்டு, அவர் முக்தி அடைவார் என்பது நம்பிக்கை.

வாராணசி, பனாரஸ், ஆனந்த வனம், மகாமயானம், அவிமுக்தம் என்று அழைக்கப்படும் காசி நகரத்தில் 64 தீர்த்தக் கட்டங்கள் உள்ளன. விஸ்வநாதர் என்றால் அகிலத்தை ஆள்பவர் என்று பொருளாகும். இங்குள்ள தீர்த்தங்களில் நீராடினால் உடல் புனிதம் அடைகிறது. விஸ்வநாதரை வழிபட்டால் உயிர் புனிதம் அடைகிறது. பக்தர்கள் தீர்த்தக் கரையில் தங்கள் முன்னோருக்கு பிதுர் தர்ப்பணம் செய்து நேர்த்திக் கடன் செலுத்துகின்றனர்.

தல வரலாறு

தாட்சாயணியின் உடற்கூறுகள் பல்வேறு இடங்களில் விழுந்தன. கோபம் குறைந்த சிவபெருமான், மீதமுள்ள உடல்பாகங்களை கேதார்நாத்தில் இருந்து காசி நகரத்துக்கு (மகாமயானம்) கொண்டு வந்தார். தேவியின் உடலை அக்னியில் இட முயன்றபோது, தேவியின் காதில் தாரக மந்திரம் உபதேசம் செய்தார். அப்போது தேவியின் காதணி இல்லாததை அறிந்தார்.

அருகே திருமால் தனது சக்ராயுதத்தால் தீர்த்தக் கிணற்றை தோண்டி அதன் அருகே சிவபெருமானை நோக்கி தவம் செய்து கொண்டிருப்பதை உணர்ந்தார். தேவியின் காதணி குறித்து திருமாலிடம் சிவபெருமான் வினவ, அவர் அக்கிணற்றை சுட்டிக் காட்டினார். சிவபெருமான் கிணற்றை எட்டிப் பார்க்கும்போது அவரது காதணியும் கிணற்றில் விழுந்துவிட்டது.

கிணற்றில் இருந்து பேரொளியுடன் சிவலிங்கம் வெளிப்பட, அதில் சிவபெருமானின் சக்தியும் பார்வதி தேவியின் சக்தியும் இணைந்திருந்தன. திருமால் அந்த ஜோதிர்லிங்கத்தை எடுத்து இத்தலத்தில் பிரதிஷ்டை செய்து வணங்கினார். சிவபெருமானை நோக்கி தவம் புரிந்து, அவரை இத்தலத்தில் கோயில் கொண்டு பக்தர்களுக்கு அருள வேண்டினார். மேலும், “இத்தலத்தில் கங்கை சிவபெருமானை அர்ச்சிக்க வேண்டும், இங்கு பக்தர்கள் நீராடினால், அவர்களது பாபம் விலகி அவர்களுக்கு முக்தி கிடைக்க வேண்டும்” என்றும் வேண்டுகிறார்.

திருமாலின் வேண்டுகோளை ஏற்ற சிவபெருமான், அவருக்கு விஸ்வரூபம் காட்டியமையால், இத்தல சிவபெருமானுக்கு ‘விஸ்வநாதர்’ என்ற பெயர் கிட்டியது. விசாலாட்சியாக அவதரித்த பார்வதி தேவிக்கும், விஸ்வநாதருக்கும் திருமால் திருமணம் செய்து வைத்தார். பிரம்மதேவர் யாகங்கள் வளர்த்து, விஸ்வநாதர் - விசாலாட்சி திருமணத்துக்கு உதவி புரிந்தார்.

காசி மாநகரச் சிறப்பு

காசி தலத்தில் தேவர்கள், முனிவர்கள், மன்னர்கள் தவம் செய்து பேறு பெற்றுள்ளனர். சூரியனின் மைந்தர்கள் எமதர்மர், சனி பகவான் இருவரும் இத்தலத்தில் சிவபெருமானை நோக்கி தவம் புரிந்து, வரம் பெற்றார்கள், எமதர்மர் தென்திசைக் காவலர் ஆனார். எமலோகத்துக்கு அதிபதி ஆனார். நவகிரகங்களில் தனக்கென்று ஓர் இடத்தைப் பிடித்தார் சனிபகவான். பிரம்மதேவரே இங்கு தவம் இருந்து தனது பதவியை மீண்டும் பெற்றார். புத பகவானும் இங்கு தவமிருந்து, நவக்கிரத்துள் ஒருவரானார்.

சப்தரிஷிகள் இங்கு தவம் இருந்து நட்சத்திர பதவி அடைந்துள்ளார்கள். ராமாயண காலத்தில் ராமபிரான் இத்தலத்தில் இருந்து சிவலிங்கத்தை கொண்டு சென்று ராமேஸ்வரத்தில் வைத்து வழிபட்டார். மகாபாரத காலத்திலும் பஞ்ச பாண்டவர்கள் இங்கு வந்து வழிபாடுகள் செய்தனர்.

அன்னை விசாலாட்சி

காசி விஸ்வநாதர் கோயிலுக்கு மிக அருகில் அன்னை விசாலாட்சிக்கு கோயில் அமைக்கப் பட்டுள்ளது. தென்னிந்திய கோயில் போலவே இக்கோயில் அமைந்துள்ளது. அன்னையின் ஊற்றாகவே கங்கை வழிபடப்படுகிறார். பக்தர்களின் பாபங்களை தான் ஏற்றுக் கொண்டு, அவர்களை புனிதமாக்கும் கங்கை, தன்னிடம் உள்ள பாபங்களை கரைப்பதற்காக துலா மாதத்தில் காவிரியாக பெருக்கெடுத்து வருவதாக ஐதீகம். கங்கையாக இருப்பவரும் காவிரியாக கரைபவரும் அன்னையின் வடிவமே என்பதை அறிகிறோம்.

அன்னை விசாலாட்சியோடு அன்னபூரணியும் இத்தலத்தில் அருள்பாலிக்கிறார். பக்தரின் பசியைப் போக்குவதற்காக, அன்ன பாத்திரமும், கரண்டியுமாக அன்னபூரணி காட்சியளிக்கிறார். கல்லினுள் தேரைக்கும், கருப்பை உயிருக்கும் அன்னமிடும் அன்னபூரணி, ஞானம், வைராக்கியம் என்னும் மோட்ச சாதனங்களை அளிக்கிறார் அன்னபூரணி.

சப்தரிஷி பூஜை

காசி விஸ்வநாதர் கோயிலில் நடைபெறும் சப்தரிஷி பூஜை மிகவும் சிறப்பு வாய்ந்தது. அத்திரி, வசிஷ்டர், காஷ்யபர், கௌதமர், பரத்வாஜர், விஸ்வாமித்ரர், ஜமதக்னி முனிவர்கள், தினமும் மாலையில் விஸ்வநாதரை தரிசிக்க காசித் தலம் வருவதாக ஐதீகம். தினமும் மாலை 7 முதல் 8-30 வரை நடைபெறும் இந்த பூஜையில் 7 பண்டாக்கள் (அர்ச்சகர்கள்) விஸ்வநாதரைச் சுற்றி அமர்ந்து பூஜை செய்வர். அப்போது ராம நாமம் எழுதப்பட்ட வில்வ இலைகளால் அர்ச்சித்தபடி, சிவபெருமானுக்குரிய மந்திரம், ஸ்லோகங்களை பாடுவது வழக்கம்.

விஸ்வநாதருக்கு அபிஷேகம் செய்து நாகாபரணம், வெள்ளிக் குடை சார்த்தி தீபாராதனை காட்டப் படுகிறது. இதன்பிறகு தமருகம் முழங்க பைரவருக்கு பூஜை நடைபெறும். அதன்பிறகு விஸ்வநாதரை, பக்தர்கள் தொட்டு வணங்கலாம்.

சப்தரிஷி பூஜையின்போது விஸ்வநாதர் மகிழ்ச்சி பெருக்குடன் எழுந்தருள்கிறார். இதனால் இத்தலம் ‘ஆனந்த பவனம்’ என்றும் அழைக்கப்படுகிறது. வெள்ளித் தகடு பதித்த தொட்டியில் தங்க ஆவுடையார் மீது விஸ்வநாதர் எழுந்தருளியுள்ளார். சிவபெருமானின் அடியையும், முடியையும் காண பிரம்மதேவரும், திருமாலும் முயன்றபோது அவர்கள், சிவபெருமானால் அழிக்கப்பட்டனர். அந்த இடமே காசி நகரம் என்பதால் இத்தலம் ‘மகாமயானம்’ என்று அழைக்கப்படுகிறது.

கோயிலின் பின்புறத்தில் ஆதி விஸ்வநாதர் சந்நிதி அமைந்துள்ளது. தற்போது பள்ளிவாசலாகவும், பெரிய நந்தியை உடையதாகவும், ஞானவாவி என்ற சிறுதீர்த்தக் கிணற்றைக் கொண்டுள்ளதாகவும் இது விளங்குகிறது.

பஞ்சதீர்த்த யாத்திரை

கங்கை நதியில் அமைந்துள்ள 64 படித்துறைகளில் 64 தீர்த்தக்கட்டங்கள் உள்ளன. அஸ்சங்கம், தசாஸ்வமேத கட்டம், வரணசங்கம கட்டம், பஞ்சகங்கா கட்டம், மணிகர்ணிகா கட்டம் ஆகிய தீர்த்தக் கட்டங்களில் ஒரே நாளில் நீராடினால் நற்பயன்கள் உண்டாகும் என்று கூறப்படுகிறது. இதற்கு ‘பஞ்சதீர்த்த யாத்திரை’ என்று பெயராகும்.

அஸ் நதி கங்கையில் கலக்கும் பகுதி அஸ்சங்கம கட்டம் என்று அழைக்கப்படுகிறது. இதில் இருந்துதான் காசி நகரம் தொடங்குகிறது. இங்கு நீராடிவிட்டு, இதே இடத்தில் எழுந்தருளியுள்ள அஸ்சங்கமேஸ்வரரை வணங்க வேண்டும். பிரம்மதேவர் பத்து அஸ்வமேத யாகங்களை செய்த இடம் தசாஸ்வமேத கட்டம் என்று அழைக்கப்படுகிறது. இங்கு நீராடிவிட்டு இதே இடத்தில் எழுந்தருளியுள்ள சூலடங்கேஸ்வரரை வழிபட வேண்டும். வருண நதி கங்கையில் கலக்கும் பகுதி வரணசங்கம கட்டம் என்று அழைக்கப்படுகிறது. இங்கு நீராடிவிட்டு, இதே இடத்தில் எழுந்தருளியுள்ள ஆதிகேஸ்வரரை வணங்க வேண்டும். பிறகு யமுனை, சரஸ்வதி, சிரணா, தூதபாய் நதிகள் கங்கையுடன் கலக்கும் பஞ்சகங்கா கட்டத்தில் நீராடிவிட்டு, இங்கு எழுந்தருளியுள்ள பிந்துமாதவர், கங்கேஸ்வரரை வணங்க வேண்டும். நிறைவாக மணிகர்ணிகா கட்டத்தில் நீராடி, பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும். பிறகு இக்கரையில் கோயில் கொண்டுள்ள மணிகர்ணிகேஸ்வரரை வழிபட வேண்டும்.

காசி விஸ்வநாதர், விசாலாட்சி, அன்னபூரணி ஆகியோரை தரிசித்துவிட்டு வரும்போது, சத்ய நாராயணர், சாட்சி விநாயகர், ராமபிரான், அனுமன், சனி பகவான், துர்காதேவி, கௌடி மாதா, பைரவர், மகாகாளர், மகா காளி, பாண்டுரங்கன், நீலகண்டர், தண்டபாணீஸ்வரர் ஆகியோரை தரிசனம் செய்யலாம்.

கால பைரவரையும், முடிவடையாத சிலையாக அருள்பாலிக்கும் துண்டி விநாயகரையும் வழிபட்ட பிறகே காசி யாத்திரை நிறைவடையும். காசி நகரம் வந்து பாபங்களை கரைத்துவிட்டு, துண்டி விநாயகரை வழிபடாமல் சென்றால், யாத்திரையின் பலனும் அரைகுறையாகத்தான் இருக்கும் என்று நினைக்கும்படி அவரது வடிவமைப்பு உள்ளது.

பெயர்க் காரணம்

காசி என்ற பிரிவினர் கிமு 1400 காலகட்டத்தில் இத்தலத்தில் வாழ்ந்து வந்ததால், இத்தலம் ‘காசி’ என்ற பெயர் பெற்றது. மேலும், காசி என்ற வார்த்தைக்கு பிரகாசம் என்றும் பொருள் உண்டு. பார்வதி தேவியின் ஒளி பொருந்திய காதணி, கிணற்றில் விழுந்து பிரகாசித்ததால் காசி என்று பெயர் வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. கா – தோள் சுமை, சி – பெண் சுமை. பார்வதி தேவியை தோளில் சுமந்துகொண்டு, சிவபெருமான் ஹரித்வாரில் இருந்து இங்கு வந்ததால் காசி என்று பெயர் வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

வாரணம், அசி என்ற இரு ஆறுகளுக்கு இடைப்பட்ட பகுதியில் இத்தலம் உள்ளதால் ‘வாராணசி’ என்று பெயர் வழங்கப்படுகிறது. பனாரன் என்ற அசுரன் இத்தலத்தைப் புதுப்பித்து, லிங்கம் அமைத்து வழிபட்டதால் ‘பனாரஸ்’ என்ற பெயர் கிட்டியது. அவி- தலைவன், முத்தன் – சிவபெருமான். வேதங்களுக்குத் தலைவரான சிவபெருமான் வாழுமிடம் என்பதால் இத்தலம் ‘அவிமுக்தம்’ என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறது.

திருவிழாக்கள்

தை, ஆடி மாத அமாவாசை தினங்கள், தீபாவளி (அன்னக்கொடி உற்சவம்) ஹோலி பண்டிகை, சிவராத்திரி, நவராத்திரி தினங்களில் காசியில் சிறப்பு ஆராதனைகள் நடைபெறும். தீபாவளி சமயத்தில் தங்க அன்னபூரணி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். லட்டுத் தேர் அலங்காரத்தில் விசாலாட்சி அம்மன் அருள்பாலிப்பார். தசாஸ்வமேத கட்டத்தில் நாள்தோறும் மாலை நேரத்தில் கங்கை நதிக்கு ஆரத்தி வழிபாடு நடைபெறும் இந்நிகழ்வுக்கு ‘கங்கா ஆரத்தி’ என்று பெயர், இந்த ஆரத்தியைக் காண பக்தர்கள் குவிவது வழக்கம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in