அருள்தரும் சக்தி பீடங்கள் - 41

தேவிபட்டினம் மகிஷமர்த்தனி
மகிஷமர்த்தனி
மகிஷமர்த்தனி

அம்மனின் சக்தி பீட வரிசையில் ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் மகிஷமர்த்தனி அம்மன் (உலக நாயகி அம்மன்) கோயில் வீரசக்தி பீடமாகப் போற்றப்படுகிறது. ராமநாதபுரத்தில் இருந்து 15 கி.மீ தொலைவில் இருக்கும் இத்தலத்தில் அம்மன் சுயம்பு வடிவில் அருள்பாலிக்கிறார். இக்கோயில் 18-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும்.

தல வரலாறு

தர்மத்துக்கு குறைபாடு ஏற்படும்போதெல்லாம் அம்பிகை பல அவதாரங்களை எடுத்து அதர்மத்தை வீழ்த்தி, தர்மத்தை நிலைநாட்டுவார் என்பதற்கு ஏற்ப, பராசக்தி, தன் ஆற்றலை வெளிப்படுத்துவதற்காகவும், தீயவற்றை அழிப்பதற்காகவும் துர்கை மற்றும் காளி அவதாரங்களை எடுத்துள்ளார்.

ஒருசமயம் மகிஷாசுரன் என்ற அசுரன் பிரம்மதேவரை நோக்கி தவம் புரிந்தான். அவனது தவத்தால் மகிழ்ந்த பிரம்மதேவர், அவனுக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்கிறார். மகிஷாசுரன் தனக்கு மரணம் இல்லா பெருவாழ்வு வேண்டும் என்று நான்முகனிடம் கூற, அவர், “பிறப்பு என்று ஒன்று இருந்தால், இறப்பு நிச்சயம் நடைபெறும்” என்று கூறி, வேறு வரம் கேட்கும்படி அருள்கிறார்.

பெண்கள் ஆண்களை விட பலம் குறைந்தவர்கள் என்று நினைத்த மகிஷாசுரன், தன்னுடைய மரணம் ஒரு பெண்ணால் மட்டுமே நிகழ வேண்டும் என்று பிரம்மதேவரிடம் கூறுகிறான். பிரம்மதேவரும் அவ்வாறே அருள்கிறார்.

இதைக் கேட்ட மகிஷாசுரன் மிகவும் மகிழ்ச்சி அடைகிறான். இனி யாரும் தன்னை அழிக்க முடியாது என்ற ஆணவத்தில், மனிதர்களுக்கும் தேவர்களுக்கும் பல விதத்தில் இன்னல்கள் கொடுக்க ஆரம்பித்தான். சிறந்த சிவபக்தனாக இருந்ததால், சிவபெருமானிடம் இருந்து பல வரங்களைப் பெற்றிருந்தான் மகிஷன். எந்த நேரத்திலும் எருமை போன்று உருமாறும் சக்தி கொண்டவனாகவும் இருந்தான்.

மகிஷாசுரனால் படும் சிரமங்கள் குறித்து, தேவர்கள் பிரம்மதேவரின் ஆலோசனைப்படி சிவபெருமானிடம் முறையிட்டனர். சிவபெருமானும் அவர்களைக் காப்பதாக உறுதி அளித்து இதுதொடர்பாக பார்வதி தேவியிடம் கூறுகிறார். அவனது வரத்தை வைத்தே அவனை வீழ்த்த வேண்டும் என்பதால், சக்தியின் மற்றொரு அவதாரத்தின் அவசியத்தை, சிவபெருமான் பார்வதி தேவியிடம் வலியுறுத்துகிறார்.

இதைத் தொடர்ந்து பார்வதி தேவி, ‘திரிகுணா’ என்ற பெயரில் தோன்றுகிறார். பல்வேறு வரங்களைப் பெற்று, சிறந்த வலிமை பெற்றவனாக மகிஷாசுரன் இருப்பதால், சிவபெருமான், திருமால், பிரம்மதேவர், இந்திரன் முதலானோர், திரிகுணாவுக்கு பல்வேறு ஆயுதங்களை வழங்குகின்றனர்.

சிவபெருமான் சூலத்தையும் திருமால் சக்கரத்தையும், பிரம்மதேவர் கமண்டலத்தையும், இந்திரன் வஜ்ராயுதத்தையும் வழங்குகின்றனர். மேலும், அக்னியும் வருணனும் சக்தியையும், வாயு பகவான் வில்லையும், ஐராவதம் மணியையும், எமதர்மர் தண்டத்தையும், நிருதி பாசத்தையும், அளித்தனர். இவர்கள் தவிர காலன் கத்தி, கேடயத்தையும், குபேரன் பாண பாத்திரத்தையும், சமுத்திரம் தாமரை மலரையும், சூரியன் ஒளிக்கதிர்களையும், ஆதிசேஷன் நாகபரணத்தையும் அளித்தனர்.

திரிகுணா தனது 18 கரங்களிலும் ஆயுதங்களை ஏந்தி, சிம்ம வாகனத்தில் (ஹிமவான்) சென்று மகிஷாசுரனுடன் 9 நாட்கள் போராடி, 10-ம் நாள் வெற்றி பெற்று அவனை வதம் செய்தார். இதனால் திரிகுணாவுக்கு ‘மகிஷாசுரமர்த்தனி’ என்ற பெயர் கிட்டியது. அசுரனை அழித்த பிறகு, திரிகுணாவின் உக்கிரம் குறைந்து, சாந்த நிலையில் சுயம்பு வடிவத்தில் இத்தலத்தில் கோயில் கொண்டு அருள்பாலிக்கிறார்.

நவராத்திரி நாயகி

ராமபிரான் ராவணனுடன் போர் புரிவதற்கு, இலங்கை செல்லும் முன்னர், இங்கு வந்து உலகநாயகியை (மகிஷாசுரமர்த்தனி) வழிபட்டுள்ளார். உலகைக் காப்பதற்காகவே மகிஷாசுரனை அழித்த திரிகுணா, இத்தலத்தில் ஓய்வெடுக்க சயன கோலத்தில் சுயம்பு வடிவத்தில் ‘உலக நாயகி’ என்ற பெயரைத் தாங்கி தங்கியுள்ளார். அதனால் இந்தப் பட்டினம், தேவிபட்டினம் ஆனதாகக் கூறப்படுகிறது. நவராத்திரி நாயகியாக தேவி வழிபடப்படுவதால், அனைவருக்கும் அனைத்து செல்வங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்

மகிஷாசுரமர்த்தனிக்கு உருவம் ஏதும் கிடையாது. மதுரை மீனாட்சி - ராஜமாதங்கி சியாமளா பீடம், காஞ்சி காமாட்சி - காமகோடி பீடம், காசி விசாலாட்சி - மணிகர்ணிகை பீடம் என்பதுபோல், தேவிபட்டினம் அம்மனின் வீரத்தை அனைவருக்கும் உணர்த்தும் வகையில் இந்த கோயில் வீரசக்தி பீடமாகப் போற்றப்படுகிறது.

ராமபிரான் தனது தோஷ நிவர்த்திக்காக, இங்கே கடலில் நவக்கிரகத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டார் என்று கூறப்படுகிறது. அதேபோல, ராமநாதபுரம் அருகே அருள்பாலிக்கும் உப்பூர் விநாயகரையும், வீரசக்தி பீடத்தையும் தரிசித்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

கோயில் அமைப்பு

தேவிபட்டினம் மகிஷமர்த்தனி கோயில், கடற்கரை ஓரத்தில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. ராஜ கோபுரம் 5 நிலை, 7 கலசத்துடன் அமைந்துள்ளது. ஏகதள விமானத்தின் கீழ் உள்ள மூலஸ்தானத்தில் உலகநாயகி அம்மன் அருள்பாலிக்கிறார். கோயில் அருகே சர்க்கரைத் தீர்த்தம் அமைந்துள்ளது. கோயிலின் உட்புறம் பலிபீடம், கொடிமரம், சிம்ம வாகனம், பதினாறு கால் மண்டபம், இருபுறமும் சிங்கம் வீற்றிருக்க அமர்ந்த கோலத்தில் அம்மன் சுதை சிற்பம், அர்த்த மண்டபம் உள்ளிட்டவை அமைந்துள்ளன. சுற்றுப் பிரகாரத்தில் விநாயகர், சுப்பிரமணியர், நாகர் சந்நிதிகள் அமைந்துள்ளன.

தேவி மகாத்மியம்

நவராத்திரி சமயத்தில் தேவி மகாத்மியம் படிப்பதால் பல நற்பலன்கள் உண்டாகும். இதை துர்கா சப்தசதி என்றும், சண்டி பாடம் என்றும் கூறுவர். தேவியின் மகிமைகளை எடுத்துக்கூறும் இந்நூல் 13 அத்தியாயங்கள், 700 செய்யுளுடன் அமைந்துள்ளது. தேவி பாகவத புராணம், தேவி உபநிடதங்கள், தேவி மகாத்மியம் ஆகிய நூல்களை தேவி உபாசகர்கள் போற்றிப் புகழ்வதுண்டு. துர்கை, சண்டி அவதாரங்களை எடுத்து தீய அரக்கர்களை வீழ்த்தும் கதைகளை தேவி மகாத்மியம் உரைக்கிறது. உக்கிரம், அமைதி, ஞானம் கொண்டவராக தேவி அருள்பாலிக்கிறார். இந்நூல் இந்திய நாட்டில் கிழக்குப் பகுதிகளான மேற்கு வங்காளம், ஜார்க்கண்ட், ஒடிஷா, அசாம் போன்ற மாநிலங்களிலும், நேபாள நாட்டிலும் பெரிதும் பிரபலமாக உள்ளது. துர்கா பூஜை சமயத்தில் இந்நூலில் உள்ள ஸ்லோகங்கள், அனைத்து துர்கை கோயில்களிலும் இசைக்கப்படுகிறது.

தேவி வழிபாடு

தேவிகோட்ட பீடத்தில் தேவியின் பெயர் அகிலேஸ்வரி என்று ப்ருஹன் நீல தந்திரம் உரைக்கிறது. அதன்படி இத்தல தேவி உலகநாயகி என்று அழைக்கப்படுகிறார். அம்பிகையை அடையாளம் தெரிவதற்காக, ஒரு முகத்தை மட்டும் வைத்து வழிபாடு செய்யப்படுகிறது. ஒன்பது நாட்களும் மகிஷாசுரனுடன் போராடி, 10-ம் நாள் வெற்றி பெற்ற இத்தலத்தில் தேவியை 9 நாட்களும் வழிபடுவதால், அனைத்து தீமைகளும் விலகி, நன்மைகள் ஏற்படும் என்பது ஐதீகம்.

நவராத்திரி நாயகியான உலகநாயகி அம்மனை 9 நாட்களிலும், விதவிதமான மந்திரங்கள் சொல்லி பூஜிப்பதால் அனைத்து செல்வங்களும் கிடைக்கும். முதல் 3 நாட்கள் துர்கைக்கும், அடுத்த 3 நாட்கள் லட்சுமிக்கும், அடுத்த 3 நாட்கள் சரஸ்வதி தேவிக்கும் உரிய நாட்கள் ஆகும். ஒன்பது நாளும் தேவியை வழிபடும் முறைகள் குறித்து பல்வேறு நூல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நாளும் தேவி, மகேஸ்வரி, ராஜ ராஜேஸ்வரி, வாராகி, மகாலட்சுமி, மோகினி, சண்டிகா தேவி, சாம்பவி துர்கை என்று பல வடிவங்களில் அருள்பாலிக்கிறார்.

முதல்நாள் நவராத்திரி வழிபாடு, மகா கணபதி பூஜையுடன் தொடங்கி, கலசபூஜை செய்து துர்கா அஷ்டோத்திரம் படித்து நடைபெறும். மகிஷாசுரமர்த்தனி மந்திரம் பாராயணம் மேற்கொள்ளப்படும். இரண்டாம் நாள் நவராத்திரி வழிபாடு, இச்சா சக்தியான துர்கா தேவி வழிபாட்டுடன் தொடங்கும். அன்றைய தினம் துர்கா அஷ்டோத்திரம், ஸ்ரீ லலிதா திரிசதி, ஸ்ரீ காமாட்சி மந்திர பாராயணம் செய்தால் பல நன்மைகள் உண்டாகும்.

மூன்றாம் நாள் நவராத்திரி பூஜை, துர்கா அஷ்டோத்திரம், ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் மற்றும் லலிதா நவரத்தின மாலா பாராயணத்துடன் தொடங்கும். நான்காம் நாள் நவராத்திரி பூஜை ஸ்ரீ மகாலட்சுமி தியானத்துடன் தொடங்கும். அதைத் தொடர்ந்து லட்சுமி அஷ்டோத்திரம் படித்து பூஜை செய்தபின், ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம் ஸ்ரீ அன்னபூர்ணாஷ்டகம், அஷ்டலட்சுமி மந்திரம் சொல்வதால் கடன் தொல்லைகள் தீரும்.

ஐந்தாம் நாள் நவராத்திரி பூஜையில் லட்சுமி அஷ்டோத்திரம், ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம், ஸ்ரீலலிதா சஹ்ஸ்ரநாமம், ஸ்ரீ மகாலட்சுமி அஷ்டக பாராயணம் செய்வதால் அனைத்து செல்வங்களும் கிடைக்கும். ஆறாம் நாள் நவராத்திரி பூஜையில், லட்சுமி அஷ்டோத்திரம், மகாலட்சுமி சஹஸ்ரநாம பூஜை செய்வதால் வழக்குகளில் வெற்றி உண்டாகும். கவலைகள் நீங்கி பொருட்கள் சேரும்.

ஏழாம் நாள் நவராத்திரி பூஜையில் சரஸ்வதி அஷ்டோத்திரம் படித்து பூஜை செய்தபின், ஸ்ரீசாரதா புஜங்க மந்திரம், ஸ்ரீதேவி கட்கமாலா படித்தால் வேண்டும் வரம் அனைத்தும் கிடைக்கும். எட்டாம் நாள் நவராத்திரி பூஜையில் சரஸ்வதி நாமாவளி, ஸ்ரீபவானி புஜங்கம் சொல்ல வேண்டும். சரஸ்வதிக்கு உரிய பாடல்கள் பாடி, மந்திரங்கள் உச்சரிப்பதால் இஷ்ட சித்தி உண்டாகும். இன்று தேவி ‘நரசிம்மி’ வடிவில் சினம் தணிந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

ஒன்பதாம் நாள் நவராத்திரி வழிபாட்டில் சரஸ்வதி அஷ்டோத்திரம், ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் பாராயணம் செய்வதால் ஆயுள், ஆரோக்கியம் பெருகும். இன்று தேவி அம்பு, அங்குசம் தரித்த ஸ்ரீலலிதா பரமேஸ்வரியாகவும், சாமுண்டி மாதாவாகவும் அருள்பாலிக்கிறார். பத்தாம் நாள் நவராத்திரி வழிபாட்டில் வெற்றித் திருமகளாக வலம் வரும் தேவியை வழிபடுவதால் அனைத்து செயல்களிலும் வெற்றி கிட்டும் என்பது ஐதீகம்.

திருவிழாக்கள்

செவ்வாய், வெள்ளிக் கிழமை, நவராத்திரி, பௌர்ணமி நாட்களில் இத்தலத்தில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் ஆராதனைகள் நடைபெறும். மன தைரியம் இல்லாதவர்கள், எதிரிகளால் பாதிக்கப்பட்டவர்கள், எதற்கெத்தாலும் பயப்படுபவர்கள் வீரசக்தி பீடத்தில் வந்து வழிபாடு செய்து நேர்த்திக் கடன் செலுத்தி நிவர்த்தி பெறுகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in