ஆனைமுகத்தனையும் அவன் தன் தம்பியையும் வணங்குவோம்!

- இன்று அக்டோபர் 13 சங்கடஹர சதுர்த்தி, கார்த்திகை
ஆனைமுகத்தனையும் அவன் தன் தம்பியையும் வணங்குவோம்!

அண்ணன் விநாயகப் பெருமானையும் தம்பி முருகப் பெருமானையும் ஒரேநாளில் வழிபட்டுப் பிரார்த்தனை செய்யுங்கள். அக்டோபர் 13-ம் தேதி வியாழக்கிழமை, சங்கடஹர சதுர்த்தியானது அண்ணன் கணபதி பெருமானுக்கு விசேஷம். கார்த்திகை நட்சத்திரமானது முருகப் பெருமானுக்கு சிறப்பு வாய்ந்தது.

எந்தவொரு வழிபாடாக இருந்தாலும் பூஜையாக இருந்தாலும் ஹோமம் முதலான சடங்கு சாங்கியங்களாக இருந்தாலும் முதலில் விநாயகரை வழிபட்டுவிட்டுத்தான் தொடங்குவோம். மஞ்சளை எடுத்துப் பிடித்து மஞ்சள் பிள்ளையார் என்று வைத்துவிட்டுத்தான் அவருக்குப் பூஜைகளைச் செய்துவிட்டுத்தான் மற்ற பூஜைகளைத் தொடங்குவது நம்முடைய வழக்கம். ‘முதல்வணக்கம் முதல்வனுக்கே...’ என்று ஆனைமுகத்தனை முதல்வன் என்று போற்றுகிறது புராணம். பாடல்களும் அப்படித்தான் கொண்டாடுகின்றன.

ஒவ்வொரு தேய்பிறையிலும் சங்கடஹர சதுர்த்தி வரும். பெளர்ணமியை அடுத்த நான்காம் நாள் சங்கடஹர சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. பிள்ளையாருக்கு இந்த நாளில் விரதம் மேற்கொள்கிற பக்தர்களும் உண்டு. காலையில் இருந்து விரதம் மேற்கொண்டு, மாலையில் பிள்ளையாரைத் தரிசனம் செய்து விரதத்தை பூர்த்தி செய்வார்கள்.

விரதம் இருக்க இயலாதவர்கள் அல்லது விரதம் எடுக்காதவர்களும் விநாயகப் பெருமானை சங்கடஹர சதுர்த்தி நாளில் ஆத்மார்த்தமாக வழிபடலாம். பிள்ளையாருக்கு அருகம்புல் சார்த்துவது ரொம்பவே விசேஷம். எனவே, ஆனைமுகனுக்கு அருகம்புல் சார்த்தி, சுண்டல் அல்லது கொழுக்கட்டை அல்லது சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து வேண்டிக்கொண்டால், நம் சங்கடங்களையெல்லாம் தீர்த்தருளுவார் அண்ணன் கணபதி பெருமான்!

மாலை வேளையில், விநாயகருக்கு சிறப்பு பூஜைகளும் அபிஷேக ஆராதனைகளும் அமர்க்களப்படும். அப்போது கோயிலுக்குச் சென்று, கண்ணாரத் தரிசித்து பிரார்த்தனை செய்து வந்தால், நம் கஷ்டங்களையும் இதுவரை நமக்கு ஏற்பட்ட நஷ்டங்களையும் போக்கியருளுவார் வேழமுகத்தான்!

அண்ணனுக்கு உகந்த சங்கடஹர சதுர்த்தி வருகிற நாளிலேயே தம்பியான முருகப்பெருமானுக்கும் உரிய நாளும் வருகிறது. மாதந்தோறும் வருகிற கிருத்திகை விரத நன்னாளில், முருகக் கடவுளை நினைத்து விரதம் மேற்கொண்டு, கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்து வேண்டிக்கொள்வார்கள் பக்தர்கள்.

வீட்டில் முருக வழிபாடு செய்யலாம். முருகப்பெருமானின் படத்துக்கோ விக்கிரகத்துக்கோ செவ்வரளி மாலை சார்த்தி வேண்டிக்கொள்ளலாம். சர்க்கரைப் பொங்கல், எலுமிச்சை சாதம் என நைவேத்தியம் செய்து அதை பக்தர்களுக்கு வழங்குவது பலவிதமான நன்மைகளை வாரி வழங்கும். எதிர்ப்புகளை யெல்லாம் தவிடுபொடியாக்கி அருளுவார் கந்தகுமாரன்.

கார்த்திகை நட்சத்திர நாளில், கார்த்திகேயனைத் தரிசிப்பதால், இதுவரை வீட்டில் இருந்த பிரச்சினைகள் அனைத்தும் தீரும். காலையிலோ அல்லது மாலையிலோ முருகப்பெருமானுக்கு அபிஷேக ஆராதனைகள் ஆலயங்களில் நடைபெறும். அப்போது கலந்துகொண்டு, அபிஷேகப் பொருட்கள் வழங்கியும் செவ்வரளி மாலை சார்த்தியும் வேண்டிக்கொள்ளலாம்.

இந்த நாளானது அண்ணன் விநாயகரை வணங்குவதற்கு உரிய சங்கடஹர சதுர்த்தி. இதேநாளில் கிருத்திகை நட்சத்திர நாளும் வருவதால், தம்பி கார்த்திகேயனை வணங்கி வழிபட்டு ஆராதிக்கக் கூடிய அற்புதமான நாள். ஆகவே இன்று, அண்ணன் ஆனைமுகத்தானையும் தம்பி மயில்வாகனனையும் வழிபட்டு வரங்களைப் பெறுவோம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in