இழந்ததையெல்லாம் தரும் அன்னாபிஷேகம்!

படியளக்கும் சிவனுக்கு ஐப்பசி அஸ்வினியில் அன்னாபிஷேகம்!
இழந்ததையெல்லாம் தரும் அன்னாபிஷேகம்!

சிவபெருமானை, ‘உலகுக்கே படியளப்பவன்’ என்று கொண்டாடுகிறோம். வணங்குகிறோம். நமக்கெல்லாம் படியளக்கும் சிவனாருக்கு, அவரின் லிங்கத்திருமேனிக்கு, அன்னத்தாலேயே அபிஷேகம் செய்கிறோம். அன்னத்தாலேயே அலங்கரித்து தரிசிக்கிறோம். ஐப்பசி மாத அஸ்வினி நட்சத்திரமும் பெளர்ணமியும் இணைந்த நன்னாளில், அன்னாபிஷேக வைபவத்தை அந்தக்காலத்திலிருந்தே நடத்தி வருகிறோம். இன்று நவம்பர் 7 திங்கட்கிழமை சிவாருக்கு அந்த அன்னாபிஷேகத் திருவிழா.

சாம வேதத்திலே ஒரு இடத்தில் “அஹமன்னம், அஹமன்னம், அஹமன்னதோ” என்று கூறப்பட்டுள்ளது, அதாவது எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள் அன்னத்தின் வடிவில் இருப்பதாக அர்த்தம். அமுது படைக்கும் அந்த ஆண்டவனுக்கே அமுதுபடைக்கும் விழா தான் அன்னாபிஷேகம். சிவன் பிம்பரூபி, அவரது மெய்யன்பர்கள் பிரதி பிம்ப ரூபிகள். பிம்பம் திருப்தி அடைந்தால் பிரதி பிம்பம் திருப்தி பெறும். அனைவருக்கும் அன்னம் பாலிக்கும் அந்த அன்னபூரணியை தனது வாம பாகத்திலே கொண்ட மாதொரு பாகனை அன்னாபிஷேகம் செய்து வழிபடுவதால் உலகில் பஞ்சம் வராது. பூமி செழிக்கும். நீர் நிலைகளெல்லாம் நிறைந்திருக்கும். இல்லத்திலும் உலகத்திலும் தரித்திரம் இருக்காது’’ என்கிறார் விஜய் சர்மா சாஸ்திரிகள்.

தில்லையம்பதி என்று போற்றப்படும் சிதம்பரத்தில், அனுதினமும் காலை 11 மணிக்கு ரத்ன சபாபதிக்கு அன்னாபிஷேகம் நடைபெற்று அந்த அன்னம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. எனவேதான் இந்தத் தலத்தை அப்பர் பெருமான், ’அன்னம் பாலிக்கும் தில்லை சிற்றம்பலம்’ என்று போற்றிப் பாடினார். இந்த அன்னாபிஷேகத்தை தரிசித்து பிரசாதத்தை ஏற்றுக்கொண்டவர்களுக்கு என்றுமே அன்ன ஆகாரத்திற்கு குறைவே இருக்காது என்பது ஐதீகம்.

தில்லையில் தினமும் நடைபெறும் அன்னாபிஷேகம், மற்ற அனைத்து சிவாலயங்களிலும் ஐப்பசி மாத அஸ்வினியும் பெளர்ணமியும் இணைந்த நாளில் நடைபெறுகிறது. ஆலயங்களில் அஸ்வினி நட்சத்திரத்தைக் கணக்கில் கொண்டு அன்னாபிஷேக வைபவம் நடைபெறும்.

அஸ்வினி நட்சத்திரத்துக்கு உரியது அன்னம். எனவே, அஸ்வினி நட்சத்திர நாளைக் கொண்டு அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. ஒவ்வொரு மாதமும் அஸ்வினி நட்சத்திரம் வருகிறது. அப்படியிருக்க, ஐப்பசி மாத அஸ்வினி நட்சத்திரம், ஏன் அன்னாபிஷேக மகத்துவநாளாக கொண்டாடி வழிபடப்படுகிறது என்று பலரும் கேட்கலாம்.

ஐப்பசி மாதப் பௌர்ணமிக்கு ஒரு சிறப்பு உண்டு. அன்றுதான் சந்திரன் தனது சாபம் முழுமையாகத் தீர்ந்து பதினாறு கலைகளுடன் முழுப் பொலிவுடன் திகழ்கிறான் என்கிறது புராணம்.

சந்திரன், அஸ்வினி முதல் ரேவதி வரையிலான தனது நட்சத்திர மனைவியருள் ரோகிணியிடம் மட்டும் தனி அன்பு செலுத்தினான். கூடுதல் பிரியத்துடன் நடந்துகொண்டான். மற்றவர்களிடம் பாரபட்சம் காட்டினான். இவையெல்லாம் மாமனார் தட்சனுக்குத் தெரியவந்தது. ஆத்திரமான மாமனார், ’சந்திரனின் உடல் தேயட்டும்’ என்று சாபமிட்டார்.

சந்திரனுக்கும் ஒவ்வொரு கலையாக தேயத் தொடங்கியது. அவன் மிகவும் வருந்திக் கெஞ்சினான். பொலிவையெல்லாம் இழந்து நின்றான். “திங்களூரில் சிவபெருமானை பூஜித்து வா. சாப விமோசனம் கிடைக்கும்” என்றார் தட்சன். உடனே அவன் திங்களூர் வந்து சிவபெருமானை நோக்கி தவம் செய்தான். கடும் தவம் மேற்கொண்டான். ஆனாலும் அவன் மேனியின் ஒளியானது, நாளுக்கு நாள் மங்கத் துவங்கியது. மூன்றே மூன்று கலைகள் மிச்சமிருக்கும்போது சிவபெருமான், அவன் தவத்தில் மகிழ்ந்தார். அவனை மன்னித்தார். முழு நிலவென பிரகாசித்து ஜொலித்துக்கொண்டிருக்கும் சந்திரன், பிறையாகத் தேய்ந்திருந்தான். அந்தப் பிறையைத் தனது தலையில் அணிந்து கொண்டார்.

கொடுத்த வாக்கை மீறிய அவனுக்கு பதினாறு கலைகளும் கிடைக்கப் பெற்றாலும் முழுப்பொலிவும் வருடத்தில் ஒருநாள் அதாவது ஐப்பசி பௌர்ணமி அன்று மட்டுமே கிடைக்கும் என்று விவரிக்கிறது புராணம். அது மட்டுமல்ல அவனது ஒளி தினமும் தேயும்; முழுவதும் மறைந்து பின் படிப்படியாக வளரும். இதுவொரு சுழற்சியாக இருக்கும் என்று அருளினார் சிவனார். அப்படி சந்திரன், தன் முழு கலைகளையும் மீண்டும் பெற்ற ஐப்பசி அஸ்வினி நட்சத்திர நாளில், பெளர்ணமி நாளில், வரங்களை வழங்கியருளிய சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்வதற்கு அரிசி வழங்கினாலும் புண்ணியம். அன்னாபிஷேகத்தை தரிசித்தாலும் புண்ணியம் என்பது ஐதீகம்!

ஐப்பசியில் அன்னாபிஷேக வைபவம் நடைபெறும் வேளையில், சிவாலயங்களுக்குச் சென்று கண்குளிர சிவலிங்கத் திருமேனியைத் தரிசிப்போம். இல்லத்தில் தனம், தானியம் பெருகும். இழந்ததையெல்லாம் மீட்டுத் தந்தருளுவார் தென்னாடுடைய சிவன்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in