ஆருத்ரா தரிசனம்: கருவறை... சித்சபை வித்தியாசங்கள்!

- சிதம்பரம் சொல்லும் ரகசிய அதிசயங்கள்
ஆருத்ரா தரிசனம்: கருவறை... சித்சபை வித்தியாசங்கள்!

மார்கழி திருவாதிரை நாளை ஆருத்ரா தரிசன விழாவாக, ஆடலரசனின் வைபவமாகக் கொண்டாடி வணங்கி மகிழ்கிறோம். ஆடல்நாயகன் குடிகொண்டிருக்கும் தலங்கள் பல உண்டு என்றாலும், அத்தனைக்கும் நடராஜர் மட்டுமின்றி, சிவனாரின் தலைமைப் பீடமாகவே திகழ்கிறது தில்லையம்பதி என்று போற்றப்படுகிற சிதம்பரம் திருத்தலம்தான்.

எல்லா சிவாலயங்களிலும் இரவு 8 மணிக்கோ 8.30 மணிக்கோ அர்த்த சாம பூஜை நடந்தேறுவதுதான் வழக்கம். ஆனால் சிதம்பரத்தில் மட்டும், தினமும் இரவு 10 மணிக்குத்தான் அர்த்தசாம பூஜை நடைபெறும். அதாவது, அனைத்து சிவாலயங்களிலும் உள்ள இறைத் திருமேனிகள் தங்களின் தலைமைப்பீடமாகத் திகழும் சிதம்பரம் நடராஜரைத் தரிசிக்க, அவரின் ஆடலை ரசிக்க, கோயிலில் நடை சார்த்தியதும் அங்கிருந்து சிதம்பரத்துக்கு தினமும் வந்து, தில்லையம்பலத்தானைத் தரிசிக்கிறார்கள் என்பதாக ஸ்தல புராணம் விவரிக்கிறது.

அதேபோல, எல்லாக் கோயில்களிலும் இறைவன் குடிகொண்டிருக்கும் இடத்தை கருவறை என்போம். ஆனால், சிதம்பரத்தில் சித்சபையில் கொலுவிருக்கிறார் நடராஜ பெருமான்.

கருவறைக்கும் சித்சபைக்கும் உள்ள வித்தியாசங்கள் என்ன? சிதம்பர ஆச்சரியங்களில் இதுவும் ஒன்று.

சாதாரணமாக, கருவறை என்பது ஒரு கலசம் உடையது. கருவறைக்கு அதிஷ்டானம், பாதம், பிரஸ்தாரம், கண்டம், சிகரம், ஸ்தூபி என்று 6 உறுப்புகள் உண்டு. இதிலிருந்து வேறுபடுவது சபை. திருச்சிற்றம்பலம் சபை ஆதலால், அதற்கு 9 கலசங்கள் உள்ளன. அதில் கண்டம் என்ற உறுப்பு தவிர பிற காணப்படுகின்றன. திருச்சிற்றம்பலம் மரத்தாலானது.

தில்லையில் மட்டுமே ஐந்து சபைகள் உள்ளன. ஆயிரங்கால் மண்டபம் என்கிற ராஜசபை, உற்சவ மூர்த்திகள் வீற்றிருக்கும் தேவ சபை, நிருத்த சபை, கனக சபை, சித்சபை என ஐந்து சபைகள். இந்த ஐந்தும் அன்னமய, பிராணமய, மனோமய, விஞ்ஞானமய, ஆனந்தமய கோசங்களைக் குறிப்பிடுகின்றன என்கிறார் வெங்கடேச தீட்சிதர்.

ஆனந்த நடராஜப் பெருமான் எழுந்தருளியுள்ள திருச்சிற்றம்பலம் தங்க விமானத்தில் 9 கலசங்களுடன் கிழக்கு மேற்காக நீள் சதுர வடிவிலானது. தெற்குப்பகுதி தவிர மற்ற பகுதிகள் சந்தனப் பலகைகளால் மூடப்பட்டுள்ளன. நடராஜப் பெருமான் வீற்றிருக்கும் மேடை, தரை மட்டத்திலிருந்து சுமார் 5 அல்லது 6 அடி உயரத்தில் உள்ளது.

திருச்சிற்றம்பலத்தின் முன்புறம் கனகசபை அமைந்துள்ளது. பக்தர்கள், இங்கிருந்தே நடராஜப் பெருமானை வணங்குவார்கள். இந்த கனகசபையில் ஒன்பது வாசல்கள் உள்ளன. இவை நமது உடலில் உள்ள ஒன்பது வாசல்களைக் குறிக்கும். இந்த கனக சபை பிரம்மபீடப் பகுதி. கனக சபையில் உள்ள 18 தூண்கள் 18 புராணங்களைக் குறிக்கின்றன!

அந்தச் சபையில் அன்னப் பாவாடை பரப்புவதற்காக அமைக்கப்பட்டுள்ள ஐந்து பெரிய தளவரிசைக் கற்கள், பஞ்ச பூதங்களைக் குறிப்பிடுகின்றன. கனகசபையிலிருந்து திருச்சிற்றம்பலத்திற்கு ஏறுகின்ற ஐந்து வெள்ளிப் படிகள், பஞ்சாட்சரப் படிகள் என்று அழைக்கப்படுகின்றன. இந்தப் படிகளின் இருபக்கங்களிலும் யானை உருவம் இருப்பதால் ’திருக்களிற்றுப்படி’ எனப் போற்றப்படுகிறது. களிறு என்றால் யானை என்று அர்த்தம்.

கனகசபையிலிருந்து திருச்சிற்றம்பலம் எனப்படும் சித்சபைக்குச் செல்லும் நுழைவாயிலில் பஞ்சாட்சரப் படிகளுக்கு மேலே அமைந்த கதவினை அவித்யை என்பார்கள். இருபுறமும் தண்டி , முண்டி எனும் இரண்டு துவாரபாலகர்கள் உள்ளனர். இந்த வாயில் இதயவாயில் எனப்படுகிறது. திருச்சிற்றம்பலத்தில் ஐந்து தெய்வீகப் பீடங்கள் உள்ளன. பஞ்சாட்சரப் படி ஏறி கால் வைக்கும் இடம் பிரம்ம பீடம் என வணங்கப்படுகிறது.

அடுத்து திருச்சிற்றம்பலத்தினுள் சுமார் ஓரடி அகலமுள்ள இடத்தில் ஐந்து தங்கத் தூண்கள் உள்ளன. இது விஷ்ணுபீடம் எனப்படும். இந்த ஐந்து தூண்களும் பஞ்ச பூதங்களாகும்.

நடராஜப் பெருமான் முன்பு தீட்சிதர்கள் நின்று பூஜை செய்யும் இடம் ருத்ரபீடம் என்றும் நடராஜ மூர்த்தியும் சிவகாமி அம்மையும் வீற்றிருக்கும் பீடம் மகேஸ்வர பீடம் என்றும் அழைக்கப்படுகிறது. இது சுமார் 6 அல்லது 7 அடி நீளமும் 3 அடி அகலமும் கொண்டு தங்கத்தால் மூடப்பட்டிருக்கும்.

மகேஸ்வர பீடத்துக்கு இரண்டு படிகள் உண்டு. மேற்குப்படியில் சந்திரமௌலீஸ்வரர் ஆகிய ஸ்படிக லிங்கமூர்த்தியும், ரத்தின சபாபதி ஆகிய ரத்தினத்தாலான நடராஜ மூர்த்தியும் தனித் தனிப் பெட்டிகளில் எழுந்தருளியுள்ளனர். மகேஸ்வர பீடத்தில் ரத்தினம் இழைத்த இறைவனின் திருவடிகள் சிவ பாதுகை எனும் தங்கத் தட்டில் இறைவனுக்கு வலப் பக்கத்தில் வைக்கப்பட்டுள்ளது. நடராஜ மூர்த்தியின் வலப்புறத்தில் ஸ்ரீமுகலிங்கம் உள்ளது.

நடராஜமூர்த்தியும் சிவகாமி அன்னையும் வீற்றிருக்கும் மகேஸ்வர பீடத்தில் பத்து தூண்கள் இருக்கின்றன. அதில் உள்ள நான்கு தூண்கள் நான்கு வேதங்களையும் ஆறு தூண்கள் ஆறு சாஸ்திரங்களையும் குறிக்கின்றன.

சிதம்பர ரகசியம் எனப் போற்றப்படும் ஸ்ரீரகசியம் இருக்கும் பீடம் சதாசிவ பீடம். இறைவன் ஓர் உருவும் ஒரு நாமமும் இன்றி சிற்பர வியோமமாக அண்ட சராசரங்களையும் தொழிற்படுத்தி நடத்தி வரும் ஞான வடிவமே சிதம்பர ரகசியம் என்கிற தத்துவத்தைச் சொல்லுகிறது.

திருச்சிற்றம்பலத்தின் மேல் அமைந்த 64 சந்தனக் கைமரங்களும் 64 கலைகளைக் குறிக்கின்றன. பொன்னம்பலத்தின் தங்கக் கூரையில் உள்ள 21,600 தங்க ஓடுகள் ஒரு நாளில் மனிதன் விடும் சுவாசங்களின் எண்ணிக்கையைக் குறிக்கின்றன. இந்த ஓடுகளில் பொருத்தப்பட்டுள்ள 72 ஆயிரம் ஆணிகளும் நம் உடலில் உள்ள நாடிகளின் எண்ணிக்கையை விவரிக்கின்றன.

சித்சபையின் 9 கலசங்கள் நவசக்திகளைக் குறிக்கும். இதில் உள்ள 224 அடைப்புப் பலகைகள் 224 உலகங்களைக் குறிக்கின்றன. சிதம்பர ரகசியத்தை கனகசபையிலிருந்து 96 துவாரங்கள் உள்ள பலகணி (ஜன்னல்) வழியாக தரிசிக்க வேண்டும். இந்த 96 துவாரங்கள் 96 தத்துவங்களைத் தெரிவிக்கின்றன!

சித்சபையின் உள்ளே இறைவன் அருவம், உருவம், அருவுருவம் எனும் 3 நிலைகளில் எழுந்தருளியுள்ளான். சிதம்பர ரகசியம் அருவம், ஆனந்த நடராஜர் உருவம், ஸ்படிகலிங்கம் அருவுருவம். இதனை சேக்கிழார் பெரியபுராணத் தொடக்கத்தில், ’உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்’ எனும் திருப்பாடலில் விளக்குகிறார்!

மார்கழித் திருவாதிரை நன்னாளில், கலைகளின் நாயகனாகத் திகழ்பவனும் லோகங்களையெல்லாம் ஆட்சி செய்து அருள்பாலிப்பவனுமாகிய சிவப்பரம்பொருளை சிந்தையில் நிறுத்தி வணங்குவோம். ஞானமும் தெளிவும் கிடைப்பது நிச்சயம். கல்விகேள்வியில் சிறந்துவிளங்க சித்சபை நாயகன் அருள்பாலிப்பான் என்பது உறுதி!

தில்லையே போற்றி. தில்லையரசனே போற்றி. திருச்சிற்றம்பலமே போற்றி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in